அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
38
பெரியார் திருமணம் செய்துகொண்ட நேரம் 1949 ஆகஸ்ட்
9-ம் நாள்.
பெரும்பாலான கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றிப்
பலவகையான கருத்துககளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நான், தோழர்
ஈ.வெ.கி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம் ஏ.சித்தைய்யன்,
இளவல் செழியன் போன்றவர்கள், நாம் பெரும்பான்மையோரை வலிவைப் பெற்றிருப்பதால்,
திராவிடர் கழகம், அதன் பெரில் உள்ள சொத்துக்கள், விடுதலை நிறுவனம்
ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று பல நாள் வாதிட்டு வந்தோம். எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையோ,
திட்டங்களையோ அறிஞர் அண்ணா அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடர்
கழக அமைப்பையும், சொத்துக்களையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டுவிட்டு,
புதிய கழகத்தை, புதிய கொடியுடன், புதிய அமைப்புடன் துவக்கலாம் என்றும்,
பெரியாரோடு மோதுதலை தாம் அறவே விரும்பவில்லை என்றும், பெரியாரிடம்
கற்றுக் கொண்ட கொள்கைகளையும், குறிக்கோளையும் காப்பாற்றி வளர்ப்பதுதான்
நம்முடைய கடமையாக இருக்க வேண்டும் என்றும் அண்ணா அவர்கள் வாதிட்டு
வந்தார்கள்.
(நாவலர் நெடுஞ்செழியன்)
1949-ல் தந்தை பெரியாரை விட்டு
அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தார். 1967-ல் அண்ணாவின்
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. 18
ஆண்டுகள் பிரிவு தந்தை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில். அண்ணா
முதல்வரானதும் திருச்சி சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப்
பெற்றார். 18 ஆண்டுகளும் பெரியார் அண்ணாவை வசை பொழிந்துகொண்டே இருந்தார்.
அண்ணா அவரைத் திருப்பித் தாக்கவில்லை.
அண்ணா திருச்சி செல்ல நினைத்தபோது, ராஜாஜி வருத்தப்படுவாரோ என்றார்
ஒருவர். சென்னைக்கு வந்த பின்பு பார்க்கக்கூடாதோ, திருச்சி சென்று
ஐயாவை பார்ப்பதற்கு அப்படி என்ன அவசரம் என்றார் இன்னொருவர்.
அதற்கு அண்ணா, என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.
முதலமைச்சார் ஆனதும் அவரை நான் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே
ஆகாது என்றார்.
தி.மு.க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்பின்
ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய
ஓர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் எது வேண்டும்
சொல் மனமே என்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும்
என் செவிப்புலனை நிறைத்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு
தாளில் எழுதத் தொடங்கினேன்.
எது வேண்டும் எம் தலைவா - தலைவா
மதிவேண்டும் என்ற உம் கொள்கையா - இல்லை
மணம் வேண்டி நின்ற உம் வேட்கையா
பணி செய்வோர் விசுவாசமா - இல்லை
மணியம்மை சகவாசமா?
இதை எழுதும்போது படித்துப் பார்த்த
சம்பத் சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின்
முகம் மாறியது! செச்சே! இது மாதிரி எழுதாதேய்யா, அய்யா ரொம்ப வருத்தப்படுவார்.
அதிலேயும் நீ எழுதினதுன்னு தெரிஞ்சதோ - அப்புறம் அவருக்குத் தூக்கமே
வராது! என்று சொல்லிவிட்டு, அந்தத் தாளை கிழித்து எறிந்துவிட்டார்!
அண்ணா சம்மாதான் கிறுக்கினேன். மன்னிச்சுடுங்க - என்றேன். அண்ணாவின்
அரும்பெரும் பண்பினை எண்ணி எண்ணி வியந்தேன்.
(கவிஞர் கருணாநந்தம்)
புத்தர் துறவு, சாக்ரடீஸ் வழக்கு
மன்றத்தில் நின்று பேசுவது, ஏசு சிலுவையில் அறைபடுவது, இளங்கோவடிகளின்
துறவு, மணிமேகலையின் மன உறுதி, கண்ணகியின் கேள்விக் கணைகள், மாதவியின்
மன நெகிழ்ச்சி, அசோகனின் துக்கம், சகுந்தலையின் சோகம் போன்ற நிகழ்ச்சிக்
கோவைகள் எப்போதுமே நெஞ்சை நெகிழச் செய்வன.
. . . . பல்வேறு துறைகளிலே உள்ள பிரச்சனைகளிலே தெளிவும், பண்பாட்டுக்கு
ஒரு விளக்கமும், சமுதாய அமைப்பு முறை, அரசு அமைப்பு முறை அறநெறி
ஆகியவை பற்றிய கருத்துரையும் ஒருங்கே கொண்டதாய், மக்களை அறியும்
ஆற்றலும், அறமும் கொண்டவர்களாக்க வல்லதாய் அமைந்துள்ள பெருநூல் உரை
நமக்கிருப்பது திருக்குறள்.
(வானொலி உரை . என்னைக் கவர்ந்து புத்தகங்கள் - 1948 - அண்ணா)
தமிழர்
தமிழ் நாட்டைப்போல் வேறெந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத
வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும்
தங்கள் தங்கள் தாய் மொழியில் எல்லாக் கலைகளையும் வளர்ச்சி செய்து
வருகின்றனர். எல்லா கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழைப்
போல தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது.
(தமிழரின் மறுமலர்ச்சி - அண்ணா)
திரு.வி.க
தமிழ் நாட்டிலே நல்ல தமிழிலே மேடையில் பேசமுடியும் என்பதை முதன்
முதலில் பேசிக் காட்டியவர் திரு.வி.க. (திரு.வி.கலியாணசுந்தரனார்)
அழகிய தமிழிலே அரசியலைப் பற்றியும் எழுதமுடியும் என்பதை முதலாவதாக
எழுத்தில் காட்டியவர் திரு.வி.க. அரசியலில் புயலாகவும் தமிழில் தென்றலாகவும்
இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரையைத் தீட்டியவர்
நம் திரு.வி.க. எதிர்கால உலகத்துக்காக சிறந்த ஏடுகளைத் தயாரிப்பவர்
நம் திரு.வி.க.
(அண்ணாவின் சொற்ச் செல்வம்)
சமயம்
நான் அவரோடு (மறைமலையடிகள்) நெருங்கிப் பழகியவன் அல்லன். அவரோடு
எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம் இந்த நாட்டில் முதலில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுதான்.
. . . இப்படி சொல்லும்போது அண்ணாதுரை! மறைமலையடிகள் சமயத் துறையில்
- சைவத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரே உங்களுக்கு அது சம்மதமா? என்று
சிலர் கேட்கக்கூடம். அன்பும் அருளும் சைவம் என்றால் - நான் மிகச்
சிறந்த சைவன். ஆண்டவன் ஒருவனே என்பதுதான் சைவம் என்றால் - நான் மிகச்
சிறந்த சைவன்.
(மேடைப் பேச்சு - 24.08.1958 - அண்ணா)
ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான
அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன்.
அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயன சீலர் கலாரசிகர் தோழர்
பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே
ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும்
பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம்
போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணாத்துரை உள்ளதைத்தான் எழுதினான் என்ற அவர்களுக்கு நன்று தெரிந்ததே.
சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச்
செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது.
(மேடப்பேச்சு சென்னை மாவட்ட தி.மு.க. முதல்
மாநாடு - 1950 - அண்ணா)
வ.ரா.
அவர் (வ.ராமசாமி ஐயங்கார்) 1917-ல் பிறந்தவர். சுயமரியாதை இயக்கம்
தமிழகத்தில் தவழ்வதற்குத் தொடங்கிய நாள்கள் அவை என்று கூறலாம். அந்த
நாளிலே வெளிவந்த சுந்தரியில் காணப்படும் கருத்துகள் எப்படிப்பட்டவை
என்பதைக் காணும்போதுதான். வ.ரா. வை அக்கிரகாரத்து அதிசயப் பிறவி
என்று நாம் கூற முடிகிறது.
(திராவிடநாடு - 18.05.1947 - அண்ணா)
கருணாநிதி
இலக்கியம் வட சொல்லா? தமிழ்ச் சொல்லா? என்ற விவரத்தைப் பற்றி நண்பர்
கருணாநிதி குறிப்பிட்டபோது ஒரு பெரிய ஹைட்ரஜன் குண்டை வெடித்தார்.
இளைஞர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று ஔவை துரைசாமி
பிள்ளை அவர்கள் பூரிப்படைந்து சொன்னார்கள்.
(கோவையில் 27.05.1950 - முத்தமிழ் வளர்ச்சி
விழா - அண்ணா)
கல்லூரி முதல்வர் (சென்னை தியாகராயர்
கல்லூரி) ஆற்றிய வரவேற்புரையில் நானும் நாடகத்தில் பங்கெடுத்துக்கொண்டிருப்பதாகச்
சொன்னார். உங்கள் கல்லூரி நடத்துகின்ற கலை விழாவிலே நடிக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தற்காக உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால்
நாடகம் ஆடி கல்லூரி வளர்ச்சிக்குக் காசு சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதே
என்பது குறித்து வருந்தாமல் இருக்க முடியுமா?
(சென்னை தியாகராயர் கல்லூரியில் அண்ணா)
உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை.
உழைக்காமல் ஒரு திறமை வராது.
சிலப்பதிகாரத்தைக் கருணாநிதி இன்றைய
நடைக்கு ஏற்ற அளவில் ஆக்கித் தந்திருக்கிறார் என்றால் - அதற்கு நூறு
முறையாவது முறைப்படி படித்திருப்பார்.
அப்படிப்பட்ட கடுமையான உழைப்புக்குக்
காரணம், நாம் பெற்றிருப்பது நாட்டுக்கு அளிப்பதற்குப் போதாது என்கிற
அடக்க உணர்ச்சிதான்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று
ஒருவர் எண்ணியவுடன், அவருடைய வரலாற்றை எழுதி மலிவுப் பதிப்பு வெளியீட்டு,
இரண்டாம் பதிப்பு வராது என்ற உலகுக்கு அறிவித்துவிடலாம்.
என்னை முழுவதும் அறிந்தவர்கள் தான்
கழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிலே முற்றிலும் அறிந்தவர் என்று
சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு.
அவர் மூலமாக நானும் நாடும் நிரம்ப
எதிர்பார்த்திருக்கிறோம். இப்போது செய்திருக்கின்ற காரியங்களைவிட,
பல மடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக்
கிடைக்கவேண்டி இருக்கின்றன.
கலைஞர்களுக்கு எத்துரையிலும்
சிறப்பு
கலைத் துறையில் ஈடுபாடு உடைய கருணாநிதியை அமைச்சர் ஆக்கினால், அவரால்
அமைச்சருக்குரிய கடமைகளை நிறைவேற்ற முடியுமா? என்று சிலருக்கு ஐயப்பாடு
இருந்தது.
கலைத் துறையில் ஒருவர் திறமை உள்ளவராக இருந்தால் அவரிடம் எந்தப்
பொறுப்பை ஒப்படைத்தாலும் அதிலும் தம் திறமையைக் காட்டுவார்.
அப்படிப்பட்டவர் விருது பெறுவதால், நான் தனிப்பட்ட முறையில் பெருமை
அடைவதற்கு நீங்கள் அனுமதி அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கருப்புச் சட்டை
திருச்சியிலே, அதற்கு அடுத்த கிழமை நாம் கூடினோம். (1944-ல் சேலத்தில்
திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்த பிறகு)
அங்கே ராஜகோலாகலங்கள் இல்லை! மிட்டா மிராசுகளும் ஜமீன், ஜரிகைக்
குல்லாய்களும் இல்லை! . . ஆனால் நமது உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது.
கடும் விஷம் கொடுத்துக கொல்லப்பட்டோர்,
காரிருட் சிறையில் ஆயுட்காலம் முழுவதும தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத்
துரத்தப்பட்டோர், சிலுவையில் அறையப்பட்டோர், சிறுத்தைக்கு இரையாக்கப்பட்டோர்,
கழுத்து நெரிக்கப்பட்டோர், கனலில் தள்ளப்பட்டோர், கண்ட துண்டமாக்கப்பட்டொர்,
நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப் போனோர்
என்று விதவிமாகத்தான் இருக்கும் சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய
வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம். அவர்களெல்லாம் இன்ற, அறிஞர்
உலகில் அணிமணிகளாயினர். நம்மையும் பின் சந்ததி மறவாது.
மற்றுமொறு முக்கியமான முடிவு கண்டோம்;
அதாவது சமுதாய இழிவுகளைத் துடைக்கப் போரிடும் ஒரு விடுதலைப் படையை
அமைத்துள்ளோம். கறுப்புச் சட்டை அணிந்திருக்கவேண்டும் என்ற பெரியார்
கூறினார். ஏன் என்றும் விளக்கினார். திராவிட மக்கள் அடைந்துள்ள இழிநிலையால்
ஏற்பட்ட துக்கத்தின் அறிகுறி, அந்த உடை என்றார். நாம் நாடிழந்து;
அரசு இழந்து நம்மில் பாமரர் அறிவிழந்து மொழிவளமும் கலை உயர்வும்
இழந்து சீர் இழந்து, நாலாம் ஜாதியாய், ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம்.
நம்மை ஒரு சிறு கூட்டத்தால் கொடுமைப்படுத்துவது, ஏக்கத்தைத் தருகிறது.
அதனினும் அதிகமான துக்கம், நம்மவரில் பலரும் அந்தக் கொடுமையை உணராமல்
இருக்கும் நிலையால் ஏற்படுகிறது. இந்தப் பெருந்துககத்தைக் காட்டும
குறியாகவே கறுப்பு உடை அணியச் சொல்கிறார் தலைவர். ஏற்கெனவே உள்ள
ஏளன மொழிகளுடன், நமது எதிரிகள் இனிக் கறுப்புச் சட்டைக்காரன், கள்ளன்
போன்ற உடை அணிந்தோன் என்ற புது வசவுகளைச் சேர்த்துக கொள்வர்; அவர்கள்
ஆசையும் தீர்ந்து போகட்டும், கறுப்புச் சட்டை பாசிச அடையாளம் என்ற
பேசுவர், ஏட்டிலே சமதர்மம் காண்போர், பேசட்டும்; நமது துக்கத்தை
நாட்டுக்குத் தெரிவிக்கட்டும் நமது உடை! இந்த விடுதலைப் படை சமுதாய
இழிவுகளைப் போக்கும் போரிலே முன்னணி நிற்கும். இதற்குத் திருச்சி
மாநாடு தந்துள்ள ஆர்வத்தைக் கொடுமையான நிலைமையைத் தமது கோணல் புத்தியைக்
கொண்டு நீடிக்கச் செய்பவர் உணர்வது நல்லது. சமுதாய இழிவு எது, அதனை
ஒழிப்பது எப்படி, எந்த முறையிலே என்பதிலே, திருச்சி மாநாட்டிலே காணப்பட்ட
எழுச்சி, கட்சி அடைந்துள்ள புதுக்கட்டத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
. . .
அந்த நாள்களிலே, ஆங்கிலத்திலே எஸ்.ஐ.எல்.எப்.
என்றம் ஜஸ்டிஸ் என்றம் மாளிகைகளில் வழங்கி வந்ததே தவிர, மக்களின்
முன்பு திராவிடன் என்ற பெயரே திராவிடன் திராவிடக்கலை, திராவிட மதம்,
திராவிட வைத்யம், திராவிட இசைவாணர்கள் - என்றெல்லாம், அந்த நாளில்,
பல்வேறு துறைகளிலே, திராவிட மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிய முனைந்தனர்,
ஆனால் அந்த அடிப்படை வேலையில் ஆர்வம் காட்டத் தலைவர்கள் தவறிவிட்டனர்.
அவர்கள் தங்கள் ஆற்றலை எல்லாம் அரசியல் அதிகாரம் எனும் மாய மானைப்
பிடிக்கவே செலவிட்டனர். அதனால், அவர்கள், ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச்
சந்தித்தபோது, தேர்தலைப் பற்றிப் பேசி வந்தனரே தவிர உத்தியோகத் துறையிலே
ஐயர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி
வந்தனவே தவித சமுதாயத்திலே படித்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட
உணர்ச்சியை ஊட்ட, பணிபுரியவில்லை.
சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம்
செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்ப்பனர்களாலேயே
நமக்கு ஆபத்து என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர் பேசிவந்தனர்.
தலைவர்களின் பேச்சு அவ்விதமிருந்தது. டாக்டர் நடேச முதலியார் போன்ற
ஒரவரிருவர் தவிர; அதே போது மக்களிடம் பழகி, பிரசாரம் புரிந்து வந்த
ஜே.என்.இராமநாதன், கண்ணப்பர், டி.வி.சுப்பிரமணியன் போன்றவர்கள்,
திராவிடன் என்ற உணர்ச்சியை ஊட்டியும், அரசியலிலே மட்டுமல்லாமல்,
சமுதாயத் துறையிலே பார்ப்பனர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை விளக்கிக்
கண்டித்தும வந்தனர். மக்களை அவர்கள் திராவிடர்களாக வாழும்படி வலியுறுத்தி
வந்தனர். தலைவர்களோ, மக்களை, பார்ப்பனருக்கு எதிராக ஓட் கொடுக்கும்
அளவுக்குத்தான் உபயோகித்தனர். எனவே மக்களுக்கு அந்தத் தலைவர்களின்
போக்கு, முதலில் புரியவில்லை; புரிந்த பிறகு பிடிக்கவில்லை; பிடிக்காததால்
விலகினர்.
திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட
முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல்
போனதால் அன்று. (நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து, சமுதாயத்தில்
தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால்) இருபதாண்டுகள் மாயமான் வேட்டையின்
மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக,
சதியாலோசனைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகைகள்
சதியாலோசனை மண்டபங்களாயின. ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்.
பதவி தேடுவோர், அரங்கேறினர். பரங்கிக்குக் கொண்டாட்டம். மக்கள் இந்தக்
காரியம் தங்களுக்கன்று என்பதைத் திட்டமாகத் தெரிந்துகொண்டு கட்சியைக்
கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச்செயல்கள், கட்டுக்கடங்கா
நிலைபெற்று ஒரு தலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு
ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே
ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று;
மடியவில்லை அந்த உணர்ச்சி என்றுமே மடிந்ததில்லை. அடிக்கடி மங்கி
இருக்கிறது. ஏனெனில் அந்த உணர்ச்சி, உள்ளத்தின் பேச்சு அரசியல் வெட்டுக்கிளிகளின்,
கூச்சல் என்று.
இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின்
அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில
நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை.
அடிக்கடி தனித்தமிழ், வேளான நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம்,
என்று பல்வேறு தலைப்புகளில் கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின்
சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும் தேவை, பலனுமுண்டு,
இவற்றால் என்று போதிலும், இவை, மக்களில் சிலரால் மட்டுமே உணரக்கூடியதாக
இருந்த காரணத்தால் மூல முயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை.
ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறிவிட்டன. முரண்பாடுகளாகவும்
தெரியலாயின. விரோத உணர்ச்சியும் கூட வளர்ந்தது. தமிழகத்திலே, பல
முகாம்கள் தோன்றலாயின. மூல முயற்சியை மறந்துவிட்டனர்.
கண்ணைக் கட்டிவிடப்பட்ட வீரன்,
சாலையில் நடந்து செல்கையில், மரத்துக்கு மரம் மோதிக்கொண்டு சங்கடப்படுவதைப்
போல, நாடு இருந்தது. மீண்டும் ஒரு முறை திராவிட இன உணர்ச்சி தோன்றுமா
என்பதே சந்தேகமாகிவிட்டது. அந்த உணர்ச்சி அடியோடு மடிந்துவிட்டது
என்ற மாற்றார் மகிழவும் செய்தனர். ஆனால் இலட்சியம் மடியவில்லை. சமயத்துக்காகக்
காத்துக்கொண்டிருந்தது. பலப்பல சமயங்கள் வந்தன. ஆனால் சரியான சமயங்களாகவில்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க
சமயமாயிற்று. நாடு முழுதும் காங்கிரஸ் மீது கோபம் மட்டுமல்ல. அந்த
அளவு குறைவுதான். தமிழ்ப் பற்றுப்பரவிய காலம். எங்கும் சங்க நூல்களைப்
படிக்க ஆரம்பித்து காலம். தமிழனுக்கு தனியாக ஓர் மொழி உண்டு. தனியான
பண்பு உண்டு என்ற பெருமை பேசலாயினர். . . . . . தமிழ் மொழியைக் காப்பாற்ற
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்ற காட்சி, தமிழரின் உள்ளத்திலே
ஒரு புது உணர்ச்சியை உண்டாக்கிவிட்டது.
(இலட்சிய வரலாறு - கட்டுரை - அண்ணா)
|