அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:: 2

பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும், குடும்ப சூழ்நிலைக் காரணமாக, அண்ணா காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தராக ஆறு மாதம் பணிபுரிந்தார்.

அடுத்த ஆண்டு சென்னை சந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பெற்று B.A. படித்தார்.

1930-ம் ஆண்டு அண்ணா இராணி அம்மையாரை வைதீக முறையில் மணந்தார்.

அதற்குப் பிறகு B.A. Hon படித்து M.A. பட்டம் வாங்கினார், பொருளாதாரத்தில் கல்லூரி நாட்களிலேயே சிறந்த மொழிபெயர்பாளராகவும் திகழ்ந்தார்.

1934-ல் அண்ணாவின் முதல் சிறுகதை கொக்கரக்கோ சூனந்த விகடன் இதழில் வெளியானது. ரூ.20 பரிசாகப் பெற்றார்.

அரும்பும்போதே அவர் திறம் கண்டேன் - பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி
1928-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரு.சி.என்அண்ணாதுரை சென்னையிலுள்ள பச்கையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் ( ஜூனியர் இன்டர் மீடியட்) சேர்ந்தார்.

நகரத்தின் மிக நெருக்கடியான ஜார்ஜ் டவுன் பகுதியில் அந்தக் கல்லூரி இருந்தது. கல்லூரியில் சேர்ந்த தெடக்க நாட்களில் வேல் அச்சம் மிதுந்தவராகத்தான் காணப்பட்டார். படிப்படியாக அவர் தம்மை மாற்றிக் கொண்டார்.

1928 முதல் 33 வரை ஐந்தாண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

மறைந்த திரு.கே. சின்னத்தம்பி பிள்ளை அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்தார்.

காஞ்சீபுரத்திலிருந்து வந்திருந்த புதிய மாணவரான அண்ணாதுரையை தனது கல்லூரியில் சேர்த்துக்கொண்டமுதல்வர் - அந்த இளைஞர் எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெறப்போகிறார் என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது!

நான் ஓராண்டுக்காலம் அண்ணாதுரைக்கு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தேன். அவர் இன்டர்மீடியட்டில் படித்த இரண்டாண்டுகள் - ஆக மூன்றாண்டுகள்! கல்வி நிலையங்களில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் விளைவித்த காலமது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கியிருக்கும் மாணவனுக்கு ஆங்கில அறிவு அப்போது மிகமிகத் தேவைப்பட்ட காலம் அது! கல்லூரியில் முதல் வருடம் பயிலும் மாணவர்களை எல்லாம் குறைந்தது அரை டஜன் ஆங்கில நவீனங்களையாவது படியுங்கள் என்று நான் அறிவுரை கூறுவது வழக்கம்!

திரு. அண்ணாதுரை அவர்கள் என்னைப்பற்றிய பழைய நினைவுகளை ஒருமுறை மிகமிகச் சுவை ததும்பச் சொன்னதாக நினைவு!

முதலாண்டு மாணவர்களுக்கு நான் ஒரு சர்வாதிகாரி - இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நான் ஒரு நண்பன் - மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக விளங்கினேன் என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அண்ணாதுரையின் இந்த வாசகங்களிலிருந்து அவர் அந்தக் காலத்தில் என்னைக் கண்டு மிகவும் பயந்திருக்கிறார். இளைஞர் அண்ணாதுரை எனது கடுமையான சோதனைகளையெல்லாம் துணிவுடன் ஏற்றுக்கொண்டு திறமைமிக்கவராக - வண்ணம் பெற்ற பறவையாக சிறகடித்து வெளியே வந்தார்.

கேள்விகளுக்கு சரியான பதில்களையே அளித்து எனது பாராட்டைத் தப்பாமல் பெறுவார். இப்படி படிப்படியாக என்னுடைய நன்மதிப்பையும் அளவு கடந்த மரியாதையையும் சம்பாதித்துக் கொண்டார்.

அண்ணாதுரைக்குக் கல்வி கற்றுத்தந்த பல பேராசிரியர்கள் இன்றைக்கு உயிரோடு இல்லை. அந்தக் காலத்தில் அந்தப் பேராசிரியர்களெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து தம்மிடம் பயிலும் மாணவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் அவர்கள் அனைவரின் உரையாடலும் அண்ணாதுரையின் பக்கம்தான் திரும்பும்!

ஒரு பேராசிரியர் அண்ணாதுரையின் ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கைகளைப் புகழ்ந்துரைப்பார். மற்றொரு பேராசிரியர் கல்வியில் அவர் பெற்றிருக்கும் திறமையைப் பற்றிக் குறிப்பிடுவார்.

எந்நேரமும் கல்வியைக் கற்பதிலும் ஓயாது உழைப்பதிலும் அண்ணாதுரை முனைப்பாக இருந்ததால் பேராசிரியர்களின் கண்களில் எப்போதாவதுதான் தென்படுவார்.

வகுப்புக்கு ஒருநாள்கூட வராதிருக்கமாட்டார். எப்போதாவது வகுப்பு நேரத்தைத் தவறவிட்டுவிட்டால் அவர் அந்தப் பொழுதை வீணாக்கமாட்டார். கல்லூரி நுலகத்திற்குச் சென்று அங்குள்ள நூல்களில் மூழ்கிவிடுவார். தமது ஆற்றலை அவர் ஒருபோதும் வீணாக்கியதில்லை. அந்த அளவுக்கு ஓர் இலட்சிய மாணவராக அவர் விளங்கினார்.

1929-ல் இருந்து 1934 வரை அண்ணா கல்லூரியில் படித்த நாட்களில் நூலகங்களுக்குச் சென்று எப்போதும் புத்தகங்கள் படிக்கின்ற பழக்கம் இருந்தது. அப்படி அவர் சென்னையில் பயன்படுத்திய நூலகங்கள், தங்க சாலையில் இருந்த பண்டின் ஆனந்தம் நூலகம், சென்னை செயின் சேவியர் தெருவில் இருந்த மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகங்கள். இந்த மூன்று நூலகங்களிலும் அண்ணா படிக்காத நூலே இல்லை என்று சொல்வார்கள்.

கல்லூரி மன்றத்தின் செயலாளராக ஒராண்டு பணிபுரிந்திருக்கிறார். பிற்காலத்தில் அவருக்குத் துணையாக இருந்த அபூர்வமான ஆராய்ச்சி அறிவு - கல்லூரி மாணவராக அவர் இருந்த காலத்தில் போடப்பட்ட வலுவான அடித்தளத்தின் விளைவு என்றுதான் கூறவேண்டும்.

திரு.அண்ணாதுரை எப்போதும் மென்மையாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அது எத்தனையோ அற்புதங்களை விளைவித்திருக்கிறது.

தமது அருங்கருத்துக்ளை நிலை நிறுத்தவேண்டிய சூழ்நிலை உருவாகும்போதுகூட, பிறருடன் எதிர்வாதம் செய்கின்ற சூழ்நிலை - ஏற்படும்போதுகூட - பண்புமிகுந்த மென்மையான சொற்களையே பயன்படுத்துவார்.

திரு.அண்ணாதுரை ஆங்கிலத்தில் ஆள்ளல்மிக்க பேச்சாளர் என்பதும் தமிழ்மொழியில் வலிமை மிக்க பேச்சாளர் என்பதும் கல்லூரி மன்றத்தில் அவ்வப்போது நடைபெற்றுவந்த நிகழ்ச்சிகளிலிருந்து தெளிவாகியது.

தமிழ்ச் சொற்பொழிவில் மக்கள் ஆர்வம் காட்டாத ஒரு காலம் இருந்தது. ஆனால் திரு.அண்ணாதுரை அவர்கள் அருந்தொண்டாற்றி மக்களுக்குத் தமிழ்ச்சொற்பொழிவிலும் பேரார்வத்தை ஊட்டினார்.

திறமையாக திருப்தியாகப் பேசி வந்த சொற்பொழிவாளர்களில் திரு.அண்ணாதுரையும் முக்கிய இடம்பெற்றார்.

அன்றிருந்த கல்லூரி முதல்வர், திரு.அண்ணாதுரை பற்றி சொல்லியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
இந்த இளைஞரூக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஒலியில் திளைக்கும் தலைவராகப் போகிறார். தாய் நாட்டை புன்னகை மலரும் பூமியாக மாற்றப்போகிறரார். - என்று அவர் கூறினார்.

திரு.ஆண்ணாதுரை எந்தக் குழுவில் பேசிக்கொண்டிருந்தாலும் சரி, அங்கே தலைமைப் பொறுப்பிலிருக்கும் தகுதி அவருக்குத்தான் இருக்கும்.

அண்ணாதுரையிடம் அவரது பேராசிரியர்கள் கண்டுபிடித்துப் பாராட்டிய சில நற்குணங்கள் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து அவரை சிறந்த அரசியல்வாதியாக மாற்றின.

தமது இறுதிக் காலத்தில் அவர் பெற்றிருந்த ஈடு இணையற்ற தலைமைப் பொறுப்பு அவரது கல்லூரிக் காலத்திலேயே அவருக்குக் கிடைத்துவிட்டது.


சொற்பொழிவிலே எவராலும் வெல்ல முடியாதவரானார். சொற்பொழிவாற்றும்போதெல்லாம் தமிழ் இனத்தைப் பற்றி நன்கறிந்திருந்த அவர் சந்தித்த பிரச்சினைகளெல்லாம் மனிதாபிமானத்துடன் நோக்கியதால் மக்கள் மன்றத்தின் அமோகமான வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை!

கல்லூரியிலே நடைபெற்ற பரிசளிப்பு பிழா ஒன்று இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. அன்று கல்லூரி ஆண்டு விழா - பரிசு பெறுவோர் பட்டியலில் அண்ணாதுரையும் ஒருவர். ஒருவர் என்பதல்ல; முதல் பரிசு பெற்றவரே அவர்தான். அவரது பெயரை நான் மேடையிலே அறிவித்தேன். பரிசு பெற மேடைக்கு வந்தார். அவ்வளவுதான். மண்டபமே இடிந்துவிடுவதுபோல் மாணவர்களின் கையொலி!
இளைய சமுதாயத்தின் இலட்சிய மனிதராக அவர் அப்போதே விளங்கத் தொடங்கிவிட்டார். படிப்பதற்கு நிபந்தனை!
கல்லூரியில் படிக்கும்போது இன்டெரில் முதல் வகுப்பில் அண்ணா தேர்ச்சி பெற்றதைக் கண்ட பச்சையப்பன் கல்லூரித் தலைவராக இருந்த திருவாளர் சின்னத்தம்பி பிள்ளை அவர்கள், அண்ணா அவர்களை 'பி.ஏ. ஆனர்ஸ்' வகுப்பில் சேரும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் அண்ணாவோ தனது பொருளாதார நிலையை எண்ணி ஆனர்ஸ் படிக்க விரும்பவில்லை.

ஆனர்ஸுக்கு படிக்கவேண்டுமென்றால் மூன்றாண்டுகள் படிக்கவேண்டியதிருக்கிறது. அதற்கேற்ற வசதி என்னிடமில்லை. ஆகையால் இரண்டாண்டுகளில் முடியும் சாதாரணமான பி.ஏ. போதும். அந்த பட்டத்தை வைத்துக்கொண்டு ஏதாவது வேலை தேடலாம் என்றிருக்கிறேன் என்றாராம். கல்லூரித் தலைவருக்கோ நன்றாகப் படித்து முன்னேறக்கூடிய ஒருவர் வீணாகிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. எப்படியாவது அண்ணாவை ஆனர்ஸ் வகுப்பில் சேர்த்துவிட்டுவிடவேண்டும் என்பது கல்லூரித் தலைவரின் எண்ணம். அதன் பொருட்டு அண்ணாவைத் தனியாக அழைத்து, அண்ணாத்துரை நம்மைச் சேர்ந்தவர்களில் உன்னைப்போல் நன்றாக படித்து, தேர்வில் பெரும் எண்கள் பெற்று, முதல் வகுப்பில் வருவது என்பது மிகவும் அரிது. மிகச் சிலரே அப்படியுள்ளனர். அப்படியிருப்பவர்கள் முன்னேறவேண்டியது அவசியமல்லவா? என்று கேட்டு, அண்ணாவின் இலவசப் படிப்புக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் தான் செய்து தருவதாக உறுதி கூறினாராம்.

கல்லூரித் தலைவரின் அன்பான பேச்சு அண்ணாவின் மனதைக் கொஞ்சம் மாற்றியது. சரி என்று ஒப்புதல் அளிக்கவும் விரும்பினார். இருந்தாலும், மேலும் ஒரு சலுகையும் கல்லூரித் தலைவரிடமே கேட்டுக்கொண்டார், கல்லூரிக்கு வேண்டிய பாடப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தால் பி.ஏ.ஆனர்ஸ் படிக்கத் தடையில்லை என்றாராம். அண்ணாவின் வேண்டுகோளுக்கு கல்லூரித் தலைவர் ஒப்புக்கொண்ட பின்னரே, அண்ணா அவர்கள் ஆனர்ஸ் வகுப்பில் சேர இசைந்தார்.

வெற்றிலைப் பாக்கு வைத்தியம்!
பொடிப் பழக்கத்தைப் போன்றே வெற்றிலைப் பாக்கு புகையிலையும் போட்டு பழகிக்கொண்டார். அதில் அண்ணாவுக்கு அளவற்ற மோகம். கல்லூரி மாணவராயிற்றே, வெற்றிலைப் பாக்கு போட்டால் நாகரீகத்தில் திளைத்துள்ள மற்ற கல்லூரி நண்பர்கள் கேலி செய்வார்களே என்ற எண்ணத்திற்கு அண்ணா ஒரு சிறிதும் கவலைப்படுவதே இல்லை.

வெற்றிலைப் பாக்கு மீது அவர் கொண்டிருந்த மோகம், கல்லூரி வகுப்பறையில் இருக்கும்போது கூட அவரை விடவில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போதுகூட வெற்றிலைப் புகையிலையை உபயோகிக்க ஆரம்பித்தார். வெற்றிலைப் போடுவதை ஆசிரியர் பார்த்துபிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வீதிப் பக்கமாக இருக்கும் சன்னல் ஒரமாக உள்ள பெஞ்சில் அண்ணா உட்கார்ந்துகொள்வார். எப்படி எப்படியோ முயன்றும் நீண்ட நாட்களுக்கு பேராசிரியர்களை அண்ணாவால் ஏமாற்ற முடியவில்லை. ஒரு தடவை மோசூர் கந்தசாமி என்ற தமிழ்ப் பேராசிரியர், அண்ணா வெற்றிலைப் பாக்கு புகையிலையுடன் வகுப்பில் இருப்பதைக் கண்டு கடிந்து கொண்டாராம்.

அடா என்று அழைத்தவர்!
பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்த காலத்தில் மோசூர் கந்தசாமி புலவர் என்பவரும் மணி திருநாவுக்கரசு என்பவரும் தமிழாசிரியர்கள் கூனிக் குறுகி, அச்சத்துக்கும் ஆயாசத்துக்கும் உட்பட்டு செல்வதைப் போலல்லாது, அந்தக் காலத்திலேயே நிமிர்ந்த நடையோடு நேரிய பர்வையோடு நடந்து கொள்வார்கள். அந்த துணிவு மிக்க ஆசிரியர்களிடம் பாடம் கேட்ட காரணத்தால்தான எந்த தொல்லைகளையும் ஏற்று, எந்த பிரச்னைக்கும் ஈடு கொடுத்து சமாளிக்க அண்ணாவால் முடிகிறது. மோசூர் கந்த சாமிப் புலவர் முதல்முதலாக வகுப்புக்கு வந்தததும் அண்ணா போன்ற மாணவர்களைப் பார்த்து, உங்களை நான் கூப்பிடும்போது அவன் இவன் என்றோ, அது இது என்றோ கூறமாட்டேன். அவன் இவன் என்று கூறுவது அவ்வளவு சரியாக எனக்குப் படவில்லை; அது, இது என்று கூறுவதோ அஃறினையைக் குறிக்கும், அடா! என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும், எனென்றால், அதுதான் அன்புச் சொல், அன்பின் சின்னம்தான் அது என்று கூறினாராம், அண்ணாவின் கல்லூரிப் படிப்பு காலத்திலேயே தன்மான உணர்ச்சியும், வீர உணர்ச்சியும் பெற தமிழாசிரியர்களும் காரணமாக இருந்தார்கள்.

கட்டுரையில் கைவண்ணம்!
பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி பேராசிரியர், மாணவர்களிடம் கட்டுரை ஒன்றை எழுதி வரும்படி கூறியிருந்தார். மறுநாள் மாணவர்கள் எழுதி வந்த கட்டுரைகளை திருத்துவதற்காக பேராசிரியர் எடுத்துச் சென்றார். அண்ணாவின் கட்டுரையை திருத்துவதற்கு, அண்ணாவின் கட்டுரையில்தான் பேரதிர்ச்சியுற்றார். அண்ணாவின் கட்டுரையில்தான் எதிர்பாராத பல புதிய செய்திகள் இருப்பதைக் கண்டு வியப்புற்றார் நாம் சொல்லிக்கொடுத்தவைகளைத்தானே எல்லா மாணவர்களும் எழுதி இருக்கின்றனர். அப்படியிருக்க, நாம் சொல்லாத செய்திகள், புதுப்புது கருத்துக்கள், அண்ணாதுரையால் மட்டும் எப்படி எழுத முடிந்தது. இவ்வளவு உயர்ந்த முறையில் எழுத அவரால் முடியாது. வேறு ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்தததை அப்படியே பார்த்து எழுதியிருக்கவேண்டும் என்றுதான் அவர் எண்ணியிருந்தார்.

மறுநாள் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்த பேராசிரியர் முதன்முதலாக அண்ணாவைத் தன் அருகில் அழைத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அண்ணாதுரை நீ எந்த புத்தகத்திலிருந்து கட்டுரைக்கு வேண்டிய கருத்துக்களை தொகுத்து எடுத்து எழுதியிருக்கிறாய்? என்று கேட்டாராம். பேராசிரியரின் கேள்வியைக் கேட்ட அண்ணா புன்சிரிப்புடன் நான் என் கட்டுரையில் எழுதியவைகள் யாவும் என்னுடைய சொந்த கற்பனையில் தோன்றிய கருத்துக்களேயாகும். அவைகள் எந்தப் புத்தகத்திலிருந்தும் எழுதப்பட்டவைகள் அல்ல என்று கூறினாராம். கல்லுரிப் பருவத்திலேயே கட்டுரை எழுதுவதில் வல்லமை பெற்றிருந்த அண்ணாவைக் கண்டு பேராசிரியர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

ஆசிரியரிடம் வேடிக்கை!
அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது ஆங்கிலத்தில் கட்டுரை எழுவதிலும், பேசுவிதிலும், சிறந்து வளிங்கினார்கள். அவர் கல்லூரியில் முதல் வருட வகுப்பு படிக்கும்பொழுதே அவருடைய ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து ஆசிரியர்கள், மற்ற மாணவர்களுக்கு வகுப்பில் காட்டுவார்களாம்.

ஆனால் அவர் இரண்டாவது வருட வகுப்பில் படித்தபொழுது, ஆங்கிலக் கட்டுரை வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு, அண்ணா எழுதிய உயர்தர ஆங்கில நடை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

அண்ணாத்துரை! உன்னுடைய கட்டுரையில் நீண்ட வாக்கியங்கள் பல வருகின்றன. கட்டுரையென்றால், சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டும் என்று சொன்னாராம்.

சரி! கவனத்தில் வைத்துக்கொள்கிறேன் என்று அண்ணா அந்த வகுப்பில் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்த ஆங்கலக் கட்டுரை வகுப்பில், அண்ணா கட்டுரை எழுதி முடித்ததும், ஆசிரியர் அதை வாங்கிப்படித்தார். ஒரு காலத்தில் ஒரு கிழவன் இருந்தான். அவன் பெயர் ராபர்ட்

இப்படிக் கட்டுரை ஆரம்பித்தது, தான் சொன்னதைப் பையன் அப்படியே கடைப் பிடித்தது அவருக்கு சற்று
மகிழ்ச்சியைத் தந்தது. மேற்கொண்டு கட்டுரையைப் படித்தார்.

அவன் காலையில் எழுந்தான். வெளியில் வந்தான். சந்தையை நோக்கி நடந்தான். சந்தைக்கு வந்தான். அங்கு ஒரு கடையிருந்தது

இப்படி வாக்கியங்கள் எல்லாம் எழுவாய் பயனிலை இவைகளை மட்டும் கொண்டதாய், மிகச் சிறு சிறு வாக்கியங்களாக இருந்தன. வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் சிரித்துவிட்டார்கள். கேலியைப் புரிந்துகொண்டதும் ஆசிரியர் கட்டுரையை வைத்துவிட்டு, இப்படி கட்டுரை முழுவதும் சிறு சிறு வாக்கியங்களாகப் போட்டுவிட்டாயே, ஏன்? என்று அண்ணாவைக் கேட்டாராம்.

நீங்கள்தானே, நீண்ட வாக்கியங்கள் கூடாது; சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டுமென்று சொன்னீர்கள் என்று அண்ணா பதிலளித்தார்.

அதற்காக ஒரேயடியாக வெறும் சிறு வாக்கியங்களாகவே கட்டுரை முழுவதும் இருக்க வேண்டாம். ஆங்காங்கு சில நீண்ட வாக்கியங்களும் வரலாம்! என்று ஆசிரியர் சொன்னாராம். அதிலிருந்து அண்ணாவின் கட்டுரையை அவர் குறை கூறுவதே கிடையாது.

பேச்சுக்குப் பரிசு!
3-வது வருடம் ஆனர்ஸ் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அதுவும் லயோலாக் கல்லூரி மண்டபத்தில்தான் முதன்முதலில் அண்ணா ஆங்கிலத்தில் பேசினார்.

லயோலாக் கல்லூரிப் பொருளாதாரக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அண்ணா முதன்முதலில் அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசினார். அங்கு அமர்ந்திருந்த பல பேராசிரியர்களும், அண்ணாவின் பேச்சுதான் நன்றாக இருந்தது என்று சிபாரிசு செய்தார்கள். இருந்தாலும் பிரசிடென்சி கல்லூரியைச் சார்ந்த வாரியார் என்னும் மாணவருக்குத்தான் முதல் பரிசு என அறிவிக்கப்பட்டது. உடனே கூடியிருந்த அத்தனை பேரும் பரிசு அண்ணாத்துரைக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். பேராசிரியர்களும் அதை ஆதரித்ர்கள்; கடைசியாக அண்ணாவுக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள்.

சிகரெட்டும் சுதந்திரமும்
அண்ணா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு மாணவர் அதிகமாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று ஏன் அதிகமாக சிகரெட் பிடிக்கிறாய் என்று கேட்ட நேரத்தில் அவர் 'பர்னிங் தி பிரிட்டிஷ் கூட்ஸ் என்று கூறி, இதன் மூலம் வெள்ளைக்காரர்களுடைய பொருளைக் கொளுத்துவதாகவும் இருக்கும், அதே நேரத்தில் சுதந்திரத்திற்காக தியாகம் செய்ததாகவும் இருக்கும் என்று சொன்னாராம். அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் திட்டங்களை எப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கொண்டு நடந்தார்கள் என்பதை அண்ணா வேடிக்கையாக கூறுவது உண்டு.

பேராசிரியருக்குப் புகழ் மாலை
அண்ணா அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஷேக்ஸ்பிர் புகழ் பேராசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கல்வி பயின்றவர். திரு.கிருஷ்ணமூர்த்தியை நினைத்தாலே புதிய மாணவர்களுக்குக் குலை நடுங்கும். ஆனால் சில மாணவர்கள அவரிடம் அடக்கத்துடன் நெருங்கிப் பழகுவார்கள. வேறு சில மாணவர்கள் தோழர்களாகவும் பழகுவார்கள். இந்தப் பேராசிரியரைப் பற்றி அறிஞர் அண்ணா இறுதி ஆண்டின்போது நடந்த பாராட்டு விருந்தில் குறிப்பிட்டவை புகழ்பெற்ற சொற்கள். அவை:

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி முதலாண்டின் சர்வாதிகாரி, இரண்டாம் ஆண்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட சக்கரவர்த்தி, மூன்றாம் ஆண்டில் குடியரசுத் தலைவர். நான்காம் ஆண்டில் தோழர்.
இதைக் கேட்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி உட்பட அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்தார்களாம்.

ஆறு மாதம் ஆசிரியர்
அண்ணா அவர்கள் எம்.ஏ.படித்து முடித்தவுடன் சென்னையிலுள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஒரு ஆறு மாதம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது கல்வியில் ஒரு புதிய பாடமுறையை புகுத்தினார்கள். அப்போது, அண்ணாவுக்கு உற்ற நண்பர் அண்ணா இடத்தில், நீ ஆசிரியராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி ஒரு ஆறு மாதம் ஆசிரியராக பணியாற்றினார். பின்னால் விலகி பொது வாழ்வில் ஈடுபடத்தொடங்கினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai