அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
34
அன்று நடந்த தமிழிசை
விழா
வெண்ணிலவும் வானும் போலே! வண்ணமலரும் மணமும் போலே! காஞ்சி திராவிடர்
கழகத்தார் நடத்திக்கொடுத்த இசைவிழா, ரசிகர்களின் உள்ளத்துக்கு மிக்க
இன்பமூட்டுவதாக இருந்தது. தமிழ்ப் பூங்காவிலே, உயர்பீடத்திலே வீற்றிருந்து
பண்பாடி மகிழ்விக்கும் இசைவாணர்களை 04.01.1945-லிருந்து 09.01.1945
வரை, ஆறு நாட்கள் காஞ்சிபுரத்திற்கு வரவழைத்து, அவர்களின் இசைவிருந்தை
மக்கள் உண்டு களிக்க உதவி செய்தனர். காஞ்சி திராவிட கழகத் தலைவர்
தோழர் கே.எஸ். முனுசாமி அவர்களும் செயலாளர் தோழர் டி.பி.எஸ்பொன்னப்பனாரும்,
இவ்விரு தலைவர்களுக்கும் உதவியாக, பிரபல வியாபாரிகளான, தோழர்கள்
ஆபீசர், தங்கவேல் முதலியார், புட்டாசாமி, சி.வி.எம். அண்ணாமலை, சி.வி.ஏகாம்பரம்,
ஆகியோர் இருந்தனர். சுயமரியாதை உலகுக்குள் வருமுன்னரேயே இசைவாணர்களை
நண்பர்களாகப் பெற்றிருந்த, பெருமை தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பனா
ருடையது. செயலாளரின் திட்டத்தைத் திறம்பட நடத்தித்தரும் பொறுப்புணர்ச்சியுடன்
பணியாற்றிய பெருமை, திராவிடர் கழகத்தலைவர் தோழர், கே.எஸ்.முனுசாமி
அவர்களுக்கு உரித்தாக இருந்தது. இவர்களின் ஊக்கமென்ற சுருதியுடன்
இசைவிழா, 04.01.45 மாலை ஆரம்பமாகி மனோரம்மியமாக 09.01.45 இரவு 10
மணிக்குமேல் முடிவுற்றது. இடையே இருந்த ஆறு நாட்களும் இசை விருந்து
கொட்டகையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு. அன்பு விருந்து திராவிடர்
கழகக் கட்டிடத்திலே இசைவாணர்களுக்கு. ஆறு நாட்களில் பதின்மூன்று
கச்சேரிகள். 9 பாட்டுக் கச்சேரிகள். மூன்று முறை நாதஸ்வரம்! ஒரு
குழல்! இம்முறையில் காஞ்சிபுரத்தில் இதுவரை (காலஞ்சென்ற நாயனாபிள்ளை
காலத்துக்குப் பிறகு) நடந்ததில்லை என்று கூறலாம், அவ்வளவு அமைப்பாக
இருந்தது. மதுரமான தமிழ் இசைமழையைத் தமிழ் இசை இயக்கம் தோன்றுவதற்கு
நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே பெய்துவந்த, மதுரை மாரியப்ப சுவாமிகள்
எனும் இசைவாணர் இனிமையைப் பொழிந்தார். அவர் இசைவாணர் மட்டுமல்ல இசை
கர்த்தாவுங்கூட. அவருடைய கீர்த்தனங்கள் பெரும்பாலும் அவரே இயற்றியவை.
சாதாரணமாகத் தியாகர் கீர்த்தனங்களில் பாடாந்திர விசேஷம் உண்டு. தமிழ்ப்
பாட்டிலே அதனைக் காணமுடியாதே என்று சிலர் வாதிடுவர், அவர்களுக்கு
மதுரை மாரியப்பா தமது இசை மூலம் இனிமையான பதிலுரைத்தார். அன்றிரவு
திருவாவடுதுறை ஆதின வித்வான் தோழர் நடராஜசுந்தரம் (கக்காயி) தமது
நாதஸ்வரக் கச்சேரியை, தோழர் மீனாட்சி சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகிய
இருவரின் தவுலுடன் நடத்தினார். அன்று அவருடைய தோடி ஆலாபனமும் இராக
மாலிகையும் ரசிகர்களைப் பலமுறை சபாஷ் கூற வைத்தது. ஸ்வரத்தை நாதமாக்கும்
சிரமமான காரியத்தைச் சுவை மிகுந்திடச் செய்வது, நாதஸ்வரம். அந்த
அபூர்வத் திறமையுடன் கக்காயி அவர்கள் அன்று தமது கச்சேரியை நடத்தினார்.
சௌராஷ்டிராவில் ஒரு
கிருதியும், கல்யாணியில் ஒரு உருப்படியும் வாசித்து மக்களை மகிழ்வித்தார்.
05.01.1945 மாலை, தஞ்சை கௌரிலட்சுமி சகோதரிகளின் இசை நடைபெற்றது.
பழைய கிருதிகளையும், புதிய தமிழ் உருப்படிகளையும் சகோதரிகள் இனிமையும்,
வித்வத் திறமையும் விளங்கும்படி பாடிச் சபையை மகிழ்வித்தனர்.
இரவு இசை அரங்கிலே
கெம்பீரமாக வந்தமர்ந்தார் திருப்பாம்பரம் சாமிநாதப் பிள்ளை அவர்கள்.
குழலுடன் மாயவரம் தோழர் கோவிந்தராஜப் பிள்ளை அவர்கள் மலர்ந்த முகத்துடன்
வந்தமர்ந்தார். சாமிநாதப்பிள்ளை அவர்களுக்குப் பக்கவாத்யம் வாசிப்பது
என்றால் அகமகிழ்ச்சி உண்டாவதும் சகஜந்தானே. முக்கனிச் சாறு கிடைக்கப்
போகிறது என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டதால் அன்றைய ஜமாவைக் கண்டதுமே
மக்கள் களிப்பெய்தினர். குழல் சாமிநாதரும், பிடிலுக்குக் கோவிந்தராஜுவும்,
மிருதங்கத்துக்குக் குற்றாலம் சிவ வடிவேலும் கூடினால் இசை இனிமை
இன்பம் இருந்துதானே தீரும். அன்று திருப்பாம்பரம் சாமிநாதரின் குழலோசையைக்
கேட்டவர்கள், செவியிலே பாய்ந்த இன்பம், கொஞ்ச நஞ்சமல்ல. அபூர்வராகங்களிலே
கிருதிகளை எடுத்து, அனாயாசமாக, பல வித்வான்கள் புகப் பயப்படும் இடங்களிலே
அழகாகச் சஞ்சாரம் செய்து, இராக பாவத்தைச் சொரிந்தார் குழல் மூலம்
அன்று. பூஷாவணி, கீர்வாணி, பஞ்சனதீசா முதலிய இராகங்களிலே, கிருதிகளை
வாசித்துக் காட்டி, அந்த விருந்துச் சுவையிலே சொக்கிக் கிடந்த ரசிகருக்கு
சங்கராபரண இராகத்தை வாரி வாரி ஊட்டினார். அவருடைய குழலுக்கு, வேறு
யார் பக்கவாத்யம் வாசிக்க முடியும் என்று கேட்பது போலிருந்தது பிடிலும்
மிருதங்கமும். அவர்களின் வாசிப்பின் திறமையைக் கண்டு, சாமிநாதப்
பிள்ளை அவர்களே மிகவும் ரசித்தார். சுகபாவம் அன்றைய கச்சேரியில்
உச்சஸ்தானத்துக்குச் சென்றது. கரகரப் பிரியாவிலே அன்று அவர், மாயவித்தை
செய்கு றானே என்ற உருப்படியை வாசித்தார். அன்று அவருடைய குழலின்
இனிமையிலும், வித்வத் திறத்திலும், அனுபவ ரசத்திலும் இலயித்தவர்கள்,
ஒரு சிறு குழல், அதிலே சில துவாரம், இதை வைத்துக்கொண்டு, அவர் எவ்வளவு
மாயவித்தைகள் காட்டுகிறார், மதுரத்தை வாரி வீசுகிறார் என்று மகிழ்ந்து
கூறினர். ஏன், திருப்பாம்பரத்தாரின் குழலோசையின் இனிமையைத் தமிழகம்
அடிக்கடி கேட்டு இன்புறுமாறு செய்யக் கூடாது என்ற கேள்வியும், அவர்
சாமிநாதப்பிள்ளைதானே, சாமிநாத சர்மாவாக இருந்தால் சர்வசதா காலம்
அவருக்குச் சான்சுகள் இருக்கும் என்ற பதிலும் ஒரு ஆளைக் காட்டட்டுமே
பார்ப்போம் இவருக்கு ஈடாக அக்ரகாரத்திலே என்ற எழுச்சிக் குரலும்,
சபையிலே பல இடங்களிலே கேட்டது. மக்களின் உள்ளத்தை அக்குழலோசை மெல்ல
மெல்லச் சென்று இன்பமாகத் தடவியபடி இருந்தது. 06.01.1984 மாலை இசை
விழா தோழர் சங்கசாமி அவர்களின் இசையுடன் துவங்கிற்று. அன்றிரவு,
இசை அரங்கு, மீண்டும் நாயனாபிள்ளையின் நாட்களை நினைவூட்டும் விதமாக
மாறிவிட்டது. சாட்டியக்குடி மீணாட்சிசுந்தரம் அம்மையாரின் இசையும்,
மிருதங்கம் சங்கநாயகி அம்மையின் அதிர்வேட்டுகளும், மாதர் தம்மை இழிவு
செய்யும் மடமையை இடி இடியென்று இடித்துத் தவிடு பொடியாக்கிற்று.
அன்றைய ஜமாவிலே வெறும் நகாசு வேலைகள், இந்திட்யூன்கள், இவைகளுக்கு
இடம் கிடையாது. நாயனாபிள்ளை பாலத்துப் பாணி, குரலில் இனிமையைத் துணைகொண்டு,
ஆளை மயக்கிவிட்டு அப்ளாஸ் வாங்கும் பாட்டல்ல. பாட அனுபவம், பயிற்சி
விசேஷம், சாதகபலம், ரசபாவம் முதலிய அம்சங்களுடன் இராக பாவ தாளம்
இசைந்திருந்தது. பைரவி, ஸ்ரீரஞ்சனி இராகங்களிலே, அனுபவமும் ரசமும்
கலந்த ஆலாபனம் செய்துவிட்டு, அழுத்தமும் அழுகும் விளங்கும்படி உருப்படிகளைப்
பாடி, வித்வத்துவத்தை விமரிசையாக விளக்கினார் அம்மையார். புதுக்கோட்டை
மிருதங்க பூஷணியார் சபையினர் ஆச்சரியப்படும்படியாக வாசித்தார். மிருதங்கங்களிலே
இரண்டு வகையினர் உண்டல்லவா. பெரும்பாலானவர்கள் மிருதங்கத்தை அடிக்கிறார்கள்,
அடிதாங்கமாட்டாமல் அக்கருவி அலறுகிறது. அந்த அலறலைக் கேட்டுச் சபையினர்
பரிதாபப்படுகின்றனர், சற்று அயர்ந்து அரைத் தூக்கத்தில் இருப்பவர்கள்,
தடதட சத்தம் கேட்டு விழித்துக்கொள்வர். மற்றொரு வகையினர் - இந்த
அட்டவணையில் மிகச் சிலரின் பெயரே சேர்க்கப்படவேண்டும். மிருதங்கம்
அடிப்பவர்களல்ல, வாசிப்பவர்கள், இனிமை துலங்க வித்வத்வம் விளங்க,
இப்படி வாசிப்பவர்களிலும், காதுக்கு மட்டும் இனிமை தரும்படியான பொடி
அடிகளைக் காட்டிவிட்டு, கைதட்டுதலைப் பரிசாகப் பெறுபவர்கள் சிலர்
உண்டு. ஒரு சிலருக்கு மட்டுமே மிருதங்கத்தை வாசித்துக் காட்டவும்
வித்வான்கள் மெச்சக்கூடிய விதத்திலே வாசிக்கவும், இனிமையையும் திறமையையும்
சம எடையாக்கிக் கூட்டிக் காட்டவும் தெரியும். புதுக்கோட்டை அம்மையார்
இந்த ரகம் என்ன அருமையான வாசிப்பு. அதிலே எவ்வளவு நம்பிக்கை, சிரமத்தைப்பற்றிச்
சிரத்தையற்ற வாசிப்பு. அன்று நாலு கிளைச் சவுக்கத்திலே பல்லவி. சாதாரண
வித்வான்கள் சஞ்சரிக்கப் பயப்படும் இடங்கள். எதிரே சபையிலே, பல வித்வான்கள்
தாளம் போடுகிறார்கள். ஆரம்பத்திலே மிரட்டுகிறார்கள் என்றே சொல்லலாம்.
அவர்கள்மீது புதுக்கோட்டை மிருதங்கபூஷணி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு,
மிருதங்க நாதத்தைக் கிளப்பினார்கள், பொறி பறக்கலாயிற்று. இடியும்
இடிக்கிறது. இடையிடையே மின்னல் தோன்றுவதுபோல ரசிகர்களின் பற்கள்
வெளியே தோன்றித் தோன்றி மறைகின்றன. கரமும் கருத்தும் ஏககாலத்தில்
கடுவேகமாகச் செல்கிறது, தாளம் போட ஆரம்பித்தவர்கள், மிருதங்கம் வாசிக்கும்
அம்மையை மிரட்ட முடியும் என்ற மனப்பால் குடித்ததுபோய் தாங்கள் மிரண்டு
தாளம் போடலாயினர். இதற்குள், அம்மையின் வித்வத் திறமை வீறு கொண்டு
விட்டது. கரகோஷம் மீண்டும் மீனாட்சிசுந்தரத்தின் தவுல் வந்துவிட்டதோ
என்று எண்ணும்படி இருந்தது. அவ்வளவு புகழை புதுககோட்டை இரங்கநாயகி
அம்மையார், வாங்கிக் கொண்டு ஒரு சிறு புன்சிரிப்பைச் சபையிலே வீசி
எறிந்துவிட்டு, வழக்கமான முகபாவத்துடன், வாத்சல்யத்தோடு தமது சாத்யத்துடன்
விளையாடினார்.
குளிக்கரை தோழர் பிச்சப்பாவின்
நாதஸ்வரம் அன்றிரவு அருமையாக இருந்தது. அன்று அவர் வாசித்த பைரவி
ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது.
07.01.1945 மாலை,
திருவாரூர் தோழர் டி.வி.நமச்சிவாயம், சிவவடிவேல், பாலு ஆகியோரின்
பக்க வாத்யத்துடன், இசை இன்பத்தை அளித்தார். திருப்பாம்பரம் சமிநாதப்பிள்ளை,
குழலில் இசையைக் கூட்டிக் காட்டினார் என்றால் டி.வி. நமச்சிவாயம்,
குரலில் அந்தக் குழலிசையைக் கூட்டிக் காட்டினார் என்று சொல்லலாம்.
அவ்வித இனிமை தோய்ந்திருநதது அந்த இசையில். மெருகு ஏறி ஏறி, மதுரக்
குணம் ததும்பி நிற்கிறது குரலிலே. அந்த இனிமையுடன் திறமை அதாழமை
பூண்டு இருப்பதால், சுவை பயனுள்ளதாக இருக்கிறது. பூஷாவணி, பகுதாரி,
உமாபரணம் முதலிய இராகங்களை, இலட்சணமாகவும் கச்சிதமாகவும் விளக்கி,
சிந்து பாடு சிற்றாறு போல, மளமளவென உருப்படிகளை வீசிவீசி ரசிகர்களுக்கு
விருந்தூட்டினார். வித்வத்துவத்தைத் தோழமை கொண்டிருக்கும் டி.வி.என்.
சங்கராபரண ஆலாபனம் சபாஷ் பட்டத்தையும், பாரதிதாசனின் வெண்ணிலாவும்
வானும்போல என்ற இசை, அருமை! அருமையடா செல்லத்தம்பீ என்ற பாராட்டுரையையும்
வாங்கித் தந்தது. வானத்திலே வெண்ணிலா அழகுற விளங்குவதுபோல, இசை உலகிலே
இந்த இளவரசன் விளங்குகிறான். மண்டலாதிபதியாக அதிக நாட்கள் பிடிக்காது
என்று கூறிப் பாராட்டினர் ரசிகர்கள்.
ஏது செம்மங்குடியா
பாடுவது? என்று கேட்க வேண்டி இருந்தது, அன்றிரவு தோழர் டி.எம்.தியாகராஜன்
பாடியபோது. செம்மங்குடியின் ஜோடனையும் பாணியும், தத்ரூபமாக்கப்பட்டதுடன்,
தோழர் தியாகராஜன், தமது ஆழ்ந்த திறமையையும் விசேஷப் பயிற்சியையும்,
அபூர்வமான முறையிலே காட்டினார் தமது இசைமூலம். காம்போதி ஆலாபனம்,
மிகக் கவர்ச்சியாக இருந்தது. கல்யாணி, சஹானா, பூபாளம் ஆகியவற்றைத்
தொடுத்துச் சமர்ப்பித்தார். தமிழே தமிழரின் செல்வம் என்று சபையிலே
பலர் பாடும்படியான அளவு, உள்ளத்தை உருக்கும் முறையிலே, அன்றிரவு
அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைப்புலவர் மயிலம் தோழர் வஜ்ஜிரவேலு அவர்களின்
இன்னிசை இருந்தது. திராவிட மக்களின் எண்ணத்தைத் தடவித்தடவி, அந்த
நாதத்தோடு இலயித்து, உணர்ச்சிப் பெருக்குடன் பாரதிதாசனின், அந்த
வாழ்வுதான் எந்த நாள் வரும், தலைவாரி பூச்சூடி உன்னை முதலிய பாடல்களை
மிக அழகாகப் பாடி பாட்டுக்குப் பாட்டுச் சபையினரின் சந்தோஷத்தைப்
பரிசாகப் பெற்றுத் தானும் மகிழ்ந்து சபையையும் மகிழ்விக்கச் செய்தார்.
08.01.1945 மாலை,
இன்னிசைப் பிரயோகர் சிதம்பரம் தோழர் ஜெயராமன் அவர்கள் தமது இசைவிருந்தைக்
காட்டி மக்களின் நன்மொழி எனும் பரிசை, தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டார்.
ஔவையாரின் அருந்திறனை இசை மூலம் காட்டிய பெருமையைத் தோழர் ஜெயராமனுக்குத்
தருவதிலே தமிழகம் மகிழ்கிறது.
பாட்டைக் கேட்டனையா?
பாட்டி பாட்டைக் கேட்டனையா?
ஔவைப்பாட்டி பாட்டைக் கேட்டனையா?
என்று சொல் விளங்க,
பொருள் துலங்க இசையின் புதுமைக் கருத்துகள் குலுங்க வித்வத்துவம்
அலங்கரிக்க, அவர் பாடியபோது, மக்கள் அடைந்த ஆனந்தம் அளவிட முடியாது.
21 பாடல்கள், ஒன்றுக்கொன்று வாங்கினதல்ல. மளமளவென்று மாடிப்படிக்கட்டின்
மீது ஏறி உலவிடும் அரசிளங்குமரன் போல, ஜெயராமன் என்ற இசை அரங்கிலே
ஜொலித்தார், வராளி, செஞ்சுருட்டி இராகங்களை, மாலையாக்கிக் காட்டினார்.
பவுனி இராகத்திலே பாடித் தமிழர்களுக்குச் சுதந்திரச் சூரியன் உதயமாகப்
போகும் நற்செய்தியைக் கூறினார். புத்தம் புது வசந்தம் பூத்துக் கனிந்ததடி
என்று இராகமாலிகையில் இன்பப் பொழிலுக்கு இசை உள்ளத்தோடு ரசிகர்களை
அழைத்துச் சென்று நிறுத்தினார்.
அந்த இன்பப் பொழிலிலே
நாதஸ்வர ஏக சக்ரவர்த்தி திருவாவடுதுறை ராசரத்தினம். ஜோதி மயமாக வீற்றிருந்தார்.
பக்க நாயனமாகத் தோழர் பிச்சப்பாவுடன், தவுல் ராகவன் தயாராக இருந்தார்.
துணை வாத்தியமாக சங்கரன் சர்மா. இரவு 10 மணிக்குத் துவங்கிற்று,
நாயனக் கச்சேரி இரவு இரண்டு மணிக்கு முடிந்தது. இடையே கடிகாரத்தைப்
பார்த்தவர்கள் மிகச் சிலரே! கடந்த ஐந்து வருடங்களிலே அன்று அன்பர்
ராஜரத்தினம் வாசித்ததுபோல, வாசித்ததில்லை எனலாம். அவ்வளவு அபாரமாக
இருக்கிறது என்று ரசிகர்கள் புகழ்ந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரையில்
மக்கள் அந்த நாத இன்பத்தில் கட்டுண்டு, களிப்புக்கள் உண்டு இருந்தனர்.
அன்று அவர் வாசித்த சண்முகப்பிரியாவைக் கேட்டவர்கள் என்றும் மறக்க
முடியாது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் சண்முகப் பிரியாவுடன் கொஞ்சினார்!
என்னென்ன பிடிகள்! எத்தனை விதமான வாத்தியங்கள், அந்த ஒரே வாத்தியத்தின்
மூலம்! யாழ், வீணை, பிடில், குழல், பாண்டு வாத்யம், சித்தார், எதை
எதையோ கேட்டிருக்கிறோம். அவ்வளவு வாத்யங்களையும் அந்த மரக்குழலுக்குள்
திணித்துக் கொண்டுவிட்டாரா இந்த மாயாவி? என்று வியந்து கேட்க வேண்டிய
முறையிலே அன்றைய வாசிப்பு அமைந்திருந்தது. வைரம் ஜொலிப்பதுபோல பிர்காக்கள்.
தென்றல் போன்ற ஏற்றம் இறக்கம், சிற்றாற்றின் சிந்து போன்ற நாதங்கள்,
சர்க்கஸ் வித்தைக்காரன், உயர்ந்த கம்மத்தின் மேல் ஏறிக்கொண்டு ஒற்றைக்காலிலே
நிற்பதும், அதிலே இருந்து கர்ணம் செய்வதும் போல, எந்த நாதஸ்வரக்காரரும்
எட்டாத இடங்களிலே தாவிச் சென்று மற்றவர்களைக் கூவி அழைத்து, ஏறுநடை
நடந்து காட்டி அந்த உயரத்திலிருந்து இமைப்பதற்குள் கீழே பாய்ந்து,
மீண்டும் மேலே பறந்துசென்று கொண்டிருந்த நேர்த்தியை அவரிடம் தவிர
வேறு யாரிடம் பெற முடியும்! டி.என்.அர்.க்குப் பக்க நாயனமாக அன்று
தோழர் பிச்சப்பா ரம்மியமாக வாசித்தார். தவுல் ராகவன், சங்கரன் இருவரும்
தங்கள் வேலைகளை வெகு ஜோரான முறையிலே காட்டி ரசிகர்களுக்கு விருந்தூட்டினர்.
அந்த இன்பப் பொழிவின் இனிமையிலே இலயித்திருந்த ரசிகர்களை 09.01.1945,
மாலை இசை அரசு தண்டபாணி தேசிகர் தமது இனிமைக்குரலில் அழைத்தார்,
வாரீர், பருகிட இசை தருவேன் சேரீர் என்று. தேசிகர் இசை என்றால் தேன்
இனிக்கும் என்பது எப்படி விளக்கப்படவேண்டியதில்லையோ அப்படிப்பட்டது.
துன்பம் நேர்கையில் என்ற பாரதிதாசன் பாடலை மிக நேர்த்தியாக அன்று
தேசிகர் பாடினார். விரும்பினால் நானும் அரியக்குடி செம்மங்குடி முதலிய
ஊரார் போலிருக்க முடியும். ஆனாலும் தமிழிசையைத்தான் பெரிதும் நாம்
வழங்குகிறேன். தமிழனாதலால்! என்று இடித்துக் கூறுவதுபோலிருந்தது
கிருதிகளை அவர் பாடும்போது. காம்போதி, சண்முகப் பிரியா, சாவேரி,
பிலஹரி, சிந்துபைரவி ஆகிய இராகங்களைப் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்
போல ஜொலிக்கச் செய்தார் விருத்தத்திலே. அந்தி நேரத்தில், செவ்விளநீர்
அருந்திவிட்டு, தென்றல் விச, தேன்மொழியாள் மடிமீது சாய்ந்திருக்க,
உதயச் சந்திரனைக் கண்டு, அதன் தேஜசுக்கும் அவள் வதனத்துக்கும் உள்ள
உவமைகண்டு உள்ளத்தில் களிப்புறும், திருப்தி பெற்ற காதலனின் நிலையைத்
தேசிகரின் இசை, ரசிகர்களுக்குத் தருகிறது, எங்கும், என்றும்!
தேசிகரின் தேன் பிரவாகத்துடன்,
இசைவிழா இனிது முடிவுற்றது. திதாவிடர்கழக விளம்பரச் செயலாளர் தோழர்
சி.வி.எம். அண்ணாமலை, அநைவிழாவைத் திரம்பட நடத்திக்கொடுதத தோழர்கள்
கே.எஸ்.முனுசாமி, டி.பி.எஸ்.பொன்னப்பா ஆகிய இருவருக்கும் மாலை சூட்டிப்
பாராட்டுரை வழங்கினார். இசைவாணர்களுக்கும், விழாவில் ஒத்துழைத்தவர்களுக்கும்
தோழர் கே.எஸ்.முனுசாமி அவர்கள் நன்றி கூறினார்.
(திராவிடநாடு - 14.01.1945)
|