அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
26
வரும்பொருள்
உரைக்கும் தன்மை
ஒன்றின் நிகழ்வைச் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதன் எதிர்காலத்தின் போக்கு
எப்படி அமையும் என்பதை வரையறுத்துக் கூறும் வல்லமை அறிஞர் அண்ணா
அவர்களிடத்தில் நிரம்ப உண்டு.
தோழர் என்.வி.நடராசன்
அவர்கள் காங்கிரசில் மிதுத் தீவிரவாதியாக இருந்து பாடுபட்டுக்கொண்டு
வரும்போதே அவர் அண்ணாவோடு நெருங்கிய நட்புறவு கொண்டு பழகும்போது
தம்மை ஒரு தீவிர தேசியவாதியாகக் காட்டிக்கொள்வதிலும், அந்த நேரங்களில்
அண்ணா அவர்களை எந்த அளவுக்கும் எதிர்த்து நிற்கத் துணிவு கொள்வதிலும்
தோழர் நடராசன் ஒருபோதும் தவறுவதில்லை.
தோழர் என்.வி.நடராசன்
அவர்களின் உள்ளம், உணர்ச்சி ஊக்கம் ஆகியவற்றைக் கண்ட அண்ணா அவர்கள்
நடராசன்! நீ என்றைக்கேனும் ஒரு நாள் என் கட்சிக்கு வந்து சேரத்தான்
போகிறாய் பார்! என்னை விட்டு நீ தப்பமுடியாது! என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அதற்கு, அண்ணா! அதுதான் முடியாது! எப்பேர்பட்ட நிலைமை வந்தாலும்
நான் தேசியத்தை விட்டு, உங்களைப் போல் ஏகாதிபத்ய தாசனாக மாறமாட்டேன்!
என்று பதிவிறுப்பார். ஏன் இப்பொழுது வீராப்பு பேசுகிறாய்? போகப்
போகப் பார்! என்று அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டே கூறுவார்கள்.
தோழர் நடராசன் அவர்கள்
அண்ணாவிடம் பேசும்போது, காங்கிரசு தாய்மொழி தமிழுக்குத்தான் ஊக்கமளிக்குமே
ஒழிய, இந்தியைக் கட்டாயமாக ஒரு நாளும் புகுத்தாது, மக்களின் நலத்திற்கு
மாறுபாடாகத் காங்கிரசு ஒருபோதும் நடக்காது என்று அடிக்கடி கூறுவார்.
ஆனால் ஆச்சாரியார் அமைச்சர் அவை 1938-ல் இந்தியைக் கட்டாயப் பாடமொழியாகப்
புகுத்தியது. அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் நடராசனைப் பார்த்து
இப்பொழுது என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டார்கள். இந்தியைக் கட்டாயப்
பாடமாக்குவது காங்கிரசின் திட்டமல்ல. எனவே நான் அதனை எதிர்க்கத்தான்
போகிறேன் என்று தோழர் நடராசன் அவர்கள் அதற்கு மறுமொழி பகன்றார்.
இந்தி எதிர்ப்பு இயக்கம்
மிகமும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது காங்கிரசுப் பொதுக்கூட்டங்களில்
கலந்துகொள்ளும் தொழர் நடராசனுக்கு மிக்க சங்கடமான நிலைமை ஏற்பட்டது.
காங்கிரசுக்காரர்கள் பலரும் கட்டாய இந்தியை ஆதரித்துப் பேசினர்.
ஆதரித்துப் பேசினால் அண்ணாவின் கேலி பிறக்கும், எதிர்த்துப் பேசினால்
பிற காங்கிரசுக்காரார்களின் சினம் சீறும். இறுதியில், தமக்குப்பட்ட
கருத்து வழி நின்று, அண்ணாவின் கேலி மொழிக்கு இடங்கொடாமல், இந்தியை
எதிர்த்துப்பேசவே தலைப்பட்டார். இது காங்கிரசு வட்டாரத்தின் பெரும்
புயலைக் கிளப்பிவிட்டது. இந்திப் பிரச்னையைப் பற்றி முடிவு எடுக்க
மாவட்டக் காங்கிரசுச் செயற்குழுக் கூட்டம் அவசரமாகப் கூட்டப்பட்டது.
இந்திப் பிரச்னையைப்
பற்றி முடிவு எடுக்கக் காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
அதற்கு தோழர் நடராசன் போயிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற
அண்ணா அவர்கள் தம் உற்ற நண்பரான டாக்டர் சி.கணேசன் அவர்களை அவசரமாக
அழைத்து இன்று காங்கிரசுச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தோழர்
நடராசன் சென்றிருக்கிறார். அவர் இந்தியை எதிர்த்துப் பேசப்போகிறார்.
பெரும்பாலோர் இந்தியை ஆதரித்துத் தீர்மானம் செய்யப் போகிறார்கள்.
தோழர் நடராசன் அந்தக் கணமே விலகல் கடிதம் கொடுத்துவிட்டு வெளியேறப்போகிறார்.
அதற்குள் நீ இன்று மாலை நடைபெறும் நமது இந்தி எதிர்ப்புப்பொதுக்
கூட்டத்தில், காங்கிரசை விட்டு வெளியேறிய தோழர் என்.வி.நடராசன் அவர்களும்
கலந்துகொள்வார் என்று துண்டு அறிக்கை அச்சடித்து, எடுத்துக்கொண்டு
கூட்டம் நடைபெறும் கட்டித்தின் வாயிலண்டையில் போய் நில். தோழர் நடராசன்
விலகல் கடிதம் கொடுத்துவிட்டு வெளிவந்தால், இந்த துண்டு அறிக்கைகளை
அவரிடமும் பிறரிடமும் கொடு. நிலைமை வேறு விதமாக இருந்தால் அப்படியே
எடுத்துக்கொண்டு வந்துவிடு! என்று சொல்லி அனுப்பினார்கள்.
அண்ணா அவர்கள் முன்கூட்டி
நினைத்தவாறே நிகழ்ச்சி நடந்தேறி தோழர் நடராசன் விலகல் கடிதத்தைத்
தோழர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.
தோழர் கணேசன் நடராசன் அவர்களிடம் துண்டு அறிக்கையை நீட்டினார். தோழர்
நடராசன் துண்டு அறிக்கையைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். அறிஞர்
அண்ணாவின் குறும்பு என்று எண்ணிக்கொண்டு, வேறு வழியின்றி அன்று மாலைப்
பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அறிஞர் அண்ணா அவர்களின் வரும்
பொருள் உரைக்கும் தன்மை வென்றது! அன்று தொடங்கிய தோழர் என்.வி.நடராசன்
அவர்களின் திராவிட இயக்கப் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
(மன்றம் - 01.12.1956)
அருமையும்
எளிமையும்
அறிஞர் அண்ணா அவர்கள் எந்த அளவுக்கு அருமையும் பெருமையும் உடையவர்களோ,
அந்த அளவுக்கு எளிமையும் இனிமையும் உடையவராவார்கள். மேடையேறிச் சொல்லாற்றல்,
கட்டுரை - கதை - கவிதை - நாடகம் - திரைக்கதை - வசனம் எழுதும் எழுத்தாற்றல்,
நாடகங்களில் சில உறுப்புகள் ஏற்று நடிக்கும் நடிப்பாற்றல், அரசியலிலிருந்து
அடுக்களை வரையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் தெளிவாக அறிந்து அவற்றின்
நுட்பங்களையெல்லாம் வரையறுத்து தெளிவுபடுத்திக் காட்டும் ஆற்றல்,
நாட்டிற்கும் மக்களுக்கும் உகந்த திட்டங்கள் சுட்டிக்காட்டிடும்
ஆற்றல், இயக்கத்திற்குத் தலைமை தாங்கி அதனைத் திறம்பட நடத்திச் செல்லும்
ஆற்றல், நண்பர்களோடு மணிக்கணக்கில் நாட்கணக்கில் உட்கார்ந்து தொடர்ந்து
இனிமையாக உரையாடும் ஆற்றல், உள்ளன்போடும் உயர்பண்போடும் பழகும் ஆற்றல்,
தலைவரோடு தலைவராகத் தொண்டரோடு தொண்டராய் நண்பரோடு நண்பராய் நடந்துகொள்ளும்
ஆற்றலும் ஆகிய இத்துணை ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற அறிஞர் அண்ணா
அவர்களுக்குத் தமிழகத்தில், ஏன் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஈடு
இணையுள்ளார் எவரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்கள்
பெற்றுள்ள ஆற்றல்களில் ஒன்றையோ அல்லது ஒறு சிலவற்றையோ அரைகுறையாகப்
பெற்றிருந்தால் கூட, அகந்தையின் உச்சியிலே ஏறி நின்று குதியாட்டம்போடும்
பலரை நாம் அன்றாடம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண கூழைமட்டை,
பேயத்திக்கொம்பு, முருங்கை மிலாறு, தாழங்காய் போன்றவர்களெல்லாம்
கூட அரைகுறைத் திறமையும், தகுதியும் பெற்றுவிட்ட உடனே தலை துள்ளிக்
குதிப்பதைப் பார்க்கிறோம், பலரிடத்தில் ஆற்றல் வளர வளர அகந்தையும்
வளரக் காண்கிறோம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் அறிவாற்றலும்,
பெருமையும், புகழும், சீரும் சிறப்பும், பொலிவும், வலிவும், ஆக்கமும்,
தகுதியும், திறமையும், செம்மையும் செல்வாக்கும் வளரவளர, எளிமையும்
இனிமையும் மேல்மேலும் வளர்ந்தோங்கும் அறிய பண்பை அவரோடு நெருங்கிப்
பழகுகிறவர்கள் தெளிவாக உணருவார்கள்.
சென்ற ஏழு ஆண்டுகாலத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் பரந்து, விரிந்து, வளர்ந்து, சிறந்து,
ஓங்குபுகழ் எய்தி வந்திருக்கிறது என்றால், அதற்குப் பெரும்பங்கு
முழு முதற் காரணமாக இருந்து வருபவர் அறிஞர் அண்ணா அவர்களே அவார்கள்.
அறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல் நேரம், நினைப்பு, உழைப்பு,
பேச்சு, எழுத்து, நடிப்பு நாடகம், திரைப்படம் ஆகியவற்றின் மூலம்
கழகம் வளர்ந்து வந்துள்ள தன்மையைக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்
அளவுக்கோ, அல்லது அவர் அருகே அணுகுகிற அளவுக்கோ நம்மால் பணியாற்ற
இயலுமா என்பதைத்தான் நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தமக்குத்தாமே
சிந்தித்துப்பார்த்து வியந்து போவார்கள்: இவ்வளவு அருமை பெருமைகளைப்
படைத்த அண்ணா அவர்கள் மிகச் சாதாரணமானவரோடும் பழுகுகிறார், மிகச்
சாதாரணமானவர்களிடத்தில் காணப்படும் சிறிதளவு திறமையாக இருந்தபோதிலும்
அதனைப் பெரிதும் பாராட்டுகிறார், மிகச் சாதாரண உடைகளை உடுத்திக்
கொள்கிறார், மிகச் சாதாரண வசதிகள் கிடைத்தாலும் திருப்தி கொள்கிறார்,
மிகச் சாதாரண உணவு உட்கொள்வதிலே அமைதி பெறுகிறார். அடக்கமே உருவாக
அமையப் பெற்றிருக்கிறார் என்று அறியும்போது அழுக்காறற்ற உள்ளம் படைத்தவர்கள்
அனைவரும் அறிஞர் அண்ணா அவர்களைப் போற்றிப் பாராட்டி வியப்புற்று
நிற்கிறார்கள்.
அருமையாயும், எளிமைக்கெல்லாம்
எளிமையாயும் விளங்கும் அறிஞர் அண்ணா அவர்களைச் சீரிய வழிகாட்டியாகக்
கொள்வதிலும் அவரது அறிய அறிவுரைகளைக் கேட்பதிலும், அவரது உயரிய திட்டங்களை
நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் இலட்சக் கணக்கானவர் நாடெங்கிலும்
துடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தான், அப்படிப்பட்ட
அறிஞர் அண்ணாவைப் பெற்றிருப்பதிலே திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும்
பூரிப்பும் பெருமையும் கொள்கிறது!
(மன்றம் - 15.12.1956)
அண்ணாவும்
இசைப்பெரும் புலவரும்
நாதசுர இசையுலகில் மன்னர் மன்னராய் விளங்கியவரும், மங்கா மணி விளக்காய்
நின்று என்றென்றும் புகழொளி வீசி வந்தவரும், ஈடும் எடுப்பும் அற்றுத்
திகழ்ந்தவரும், தன்மானம் குன்றாமல் தலைதாழாச் சிங்கமென வாழ்ந்தவரும்,
வீண் ஆடம்பரக்காரருக்கும் - பணக்காரருக்கும் - பதவியாளருக்கும் பணியாமல்,
வளையாமல், நெளியாமல் வாழ்ந்து வந்தவரும் நாதசுர இசையுலகில் இருந்துவந்த
கைகட்டல், வாய்பொத்தல், மேல் துண்டை இடுப்பில் கட்டல், செருப்பைக்
கழற்றிவிட்டுக் குனிந்து நின்று வணங்கல், சட்டை போடாமலிருத்தல்,
குடுமிவைத்தல் போன்ற அடிமைச் சம்பிரதாயங்களை அடியோடு ஒழித்த புரட்சி
வீரரும் ஆன மறைந்த இசைப் பெரும் புலவர் டி.என்.இராசரத்தினம் அவர்கள்,
அறிஞர் அண்ணா அவர்களிடம் பெருமதிப்பும், பெருமரியாதையும் காட்டி
அன்போடு பழகி வந்தவராவார்.
அறிஞர் அண்ணா அவர்களின்
திருவாவடுதுறை இராசசரத்தினம் அவர்களின் நாதசுர இசையில் திளைத்து,
அவரைப் பலபடப் பாராட்டிப் போற்றி மகிழ்ந்து அவரோடு இனிய முறையில்
பழகிவந்தார்கள்.
நாதசுர மன்னர் டி.என்.இராசரத்தினம்
அவர்களின் நாயனக் கச்சேரி அண்மையில் எங்கேயேனும் உண்டு என்றால்,
அங்குப்போகும் வாய்ப்பு இருக்கிறது என்றால், அண்ணா அவர்கள் அங்கு
ஓடோடிப் போய் இருந்து நாதசுர இசையைக் கேட்டு மகிழ்வார்கள். அவையில்
தம் எதிலே அண்ணா அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துவிட்டால்,
தோழர் இராசரத்தினம் அவர்கள் பெருமகிழ்ச்சியுற்றுப், பெருமுயற்சி
எடுத்து மிகத் திறம்பட நாயனம் வாசித்துக் காட்டுவார்கள். திருச்சியில்
தோழர் டி.பி.பொன்னுச்சாமி அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்குத்
தோழர் இராசரத்தினம் அவர்களின் நாதசுர இசையரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாதசுர இசையரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாதசுர இசையரங்கு
முடியும் தறுவாயில் அறிஞர் அண்ணா அவர்கள் அங்கு வந்தார்கள். அண்ணா
அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அறிந்தவுடனே, தோழர் இராசரத்தினம்
அவர்கள் தம் களைப்பையும் பாராமல், வாசிப்பை நிறுத்த வந்த நிலையை
மாற்றி மேற்கொண்டு ஒன்றரை மணி நேரம் மிக நேர்த்தியாகத் திறம்பட வாசித்துக்
காட்டினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள், தோழர் எஸ்.எஸ்.பி.லிங்கம்
அவர்கள் மக்களின் படிப்புத் துவக்க விழாவின்போது இசைப்பெரும்புலவர்
டி.என்.இராசரத்தினம் அவர்களைப் பாராட்டிப் பேசும்போது, நாதசுர இசை
தமிழ்நாட்டின் தனிப்பெருமைக்குரிய ஈடும் எடுப்புமற்ற அறிவுச் செல்வம்
என்றும், அச்செல்வம் இசைப் பெரும்புலவர் இராசரத்தினம் அவர்களின்
திறமையாலும் உழைப்பாலும் புதுமையும், பொலிவும், புகழும், பெருமையும்
பெற்று விளங்குகிறது என்றும், அவரது நாதசுர இசையில் குழலோசை, யாழோசை,
பிடிலோசை, வாய்ப்பாட்டோசை ஆகிய அனைத்தையும் தனித்ததியாகவும் சேர்த்தும்
காணலாம் என்றும், அவர் காட்டும் புதுவழியைப் பின்பற்ற மற்ற நாதசுர
வல்லுநர்களுக்கு பல தினங்கள் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.
சென்னை கடற்கரையில் பல இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி வைத்து, அவரிடம்
பயிற்சி பெற்றவர்களையெல்லாம் நாதசுர இசையை முழங்கச் செய்து அவருக்குப்
பொன்னாடை போர்த்தி, அவரிடம் பொன் முடிப்பு அளிக்கத் தாம் ஆவல் கொண்டிருப்பதாகவும்,
அவரது அடுத்த பிறந்தநாள் விழவின்போது அதனைச் செய்ய எண்ணியிருப்பதாகவும்
கூறினார்கள். அண்ணா அவர்களின் ஆவல் நிறைவேறுவதற்குள்ளாகவே, நாதசுரமணி
மறைந்துவிட்டதானது, அண்ணா அவர்களக்குத் திகைப்பையும், துக்கத்தையும்,
துயரத்தையும் தருவதாகிவிட்டது.
அறிஞர் அண்ணா அவர்களுக்கு
நாதசுர இசை என்றால் மிகச் சின்னஞ்சிறு பருவத்திதிலிருந்தே அதனிடத்து
மிக்க ஆர்வம் உண்டு. நடு இரவில், நிலவொளி காலத்தில் தோழர் இராசரத்தினம்
அவர்களின் நாதசுர இசை தெருக்கோடியில் எழும்ப அதனைத் தொலையில் நின்று
கேட்பதிலே அண்ணா அவர்களுக்குத் தனி விருப்பம்.
தமக்கு எதிர்காலத்தில்
வாழ்வளிக்கப் போகிறவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்கள் என்று நாதசுர
மன்னர் மன்னர் கருதிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு இருவரிடையே
உள்ளன்பு வளர்ந்திருந்தது.
(மன்றம் - 01.01.1957)
அண்ணாதுரை பாதை!
காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பல கிராமங்களுக்கும் அண்ணா அவர்கள்
வாக்காளர்களைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்படியே
ஒரு கிராமத்திற்கு அறிஞர் அண்ணாவும் வேறு சில நண்பர்களும் சென்றார்கள்.
அந்த ஊர் மக்களும் அண்ணா அவர்களை மற்ற பகுதி மக்கள் வரவேற்பதைப்
போலவே மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றார்கள். அண்ணா
அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து உங்கள் ஊர்ப் பாதை புதிதாக
இருக்கிறதே எப்போழுது போடப்பட்டது என்று கேட்டார்கள். மிச் சமீப
காலத்தில்தான் போடப்பட்டது என்று தெரிவித்தார்கள். அந்தக் கூட்டத்தில்
இருந்து ஒருவர் இந்தப் பாதைக்கு நாங்கள் அண்ணாதுரை பாதை என்று பெயர்
வைத்திருக்கிறோம் என்றார். ஏன்? என்று புன்முறுவலோடு கேட்டார்கள்.
அதற்கு அவர் கூறினார். நீங்கள் இந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிற
காரணத்தால்தான் இவ்வளவு அவசரமாக காங்கிரஸ் சர்க்கார் இந்த ஊர்ப்பாதையைப்
போட்டிருக்கிறார்கள். ஆக இது உங்களால் எங்களக்கு கிடைத்ததுதானே,
எனவே, அண்ணாதுரை பாதை என்ற பெயர் இதற்கு பொருத்தம்தானே என்றார்.
சூழ்ந்து நின்றவர்கள் அனைவரும் அதனைச் சிரிப்புடன் ஆமோதித்தனர்.
(மன்றம் - 15.03.1957)
சிற்றூர்களில்
எலெக்ஷன்
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலின் முதல் தடவையாக ஈடுபட்டபொழுது,
தேர்தலில் ஓட்டு கேட்பது மட்டுமல்ல, தேர்தல் என்றால் என்ன? ஓட்டுமுறை
எப்படி? அதன் பெருமை - பொறுப்பு என்ன? என்றெல்லாம் விளக்க வேண்டியிருந்தது.
அறியாமை அதிகமாக நிலவுகிறபடியால், கண்மூடித்தனமாக இதுவரை ஓட்டுக்கள்
போடப்பட்டிருக்கின்றன. முதல் தடவையாகக் கழகம் தேர்தலுக்கு வந்தபோழுது,
தாங்கள் யார்? தங்களுடைய கொள்கைகள் என்ன? என்பதை விளக்குவது மட்டும்
போதாதாக இருந்தது. ஜனநாயகம், ஓட்டுமுறையின் அவசியம், அதன் அருமை
இவற்றை விளக்கிச் சொல்லி விட்டு, பிறகு கழகத்தின் கொள்கைகளைச் சொல்லி
ஓட்டுப் பெறவேண்டியிருக்கிறது. இதற்கு முன்னதாக வந்த தேர்தலில் ஈடுபட்டிருந்த
பெரும் அரசியல் கட்சிகள் அந்தவகை ஜனநாயக உணர்வை ஊட்டவில்லை; ஆளுங்கட்சி,
மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பணபலத்தை நம்பியதால், மக்களிடையே
வாக்குரிமையின் மேன்மையைப் பற்றிப் பேசவில்லை; மக்களாட்சி முறையின்
அடிப்படையில் மக்களிடையே வாக்குரிமைகளைப் பெறவில்லை. தேர்தல்கள்
பல வந்திருந்தபோதிலும், இன்னும் தேர்தல் ஓட்டு இவைகளைப் பற்றித்
தெளிவான விளக்கம் மக்களுக்கு உண்டாகவில்லை.
அறிஞர் அண்ணா அவர்கள்
அவர் தொகுதியில் தேர்தல் சுற்றுப்பயத்தின்போது, ஒரு சிற்றூர்க்குப்
போயிருந்தார். அங்கு ஒரு குடிசைக்குப் பக்கத்தில் அண்ணா அவர்கள்
உட்கார்ந்திருந்தார். அப்பொழுது ஒரு கிழவி அந்தப் பக்கம் வந்தார்கள்.
நீங்கள் யார்? என்று
கிழவி கேட்டாள்.
எலெக்ஷனுக்கு வந்திருக்கிறோம்
என்று அண்ணா சொன்னார்.
கிழவி சற்று யோசித்தாள்;
பிறகு பிரிந்துகொண்டவள்போல, எலெக்டிரிக் லைட் போட வந்திருக்கிறீர்களா?
என்றாள்.
இல்லையம்மா! எலெக்ஷன்
- ஓட்டுப் போடுவது, ஓட்டுக் கேட்க வந்திருக்கிறோம்
அதுதான் ஐந்து வருஷத்து
முன்னே வந்து வாங்கிட்டுப் போயிட்டாங்களே!
மறுபடியும் இப்பொழுது
ஓட்டுக் கிடைக்கும், அதை உங்களுக்கு யார் பேரில் நம்பிக்கையிருக்கிறதோ,
அவர்களுக்குப் போடலாம்
நீ நிக்கிறியா? ஆமாம்
சரி ஓட்டைக்கொடு!
உனக்கே தந்துடறேன்
தேர்தல் நாளன்று,
தேர்தல் சாவடியில்தான் ஓட்டுச் சீட்டை தருவார்கள் என்றெல்லாம் அண்ணா
அவர்கள் விளக்கிச் சொல்லவேண்டியதாயிருந்தது.
தேர்தலில் ஓட்டுக்
கேட்பதற்கு முன்னால், தேர்தல் ஓட்டு என்பவைகளைப்பற்றி மக்களுக்கு
விளக்கிவிட்டு, பின்புதான் நாம் தேர்தலில் நிற்கும் கொள்கைகளைப்
பற்றிச் சொல்லவேண்டியிருந்தது.
(மன்றம் - 01.04.1957)
பேரறிஞர்
அண்ணா
பேரறிஞர் அண்ணா அவர்கள் அழுதுகொண்டே குழந்தையாகப் பிறந்தபோது, அவர்
வீட்டிலுள்ளவர்களெல்லோரும் சிரித்துக்கொண்டே வாரியணைத்து வரவேற்றனர்;
அவர் சிரித்துக்கொண்டே மறையும்போது, நாட்டிலுள்ளவர்களெல்லாம் தேம்பித்
தேம்பி அழுதுகொண்டே வாரிக் கொடுத்து விடைபெற்றனர்.
பொதுவாக இந்தியாவின்,
குறிப்பாகத் தமிழகத்தின் கோடானுகோடி மக்களின் உள்ளங்களைத் தம் அறிவுத்
திறனாலும், ஆற்றல் வலிமையினாலும், பண்பாட்டுச் செறிவினாலும், செயல்
நுட்பத்தினாலும் கொள்ளைகொண்டு எல்லாருடைய இதயங்களிலும் நீங்காத,
நிறைந்த ஓர் இடத்தைப் பெற்றவர் அறிஞர் அண்ணா அவர்கள்.
வசதி, வாய்ப்பு, அதிகாரம்,
ஆதிக்கம், பட்டம், பதவி, தோட்டம், துரவு, மேடு, மாட மாளிகை, கூட
கோபுரம், கோட்டை கொத்தளம், பணம் பகட்டு போன்றவற்றை எவரும் எங்கும்
எளிதிலோ, அன்றிச் சிறு பெரு முயற்சியிலோ பெற்றுவிட முடிகிறது.
அவற்றை நேர்வழியிலும்
பெறுகிறார்கள்; குறுக்கு வழியிலும் பெறுகிறார்கள்; கோணல் வழியிலும்
பெறுகிறார்கள். ஆனால், ஒருவர் அவ்வளவு எளிதில் பெற முடியாத விலை
மதிக்க முடியாத பொருள் பிறருடைய இதயமேயாகும்.
வசதி படைத்த பெரும்
பணக்காரர் ஒருவர் எட்டு அடுக்கு மாளிகையில், உயரத்திலே உள்ள நிலா
முற்றத்தில், பஞ்சணை பொருத்திய மலர்ப்படுக்கையில், பக்கத்தில் இருவர்
வெண்சாமரம் வீச, மூவர் கால் பிடிக்க, நால்வர் கை பிடிக்கப் படுத்திருந்தாலும்
அவரைச் சுற்றிலும் நின்று பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் என்ன எண்ணிக்
கொண்டு பணியாற்றுவார்கள்?
இவன் எப்போது ஒழிவானோ,
நாம் எப்போது மன அமைதி பெறுவோமோ! என்று எண்ணிக்கொண்டுதான் அடிமை
வேலை செய்வார்கள். எவ்வளவு மிக்க வசதியுடையவராக இருந்தாலும், பக்கத்திலிருந்து
ஓயாது ஒழியாது பணியாற்றுபவர்கள் இதயத்திலே கூடக் கடுகளவும் இடம்
பெற முடியாமல் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டு போகிறவர்கள் எத்தனையோ
பேர்கள் இருக்கிறார்கள்.
தம் கீழே வேலை செய்பவர்களின்
இதயத்தில் இடம் பெற முடியாத அதிகாரிகள், பக்கத்து வீட்டார் இதயத்தில்
இடம் பெற முடியாத தனயன், தனயன் இதயத்தில் இடம் கிடைக்காத தந்தை என்றவாறு,
பிறர் இதயத்தில் இடம் பெறாமலும், பெற முடியாமலும் தவிப்பவர்கள் உலகில்
கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள்.
உடைமையை, ஆளை, வேலையை,
அதிகாரத்தை, பட்டத்தை, பதவியை, வாக்குச் சீட்டைக் கூட விலை கொடுத்து
வாங்கிவிட முடிகிறது பலரால்; ஆனால் பிறருடைய இதயத்தை எவராலும் விலை
கொடுத்து வாங்கிவிட முடிவதில்லை. ஓர் இலட்ச ரூபாயை நீட்டி, உன் இதய
அன்பை என்னிடம் என்றென்றும் வை என்று ஒருவர் கேட்டாலும் தொகையைப்
பெற்றக்கொண்டவன், தொகை கொடுத்தவரை வாயார வாழ்த்தினாலும், ஓர் இலட்சம்
ரூபாய்தானே தந்துள்ளான்; கஞ்சப்பயல், இவன் கொள்ளையடித்து வைத்துள்ள
கோடிக் கணக்கான ரூபாய்களிலே இன்னும் நான்கைந்து இலட்சம் தரக் கூடாதோ?
என்று இதயத்தால் எண்ணவே செய்வான்.
என்றாலும் எளிதில்
பெற்றுவிட முடியாத இதயங்களை; பேரறிஞர் அண்ணா அவர்கள் எளிதாகவும்
பெற்றார்கள். ஏராளமாகக் கோடிக் கணக்கிலும் பெற்றார்கள். அதனால்தான்
அவர் செயற்கரிய செய்த பெரியார் என்று எல்லோராலும் பாராட்டப் பெறுகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும், புகழையும், அருமையையும், பெருமையையும்,
பண்பையும், போக்கையும் அறியாதவர்களும் தெரியாதவர்களும் நாட்டில்
எங்கணும் இல்லை. அவரை நினைத்து நினைத்து நெக்குருகாத உள்ளம் இல்லை;
அவருடைய புகழையும், பெருமையையும் பற்றிப் பேசாத நா இல்லை. நாட்டின்
நல்லவர்களெல்லாம் தொழுதேத்தும் ஒளியாக அவர் திகழ்கிறார்.
கோடானுகோடி மக்கள்
இதயத்தில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பு இதயத்தில்
இடம் பெற்றிருந்த தம்பிமார்களில் தக்க ஒர் இடத்தை நான் பெற்றிருந்தேன்
என்பதை எண்ணுந்தோறும், பூரிப்போடும், பெருமித உணர்வோடும் பேரின்பம்
பெறுகிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுவார்; பற்றுவைத்திருப்பார்;
மதிப்புச் செலுத்துவார்; ஆனால், ஒரு சிலரோடு மட்டுந்தான் பழகுவார்.
நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு
என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் இலக்கணத்தில் காணும் பண்புடையாளர்
தொடர்பினால் ஏற்படும் நயத்தை, பேரறிஞர் அண்ணா அவர்களோடு நெருங்கிப்
பழகினவர்கள்தாம் நன்கு அறிவார்கள்.
தம்மோடு நெருங்கிப்
பழகும் தம்பிமார்களுக்கு ஊக்கம் தந்து, ஆக்கம் பயந்து, அவர்களையெல்லாம்
உரிய துறைகளில் ஆளாக்கிவிடும் பாங்கு அறிஞர் அண்ணா அவர்களிடத்தில்
மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.
1937-ஆம் ஆண்டில் நான் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக் கழக உயர்நிலைப்
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான், அவருடைய சொல் வன்மையைப்
பிறர் சொல்லக் கேட்டுப் பூரித்துப் போனேன்.
1938-ல்தான் முதன்
முதல் அவர் எழுத்தாற்றலை விடுதலை தலையங்கங்களின் மூலம் கண்டு வியப்படைந்தேன்.
1939-ல் சென்னைக்
கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றில் அறிஞர்
அண்ணா அவர்கள் பேசியபோதுதான் அவரை முதன் முதலாகக் கண்ணாரக் கண்டேன்;
அவரது இனிய பேச்சைக் காதாரக் கேட்டேன்.
(மன்றம் - நாவலர் நெடுஞ்செழியன்) |