அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
29
இருபத்தி
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மணிமொழியார் அவர்களும் நானும் இணைந்து
நின்று நவயுகம் என்னும் வார இதழை நடத்தியது பற்றி நண்பர்கள் பலர்
இங்கே தங்கள் சொற்பொழிவுகளில் குறிப்பிட்டார்கள். அப்போதுதான் நான்
கல்லூரியிலிருந்து வெளிவந்த காலம். மணிமொழியார் அவர்களும் அப்போதுதான்
புதியதாக அச்சகம் ஒன்றைத் தொடங்கி வேறு ஓர் அமைப்புக்காக அதை நடத்திவந்த
நேரம். அந்தக் காலம் என்னிடம் எழுதும் ஆற்றல் இருக்கிறதா என்பது
தெளிவாகத் தெரியாத காலம். அவரிடமோ பணவசதி இல்லாத நேரம். இப்படிப்பட்ட
நாங்கள் இருவரும் சேர்ந்துதான் - நான் ஆசிரியராகவும், மணிமொழியார்
வெளியிடுபவராகவும் இருந்து பத்திரிகையைத் தொடங்கினோம் அதுவும் நாங்கள்
அந்தக் கிழமை இதழைத் தொடங்கிய நேரம், காங்கிரஸ் கட்சி தேர்தலில்
மாபெரும் வெற்றி பெற்று வீர உலா வந்துக்கொண்டிருந்த நேரம். நாங்கள்
சேர்ந்திருந்த நீதிக்கட்சியோ, பிழைத்திருக்கிறதா இல்லையா என்று ஐயுறத்தக்க
நிலைக்கு ஆட்பட்டுத் தத்தளித்த நேரம். இத்தகைய நெருக்கடியான நிலையில்தான்
நம் இயக்கக் கருத்துக்களைப் பரப்புவதற்காகக் கிழமை இதழ் ஒன்று தொடங்கவேண்டும்
என்றும், அதற்கு நான் ஆசிரியராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
நானும் இணங்கினேன், ஒரு பத்திரிகையை நடத்துவதற்குத் தேவையான அளவு
பணம் அவரிடம் அப்போது இல்லை. ஆனால் அதை நான் உணர முடியாத வகையில்
அவர் நடந்துகொண்டார். பணநெருக்கடி பலமுறை பத்திரிகையைத் தாக்கியது
என்றாலும், அதனை அவர் என்னிடம் கூறியதில்லை. பத்திரிகையின் வரவு
செலவுக் கணக்கு எப்படி இருக்கிறது என்று நானாகக் கேட்ட நேரங்களில்
ஒரே ஒரு புன்னகையைத்தான் வீடையாக அளிப்பார். இப்படியெல்லாம் நிதிநிலையைப்
பற்றி அவர் என்னிடம் தெரிவித்தால் இளைஞனாகிய நான் பத்திரிகை நடத்தும்
ஆர்வத்தை இழந்துவிடுவேனோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததுதான். இந்த
காலத்திலேயே பத்திரிகை நடத்துவதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது
என்பதை எடுத்துக்காட்ட அல்ல; கடன் வாங்கியாவது பத்திரிகை நடத்துவது
என்பது தமிழகத்தில் நெடுநாட்களாக இருந்துவருகிற வழக்கம். ஆகவே அது
அல்ல இங்கே கவனிக்கப்படவேண்டிய உண்மை. அப்போதுதான் கல்லூரியைவிட்டு
வெளிவந்த என்னைப் பத்திரிகைத் துறையிலும், பொதுவாழ்விலும் ஈடுபடுத்தி
முன்னேற்றமடையச் செய்வதில் அவர் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை
எடுத்துக்காட்டத்தான் இந்த உண்மையைக் கூறுகிறேன். அவர் அந்தக் காலத்தில்
எனக்கு ஊட்டிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எண்ணினால் இப்போதுகூட
எனக்குப் பெரியதோர் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நான் பெரியார் அவர்களுடன் வடநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன்.
அங்குள்ளவர்கள் நம் மக்களைவிட மூடநம்பிக்கை உள்ளவர்கள்.
பெரியார் அவர்களின் தோற்றத்தைக் கண்டு, அவர் தென்னாட்டிலிருந்து
வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சீடன் என்றும்
கருதிவிட்டார்கள். அப்படி நினைத்துதான் ஆரிய தருமத்தை வளர்ப்பதற்காக
என்றே செயல்பட்டவரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர், பெரியார்
அவர்களைப் பார்த்து, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தாங்கள்
வந்து அறிவுரை கூறவேண்டும் என்று கோட்டார். அவரும் ஒத்துக்கொண்டார்.
தாம் எதைச் சொல்லுகிறாரோ,
அதை மற்றவர்கள் உடனடியாகக் கடைப்பிடிக்கவேண்டும். அதன்படி நடக்கவேண்டும்
என்று கருதுபவர் அல்லர் பெரியார். பிறர் கடைப்பிடிக்கும் நெறியில்
சென்று, அவர்கள் மனம் புண்படாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர்
பண்பு.
சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றதுமே எனக்குச் சற்றுப்
பயமாகத்தான் இருந்தது. அங்கு போய் நமது கருத்தைச் சொன்னால் அவர்கள்
எப்படி நடந்துகொள்வார்களோ என்று பயந்தேன்.
என்றாலும் துணிந்து
பெரியார் அவர்கள் பின் சென்றேன். கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த
மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என் முகத்திலும் அவர் முகத்திலும் சந்தனத்தை
அள்ளிப் பூசினால்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது.
என் நிலையினைக் கண்ட
பெரியார் நான், எங்கு தவறாக நடந்துகொண்டுவிடுவேனோ என்று தொடையைக்
கிள்ளிச் சாடை காட்டினார்.
அதன்பின் நானும் சற்று
அமைதியடைந்து பொறுமையாக இருந்தேன்.
பின் பெரியார் அவர்கள்
பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க ஆரம்பித்ததும்
அவர்களுக்கு உற்சாகம் எற்பட்டது.
இதுபோன்ற கருத்தை
அவர்கள் அதுவரை கேட்டதே இல்லை. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக்
கேட்கின்றனர். ராமாயணத்தைப்பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க,
சற்றுத் தெளிவு ஏற்பட்டது.
கூட்டம் முடிந்ததும்,
அம்மாணவர்கள் ராவணக்கிஜே என்று முழக்கமிட ஆரம்பித்துவிட்டனர்.
பெரியார் அவர்களின்
கருத்துக்களை முதன் முதலில் 40 ஆண்டுகளுக்கு முன் கேட்க நேர்ந்தபோது
என்ன இவர் - இப்படி பச்சையாக பேசுகிறாரே என்று நினைத்தேன். அப்படித்தான்
எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும், சிந்தித்தால்தான் உண்மையை
உணர முடியும்.
1938 ஆம் ஆண்டு ராசகோபாலாச்சாரியார்
இந்தியை புகுத்திய நேரம். அதை எதிர்த்து பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்த
காலம். சுவரொட்டிகள் ஒட்டுவதற்குகூட எங்களிடம் பணம் இல்லாத காலம்.
முன்பு 1938-ல் நடந்த
இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கே கூச்சமாக
இருக்கும்.
சென்னை நகரில் மத்தியப்
பகுதியில் மயிலை சிவமுத்து என்னும் ஒரு பெரியவர் - அவருடைய தமக்கையார்
அவருக்குத் துணையாக டாக்டர்.தருமாம்பாள் ஆசியோருடன் இன்னுஞ் சிலர்.
இப்படிப் பல்போன பெரியவர்கள்
பத்துபேர், மீசை முளைக்காத எங்களைப் போன்றவர்கள் ஐந்து பேர், மீசை
முளைத்த வாலிபப் பருவமுடைய, காஞ்சி மணிமொழியார் போன்றவர்கள் ஐந்து
பேர்.
தமிழ் வாழ்க! தனித் தமிழ் ஓங்குக!!
அயல் மொழிகளால் தமிழ் அழிவதா? என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பிச்
செல்வோம்.
நண்பர்கள் நடராசன் காங்கிரஸ் கட்சித் தலைவர் தீரர் சத்யமூர்த்தி
அவர்களுக்கு மிக வேண்டிய நண்பராக இருந்தார். அவருடைய வீடும், நான்
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய (குடியிருந்த)
வீடும் பக்கம் பக்கமாகவே இருந்தன. நானும் அவரும் தொழிலாளர் அமைப்பு
ஒன்றில் ஒன்றாக பணியாற்றுகிற வாய்ப்பும் ஏற்பட்டது. அவ்வாறு நெருங்கிப்
பழகியபோது அவரிடத்தில் பேசிப்பார்த்ததில் - தமிழ் மொழியாரிடம் அவருக்கு
மிகுந்த ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.
ஒரு நாள் மாலை 6 மணிக்கு
கடற்கரையில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.
அதிலே வந்து அவர் கலந்துகொண்டார். அன்று வந்து சேர்ந்தவர்தான் .
. .
(பொதுக்கூட்ட உரை - 06.06.1963)
தோழர் ஜின்னாவை நமது
தலைவர் சந்திக்க விரும்பியபோது நான் உடனே வர மறுத்தேன் என்றும்,
நான் அப்போது துரோகம் செய்தேன் என்றம் சமீபத்தில் பத்திரிக்கையில்
குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறத்தது உண்மைதாய். தோழர் ஜின்னாவை
ஒரு திட்டமான முடிவை வைத்துக்கொண்டு பாருங்கள். வெறும் உபசாரத்திற்காகப்
பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு
வெறும் உபசாரச் சந்திப்பே என்பதை நான் அறிந்துகொண்ட காரணத்தால்தான்
உடன்போக மறுத்தேன். தலைவரோடு, சண்டே அப்சர்பர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணயம்,
இப்பொழுது சைவசீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள்
உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது மனக்கசப்புடன்தான்
திரும்பி வந்தார்கள். சந்தர்ப்பம் அப்பொழுதெல்லாம் தவறவிடப்பட்டது.
தோழர் அம்பேத்காரை சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக
தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்.
(பொதுக்கூட்ட உரை - 06.06.1950)
நான் சங்க இலக்கியங்களைப்
படித்தவன் அல்லன். அல்லது அவற்றைப் படித்தவனைப் போல பாவனை செய்பவனும்
அல்லன். அதற்காக நான் வெட்கப்படப் போவதுமில்லை.
சங்க இலக்கியங்களை
நான் படிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் என் அறியாமையில்லை.
என் கண் முன்னால் சங்க இலக்கியங்கள் நர்த்தனம் ஆடவில்லை. என் கண்
முன் அவற்றைக் கொண்டுவந்து புலவர் பெருமக்கள் அப்படி நிறத்தவில்லை.
(அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - 1945)
எனக்கும் அவருக்கும்
(நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர்.ராமசாமி) ஏற்பட்டுள்ள அன்புப் பிணைப்பு
எளிதிலே அறுந்துவிடக்கூடிய வைக்கோல் வடம் அல்ல!
எப்போதுமே அறுந்துவிடாத
எஃகு கம்பி. என்னைப் பார்க்காமல் அவரோ, அவரைப் பார்க்காமல் நானோ
இருக்க முடியாத ஒரு நட்புச் சங்கிலி எங்களுக்குள் நாள்தோறும் வளர்ந்து
வருகிறது . . .
கடுமையான சோதனைப்
புயல் தம் சாழ்விலே வீசிய ஒரு கட்டத்தில் கலைவாணர் பெயரிலே என்.எஸ்.கே.நாடகசபை
எனும் அமைப்பினை நண்பர்களுடன் சேர்ந்து தோற்றுவித்தார். கே.ஆர்.ஆர்.
அது சவலைப் பிள்ளையாகிச் சவக்குழிக்க போய்விடாதபடி காப்பாற்றுதற்காக
என்னையும் நாடகம் எழுத தூண்டினார். அப்படி உருவெடுத்ததுதான் ஒரே
இரவில் என்னால் எழுதி முடிக்கப்பட்டதுதான் இந்த ஓர் இரவு நாடகம்!
தஞ்சைத் தரணியிலே
பல மாதங்களாக அது வீசி வரும் எழுச்சிப் புயலைப் பற்றி நான் எடுத்துச்
சொல்லத் தேவையில்லை. அதன் வெற்றிக்கு வித்து என்னுடைய கதைதான் என்றாலும்,
அது முளைத்து செழித்திட வேரானவர் நீரானவர் கே.ஆர்.ராமசாமிதான்
(தஞ்சை இராமநாதம் கலை அரங்கில் 1945-ல் நடைபெற்ற
ஓர் இரவு நாடக விழாவில் அண்ணா ஆற்றிய உரை)
. . . திராவிட நாடு
இதழின் தோற்றத்திற்கு முதற் காரணம் நமது நண்பரும், செல்வமும், சுயமரியாதை
ஆர்வமும் நிரம்பியவரும் இளைஞருமாகிய தோழர் டி.பி.எஸ். பொன்னப்பனாரின்
தூண்டுதல்தான்.
பத்திரிகையின் ஆரம்ப
கால கஷ்டங்களின்போது உதவிபல புரிந்தவர் . . .
அவருடைய உதவி திராவிட
நாடு தோன்றவும், வளரவும் காரணமாக இருந்தது. இன்றும் பணிமனை அவருடைய
இல்லதில்தான். சி.எஸ்.செட்டித் தெரு, காஞ்சிபுரம்.
. . . முக்கியமாகப் பணிமனையில் இருந்து வரும் ஈழத்தடிகளின் உதவி
குறிப்பிடத்தக்கது.
. . . பத்திரிகையின் உதவி நிதி திரட்டுவதுடன் பிரச்சாரமும் நடைபெறக்கூடிய
விதத்திலே ஒரு நாடகக் கழகம் நிறுவியுள்ளோம். அன்பர்கள் ஆங்காங்கே
நாடகங்களுக்காக ஏற்பாடு செய்வதன் மலம், ஒரே சமயத்தில் இரண்டு நன்மை
புரிந்தவராவீர் என்று எடுத்துக்காட்டினோம். சந்திரோதயம் என்ற நாடகம்,
இரண்டு மூன்று மாதங்களிலே காணக்கூடிய பிரச்சாரத்தை சில மணி நேரங்களிலே
புகுத்தக்கூடிய விதமானது.
இதனை நடத்துவதன் மூலம்
பத்திரிகைக்கு உதவி செய்வதுடன், கொள்கை பரப்பவும் பேருதவியும் செய்தவராவீர்
என்ற விளக்கியிருந்தோம். அன்பர்களும் இக்கருத்தைக் கொண்டு திருவத்திபுரம்,
திருச்சி, சிதம்பரம், ஈரோடு, சென்னை ஆகிய இடங்களிலே நாடகத்தை நடத்தி
வந்தனர். நல்ல முறையிலே . . .
திராவிட நடிகர் கழகம்
எனும் அமைப்பிலே இருந்து, பத்திரிகைக்கு பண உதவி கிடைக்கும்படி செய்து
வரும் நண்பர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். நாடகத்திலே
ஆரியப் புரோகிதராக நடிக்கும் அண்ணாமலை எனும் நண்பர்.
(சி.வி.எம்.அண்ணாமலை, காஞ்சி)
. . . காஞ்சி வாசி,
இயக்கத் தொண்டர்களின் விசுவாசி, வாழ்க்கையை நடத்த வாணிபத்தில் ஈடுபட்டுள்ள
ஒரு வீர இளைஞர். அவருக்கு மனைவியாக நடிக்கும் நண்பர் துரைக்கண்ணு
என்பார் கோவை நகரிலே, மின்சார அமைபொன்றிலே பணிபுரிபவர் . . .
புரோகிதருக்கு உதவியாக
ரசவாதியாக நடிப்பவர். நீண்ட நாளைய சுயமரியாதைக்காரர், குடி அரசு
வாசகர் முனிசிபல் உத்தியோகத்திலிருந்து ஒய்வுபெற்றவர். ஓய்வை இயக்கத்துக்
செலவிடுபவர். பெயர் பார்த்தசாரதி (முதலியார்)
. . . மிராசுதாரும்,
முனிசிபல் கவுன்சிலராக இருந்துவரும் கள்ளமறியா உள்ளமும், பணி செய்கையில்
பள்ளம் மேடறியாமல் பாயும் சபாவமும் கொண்டவரும், இயற்கையான நடிப்புத்
திறனும் கொண்டவருமான தோழர் ராசகோபால் நாடகத்தில் புரோகிதரை ஆட்டிப்
படைப்பவர் . . . மற்றும் சுந்தரேசன், கோவிந்தசாமி, நாராயணசாமி, முனுசாமி
. . . தோழர் சாமிநாதன் நாடகத்தின் கதாநாயகன் . . . கதாநாயகியாக நடிக்கும்
இளைஞர் சௌராஷ்டிரர், நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர் . . பெயர் வெங்கட்ராமன்
மற்றும் ஈழத்தடிகள்.
வியாபாராத் தொழிலில்
ஈடுபட்டவரும், கௌரவ மாஜிஸ்டிரேட்டாக இருப்பவரும், சுயமரியாதைக்காரரும்,
பெரியாரின் பெரும் படையில் வெகு நாட்களுக்கு முன்பே சேர்ந்தவருமான
தோழர் போளூர் சுப்பிரமணியம், வேலைக்காரராக . . .
. . . தோழர் சீனிவாசன்
என்பவர் மடாதிபதியாக நடிக்கிறார்.
. . . இங்ஙனம், பல
சக்திகள் பல துறைகளிலே நின்று இயங்கும் நிலை தமிழகத்திலே உண்டானதற்கு
மூல காரணமாக இருக்கும் பெரியார் அவர்கள் நமக்கு அவ்வப்போது புரிந்து
வரும் பேருதவிக்காக அவருக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிளோம்.
(திராவிடநாடு - 12.03.1944)
கிராம சேவை, ஏழைகளிடம்
அன்பு காட்டுவதுபோல் ஒரு லட்சியமாகக் கருதப்பட்டு அதற்கு பலர் பலவிதமான
பொருள் கொண்டுள்ளனர்.
என் நண்பர் ஒருவருடன்
(பூவாளூர் அ.பொன்னம்பலனார்) சாப்பாட்டு விடுதியில் அமர்ந்தேன், உணவுக்கு.
உண்டி முடிந்தது. மோரும் சோறும் கலந்து கொண்டிருந்து என் நண்பர்,
கூட்டு கொஞ்சம் போடு என்றார். பொரிய இலையும் கொண்டு வா என்ற கூறினார்.
பிறகு சோறும் போடென்றார்.
நான் பிரமித்துப்
போனேன். மங்களம் பாடி முதலடி தொடங்கியவர் மீண்டும் கீர்த்தனம் பாட
ஆரம்பிக்கிறாரே இதென்ன என்று சோற்றுக் கடைக்காரர், சொன்ன வண்ணம்
செய்தார். என் நண்பர் இலையில் இடப்பட்ட எதையும் தொடவில்லை. அப்படியே
இலையை மடித்துவிட்டார். உள்ளே அத்தனை பண்டமும் கிடந்தது. நாங்கள்
எழுந்து விட்டோம். நண்பா! ஏன் இதுபோல் செய்தாய்? வீணாக அவ்வளவு பண்டத்தை
வைத்திடச் சொன்னாய், பிறகு உண்ணாமல் இலையை விட்டுவிட்டாயே பாழாகாதோ,
வீணாகாதோ என்று நான் கேட்டேன்.
பாழாகாது, வீணுமல்ல!
நாமோ ஆறணா தருகிறோம் சாப்பாட்டுக்கு.
நான்கணாவுக்கும் நாம்
உண்பதில்லை. சோத்துக் கடைக்காரனுக்குத்தான் மிச்சம். ஏன் அவனுக்கு
அது போவது என்ற நான் இந்த சூட்சுமம் கண்டுபிடித்தேன். நாம் சாப்பிட
முடியாவிட்டாலும் ஆறணாவுக்கு அவன் இலையிலே பண்டம் போடவேண்டும் என்றார்
என் நண்பர்.
பெரிய வேடிக்கையாய்
இருக்கிறது உமது சித்தாந்தம் என்று கூறிவிட்டு நான் சிரித்தேன்.
அவர் என் முதுகை தட்டிக் கொடுத்துவிட்டு சித்தாந்தமும இதிலே இருக்கிறது.
ஏழை மக்கள் எச்சிலைக்கு காத்திருக்கிறார்கள் வெளியே . . . (கிராம
சேவை - திராவிட நாடு - 10.02.1944)
நான் கல்லூரியை விட்டு
வெளியே வந்ததும் முதலில் அவரிடத்தில் (பெரியாரிடம்)தான் சிக்கிக்கொண்டேன்.
நான் சிக்கிக்கொண்டது வாலிபப் பருவத்தில்.
எங்கெங்கோ போய் சிக்கிக்
கொண்டிருக்கவேண்டியவன். அவரிடத்தில்தான் முதலில் சிக்கிக் கொண்டேன்.
நான் காஞ்சிபுரத்தில்
கல்லூரியில் படித்தபடிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ
அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஈரோட்டில் போய் குடியேறினேன்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப்போது
அடிக்கடி அவரை ஒத்த மூதாட்டிகளோடு பேசும்போது சொல்வார்கள். ஆறு மாதங்களுக்கு
அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான் காஞ்சிக்கு செல்கின்ற
நேரங்களில் அவர்கள் என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது யாரோ
ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு
போய்விட்டான் என்று பேசுவார்கள். அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில்
ஆடிசன்பேட்டையில் நடபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்களுடைய
பேச்சைக் கேட்ட பிறகு சொன்னார்கள் என்னைப் பார்த்து நீ ஈரோட்டிலேயே
இரு என்று.
. . . அவரிடத்தில்
இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பலப்பல இருக்கின்றன. என்னுடைய
வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழத் தக்கவை அவை.
இப்போது எனக்கு கிடைத்திருப்பது
(தமிழக முதல்வர் பதவி) இனி எனக்கு கிடைக்கக் கூடியது என்று எந்தப்
பட்டியலைக் காட்டினாலும் நான் ஏற்கனவே பெற்றிருந்தவற்றை விட இவை
எதுவும் மகிழ்ச்சியிலே, பெருமையிலே நிச்சயமாக அதிகமானவையாக இருக்கமுடியாது.
அவரிடத்தில் அப்போது
ஓடாது என்று கருதிய காரணத்தால் தரப்பட்ட ஒரு ஃபோர்டு மோட்டார் இருந்தது.
அதிலே நானும் அவரும்
ஏறிக்கொண்டு செல்வோம்.
ஏறிக்கொண்டு செல்வோம்
என்ற சொல்வதற்கு காரணம் அது சில நேரத்தில் ஓடாது. பிடித்துத் தள்ளவேண்டும்.
. . . திராவிடர் கழகம்
என்ற பெயர் வைத்தவன் நான்தான் . . . நானும் அவரும் ஒரு முறை சிவகங்கை
மாநாட்டுக்குப் போன நேரத்தில், அந்த ஊர் முழுவதும் பழைய செருப்புகளைத்
தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்.
(மேடைப் பேச்சு - 17.09.1967)
அந்த ஊரில் இருந்த
பெரிய மனிதர் ஒருவர் நாங்கள் பேசிய இடத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு
அந்த ஊரில் உள்ள மற்றவர்களை விட்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில்
காற்றடிக்கும் பக்கம் பார்த்து சாம்பலை தூவிக் கொண்டிருக்கச் சொன்னார்.
பெரியாரும் பேசிக்கொண்டே இருந்தார்.
நான் பேசும்போது குறிப்பிட்டேன்.
சாம்பலை தூவிக் கொண்டே இருக்கிறீர்கள். அது பெரியாரை என்ன செய்யும்.
தாடியில் படலாம், அது ஏற்கனவே வெள்ளை! அதனால் எந்தக் கெடுதலும் வராது
என்று . . . இப்போது அவர் என்னோடு வந்து பணியாற்று என்றால் அதற்கு
நான் தயாராய் இருக்கிறேன். இன்று பெரியார் அவர்கள் எனக்குப் பொன்னாடை
போர்த்தினார்கள். உண்மையாகவே இது எனக்குப் பெருமைதான்.
இதைவிட நான் பெருமையாக
கருதுவது, பெரியார் அவர்களக்கு ஞாபகம் இருக்கிறதோ என்னவோ எனக்கு
ஈரோட்டில் முதன் முதலில் நகராட்சியில் வரவேற்பு கொடுக்கச் செய்து
சால்வை போர்த்தினார்கள். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
(மேடைப் பேச்சு - 13.12.1967)
எனக்கென்று ஒரு வசந்த காலம் இருந்தது . . .
வசந்தகாலம் என்றேனே!
அந்த நாட்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி அவருடன் காடுமேடு
பல சுற்றி வந்த நிலை.
அப்போது கலவரம் எழாமல்
ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்
பெரிய வெற்றி என்று பெருமிதம் தோன்றும். அண்ணாதுரை இதை பார்த்தாயா
என்று ஓர் கடிதத்தை வீசுவார். ஆமய்யா என்று பொருளற்ற ஒரு பதில் தருவேன்.
வருகிறாயா? என்று
கேட்கமாட்டார். வருவேன் என்பது அவருக்கு நன்று தெரியுமாதலால்!
. . . அந்த வரலாறு தொடங்கப்பட்டபோது நான் சிறுவன்
. . . அந்த வரலாற்றிலே
புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே ஒரு பகுதியில்
நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். பெரியாருடன் மற்றப்
பலரை விட இடைவிடாது இருந்திருககும் வாய்ப்பை பெற்றிருந்தவன் நான்.
கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன். கடிந்துரைக்கக்
கேட்டிருக்கிறேன்.
ஒரு நாள் கூட அவர்
என்னிடம் அவ்விதம் நடந்துகொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு என்க்கென்று
தனியாக வைத்திருபபார். என்னை தமது குடும்பத்தில் பிறவாப்பிள்ளை என
கொண்டிருந்தார்.
(மேடைப் பேச்சு - 03.09.1964)
ஒரு கிராமத்தில் பெரியார்
அவர்களும் நானும் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கச் சென்றபோது
போலீசு அதிகாரி ஒருவர் எங்களை போலீசு ஸ்டேசனுக்கு வரும்படி சொல்லி
அனுப்பினார். அங்கு சென்றபோது எங்களை கைது செய்யவோ காவலில் வைக்கவோ
அழைக்கவில்லை என்றும், சனாதனிகளால் தொல்லை நேராது எங்களை பாதுகாக்கவே
அழைத்ததாகவும் அந்த போலீசு அதிகாரி கூறினார்.
(பெரியாரின் 89-ஆம் ஆண்டு பிறந்தநாள் - விடுதலை
மலர்)
தம்பி, அப்போது (1938)
உன் அண்ணன் சர்வாதிகாரியாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு இந்தி எதிர்ப்பு
போர் நடத்தியபோது, காவி கட்டிய மூவர் உடன் இருந்தனர்.
அருணகிரி அடிகள்
ஈழத்துச் சிவானந்த அடிகள்
சண்முகானந்த அடிகள்
துவக்கமும், முதல் படைத் தலைவனாக (சர்வாதிகாரியாக) இருக்கும் சிறப்பிடமும்,
வாய்ப்பும் எனக்கு அளித்த நமது தலைவர் பெரியாருக்கு என் நன்றி. கமிட்டியாருக்கும்
கழகத்தாருக்கும் என் நன்றி.
(இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தலைமை ஏற்று
விடுத்த அறிவிப்பு 08.08.1948 - திராவிடநாடு)
அவரும் (ஈழததடிகள்)
நானும் (அண்ணாவும்) சிறையிலிருந்த காலத்தில் ஏற்பட்ட நட்பும் பாசமும்
வளர்ந்து, அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஆக்கிவிட்டன. திராவிட
நாடு ஏட்டின் நிருவாகியாக நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் ஈழத்தடிகள்.
(மேடைப் பேச்சு - 03.09.1964)
. . . நான் 5, 6 வருஷங்களுக்கு
முன்பு, பிரசார நாடகமாகவே சந்திரோதயம் எழுதியிருக்கிறேன். இப்போது
லைட் கலர் ஓர் இரவு, வேலைக்காரி தீட்டியிருக்கிறேன். இப்படிப்பட்ட
நாடகங்கள் எல்லோராலும் பார்க்கப்படவும் கொள்கைகள் பலருக்கு பரவவும்
வழி செய்யும். நண்பர் கருணாநிதி இப்படிப்பட்ட நாடகங்களை எழுதிக்
கம்பெனிகளுக்குத் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
(12.09.1948 திராவிட நாடு - திருச்சியில்
நடந்த தூக்கு மேடை நாடகத்தில் தலைமை வகித்துப் பேசியது)
நீதிக்கட்சியில்
அண்ணா
தம்பி! நான் ஜஸ்டிஸ் கட்சி காலத்திலிருந்து, இப்படிப்பட்ட குழுக்களில்
அமர்ந்திருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். பெருந்தலைவர்கள்
அருகே நெருங்கவே முடியாத குழுவினர், அரண்மனைவாசிகள் ஆகிறோர் அமர்ந்து
அரசோச்சிய அவைகளிலே, இப்படி என்னையும் உடனிருக்கச் செய்திருக்கிறார்கள்.
பொப்பிலியும் செட்டிநாட்டுக் (அப்போது) குமாரராசாவும், சர் முகமது
உஸ்மானும் அவர் போன்ற வேறு பல கனவான்களும் வீற்றிருந்த குழுக்களில்,
(அப்போது) அரும்பு மீசையும், கல்லூரி முலாமும் கொண்டவன் அமர்ந்திருக்கிறேன்.
அப்போதெல்லாம், கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மறு அறையில் உள்ளவர்களுக்குக்
கூடத் தெரியாது, கேட்காது. அவ்வளவு மெல்லிய குரலில், விட்டு. விட்டு
வார்த்தைகள் வெளிவரும். அதுவும் ஒருவர் இருவரிடமிருந்து; மற்றையோரெல்லாம்,
இவ்வளவு செல்வவான்கள் வந்து முகாமில் இருக்கும்போது தேர்தலைப் பற்றிய
பயம் என்னென்ன என்று எண்ணிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
உறுப்பினர்களிலே பலருக்கு,
அந்தக் குழுவிலே இடம் பெறுவது, அந்தஸ்தின் அறிகுறியே தவிர, பணியாற்றும்
வாய்ப்பு என்றோ, பொறுப்பான செயல் என்றோ எண்ணம் வந்ததில்லை.
போடியும் போலாவரமும், வெங்கடகிரியும் வடபாதியும் காலாஸ்தியும் கார்வேட்டியும்,
சிங்கம்பட்டிபும் உத்தம பாளையமும், பொப்பிலியும் பிறவுமாக வீற்றிருக்கும்
இடத்தில் பணியாற்றும் வாய்ப்பு.
பொருப்பேற்கும் பேறு
என்றா எண்ணம் இருக்க முடியும்! நான் தம்பி! அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குள்
புகுத்தப்பட்ட புது இரத்தம் இளவெட்டு ஜஸ்டிஸ் அந்தஸ்தை இழந்து வருகிறது
என்பதற்கு எடுத்துககாட்டு என்ற அளவிலே, அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டிருந்தேன்,
அந்த நிலை கிடைத்ததற்கும் காரணம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை
இயக்கம் துணை புரிந்தாகவேண்டிய கட்டம் பிறந்ததுதான்.
தம்பி! அந்தப் பழைய
நாளை நான் நினைவுபடுததிக்கொண்டதற்குக் காரணம், அந்த நாட்களிலே, கட்சியின்
கனவான்கள், கட்சிக்கு நீங்காத் தொடர்பு கொண்டது. பிரச்சனைகளிலே எந்த
அளவுக்கு அக்கறை கொண்டவர்கள் என்ற வேதனை தரும் வேடிக்கையை உனக்குக்
கூறுவதற்குதான்!
அப்போது அரசியலில்
மிகச்சூடான பிரச்சனை திலகர் சுயராஜ்ய நிதி என்ற பேரால் திரட்டப்பட்ட
ஒரு கோடி ரூபாய், காங்கிரஸ்காரர்களால் பாழாக்கப்பட்ட பயங்கர சம்பவம்தான்.
டி.ஏ.வி. நாதன் எனும் எனது நண்பரும், சண்டே அப்சர்வர் ஆசிரியரும்,
என்னை ஜஸ்டிஸ் கட்சிக்கு இழுத்து சென்றவருமான பி.பாலசுப்பிரமணியமும்,
ஜஸ்டிஸ் இதழில் வெளுத்து வாங்கினார்கள், திலகர் சுயராஜ்ய நிதி மோசடி
பற்றி.
கடப்பையில், ஜஸ்டிஸ்
மாநாடு. நான் அதிலே பேனேன். திலகர் நிதி மோசடி குறித்து. அப்போது,
நான்தான் சொன்னேனே, அரும்பு மீசை என்று அதற்கேற்ற வகையில் ஆங்கிலத்தில்!
பெருந்தலைவர்கள், வழக்கப்படி கைக் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்
கொண்டனர். முகம் சுளித்தபடி அல்ல; அங்கிலத்துக்கு மதிப்பளிக்கவேண்டுமல்லவா,
அதனால் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரம் - ஆத்திரம்
தீரப் பேசி முடித்தேன். அங்கே கூடியிருந்தவர்கள் அவ்வளவு பேரும்
என் எதிரிகள் போலவும், அவர்கள் யாவரும் திலகர் நிதி மோசடியே நடைபெறவில்லை
என்று என்னிடம் வாதாடக் கச்சையை வரிந்துகட்டிக் கொண்டு நிற்பது போலவும்
எண்ணிக்கொண்டு பேசுகிறேன் பழுப்பேறாத மிளகாய், அப்போது நான், அதனால்!
தேனீர் விருந்துக்காகக் கலைந்து சென்றோம் . நான் கற்பனைக் காற்றில்
மிதக்கிறேன் - இனிப் பரவாயில்லை - திலகர் நிதி மோசடிபற்றி நாடே சீறி
எழும் என்ற எண்ணியபடி - ஒரு தலைவர், என் நன்மதிப்பினைப் பெற்றவர்
- முதுகில் என்னைத் தட்டிக் கொடுத்தப்படி, தனியே அழைத்துச் சென்று
அண்ணாதுரை இதென்ன ஏதேதோ பேசிவிட்டாயே, ஆங்கில நடை அழகை நான் ஒப்புக்கொள்ள
முடியும். ஆனால் நீ பேசிய அண்டப் புளுகுகளை எப்படி ஏற்றுக் கொள்வேன்?
இப்படி எதற்காகப் பேசினாய்? என்று கேட்டார்.
நானோ, தம்பி! நாட்டு
மக்களுக்கு ஒரு பேருண்மையை விளக்கிவிட்டோம். காங்கிரஸ் கட்சியினர்
செய்த ஒரு கயமைத்தனத்தை அம்பலப்படுத்திவிட்டோம் என்ற பூரிப்பில்,
ராஜ நடை போட்டுக்கொண்டு செல்கிறேன். இந்தப் பெரியவரோ, அண்டப்புளுகு
பேசுவது அழகா என்று என்னைக் கேட்கிறார். என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்
என்பதை எண்ணிப் பார்.
நான் கூச்சத்துடன், ஆனால் துணிவினைத் தருவித்தபடி, திலகர் நிதி மோசடிபற்றி
அவரிடம் விளக்கலானேன்.
நான் அவருக்கு! சாமான்யன்
- பிரமுகருக்கு!! தொண்டன் தலைவருக்கு!!
அப்படியா? உண்மையாகவா?
ஒரு கோடியா? பாழாகிவிட்டதா! என்று மேலும் மேலும் ஆச்சரியத்தால் தாக்குண்ட
நிலையில் கேட்டார் அவர். நான் திகைத்துப் போனேன். ஆனால், தம்பி!
கடைசியாக என்னைத் திணற வைத்தது அது அல்ல.
அதென்ன பெரியவரே!
இதெல்லாம் தெரியாது என்கிறீரே? பத்துக் கட்டுரைகள் வெளிவந்தனவே இது
குறித்து, நம் ஜஸ்டிஸ் பத்திரிகையில் என்றேன் நான். அமைதியாக அந்த
அருந்தலைவர் சொன்னார். நான் ஜஸ்டிஸ் படிப்பதில்லை என்று.
தம்பி! அவர் ஜஸ்டிஸ்
கட்சியிலே முக்கியஸ்தர். மற்றோர் முறை ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை
அமைத்திருந்தால் அவர் நிச்சயம் மந்திரியாகி இருப்பார்! அவர், ஜஸ்டிஸ்
படித்திடும் வழக்கமில்லை என்பதை பதறாமல் கூறுகிறார்!
கேட்டுக் கொண்டேன்
தம்பி, கேட்டுக் கொண்டேன்! இப்படி எத்தனையோ!
எதற்குக் கூறகிறேன்
என்றால், ஒரு கட்சியின் முக்கியஸ்தர் அதன் நிர்வாகக் குழுவிலே இடம்
பெற்றவருக்கு இந்த அளவுக்குத்தான் அக்கறை இருந்தது! அதை எல்லாம்
பார்த்துப் பார்த்து, கசப்பு கிலியும் கொண்டிருந்த எனக்கு, இப்போது
நமது பொதுக் குழுவில் உறுப்பினர்கள் காட்டும் அக்கறையும், அளித்திடும்
ஆய்வுரையும், பெற்றுள்ள தெளிவும், காட்டும் துணிவும் உள்ளபடி, தெம்பு
தருகிறது.
(தம்பிக்கு - 05.02.1956)
|