அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 33

நான் 3-வது ஆனர்ஸ் படிக்கும்வரை எத்தகைய பொதுக் கூட்டத்திற்கும் செல்வதில்லை. கல்லூரியில் நடக்கும் உரையாடல் விவாத மன்றம் சார்பாக நிகழும் கூட்டங்கட்கும் போகமாட்டேன். ஆனால் 3-வது ஆனர்ஸ் படிக்கும்போது லயோலா கல்லூரியில் நடந்த ஆங்கிலச் சொற்பொழிவுப் போட்டியில் முதன் முதலாகக் கலந்துகொண்டேன்.
(28.01.1959 - காஞ்சி பச்சையப்பன் கல்லூரி - அண்ணா)

பொங்கல் திருநாள் என்பது காலஞ்சென்ற நமச்சிவாய (முதலியார்) அவர்களால்தான் முதன் முதலாகச் சைனா பஜாரில் இருந்த பச்சையப்பன் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பியபோது நான் உடன் வர மறுத்தேன் என்றும், நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன் போக மறத்தது உண்மைதான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக்கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காக பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவரின் சந்திப்பு வெறும் உபச்சார சந்திபே என்று நான் அறிந்துகொண்ட காரணத்தால்தான் உடன் போக மறுத்தேன். தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், இப்போழுது சைவ சீலராக விளங்கும் தோழர். கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள் மூவரும் திரும்பி வரும்போது மனக்கசப்போடுதான் திரும்பிவந்தார்கள். சந்தர்ப்பம் அப்பொழுதும் தவறவிடபட்டது. தோழர் அம்பேத்காரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாகத் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்.
(21.01.1950 - சென்னை - அண்ணா )

இன்றையதினம் என்னிடத்தில் ஏதாவது தமிழ் அறிவு இருக்கின்றதென்றால், அதனை தமிழ்நாடு இன்றையதினம் ஏதாவது ஓரளவு போற்றுகிறதென்றால், அது காஞ்சிபுரம் அளித்த பிச்சை என்பதை பெருமையுடன் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு தமிழ் அறிவும், தமிழ் இலக்கியத்தில் பற்றுதலும் ஏற்படச் செய்த இரண்டு தமிழ்ப் புலவர்களை காஞ்சிபுரம் எனக்களித்திருக்கிறது. அதிலே ஒருவர் பெயர் ஏகாம்பர ஐயா என்பது. மற்றொரு புலவர் திருஞானசம்பந்தர்.
(காஞ்சி பொதுக்கூட்டம் - 05.02.1957 - அண்ணா)

நான் மிகமிகச் சாமான்யன். ஆயினும் திரியும் எண்ணெயும் முறைப்படி இருந்திடின் இருட்டினை விரட்டிடும் ஒளியினை உள்ளங்கை அளவுள்ள அகல்விளக்குத் தருகிறது அல்லவா? அதுபோல என்னை ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கத்தக்க நிலைக்கு - நீங்கள் உங்கள் அன்பைப் பெய்து ஆளாக்கிவிட்டிருக்கிறீர்கள். நான் மிக மிக கூச்சப்படுபவன் - உங்களுடைய உற்சாகமூட்டும் தன்மையும், உறுதி தரும் பேச்சும், செயலும், உடனிருந்து பணியாற்றும் திறனும் சேர்ந்துதான், என்னை இந்த அளவுக்கு பொதுப்பணித் துறையிலே ஈடுபடவைத்தது.
(அண்ணா)

நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும்போது பயமென்ன? எப்படியும் இன்று மாற்று முகாமில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத்தான் போகிறது! உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி.நடராசன் தெரியுமல்லவா! அவரை என்னவென்று எண்ணிக்கொண்டாய்!! ஏ! அப்பா! அதி தீவிர காங்கிரஸ்காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத்தியேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ்கமிட்டியிலே உறுப்பினர், எதிர்கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒரு சான்சு அடித்தால் எம்.எல்.ஏ. ஆகலாம் என்றும் கூறி வந்தனர். சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த எலும்பு மனிதர் காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை! நான் கார்ப்பரேஷன் தேர்ததில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க முழு மூச்சாக வேலை செய்தவர். அப்போதெல்லாம், அவரிடம் நாலாம் தமிழ் நடமாடும்! நாலம் தமிழ் என்றால் தெரியவில்லையா? இயல், இசை, நாடகம் - முத்தமிழ், வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப் பெயரிட்டு அழைக்கவேண்டிய அளவுக்கு வசை இருந்தது என்கிறாயா, கேள் தம்பி! சொல்கிறேன்! நீ எத்தனையோ விபூதி வில்வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருபபாய், இதுபோலக் கேட்டதுண்டா சொல், பார்ப்போம்.

நெஞ்சிலே இருக்கிற மஞ்சா சோறு வெளியே வரும் ஆமாம்.
இதற்கு நாலாம் தமிழ் என்று தனிச் சிறப்பு அளிக்காமலிருக்கலாமா, சொல்லு.

பொருள் என்ன தெரியுமோ இதற்கு - ஒரு தாக்குத் தாக்கியதும் கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி எடுக்கவேண்டி நேரிடும் - அப்போது உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக வெளியே வரும்! இதுதான் பொருள்!

பேசினது நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச்சனை! தேர்தல் காலம்! தேச பக்தி அவருக்குத் தலையில் ஏராளமாக! தூபம் போட சத்தியமூர்த்திகள். எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப் பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி அந்த நடையை இப்போது மறந்துவிட்டார் என்றுகூடச் சில சமயங்களிலே ஆச்சரியமாக இருப்பதுண்டு.

நடை இது; உடை கதர்! படையும் உண்டு, மாலை கலகத்துக்கு ஆறணா; இரவு கலகத்துக்கு எட்டணா; நோட்டீசைக் கிழிக்க ஒரு ரூபாய்; சாணிவீச இரண்டரை; கனைத்துக்காட்ட ஒரு அணா; முண்டா தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டைபோட மூன்று ரூபாய்; இப்படி ரேட் பேசிக்கொண்டு பாரதமாதாவுக்குச் சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும் நண்பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல்வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே ஏதாவது தொழிலாளர் சங்கத்துககு கடிதம் வந்துவிட்டால், என்னிடம் கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது - மாலை வந்தாலோ போலோ பாரத்மாமாக்கீயாகிவிடுவார்!!

அப்படிப்பட்டவர் இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார் திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல்லவா!

கட்டாய இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார்.

இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம் பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், பணியாற்றினோம். காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அறும்பிற்று; நடராசன் போன்ற பல காங்கிரஸ் நண்பர்கள், நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமிழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு அடிமையாக மாட்டோம் என்று பேசினர். முதலில் நம்மவர்களைச் சந்திக்கும்போது - பிறகு தங்களுக்குள்ளேயே - அதற்கும் பிறகு காங்கிரஸ் மேடைகளிலேயே! இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.

இந்தி எதிர்ப்புப் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது, சத்தியமூர்க்திகளுக்கு.

சத்தியமூர்த்திகள் தடை விதித்தாலும், மீறி, தாய்மொழியைக் காக்கும் பணிபுரிந்தாக வேண்டும் என்ற கட்டம் வந்துவிட்டது நடராசன் போன்றோருக்கு.

சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது! நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில் பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார். தாய்மொழிப்பற்றிற்குக் இடமளித்து விட்ட பிறகு, நடராசன் காங்கிரசின் கட்டுத்திட்டத்தை உடைத்தெறிந்துவிட்டு வெளிவந்துவிடுவார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.

எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே, நான், நமது நண்பர்கள், சென்னை பெத்துநாயக்கன்பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி.நடராசன் பேசுவார் என்று துண்டு அறிக்கை அச்சிட்டு, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம் அனுப்பிவிட்டேன்.

உள்ளே, கொஞ்சுதல், கெஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா சரமான கட்டமும் நடந்தேறி, நடராசன் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார் - அவரிடம் இந்த நோட்டீஸ் தரப்பட்டது - எப்படி இதற்குள் அச்சிட்டுவிட்டீர்கள் என்ற கேட்டார். இது காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலதான் நடக்கும் ஏன்று தெரிந்து அச்சிடப்பட்டது என்று கணேசன் கூற, நடராசன் அப்படியா? என்று கேட்டுவிட்டு, நேரே இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்ற துவக்கப்பட்ட அரும்பணி, நாளாக ஆக, தரமும் திறமும் வளரும் வகையில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. எனவே கொள்கையை எடுத்துக் கூறுவதிலே, பண்பு வேண்டும். அவர்கள் இன்று கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்களென்றால், நாம் இன்னும் அவர்கள் உள்ளத்தில் புகத்தக்க விதமாக, நமது கொள்கையை எடுத்துரைக்கவில்லை என்றுதான் பொருள்! நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள்.
(அண்ணா)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai