அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
32
என்னுடைய பத்தாவது
வயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. ஊரில் உள்ள
ஒரு வீட்டில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் புகைப்படம்
எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஊரே திரண்டுபோயிற்று.
அப்போதெல்லாம் இரண்டு நேரங்களில் மட்டும்தான் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஒன்று இறந்துபட்டபோது, இன்னொன்று திருமண நேரத்தில். இந்த இரண்டும்
இல்லாத நிலையில் புகைப்படம் எடுத்துக்கொள்வது அதிசயமாக இருந்தது.
நானும் பார்க்கச் சென்றிருந்தேன். யாரையும் அனுமதிக்கவில்லை, விரட்டிவிட்டார்கள்.
என்னை மட்டும் அங்கே இருக்க அனுமதித்தார்கள். விரட்டவில்லை. இது
சிறுவர்களுக்கே கிடைக்கின்ற உரிமை. வீட்டின் அரசி எல்லா நகைகளையும்
பூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முகத்தில் மட்டும் மகிழ்ச்சியை காணோம்.
அதை நான் கவனித்தேன். வீட்டுக்கு வந்தபோது எங்கே போயிருந்தாய் என்று
கேட்டார்கள். இன்ன இடம் சென்றிருந்தேன் என்று சொன்னேன். ஐயோ பாவம்
என்றார்கள். என்ன என்ன என்று நச்சரித்தேன். அப்போது அவர்கள் மெள்ளச்
சொன்னார்கள். யாருக்கும் சொல்லிவிடாதே, அவருக்கு நிரம்ப கடன் வந்துவிட்டது.
நகைகளையெல்லம் விற்றுவிடப்போகிறார்கள். அதற்குமுன் அவைகளை ஆசைதீரப்போட்டு
புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். பின்னாளில் என்னிடம்
இப்படியெல்லாம் நகைகள் இருந்தன என்று சொல்லிக்கொள்ள, இந்தப்படம்
பயன்படும். வீட்டில் நடந்த அந்த வேதனை நிகழ்ச்சியை நான் நினைத்துப்
பார்க்கிறேன். அந்த படத்தின் நிலையில் நாம் திருக்குறளை வைத்திருக்கிறோம்.
(அண்ணா - தமிழக அரசு தலைமைச் செயலகத்தில்
திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பேசியது - 1967)
எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1934-ம் ஆண்டில்தான். அப்போது நான்
பி.ஏ. ஆனர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன். பரிட்சை முடிவு தெரியாத நேரம்
அது. அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது.
அங்குதான் பெரியாரும் நானும் முதல் முதலில் சந்தித்தது. எனக்கு பற்றும்
பாசமும் ஏற்பட்டது. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்கு பெரிதும்
பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.
படிக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப் போகிறாயா? என்றார். இல்லை
உத்யோகம் பார்க்க விருப்பமில்லை; பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம் என்றேன்.
அன்று முதல் அவர் என் தலைவரானார். அவருக்கு நான் சுவீகாரப் புத்திரனாகிவிட்டேன்.
அதனை உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால் நான் பிறரைப்
புகழ்ந்து பேசிப் பழக்கப்பட்டவனல்ல. ஆகவே உடனே சொல்லிடவேண்டுமென்று
வந்து சொல்லிவிட்டேன் என்றார்.
(திராவிட முன்னேற்றக் கழக தொடக்கவிழாவில்
- 17.09.1949)
பேரறிஞர் அண்ணாவைக்
கண்டும், பழகவும் காரணமாக இருந்தவர் கலைஞர் எதார்த்தம் பொன்னுசாமி
அண்ணாதான். பேரறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்தது 1942-ல் என
ஞாபகம். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில் கலைவாணர் என்.எஸ்.கிருட்டினன்
நாடக அரங்கில் சந்திரோதயம் நாடகம் பார்த்தேன். அந்த நாடகத்தில் பேரறிஞர்
அண்ணாவை நடிகராகப் பார்த்து, அவருடைய நடிப்பைப் பார்த்து பிரம்மித்துப்போனேன்.
நாடக உலகில் நீண்ட பல ஆண்டுகள் பயிற்சியடைந்த பண்பட்ட பெருங் கலைஞராக
அவரை கண்டேன், ரசித்தேன்.
நாடகம் முடிந்து அண்ணாவிடம்
விடைபெறும்போது, தாங்கள் பேராசிரியர் மட்டுமல்ல, சிந்தனையாளர் மட்டுமல்ல,
பெருந்தலைவர் மட்டுமல்ல, மிகச்சிறந்த குணச்சித்திரக் கலைஞருமாவீர்கள்
என்று வாழ்த்தினேன். அண்ணாவுடன் உரையாடியதை எண்ணி மகிழ்கிறேன். அண்ணா
மூக்கடைப்புடன் உரையாடுவது வீணை வாத்தியத்தின் கர்நாடக இசையை இசைப்பதுப்போல்
இன்பமாக இருக்கும். மிக உயர்ந்த மனிதப் பண்பின் உறைவிடமாக அண்ணாவைக்
கண்டேன்.
பழகுவதற்கு இனியவர்,
மிகுந்த பண்பாளர், முகத்தில் சாந்தம் தவழ அண்ணா பேசும் ஒவ்வொரு வாக்கியமும்
மக்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதியும். எளிய தோற்றம், நாலு முழவேட்டி
ஒரு முழுக்கைச் சட்டை (அந்த சட்டையில் பொத்தான் இருக்குமோ, இருக்காதோ)
அதற்குமேல் ஒரு துண்டு.
தான் ஒரு தலைவன் என்கின்ற
பெருமிதமில்லாத மனிதர். அண்ணாவிடம் நீண்ட பல ஆண்டுகள் நெருங்கிப்
பழகிய பல சகோதரக் கலைஞர்கள் அவருடைய சிறந்த பலபண்புகளை சொல்லக்கேட்டிருக்கிறேன்.
அதில் முக்கியமானவர்கள் பொன்னுசாமிப் பிள்ளையும், கலைஞர் நடேசனும்
ஆவார்கள்.
(தேசியக் கலைஞர் கே.சாரங்கபாணி)
காஞ்சிபுரம் பச்சையப்பர்
கல்லூரி 1950-ல் திருக்கச்சி நம்பித் தெருவில் திராவிடநாடு அச்சகத்திற்கு
எதிரே இருந்த ஒரு மெத்தை வீட்டில் இருந்தது. கல்லூரியின் தொடக்கவிழா
இக்கட்டிடத்திற்கு எதிரே போடப்பட்ட பந்தலில் நடந்தது. முதல்வர் குமாரசாமி
ராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார். டாக்டர். ஏ.இலட்சுமனச்சாமி முதலியார்
வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் ஆங்கிலப் பேச்சை அண்ணாதான் தமிழாக்கம்
செய்தார். ஆம்.ஏ.இராமசாமி முதலியாரின் பேச்சை மொழிபெயர்த்து புகழ்
பெற்றவர் அல்லவா? அக்கல்லூரியில் முதல் ஆசிரியனாக சேர்ந்த பெருமை
எனக்குண்டு. அதற்குப் பின் வந்த திரு.மா.கி.தசரதன் அவர்கட்கும் போரறிஞர்
அண்ணா அவர்கட்கும் மிக நெருங்கியத் தொடர்பு ஏற்பட்டது.
பேரறிஞர் அண்ணா பெயரை அறிய - அவரை முதன் முதல் - நேரில் பார்க்க
- எனக்கு வாய்ப்பு கிடைத்தது 1944-ல். அந்த ஆண்டு சென்னை பச்சையப்பர்
கல்லூரியில் நான் முதல் ஆண்டு மாணவன். ஒரு நாள் மாலை; ஆங்கில வகுப்பு,
வரதராஜம் என்பவர் தமக்கே எளிய பாணியில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
மாலை கூட்டத்தில் பேச கல்லூரிக்கு வந்திருந்தார் அண்ணா; குள்ள உருவம்;
தோளில் துண்டு; வகுப்பு நடப்பதை கண்டும் காணாதவராய் தாழ்வாரத்தில்
நடந்து சென்றார் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த நாங்கள் வியப்புடன்
பார்த்தோம். என்ன வியக்கிறீர்கள்? அவர் மேதை எனும் பொருளில் றுயவ
ளை வாந றடினேநச, ந ளை ய பநரைள என்றார், வரதராஜம். அன்று மாலை அறிஞர்
அண்ணாவின் பெரும் பேச்சைக் கேட்டேன் - நாடும் ஏடும் அறிவும் ஆற்றலும்
நிறைந்த பேச்சு.
(தமிழ்ப் பேராசிரியர். டாக்டர். ந.சஞ்சீவி)
அண்ணா அவர்களைவிட முறையாகத் தமிழ்ப் பயின்றவர்கள் இலக்கிய இலக்கண
வரம்பு கண்டவர்கள், ஆத்திச்சூடியில் இருந்து தொல்காப்பியம் வரை எழுத்தெண்ணி
கற்றப் புலமைப் பெற்றவர்கள் - பல்கலைக்கழகங்களில் பேராசிரியார்களாய்
இருந்தவர்கள்.
இப்படிப்பட்ட போறிவாளர்களான
இரு பெரும் புலவர்கள், அண்ணா அவர்களின் உரை முடியும் வரையில் (இராமாயணப்,
பெரிய புராணச் சொற்போர்) அவையில் அமர்ந்திருந்து, தங்கள் முடிவான
கருத்தை தெரிவிக்காமல், நிகழ்ச்சியின் நடுவிலேயே தங்கள் பெருந்தன்மையை
மறந்து, எழுந்து போனார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறப்பட்ட வயிற்றுவலியும்
புகைவண்டிக்கு நேரமாகிவிட்டது என்ற கூற்றும் உண்மையான காரணங்கள்தான்
என்று நாம் ஒப்புக் கொள்ளவேண்டுமென்று அவர்கள் விரும்பினால் - அல்லது
எதிர்பார்த்தால் அதன் பின்னர் அவர்களே தங்களுக்கு வசதியான வாய்ப்பான
ஒரு நாளை குறிப்பிட்டு அச்சொற்போர் நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல முடிவைக்
கண்டிருக்க வேண்டும். இதனை வேர்கள் செய்தாரில்லை.
அண்ணாஅவர்களோடு சொற்போர்
நிகழ்த்தி வெற்றிகாண முடியாது என்பதனையே அவர்களுடைய இடை வெளிநடப்பு
எடுத்துக்காட்டுவதாக அமைந்துவிட்டது.
ஆனால் கம்பராமாயணத்தையும்,
பெரியபுராணத்தையும் அப்படியே நம்பினார்கள். பிழை ஏதும் இல்லை என்றார்கள்.
ஆனால் அண்ணா கம்பராமாயணத்தை
ஐயந்திரிபற ஆராய்ந்தார்கள் - தம்முடைய ஆராய்ச்சி முடிவிகளை நூல்வடிவிலும்
கொண்டுவந்தார்கள். அப்படியே பெரியபுராணத்தையும் ஆராய்ந்து பார்த்தார்.
இயற்பகையும், கோட்டிலியும், செழுந்துணையும், போன்ற நாயன்மார்களின்
முறை தவறிய கொடுமைகளை மக்கள் முன்னே எடுத்துக்காட்டித் தமிழ் மக்களின்
பண்பாட்டிற்கு இவை எல்லாம் மாறுபட்டவை அல்லவா? என்று கேட்டார். மறுத்துரைக்க
வகையின்றி அப்புலவர் பெருமக்கள் இருவரும் ஊனமகனாயினர்.
(ஈழத்து அடிகள்)
திரு.சம்பத் அவர்களும் நானும் ஒரு மனப்பட்டுப் பழகினோம். நாங்கள்
திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்தபோது அண்ணா அவர்கள்தான்
அதனை வரவேற்று, திருமண்ததை நடத்திவைக்கிறவரை தனது இல்லத்துக் திருமணம்
போலக் கருதி எல்லா ஏற்பாடுகளையும் நிறைவேற்றிவைத்தார்.
எங்கள் திருமணத்தை
தந்தை பெரியார் அவர்களும் முத்தய்யா முதலியார் அவர்களும், அண்ணா
அவர்களும் முன்னின்று நடத்திவைத்தார்கள். அண்ணா அவர்கள் மிகவும்
உரிமையோடு மாப்பிள்ளைத் தோழரைப்போல் எங்கள் திருமணத்தில் உரிமையோடும்
செயல்பட்டதை இப்போதும் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு.
எனக்கு முதல் குழந்தை
பிறந்தபோது, குழந்தையோடு 10 நாட்கள் வந்து காஞ்சிபுரத்தில் தமது
இல்லத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்லவாம் என்று அண்ணா அவர்கள்
அழைத்தார்கள். அப்படித் தங்கிவிட்டு புறப்பட்டபோது உனக்கு என்ன வேண்டும்!
வாங்கித் தருகிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். எனக்கு சினிமா
சூட்டில் பார்க்கவேண்டும். இவரை பல முறை கேட்டு மறுத்துவிட்டார்
என்றேன். அதனைக் கேட்ட அண்ணா உடனேயே சென்னையில் நெப்டியூன் ஸ்டுடியோவுக்கு
எங்களை அழைத்து வந்தார். போரறிஞர் அண்ணா அவர்களும், சம்பத் அவர்களும்
நன்றாகவே சாப்பிடுவார்கள். இருவரும் ஒரே இலையில் உண்ட காட்சிகளும்
உண்டு. இலையில் சம்பத் அவர்கள் எதை விரும்பி உண்பாரோ, அதையெல்லாம்
அவருக்கே விட்டுவிட்டு, அவர் விரும்பாததை தாம் உண்டு, தம்பியை உண்ண
வைத்து மகிழ்ந்த பாசமிகு காட்சிகள் இன்றும் இதயத்தில் நிழலாடி கண்களைப்
பனிக்கச் செய்கின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள், சில நேரங்களில் கூட்டங்களுக்குச்
சென்று திரும்பும்போது கோடம்பாக்கதில் (அப்போது குடியிருந்தோம்)
எங்கள் வீட்டிற்கு வந்து, சாப்பிடுகிறேன், என்ன இருக்கிறது என்பார்.
சாதத்தில் தண்ணீர்
ஊற்றிவிட்டேன், எல்லாமே தீர்ந்துவிட்டது, சமைத்துப்போடுகிறேன் என்பேன்.
சாததில் தண்ணீர் ஊற்றிவிட்டால் என்ன? மோர் இருக்கிறதல்லவா? ஊறுகாய்
இருக்கிறதல்லவா? போதும வை என்று சாப்பிட்டுவிட்டு பேசிவிட்டுப் போவார்,
என் பிள்ளைகளுடன், இப்படி பல சந்தர்ப்பங்கள்.
எனது துணைவர் சம்பத்
அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தில்லி தலைநகருக்கு
வருகை தந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அங்கிருந்த எங்களது இல்லத்தில்
பத்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். அப்போது தனது தம்பி
(சம்பத் அவர்களாப்) பற்றி எவரிடமும் தெரிவிக்க முடியாத மனச்சுமையை,
மனம்விட்டு என்னிடம் எடுத்துக் கூறுவார். தனக்கும், தன் தம்பிக்கும்
இடையே கருத்து வேறுபாடுகளை மூட்டிவிடுவோர் மீது எச்சரிக்கையாக இருக்கச்
செல்லி, என்னிடம் பல தகவல்களைச் சொன்னதுண்டு.
(ஈ.வெ.கி. சுலோசனா சம்பத்)
பார்க் பேர் கண்காட்சி
டிசம்பர் மாதத்தில் நடக்கும். கண்காட்சியில் ஒரு நாள் எங்கள் குழுவினரின்
அங்கையற்கண்ணி நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. உட்காருவதற்கு அப்போதெல்லாம்
நாற்காலிகள் போடப்படுவதில்லை. கீழேதான் உட்காரவேண்டும். டிசம்பர்
மாதம் பனிக்காலம். ஆகையால் தலையில் ஒரு துண்டைச் சுற்றுக் கொண்டு
முன்னால் வந்து கீழேயே உட்கார்ந்துவிட்டார் அண்ணா.
நான் ஓடிப்போய் வரவேற்கிறேன்.
நான் தலமைத் தாங்க வரவில்லை. நாடகம் பார்ப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன்.
நீங்கள் சென்று நாடகத்தை நடத்துங்கள் என்று சிரித்துக்கொண்டே என்னை
அனுப்பிவைத்துவிட்டார்கள்.
நான் இதனைச் சொல்வதற்கு
காரணம் இருக்கின்றது. நான் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதற்கு (சென்னையில்
உள்ள) ஓடியன் தியேட்டருக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அப்போது
பலமுறை அண்ணாவை அங்கு பார்த்திருககிறேன். அவர் எப்போது வந்தார் என்பதே
தெரியாது. வணக்கம் தெரிவித்தால் சிரித்துக்கொண்டே வணக்கம் தெரிவிப்பார்.
அவ்வளவுதான். அவர் சிறிது விரும்பினால் கூட, அப்போது இருந்த புகழுக்கு
ஆர்பாட்டம் செய்யலாம். தியேட்டரில் உள்ள எல்வோரும், யார் வந்திருக்கிறார்கள்,
என்று திரும்பிப் பார்க்கும்படி சலசலப்பை உண்டாக்கலாம். எதுவும்
இல்லாமல், எவ்விதமான பந்தாவுமில்லாமல் வருவது எனக்கு அவரிடத்தில்
மிகுந்த மதிப்பை எற்படுத்தியது.
எனக்கு அவரிடம் மிகவும்
பிடித்தது, எவ்வளவோ உயர்ந்த நிலையில் இருந்தாலும் அடக்கமாக, அமைதியாக,
எளிமையாக இருந்ததுதான்.
(நாடகக் காவலர். ஆர்.எஸ்.மனோகர்)
இங்கிதம் அறிந்து இசைவாணர்களைப் போற்றுவதில் அண்ணாவுக்கு நிகர் எவருமில்லை.
ஒரு நாள் காஞ்சியை அடுத்த அய்யன்பேட்டையில் திருமண நிகழ்ச்சியில்
எனது இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதே நாளில் அவருடைய நண்பர் வீட்டுத்
திருமணத்தில் மற்றொரு இசைவாணர் நிகழ்ச்சியும் நடைபெற்றது. (அண்ணாவின்
ஆருயிர் நண்பர் டபிள்யு.கே.தேவராசனார் வீட்டுத் திருமணம்). இன்னமும்
சொல்ல அந்த நிகழ்ச்சி ஒருவித போட்டி மனப்பான்மையிலேயே அமைந்துவிட்டது.
ஆனால் அன்பின் சிகரமான அண்ணாவிடமா பகையுணர்ச்சி ஏற்படும்? அவர்களிடம்
நயமாகக் கூறி சற்று முன்னதாக அற்த நிகழ்ச்சியைத் தொடங்கவைத்து அங்கேயும்
சென்று வாழ்த்திவிட்டு, இங்கே வந்து என் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு
வாழ்த்தினார்.
அற்புதமான இசை இரசிகர்
அவர். அவரது சொற்பொழிவுகளில் இசைவாணர்களுக்கே உரித்தான பல சங்கீத
சொற்களை உவமையாகக் கூறி பிரமிப்பை ஏற்படுத்துவார். எனது குருநாதர்
திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளை இசையரசு தண்டபாணி தேசிகர், திரு.டி.என்.இராசரத்தினம்,
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, கலைவாணர் ஆகிய பலரிடம் அவருக்கு
இசை மயக்கம் உண்டு.
(இசைமணி சீர்காழி கோவிந்தராசன்)
அண்ணா அவர்களுடன் ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேல் பழக்கமுண்டு -
எனக்கு! அண்ணாவைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் - அவர்
அறிவுள்ள குழந்தை என்றுதான் சொல்லவேண்டும்.
திருவள்ளுவர் படத்தை
வரைந்ததைப் போல அண்ணாவின் படத்தையும் காலத்தால் அழியாதவாறு வரைந்துவைக்கவேண்டும்
என்று நினைத்து அவரை பல வேறு கோணங்களில் நானே படமெடுத்து வைத்தேன்.
எனக்கு கை கால்கள் சரியாகிவிட்டால் முதல் வேலையாக வள்ளுவர் படத்தை
எழுதியதுபோல அண்ணாவின் திருஉருவப் படத்தை எழுதிவிடப்போகிறேன். (கை
கால்கள் செயலற்ற நிலையில் அந்த ஓவிய மன்னர் படுத்த படுக்கையாக இருக்கிறார்)
நான் எடுத்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அழகான அண்ணாத்துரையா
எடுத்திருக்கிறே! என்றார் அண்ணா. இருக்கிற அழகுதான் படமாக வந்திருக்கிறது
என்றேன். அண்ணா திருவள்ளுவர் படத்தை பல கோணங்களில் சுற்றி சற்றிப்
பார்த்தார். திருவள்ளுவரை அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரதுகண்களும்
வள்ளுவர் கண்களைப் போலவே எனக்குத் தெரிந்தது. இந்தப் படத்தை டாக்டர்.
ஜாகீர் உசேன் தமிழக சட்டமன்றத்தில் திறந்துவைத்தார்.
ஒரு முக்கிய விஷயம்
எப்படிப்பட்ட கூட்டத்திலும் எழுதிவைத்துக்கொண்டு பேசாத அண்ணா, இந்தப்
படத்தைப் பற்றிப் பேசம்போது மட்டும் எழுதிப் படித்தார். அந்த பேச்சை
நான் அப்படியே பதிவு செய்து வைத்திருக்கிறேன். அண்ணாவும் கூட ஓவியம்
வரைந்திருக்கிறார். ஓவியம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல
ஓவியம் போடுவதற்குண்டான ஐடியா அவருக்கு வந்திருக்கிறது.
ஓவியர்களை மிகவும்
மதிக்கக் கூடியவர். அது மட்டுமல்ல இன்னின்ன ஓவியங்களில் இன்னின்னார்
கெட்டிக்காரர்கள் என்று தெரிந்துவைத்திருந்தார்.
அண்ணா மாதிரி ஒருவர்
பிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளாகும்.
அண்ணாவிடம் இன்னொரு
தனிக் குணம், யார் மீதும் அவருக்கு வஞ்சம் - பொறாமை கிடையாது. அவரைப்
போல் இருப்பது கடினம்.
(ஓவிய மன்னர் வேணுகோபார் சர்மா)
|