அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 25

மீசை பலியாயிற்று

அறிஞர் அண்ணா அவர்கள் மிகச் சிலரோடுதான் நெருங்கிப்பழகுவார்கள். குறிப்பிட்ட அந்த ஒரு சிலருடைய கூட்டுறவைத்தான் அவர்கள் எப்பொழுதும் விரும்புவார்கள். அந்த ஒரு சிலரோடு பொழுது பொக்குவதிலேதான் அவர்களுக்கு நிரம்ப விருப்பம். இதனால் அவர்கள் மற்றவர்களையெல்லாம் வெறுப்பார்களோ என்ற யாரும் பொருள்கொண்டுவிடக் கூடாது. அண்ணா அவர்கள் எல்லோரோடும் எப்பொழுதும் அன்பாகவும், இனிமையாகவும் கனிவாகவுந்தான் உரையாடுவார்கள். ஆனால் மிகச் சிலர்தான் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் வருவார்கள்.

அண்ணா அவர்கள தம் நெருங்கிய நண்பர்களோடு குழந்தைபோல் பழுகுவார்கள். எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்துகொண்டே பேசுவார்கள். அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது நகைச்சுவை பெருக உடனிருக்கும் தம் நெருங்கிய நண்பர்களில் யாரையேனும் கேலியும் கிண்டலும் செய்துகொண்டே இருப்பார்கள் முக்கியமான பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்களுடன் விவாதித்துக்கொண்டிருக்கும்போதுகூட நகைச்சுவைக் குறிப்புகள் அண்ணா அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

அண்ணா அவர்களின் நண்பர்கள் குழாத்துள் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய ஒருவராகத் தொழர் என்.வி.நடராசன் அவர்கள் அடிக்கடி அகப்பட்டுக்கொள்வார். அண்ணாவின் கேலியும் கிண்டலும் அவற்றிற்கு ஆளாகுபவர்களைச் சிரிக்கவும் மகிழவும் செய்யுமேயல்லாது, யாருடைய உள்ளத்தையும் புண்படுத்துவனவாகவோ, வருத்தத்தில் ஆழ்த்துவனவாகவோ அமையா. அப்படிக் கேலியும் கிண்டலும் வந்து தாக்கும்போது, தோழர் என்.வி.நடராசன் அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து சிரித்து மகிழ்வார்களேயொழிய, அதற்காக ஒருபோதும் மன வருத்தம் கொள்ளமாட்டார்.

மும்முனைப் போராட்டக் காலத்தில், அண்ணா என்.வி.நடராசன், சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன் ஆகியோர் சென்னைச் சிறையில் இருக்கும்போது, தொழர் என்.வி.நடராசன் அவர்கள்தாம் பொழுதுபோக்குக்குரிய பொருளாக அகப்பட்டுக்கொள்வார். ஒரு நாள் காலை தோழர் என்.வி.நடராசன் அவர்கள் முடிதிருத்திக்கொண்டு வந்தார். அவர் தம் மீசையைச் சரிப்படுத்திக்கொள்ளக் கத்தரிக்கோலின் மூலம் முயன்றார். அப்பொழுது அண்ணா அவர்கள் தோழர் நடராசன் அவர்களது மீசையைத் தாம் சரிப்படுத்தித் தருவதாகச் சொல்லிக், கத்தரிக்கோலை வாங்கி மீசையைக் கத்தரிக்கத் தொடங்கினார். அண்ணா அவர்கள், தமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாகவே தோழர் நடராசன் அவர்கள் கருதிக்கொண்டார்கள். ஆனால் அண்ண அவர்கள் அரை மீசையை அப்படியே கத்தரித்து எடுத்துவிட்டார்கள். தோழர் நடராசன் அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை; அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டார். அண்ணாவும் மற்றவர்களும் விழுந்து விழுந்து சிர்க்கத் தலைப்பட்டனர். நடராசன் சிறிது நேரம் முகக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருந்தார். அரை மீசை போய்விட்டதே என்ற வருத்தம் இருந்தாலும், அவரும் மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கவே செய்தார். பிறகு மீதியிருந்த அரை மீசையையும் தாமே எடுத்துவிட்டார்.

அன்று மாலை எதிர்பாராத விதமாகத் தொழர் என்.வி.நடராசன் அவர்களது வீட்டார் அவரைப் பார்க்க வந்தனர். அவரைக் கண்டதும் அவரது வீட்டார் அனைவரும் குழந்தைகள் உள்பட விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். தமக்கு மீசை போய்விட்டதை அவரது மகன் சுட்டிக் காட்டியதற்குப் பிறகுதான், அவருக்கு நிலைமை புரிந்து;அவரும் சேர்ந்து சிரித்தார்.

அறிஞர் அண்ணாவின் சிறைப் பொழுதுபோக்குத் தோழர் என்.வி.நடராசனின் மீசை பலியாயிற்று!
(மன்றம், இதழ் - 15.10.1956)


குரங்கு நிலையிலேயே இருக்கிறாய்

அறிஞர் அண்ணா அவர்கள் தம் நண்பர்களோடு ஒரு நாள் நண்பகலில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, உணவு அருந்திக்கொண்டிருந்தவர்களிடையே மரக்கறியுணவு, மாமிசவுணவு பற்றி விளக்கங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மரக்கறியுணவு - மாமிசவுணவு பற்றி விவாதம் எழுவதற்குக் காரணம் திராவிடநாடு அலுவலகத்தில் ஓவியராக இருந்துவரும் தோழர் பழனி அவர்கள் தமக்கு மாமிசவுணவு பிடிக்காது என்றும் மரக்கறியுணவே வேண்டும் என்றும் சொல்லி அதனை வாங்கிக்கொண்டு தனியே உட்கார்ந்து சாப்பிட்டார்; மற்ற நண்பர்களெல்லாம் மாமிசவுணவைச் சாப்பிட்டார்கள். மாமிச உணவைச் சாப்பிட்டவர்களெல்லாம் தோழர் பழனி அவர்களை வற்வுறுத்திச் சிறிதளவு மாமிசத்தைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி கூறினார்கள்; தொழர் பழனி அவர்கள் தனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி இறுதிவரையில் மறுத்தே வந்தார். அதன் பேரில் மரக்கறியுணவு மாமிசவுணவு பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டன. நண்பர்கள் பலரும் தத்தம் விளக்கங்களைத் தந்தனர்.

மரக்கறியுணவு சாப்பிடும் விலங்குள் எப்படியிருக்கின்றன, மாமிசம் சாப்பிடும் விலங்குகள் எப்படியிருக்கின்றன. முதல் வகையைச் சார்ந்த விலங்குகள் எப்படி மக்களால் பழக்கப்படுத்தி உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடியனவாக இருக்கின்றன. இரண்டாம் வகையைச் சார்ந்தவைகள் எப்படிப் பெரும்பாலும் கொடூரம் வாய்ந்தனவாகவும், காட்டில் வாழ்வனவாகவும் இருக்கின்றன என்பன போன்ற விளக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மனிதனுடைய உறுப்பு அமைப்பு எல்லாம் அவன் மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் காட்டுகின்றன; மேலும் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்ற சொல்லப்படுவதாலும், குரங்கு மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்ததாக இருப்பதாலும், மனிதன் இயற்கை நியதிப்படி முதல் வகையைச் சேர்ந்தனவாகத்தான் கருதப்படவேண்டும் என்று ஒரு நண்பர் கூறினார்.

உடனே தோழர் பழனி அவர்கள் தமது கட்சிக்கு வலிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதிக்கொண்டு அப்படிச் சொல்லுங்கள்! என்று கூறி மகிழ்ச்சி கொண்டாடினார்.

மனிதன் நாளுக்குநாள் அறிவு ஆற்றல் பெற்று வளர்ந்த பிறகுதான் மாமிசத்தைப் பக்குவப்படுத்தித் தின்னக் கற்றுக்கொண்டிருக்கிறான்; இது செயற்கை முறையில் அவனுக்குப் பிடித்தப் பண்பு என்று முதலில் கூறிய நண்பர் மேலும் விளக்கம் தந்தார்.

அது கேட்ட தோழர் பழனி நான் இயற்கைப் பண்பினைக் கடைப்பிடிப்பவன். எனவேதான் மரக்கறி சாப்புடுகிறேன். நீங்களெல்லாம் செயற்கைப் பண்பினைக் கடைப்பிடிப்பவர்கள். எனவேதான் மாமிசம் சாப்பிடுகிறீர்கள்! என்று ஏளனக் குரலில் குறிப்பிட்டார்.

அது கேட்டுக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் அப்படியானால் நீ மாமிசம் தின்னக் கற்றுக்கொள்ளாத குரங்கு நிலையிலேயே இருக்கிறாய்; நாங்கள் மாமிசம் தின்னக் கற்றுக்கொண்ட அறிவாற்றல் மிகுந்த நாகரிக நிலையில் இருக்கிறோம் என்று கொருள்கொள்ளவேண்டும் என்று கூறவே எல்லோரும் கொல்லென்று சிரித்துத் தொழர் பழனி அவர்களைக் கேலி செய்தார்கள். பழனி பரிதாபத்துக்குறியவரானார்.

பிறகு தோழர் பழனி அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களின் நயம் நிறைந்த உரையை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தார்.
(மன்றம், நாள்: 01.11.1956)


படோடோபத்திற்கு பணியாமை

நீதிகட்சியினர் கோலோச்சிய அந்த நாட்களில், நீதிக்கட்சித் தலைவர்கள் மக்களோடு மக்களாய்ப் பழகும் எளியவாழ்வை ஏற்படுத்திக்கொள்ளாமல், பிறர் கண்டு தங்களை மதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிக்க ஆடம்பரமான முறைகளை விரும்பி மேற்கொண்டிருந்தனர். நீதிக் கட்சி நாளடைவில் செல்வாக்கு அற்றுப் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.

நீதிக்கட்சித் தலைவர்களான பொப்பிலி அரசர், சர்.கே.வி.ரெட்டி, ஏ.இராமசாமி முதலியார், ஆர்.கே.சண்மும் செட்டியார், குமார இராசா முத்தையா செட்டியார் போன்றவர்கள் சென்னையைவிட்டு எப்பொழுது வெளியூருக்கு கிளம்பினாலும், வெளியூரிலிருந்து சென்னைக்கு எப்பொழுது திரும்பினாலும் கட்சியின் பிற தலைவர்களும் நண்பர்களும், தொண்டர்களும் புகைவண்டி நிலையத்திற்குசென்று செல்லும் தலைவர்களுக்கு மாலை சூட்டி வழியனுப்புவதும், வரும் தலைவர்களுக்கு மாலையணிந்து வரவேற்பதும் அக்காலத்தில் கையாண்ட ஆடம்பரக்களிலேயே ஒரு வகையைச் சார்ந்தனவாகும்.

இந்த முறை பெரியார் அவர்கள் நீதிக்கட்சித் தலைவர் பதவி ஏற்ற சிறிது நாட்கள் வரையிலும் கூட நடைபெற்றது. சேலம் மாநாட்டிற்குச் சிறிது நாட்களுக்கு முன்பு பெரியார் அவர்கள் சென்னை வந்துவிட்டு, மத்திய புகைவண்டி நிலையத்திலிருந்து (சென்ட்ரல் ஸ்டேஷன்) ஈரோட்டுக்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது வழக்கப்படி பெரியாரை வழியனுப்பக் குமாரராசா முத்தையா செட்டியார் போன்ற பலரும் புகைவண்டி நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களும் பெரியாரைப் பார்த்துவிட்டு வழியனுப்பிவைக்க வந்திருந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் அருகில் நின்று ஏதோ உரையாடிக் கொண்டிருக்கும்போது, அப்பால் நின்று வேறு யாரோடோ பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பிய குமார ராசா அவர்கள், அண்ணா அவர்களிடம் நெருங்கி, என்ன அண்ணாதுரை? சௌக்கியமா, இப்படி வாருங்கள்! என்ற சொல்லிக்கொண்டே அண்ணா அவர்கள் தோளின் மீது கையைப் போட்டுத் தனியே இரகசியம் பேச அழைப்பதுபோல அழைத்தார். பலர் குழுமியிருக்கும்போது இப்படிப்பட்ட ஆடம்பர நடிப்பை நடித்துக் காட்டுவது படாடோபக் காரர்களிடத்தில் பொதுவாகக் காணக்கூடியதேயாகும். அத்தகைய ஆடம்பர நடிப்பு குமாராசாவிடத்தில் காணப்பட்டதில் வியப்படைவதற்கில்லை. அது அவரது ஆடம்பர வாழ்க்கைக்கு ஏற்ற இயல்வு, அத்தகைய படாடோபப் பசப்பு நடிப்புக்களுக்கும், பசப்பு மொழிகளுக்கும் மதிப்புத்தர விரும்பாத அறிஞர் அண்ணா அவர்கள், உடனே தம் தோளைச் சுற்றிப் போடப்பட்டிருந்த குமாரராசா அவர்களின் கையை மெல்ல எடுத்துக் கீழேவிட்டு, நான் ஐயாவோடு பேசவேண்டியிருக்கிறது. இப்பொழுது உங்களோடு பேச நேரமில்லை. பிறகு உங்களைப் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டு ஐயா நின்றுகொண்டிருந்த பக்கம் திரும்பிக்கொண்டார்கள்.

அண்ணா அவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட விடை வரும் என்ற குமாரராசா எதிர்பார்க்கவே இல்லை. அவருடைய முகம் வெட்கத்தைத் தாங்கமாட்டாமல் சுருங்கிக் கறுத்துவிட்டது.

குமார ராசா கூப்பிட்டு அண்ணா போக மறுக்கிறாரே என்பதைக் கண்ட பெரியார் அவர்களுக்கு, உள்ளுக்குள்ளே அடங்காத சினம் பொங்கிற்று. குமாரராசா என்ன நினைத்துக் கொள்வார்கள்? ஏது நினைத்துக் கொள்வார்களோ? ராசாவின் தயவு இனி இல்லாமல் போய்விடுமோ? என்பன போன்ற அச்சங்கள் அவரது உள்ளத்தைக் குடைந்தன. பெரியார் அண்ணா மீது எரிந்து விழுந்து, ராசா கூப்பிடுகிறார்! போங்களேன்! என்னிடத்தில் என்ன பேசவேண்டியிருக்கிறது! என்று கண்டிப்புக் குரலில் பேசினார்கள்.

அண்ணா அவர்கள், குமாரராசாவைப் பொருட்படுததாதவர் போல் பெரியார் அவர்கள் முன்னிலையில் நின்றுகொண்டு நான் அவரிடம் பேச வேண்டியது இப்பொழுது ஒன்றுமில்லை! என்று கூறிவிட்டு வேறு பக்கம் எதையோ பார்ப்பதைப் போல் பார்வையைச் செலுத்தினார்கள். குமாரராசா எங்கே சினந்துகொள்கிறாரோ, என்னவோ என்று எண்ணிக்கொண்டு பெரியார் அவர்கள், அவரிடம், வண்டி புறப்படும் வரையில் வேறு ஏதுஏதோ பற்றிக் குழைந்து குழைந்து பேசி, அவரது சினத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்கள்.
(மன்றம், நாள்: 15.11.1956)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai