அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
24
வடநாட்டில்
இந்து முசிலிம் போர்
வடநாட்டில் இந்து-முசிலிம்களுக்கிடையே
வேற்றுமையுணர்வும், பிணக்கும், போரும் எந்தவைகையில் மூண்டெழுந்து
காணப்படுகின்றன என்பதை, அறிந்து கொள்ளும் வாய்ப்பு அறிஞர் அண்ணா
அவர்களுக்கு, அவர் பெரியார் இராமசாமி அவர்களோடு வடநாட்டுக்குச் சுற்றுப்பயணத்திற்குச்
சென்றிருந்தபொழுது ஏற்பட்டது.
உண்ணுவது, நீர் அருந்துவது,
உறைவது, வாணிகம் செய்வது ஆகியவற்றில் இந்துவும்-முசிலிமும் ஒருவரையொருவர்
பகைத்துக்கொண்டு, வேற்றுமை பாராட்டித் தனித்தனியே அவற்றைத் தத்தமதாகக்
கொண்டிருந்த தன்மையை அண்ணா அவர்கள் கண்டபோது, படித்தறியாப் பண்பறியாப்
பாமர மக்களிடத்தில் மட்டுமே அந்த நிலைமை நிலவி வருவதாக நினைத்துக்கொண்டார்கள்.
அந்த நிலைமை பாமரமக்களிடத்திலும் உண்டு என்பதை அவர்கள் ஜும்மா மசூதிக்குச்
செல்லும்போது அறிந்துகொண்டார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள்
சுற்றுப்பயணம் செய்தபோது அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும்பொருட்டு
இரண்டு எம்.ஏ. படித்த மாணவர்களை தோழர் எம்.என்.ராய் அண்ணாவுடன் அனுப்பிவைத்திருந்தார்.
அவ்விருவரில் ஒருவர் முசிலிம், மற்றொருவர் இந்து. இருவரும் தோழர்
ராயின் முற்போக்குக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர்கள். மசூதியின்
மண்டபத்தில் சிலபல ஓட்டைகள் காணப்பட்டன. அவற்றிற்கான காரணம் என்ன
என்பதை அண்ணா அவர்கள் முசிலிம் மாணவரோடு சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது
கேட்டார்கள். அதற்கு அந்த முசிலிம் மாணவர் இந்த ஒட்டைகள் இருந்த
இடத்தின் பழைய கால முசிலிம் மன்னர்கள் விலையுயர்ந்த கற்களைப் பதிய
வைத்திருந்தனர். அவற்றையெல்லம் இந்துக்கள் திருடிக்கொண்டுபோய்விட்டார்கள்.
அவைகள் பெயர்க்கப்பட்ட இடங்கள்தாம் இப்போழுது ஓட்டைகளாகத் தென்படுகின்றன
என்று கூறினாராம். சிறிது நேரங்கழித்து இந்து மாணவரோடு வேறு பக்கம்
சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்பு அண்ணா அவர்களுக்கு ஏற்பட்டது.
அண்ணா அவர்கள் மண்டபத்திலிருந்த ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி இந்த
ஓட்டைகளுக்கு என்ன காரணம்? என்று கேட்டார்களாம். அதற்கு அந்த இந்து
மாணவர் இந்த ஓட்டைகள் இருக்கும் இடங்களில் முன்பு விலையுயர்ந்த கற்கள்
பதிக்கப் பெற்றிருந்தன. முசிலிம் மன்னர்கள் செல்வமிழந்து வறுமையுற்றபோது
அவைகளையெல்லாம் பெயர்த்தெடுத்து விற்று வாழத் தொடங்கினார்கள். ஆகையினால்
அக்கற்கள் இருந்த இடங்கள் இப்பொழுது ஓட்டைகளாக்த தென்படுகின்றன என்று
விடையிறுத்தாராம்.
படித்த முற்போக்கு
எண்ணங்கொண்ட இரு மாணவர்களிடையே, ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து
விளக்கம் கூறுவதில், இந்து-முசிலிம் வேற்றுமையுணர்ச்சி இந்த அணவுக்குக்
காணப்படுகின்றது என்றால், மற்ற பாமர மக்களிடத்தில் எந்த அளவுக்கு
அது கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதை அறிஞர் அண்ண அவர்கள் தெளிவுபடுத்திக்கொண்டார்களாம்.
இத்தகைய நிலைமையைப் புரிந்துகொண்ட அண்ணா அவர்கள் பாக்கிஸ்தான் பிரிவினை
எப்படியும் ஏற்பட்டே தீரும் என்ற கருத்தையும் அதற்கான முறையில் காணப்பட்ட
சூழ்நிலையையும் பெரியாரிடமும் பிறரிடமும் தெள்ளத் தெளிவாக விளக்கிக்
காட்டினார்களாம்.
(மன்றம்: 01.06.1956)
மனச்சான்றுக்கு மாறாகப் போகாமை
1941-ஆம் ஆண்டில்,
இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா,
மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும்,
அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் இயல், இசை,
நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களும், தான தருமங்களும் நடைபெற்றன.
தான தருமங்கள் எல்லாம்
பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக்
குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது
அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது
பசுமாடுகள் போன்ற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.
அப்பொழுது அறிஞர்
அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி
வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு
நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டிக்கவேண்டும் என்பதோடு,
பார்ப்பனரல்லாதான் இயக்கத்தைச் சார்ந்த இராசா சர் சமூகத் துறையில்
பார்ப்பனர்க்கு அடிமைபோகும் தன்மையையும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்
என்ற எண்ணம் அறிஞர் அண்ணா அவர்கள் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்தது.
அண்ணாமலைச் செட்டியாரின்
போக்கைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று ஏபதுவது என்று அண்ணா
அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள்.
பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க
சினம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு
விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு
மிகக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை.
இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது. எனவே அண்ணாவின் எண்ணத்தைப்
பெரியாரும் ஆதரித்தார். யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான்.
பார்ப்பனர்களுக்கு நன்கொடை தந்திருக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம்
இலட்சமாக அள்ளித் தருகிறான் அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப்
பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து
நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி
இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால்
என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும்
கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.
அண்ணா அவர்களும் அண்ணாமலைச்
செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று
தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள், எதிர்பாராதவிதமாக
இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000
நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார்
அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச்
செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா?
என்று கேட்டார். முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில்
இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள். அவனைச் சாதாரணமாகப் பாராட்டி
ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.
அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி
எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான்
எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். பெரியார்
அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள்.
பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி
வெளியிட்டார்கள்.
மனச்சான்றுக்கு மாறாக
போகக்கூடாது என்பதிலே அண்ணா அவர்கள் எவ்வளவு அழுத்தமாக இருந்து வருகிறார்கள்
என்பதற்கு, இது சீரியதொரு எடுத்துக்காட்டாகும்.
(மன்றம்: 15.06.1956)
புகைவண்டி
போயிற்று! - பிறகு டிக்கட்டு வந்தது
பொதுவாகப் போட்டி
போட்டு மல்லுக்கு நிற்பது, இடித்துப் புடைத்துக்கொண்டு மேல்விழுந்து
செல்வது, நெருக்கடியில் சிக்கித் தாக்குவோரைத் தள்ளிக்கொண்டு மேற்செல்வது
போன்ற பண்புகளை அறிஞர் அண்ணா அவர்களிடம் அறவே காணமுடியாது.
அடிபிடி சண்டையோ,
மக்கள் கூட்டதின் நெரிசலோ காணப்பட்டால் அண்ணா அவர்கள் அவற்றில் தாம்
சிக்கிக்கொள்ளாமல், ஒதுங்கித் தப்பிப் போகவே பார்ப்பார்கள். புகைவண்டியிலோ,
அல்லது நிலவூர்தியிலே (பஸ்ஸிலோ) கூட்டம் மிகவாக இருந்து நெரிசல்
காணப்பட்டால், அவைகளில் ஏறாமல் நின்று விடுவார்களே ஒழிய, எப்படியும்
போய்த் தீருவது என்று இடித்துப் புடைத்துக்கொண்டு ஏறுவது கிடையாது.
அண்ணாவின் இந்தப்
பண்பு பெரியார் அவர்களுக்குத் துவக்கக் காலத்தில் புலப்படிவில்லை.
பெரியாரும் அண்ணாவும் சிலபொழுது சேர்ந்து சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில்
ஈடுபடுவது உண்டு. அந்த நாட்களில், நீண்ட தொலைவிலுள்ள புகைவண்டி நிலையத்திற்கு
ஒரே முறையாக டிக்கட்டு எடுப்பதைவிட, இடையிலுள்ள சில நிலையங்களில்
இறங்கி இறங்கி எடுத்துக்கொண்டு சென்றால், அதன் மூலம் சிறிதளவு கட்டணத்
தொகையை மிச்சப்படுவது வழக்கம். பெரியாரும், அண்ணாவும் ஒரு முறை ஈரோட்டிலிருந்து
திருச்சி செல்லும்படி நேரிட்டது. சிறிது பணம் மிச்சமாகும் என்று
கருதிக்கொண்டு கரூர் வரையில் இருவர்க்கும் டிக்கட்டு வாங்கிக்கொண்டு,
கரூரில் இறங்கித் திருச்சிக்கு மீண்டும் வாங்கிக்கொள்ளலாம் என்று
பெரியார் எண்ணினார்கள். ஒரேயடியாக திருச்சிக்கே டிக்கட்டு வாங்கும்படியும்
கரூரில் றங்கித் தம்மால் டிக்கட் வாங்க இயலாமற்போகும் என்றும் அண்ணா
பெரியார் அவர்கள் பெரியாரிடம் கூறிப்பார்த்தார்கள். ஆனால் பெரியார்
அவர்கள் அதற்கு இணங்காமல் கரூருக்கே டிக்கட்டு வாங்கினார்கள்.
கரூர் நிலையம் வந்ததும்,
அண்ணாவுடம் பணத்தைக் கொடுத்துத், திருச்சிக்கு டிக்கட்டு வாங்கும்படி
பெரியார் அவர்கள் கூறினார்கள். அண்ணா அவர்கள் டிக்கட்டு வாங்கும்
சாளரத்தின் அருகே போய்ப் பார்க்கும்போது மிகவான கூட்டம் இருக்கவே
எல்லோர்க்கும் பின்னால் போய் வழக்கப்படி நின்றுகொண்டார்கள். நீண்ட
நேரம் ஆகியும் அண்ணாவைக் காணவில்லை என்றவுடன் பெரியார் அவர்கள் எட்டி
எட்டிப் பார்த்துத் தவித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும டிக்கட்டு
வாங்கி அண்ணா அவர்கள் டிக்கட்டு வாங்குவதற்குள் வண்டி புறப்படி மணியடித்தாகிவிட்டது.
அண்ணா அவர்கள் டிக்கட்டு வாங்கிக்கொண்டு, புகைவண்டி நிலையத்திற்குள்
நுழைவதற்குள் வண்டி புறப்பட்டுவிட்டது. அண்ணாவும் வரவில்லை, வண்டியும்
புறப்பட்டுவிட்டது என்றவுடன் பெரியார் அவர்கள் அவசர அவசரமாகப் பெட்டி,
படுக்கை முதலிய சாமான்களைக் கீழே தள்ளிவிட்டுத் தாமும் கீழே குதித்துவிட்டார்கள்.
பிறகு அண்ணா அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
ஏன் இவ்வளவு நேரம்?
என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று பெரியார் அவர்கள் ஆத்திரத்துடன்
அண்ணா மீது சீறிவிழுந்தார்கள்.
இப்பொழுதுதான் டிக்கட்டு
கொடுத்தார்கள்! என்று அண்ணா அவர்கள் அமைதியாகக் கூறினார்கள்.
இந்த டிக்கட்டு வாங்க
முடியவில்லை உங்களால், இப்பொழது இரயில் போய்விட்டதே, இனி என்ன செய்வது?
என்று பெரியார் அவர்கள் சினந்துகொண்டார்கள்.
நான்தான் அப்பொழுதே
சொன்னேனே, திருசிக்கே டிக்கட்டு எடுங்கள் என்று! நீங்கள்தானே கேட்கவில்லை!
என்று அண்ணா அவர்கள் கூறினார்கள்.
பிறகு வேறு வழியின்றிக்
கரூரிலேயே தங்கியிருந்துவிட்டு அடுத்த புகைவண்டியில் திருச்சிக்குச்
சென்றார்கள். அது முதல் டிக்கட்டு வாங்கும் வேலைக்குப் பெரியார்
அவர்கள் அண்ணாவை அனுப்புவதே இல்லையாம்.
(மன்றம்: 01.08.1956)
காரியந்தான்
பெரிது - வீண் வீரியம் அல்ல!
பெரியார் அவர்கள் தம் காலத்திற்குப் பிறகு திராவிடக் கழகத்தையிம்
கழகச் சொத்துக்களையும் பாதுகாத்துச் செல்வதற்கு ஆன வாரிசு ஒன்று
வேண்டும் என்று கருதியே, தொழியர் மணியம்மையைத் திருமணம் என்ற பெயரால்
ஒரு ஏற்பாடு செய்து தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பது அவராலேயே வெளியிடப்பட்டது.
அத்தகைய வாரிசு ஆவதற்குரிய தகுதியும் திறமையும் தோழியர் மணியம்மையார்
அவர்களிடந்தான் இருக்கிறது என்பதோடல்லாமல், அவர்களைத் தவிர வேறு
யாரையும் தாம் நம்புவதற்கில்லை என்றும் பெரியார் அவர்கள் தெரிவித்தார்.
திருமணம் என்ற பெயரால்
ஒரு ஏற்பாடு என்பது அவர் பல காலம் கூறிவந்த சமூகச் சீர்திருத்தக்
கருத்துக்களுக்கு மாறுபாடான ஒன்று என்பதோடல்லாமல், கழகத்தை நடத்திச்செல்ல
தாமே வாரிசு முறையில் ஆள் தேர்ந்தெடுப்பது சனசாயகப் பண்பிற்கு முரண்பாடானதும்,
சர்வாரிதிகாரத்தன்மை கொண்டதும் ஆகும் என்று எண்ணி கழகத்திலிருந்த
தூய உள்ளம் படைத்த நல்லவர்கள் எல்லாம் கலங்கினார்கள்; கண்ணீர் விட்டார்கள்,
ஏற்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி பெரியாரிடம் கெஞ்சினார்கள்; வேதனைப்
பட்டார்கள், வெட்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் அறிஞர்
அண்ணா அவர்கள், அரசியல் வாழ்வைவிட்டே விலகி, ஒதுங்கிவிடுவது என்ற
முடிவுக்கு வந்து, காஞ்சிபுரம் சென்று தங்கிவிட்டார்கள். கொள்கைப்
பற்றுக்கொண்ட பல்லாயிரக் கணக்கான தூய உள்ளம் படைத்தோர் என்ன செய்வது.
ஏது செய்வது, எதிர்கால அரசியல் வாழ்வை எப்படி மேற்கொள்வது என்று
எண்ணி ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். தோழரகள் என்.வி,நடராசன்,
ஈ.வெ.கி.சம்பத், கே.கோவிந்தசாமி, இரா.நெடுஞ்செழியன் போன்றவர்கள்
அண்ணாவிடம் சென்று தங்களுக்கும், பிறர்கும் ஏதேனும் பழிப்படராப்
பாங்குள்ள வழிகாட்டவேண்டும் என்று வற்புறுத்தி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.
நீண்ட நேரத் தயக்கத்திற்குப் பிறகு, எல்லோரும் சேர்ந்து கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு நடப்பதற்காக நேரிய வழி ஒன்று காண சென்னை வந்தார்கள்.
சென்னையில், பவழக்காரத்
தெருவிலுள்ள கட்டிடம் ஒன்றில் முக்கியமான தோழர்கள் அடங்கிய தனிக்கூட்டம்
ஒன்று கூடிற்று. அதில் அண்ணா அவர்கள் எல்லோரும் திராவிடக் கழகத்தைவிட்டு
வெளியேறித் தனிக் கழகம் அமைத்துக்கொள்ளலாம் என்றும், அதுதான் அமைதியை
நிலைநாட்டுவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் ஏற்றவழியாகும் என்றும்
கூறினார்கள். அப்பொழுது அண்ணா அவர்களின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பெரியாரின் போக்குக்கண்டு வெறுப்படைத்துள்ளவர்கள் ஏராளமாக இருப்பதால்
திராவிடக் கழகத்தையிம், திராவிடக் கழகச் சொத்துக்களையும் வன்முறையில்
ஆகிலும் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற கருத்தைத் தோழரகள் சம்பத் நடராசன்,
சித்தையன், கோவிந்தசாமி, நெடுஞ்செழியன், மணிமொழியார் போன்ற பலரும்
துடிதுடிப்புணர்ச்சியுடன் வற்புறுத்தினார்கள். திராவிடக் கழகத்தைக்
கைப்பற்றுவது என்ற முயற்சி வீண்சண்டை சச்சரவுகளிலும் அடிதடிகளிலும்,
நேரத்தையும், உழைப்பையும், அறிவையும் கழிக்கவேண்டி நேரிடும் என்றும்,
இரண்டு சாராரையும் அடக்கி ஒடுக்க அரசாங்கத்திற்கு நல்ல வாய்ப்புகள்
ஏற்பட்டுவிடும் என்றும், மாற்றார்கள் இழித்தும் பழித்தும் ஏளமாகக்
கூற இடம் கிக்கும் என்றும், கொள்கைப்பற்றுடையோர் சிறிது சிறிதாக
வெளியேற நேரிடும் என்றம் சொல்லியதோடு, அப்படிப்பட்ட வன்முறைச் செயல்களுக்குத்
தான் தலைமை ஏற்க இயலாது என்றும், வேண்டுமானால் சாதாரண உறுப்பினராக
இருக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு அறிஞர் அண்ணா அவர்கள் மீண்டும்
காஞ்சிபுரம் சென்றுவிட்டார்கள்.
இப்படியாக இரண்டு
மூன்று திங்கள்கள் எந்த முடிவும் ஏற்படாமல் கழிந்தன. அந்த இரண்டு
திங்கள்களில் ஏற்பட்ட அனுபவம், அண்ணாவின் வழியே ஏற்ற வழியாகும் என்ற
முடிவுக்கு ஏனையோரைக் கொண்டுவந்தது, மீண்டும் அண்ணாவை அவர்கள் நாடி
அண்ணாவின் கருத்தை முழுமனதோடு ஏற்க இசைந்தனர்.
வன்முறைக்குச் சிறிதும்
இணங்காமல், காரியந்தான் பெரிதே ஒழிய வீண் வீரியம் அல்ல என்று அறிஞர்
அண்ணா அவர்கள் கொண்ட பெருநோக்கந்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை
இன்ற செழிப்புற வளர்த்து வருகிறது.
(மன்றம்: 15.08.1956)
ஆபத்து ஒன்று
அகன்றது
1944 ஆம் ஆண்டு சேலத்தில் கூட்டப்பட்ட மாநில மாநாட்டில்தான் தென்
இந்திய நிலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியின் பெயர் திராவிடக்
கழகம் என்று மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத் தீர்மானத்தோடு
கழகத்தைச் சார்ந்ததையும், பதவியையும் தாங்கியிருக்கக் கூடாது என்று
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானங்களை அறிஞர் அண்ணா அவர்கள்
தாம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
பதவியையும், பட்டத்தையும்
துறந்துவிட வேண்டும் என்ற போடப்பட்ட தீர்மானம், நீதிக்கட்சியிலிருந்து
வந்த பணக்காரர்களுக்கும், பட்டந்தாங்கிகளுக்கும், பதவியாளர்க்கும்
பேரிடியாக இருந்தது. அவர்களெல்லாம் திராவிடக் கழகத்தோடு பங்குகொள்ளாமல்,
நீதிக்கட்சியின் பெயரிலேயே இருந்து வரத் தலைப்பட்டனர். அப்பொழுது
நீதிக்கட்சியில் தலைவர்கள்தான் இருந்தார்களே ஒழிய, தொண்டர்கள் யாரும்
இல்லை. பாடுபடும் தொண்டர்கள் அனைவரும் திராவிடக் கழகத்தில் இணைந்திருந்தனர்.
எப்படியேனும் திராவிடக் கழகத்தைத் தம் வழிக்கு மீண்டும் இபத்துக்
கொண்டால் தமக்கு வசதியாக இருக்கும் என்று நீதிக் கட்சித் தலைவர்களில்
சிலர் எண்ணினர். அதற்கான முயற்சியையும் அவர்கள் மேற் கொண்டார்கள்.
நீதிக்கட்சியில் தலைவர்களாக
இருந்த பொப்பிலி அரசர், ட்டி சாட்டரசர் சர் முத்தையா, காலஞ்சென்ற
தோழர என்.ஆர்.சாமியப்பா ஆகியோர் நீதிக்ட்சிக்கம் திராவிடக் கழகத்துக்கும்
இடையே ஒரு உடன்பாடு ஏற்படுத்த முயன்றனர். அதற்கான அரைவராக அப்பொழுதும்
இருந்துவந்த பெரியார் இராமசாமி அவர்களை நீதிக்கட்சித் தலைவர்கள்
அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்களைக் காணப் போவதற்கு முன்பி
பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களிடம் அவர்கள் எதற்காகத் தம்மை
அழைத்திருப்பார்கள் என்று கலந்தாலோசித்தார்கள். அண்ணா அவர்கள், அவர்கள்
உங்களைத் தம் வயப்படுத்தத்தான் இப்பொழுது அழைத்துள்ளார்கள். பட்டம்
பதவியைத் துறக்கவேண்டும் என்று சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
துர்மானத்தைக் கைவிடும்படி வற்வுறத்தவே உங்களை அவர்கள் அழைத்திருப்பார்கள்
என்று கருதுகிறேன். அவர்கள் அதற்கு நிதி தருகிறோம், இதற்கு நிதி
தருகிறோம் என்று பணத்தாசையைக் காட்டி உங்களைத் தம்வயப்படுத்தலாம்
என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் இதில்தான் மிக எச்சரிக்கையாக
இருக்கவேண்டி நேரிடும். அந்தத் துர்மானத்தைக் கைவிட நீங்கள் எந்த
விதத்திலும் இடம் தந்துவிடாதீர்கள். அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும்படியான
நிலைமை ஏதேனும் ஏற்பட்டால், என்னைப் போன்றவர்கள் இயக்கத்தைவிட்டு
வெளியேறும்படியான நிலைமை ஏற்படும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
சென்னை காஸ்மோபாலிட்டன்
கிளப்பில் மேல்மாடியில், பொப்பிலி அரசர், ட்டிநாட்டரசர் முத்தையா,
இராவ்பகதூர் என்.ஆர்.சாமியப்பா ஆகியோரைப் பெரியார் அவர்கள் சந்தித்தார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஊகித்து முன் கூட்டிக் கூறியவாறு நீதிக் கட்சித்
தலைவர்கள் பல்வேறு துறைகளுக்கு நிதி தருவதாக வாக்களித்து, பட்டம்
பதவியைத் துறக்கும் தீர்மானத்தைக் கைவிடும்படி பேரம்பேசினர். பணத்தோடுகூடிய
நீதிக்கட்சித் தலைவர்களைக் கைவிடுவதா? அல்லது அண்ணா போன்ற தொண்டர்களைக்
கைவிடுவதா? என்ற பிரச்சினை பெரியார் உள்ளத்தைக் குந்தது. முடியில்
தொண்டர்களைக் கைவிடக்கூடாது என்ற முடிவிக்கு வந்து, நீதிக் கட்சித்
தலைவர்களின் கருத்துக்கு இசைவு தராமல் பெரியார் அவர்கள் வந்துவிட்டார்கள்.
அறிஞர் அண்ணாவின்
கண்டிப்புரையால் திராவிட இயக்கத்துக்கு அப்பொழுது ஏற்பட இருந்த ஆப்த்து
ஒன்று அகன்றது என்றுதான் சொல்லவேண்டும்.
(மன்றம்: 01.091956)
யாரையடா சொன்னாய்
அது!
தன்மதிப்பு இயக்கம் தோன்றி அது பகுத்தறிவுக் கொள்கைப் பரப்பலில்
மிக மும்முரமாக ஈடுபட்டிருந்த காலத்தில், கடவுள்-மதம்-வேதம்-புராணம்-இதிகாசம்-சாத்திரம்-சம்பிரதாயம்
ஆகியவை பற்றிப் பகுத்தறிவு முறையில் ஆராய்ந்து ஆராய்ச்சிக் கருத்துக்களை
வெளியிடத் தலைப்பட்டது. புராண இதிகாசங்களில் பொதிந்து கிடக்கும்
மூடப் பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள், இழிதன்மைகள், பொய்மைகள்,
புனைசுருட்டுக்கள், அறிவுக்கொவ்வாக் கற்பனைகள் போன்ற பலவும் தன்
மதிப்பு இயக்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டு வெறுத்தொதுக்கப்பட்டன.
தன் மதிப்பு இயக்கத்தினரின்
பேச்சுக்களையும், எழுத்துக்களையும் கண்ட வைதீகர்கள் வெகுண்டெழுந்தனர்.
தன்மதிப்பு இயக்கத்தினரை வரைமுறையின்றி ஏசினர், தூற்றினர், இழித்துரைத்தன்ர்,
பழித்துப் பேசினர். தன் மதிப்பு இயக்கத்தினரை நேரியமுறையில் எதிர்த்து
நிற்கத் தாளமாட்டாமல் பிறகு அஞ்சி, அடங்கி, ஒடுங்கினர். தன் மதிப்பு
இயக்கம் வீறுநடையுடன் வெற்றிவலம் புரிந்து வந்தது. இப்படியாகச் சில
ஆண்டுகள் உருண்டு ஓடின.
1942-43 ஆண்டுகள்
வாக்கில் இராமாயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களை வெளியிட்டு,
அதன் இழிதன்மையையும், அது திராவிடரை இழித்துரைக்கும் தன்மையையும்,
மூடபக்தி-மூடநம்பிக்கை-மூடப்பழக்க வழக்கம் ஆகியவற்றிற்கு அது உறைவிடமாக
விளங்கும் தன்மையையும் அதில் பொதிந்து கிடக்கும் ஆபாசக் கருத்துக்களையும்,
கற்பனைகளையும் விளக்கிப் பெரியாரும் பிறரும் பேசியபோது, வைதீகப்பண்டிதர்கள்
மீண்டும் வெகுண்டெழுந்து எதிர்க்கத் தலைப்பட்டனர். கம்ப இராமாயணம்
தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அது அப்படியே முழுக்க முழுக்க உண்மைவாய்ந்தது.
அதனை அழிக்க யாராலும் முடியாது . அதனைத் தீயில் போட்டாலும் அது பொசுங்காது!
என்ற வைதுகப் பண்டிதர்கள் வாதிட்டுத் தன்மதிப்பு இயக்கத்தினரை அறைகூவி
அழைத்தனர். பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களம் அந்த அறைகூவலை
ஏற்று, கம்பஇராமாயணம் தெய்வீகத் தன்மை உடையதும் அல்ல உண்மைவாய்ந்ததும்
அல்ல, அதனைத் தீயிலே போடுகிறோம் அது பொசுங்குகிறதா, இல்லையா என்று
பாருங்கள்! அதனிடம் கொண்டுள்ள பக்தி சிறுகச் சிறுக அழிகிறதா, இல்லையா
என்று நோக்குங்கள் என்று வைதீகப் பண்டிதர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டுத்
தீவிரக் கொள்கைப்பரப்பலில் (பிரச்சாரதில்) இறங்கினர்.
அறிஞர் அண்ணா அவர்கள்
தமிழகம் எங்கணும் சுற்றுப் பயணம் செய்து, கம்பராமாயணத்தை அக்குவேறு
ஆணிவேறாக அலசிக்காட்டி, மிகத் தீவிரமான கொள்கைப் பரப்பலில் ஈடுபட்டார்கள்.
வைதுகப் பண்டிதர்களை வாதுக்கழைத்தார். வாதாடும் வல்லமையிற் சிறந்த
இருபெரும் பண்டிதர்களான தோழர் ஆர்.பி.சேதுப்பிள்ளை, ச.சோமசுந்தர
பாரதியார் ஆகிய இருவரும் தோற்றுப்போய் ஓடி உட்கார்ந்துவிட்டனர்.
அப்பொழுது இராமயாணத்தை
நன்கு படித்தறிந்த சாயபு ஒருவர் அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? தமிழில்
ஒரு பாட்டுச் சொல்லத் தெரியுமா? என்று ஆணவத்தோடு கேட்டாராம். அதற்கு
விடையிறுக்கம் முகத்தான் அறிஞர் அண்ணா அவர்கள், எனக்குத் தமிழில்
ஒரு பாட்டு சொல்லத் தெரியுமா என்று இராமாயண சாயபு கேட்டாராம். எனக்கத்
தமிழில் பாட்டுகள் சொல்லத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் ஒரே ஒரு பாட்டு
மட்டும் தெளிவாகச் சொல்லத் தெரியும்.
எட்டேகா லட்சணமே எமனேறும்
பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலாமன் தூதுவனே
யாரையடா சொன்னய் அது.
(எட்டேகால் லட்சணமே-அவலட்சனமே;
எமனேறும் பரியே - எருமையே; மட்டில் பெரியம்மை வாகனமே-கழுதையே; முட்டமேற்
கூரையில்லா வீடே - கட்டிச் சுவரே; குலராமன் தூதுவனே - குரங்கே)
என்பதுதான் அந்தப்
பாட்டு. அதை அந்த சாயபுவிடம் போய்ச் சொல்லுங்கள் என்று ஒரு பொதுக்கூட்டத்தில்
பேசும்போது குறிப்பிட்டார்கள்
அண்ணாவின் இந்தப்
பேச்சைக் கேள்வியுற்ற அந்த சாயபு ஏன் மீண்டும் வாய் திறக்கிறார்?
அவ்வளவுதான்! அப்படியே அடங்கி ஒடுங்கிவிட்டார்.
(மன்றம்: 15.09.56)
முன்பே விளக்கினார்
- நீ புரிந்துகொள்ளவில்லை
திராவிட முன்னேற்றக்கழக முன்னணிச் சொற்பொழிவாளர்களிலே ஒருவரான தோழர்
ப.உ.சண்முகம் அவர்கள் மிக்க இளைஞராக இருக்கும்போதே திவண்ணாமலை நகராட்சி
மன்றத் தலைவராக ஆயினார். அவர் பொறுப்பேற்ற சில திங்களக்குள்ளாகவே
தம் அறிவாற்றல் திறமையின் விளைவால் பெரும் பெயரும் புகழும் பெற்றார்.
அவருடைய அருமை பெருமைகளைத்
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பாராட்டவில்லை; மாற்றக்
கட்சியைச் தேர்ந்தவர்களும் மிகவாகப் பாராட்டினர். அவர் திராவிட இயக்கத்தில்
நன்கு திளைத்த ஒரு இளைஞராக இருந்தபோதிலும், எல்லா அரசியல் கட்சிகளயும்
பொது நோக்குடனேயே நோக்கி நடு நிலை நின்று செயலாற்றி வந்தார். எந்த
அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்களாயிருந்தாலும் சரி, பிற விற பொதுப்பணித்
தலைவர்களாய் இருந்தாலும் சரி நகராட்சி மன்றத்தின் சார்பாக அவர்களுக்கு
வரவேற்பு அளிக்க ஓரிரு உறுப்பினர்கள் விரும்பினாலும் அவர்களின் விருப்பத்தை
நிறைவேற்றிவைக்க தோழர் ப.உ.சன்முகம் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
அந்த அளவுக்கு அரசியல் நாகரிகத்தையும் அரசியல் கண்யித்தையும் மிகப்பெருந்தன்மையோடு
அவர்கள் வளர்ந்து வந்தார்.
தோழர் ப.உ.சண்முகம்
அவர்கள் நகராட்சி மன்றத் தலைவரான துவக்கக் காலத்தில் அவரைப் பல படப்பாராட்டிப்
பேசிய மாற்றக் கட்சிக்காரர்களில், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த
தோழர் என் அண்ணாமலைப்பிள்ளை அவர்கள் முக்கியமான ஒருவராவார்.
அவர் ஒருமுறை தோழர்
சண்முகம் அவர்களைப் பாராட்டிப் பேசும்போது எனக்கு அடுத்தபடி, திருவண்ணாமலையில்,
சண்முகந்தான் எனது வாரிது என்று கருத்துப்படப் பேசினார்.
சிறிது காலத்துக்குப்
பிறகு தோழர் ப.உ.சண்முகம் அவர்களுக்கும் காங்கிரசுக் கட்சிகாரர்களுக்கும்
இடையே சச்சரவு எழுப்ப, காங்கிரசுக்காரர்கள் தோழர் சண்முகம் அவர்களை
இழித்தும், பழித்தும், கூறி வசைபாடத் தொடங்கினர். அதற்குத் தலைமை
தாங்கியவர் தொழர் என்.அண்ணாமலைப்பிள்ளை அவர்கள்தாம். அவர் தோழர்
சண்முகம் அவர்களை வசைபாடிப் பேசும்போது, சண்முகம் ஒரு மடையன்! முட்டாள்!
முரடன்! என்றும் கருத்துப்படப் பேசினார்
தோழர் ப.உ.சண்முகம்
அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களிடம் ஒரு முறை தோழர் என் அண்ணாமலைப்
பிள்ளையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அண்ணாமலைப் பிள்ளை
முன்பெல்லாம் என்னை அவரது வாரிசு என்று கூறிக்கொண்டிருந்தார்; இப்பொழுது
அவரே என்னை மடையன், முட்டாள், முரடன் என்றெல்லாம் பேசுகிறார்! என்று
குறிப்பிட்டார். அப்பொழுது அண்ணாவைச் சற்றிப் பலர் வீற்றிருந்தனர்.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் சண்முகம்
அவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புடன் அவர் முதலிலேயே உள்ளிடம் அதைத்தான்
விளக்கினார்; நீ அப்பொழுது புரிந்துகொள்ளவில்லை; நீ தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்
என்பதற்குத்தான் மீண்டும் ஒரு முறை வெளிப்படையாக விளக்கியுள்ளார்!
என்று கூறினார்கள்.
தோழர் சண்முகம் அவர்களும்,
ஏனையோரும் அண்ணாவின் கூற்றிலிருந்து ஏதும புரிந்துகொள்ள முடியாமல்
சற்றுத் திகைத்திருந்தனர்.
அறிஞர் அண்ணா அவர்கள்
அவர், தமது வாரிசு நீதான் என்று சொல்லியபோதே, உன்னை மடையன் முட்டாள்-முரடன்
என்று முடிவுகட்டியிருக்கிறார்போலும் என்ற நீ புரிந்து கொண்டிருக்க
வேண்டும்! அப்பொழுது நீ புரிந்துகொள்ளவில்லை! எனவேதான் உனக்க விளங்கும்படி
வெளிப்படையாக இரண்டாவது முறையும் கூறியிருக்கிறார்! என்ற சொல்லியவுடனே
தோழர் சண்முகம் உள்பட கூடியிருந்தோர் அனைவரும் விபந்து விழுந்து
கொல்லென்று சிரித்தார்கள்.
அறிஞர் அண்ணா அவர்களின்
நப்பாடு கொண்ட நகைச்சுவைக் கூற்றுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
(மன்றம்: 01.10.1956)
நண்பருக்காகத்
தன்னலம் துறக்கும் தன்மை
அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைப் பச்கையப்பன் கல்லூரியில் ஆனர்சு வகுப்பில்
படித்துக் கொண்டிருந்தபோது, சம்பந்தம் என்பவர் அண்ணாவோடு ஒரே வகுப்பில்
படிக்கம் மாணவராகவும், அண்ணாவுக்கு உற்ற நண்பராகவும் விளங்கிவந்தார்.
இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்து ஒரே அறையில் உறைவது, ஒன்றாக
இருந்து படிப்பது, ஒன்றாகச் சேர்ந்து கல்லூரிக்குச் செல்வது, ஒன்றாகச்
சேர்ந்து எல்லாக் கடமைகளையும் செய்வது ஆகிய பழக்கங்களைக் கொண்டிருந்தனர்.
சம்பந்தம் என்ற அந்த
நண்பர் இயல்பாகவே அச்சம், நாணம் வெட்கம், கூச்சம் ஆகிய பண்புகளுக்கு
இரையானவர். அவர் எங்கே போவதானாலும, எந்தச் செயலைச் வெய்வதானாலும்
அண்ணா அவர்கள் தாம் அவருக்கு உற்றதுணை, அவருடைய ஒயல்பு இரங்கத்தக்கதாக
இருந்த காரணத்தால்தான், அண்ணா அவர்கள் அவருக்கு உற்ற நண்பராகவும்,
உறுதுணையாகவும் விரும்பியிருந்து வந்தார்கள்.
அண்ணா அவர்கள் பொதுவாக
ஊன் உறக்கமின்றி விழுந்து ஓயாமல் படித்துக்கொண்டேயிருக்கும் பழக்கத்தை
கொண்டிருந்தவரல்லர். தேர்வுக்குச் சில நாட்களுக்கு முன் இரண்டொருமுறை
பாடப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது, அந்த அளவிலே பாடங்களை
உள்ளத்திலே பதிய வைத்துக்கொள்வது, யாதொரு அச்சமோ மனக்கலக்கமோ இல்லாமல்
தேர்வு எழுதி வெற்றிபொறுவது, என்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது
நண்பரோ நேர்மாறான பழக்கத்தைக் ஓயாமல் பழக்கத்தைக் கொண்டிருந்தவர்.
அச்சத்தோடு தேர்வு எழுதுவார். அண்ணாவைவிடக் குறைவான எண்கள் பெறுவார்.
இருவரும் தம்மை நல்ல
முறையில் ஆயத்தப்படுத்திக்கொண்டு முடிவுத் தேர்வாகிய ஐந்தாவது ஆனர்சுத்
தேர்வில் கலந்துகொண்டு எழுதினார்கள். மூன்று நாட்கள் அண்ணா அவர்கள்
நல்ல முறையில் வெற்றிபெறும் மன உறுதியோடு தேர்வுத் தாள்கள் எழுதினார்கள்.
ஆனால் அவரது நண்பரோ மிகமிக அச்சமுற்று, மனங்கலங்கி தேர்வுத் தாள்களைச்
சரிவர எழுதவில்லை. மேற்கொண்டு மூன்று நாட்கள் எழுத வேண்டியிருந்தது.
ஆனர்சு வகுப்பில் படிப்பவர் எல்லாத் தாள்களையும் எழுதாமல், மறு ஆண்டில்
எழுதுகிறேன் என்ற கேட்டுக்கொண்டால்தான் மறு ஆண்டுத் தேர்தலில் கலந்துகொள்ளப்
பல்கலைக்கழகத்தார் அனுமதிப்பார்கள். அதன்படி தேர்வில் கலந்து கொள்வது
என்று முடிவு செய்தார். அத்தோடு நிற்காமல் அவர் அண்ணா அவர்களைப்
பார்த்து நீயம் மேற்கொண்டு தேர்வு எழுதவேண்டாம் நின்றுவிடு. இருவரும்
சேர்ந்து அடுத்த ஆண்டு எழுதுவோம். நீ இப்பொழுது எழுதி வெற்றிபெற்றுவிட்டால்,
அடுத்த ஆண்டு என்னோடு தேர்ந்து படிக்கவோ தேர்வு எழுதவோ வேறு யாரும்
துணையிருக்கமாட்டார்கள். எனவே நின்றுவிடு என்று பலவாற்க வற்புறுத்தத்
தொடங்கிவிட்டார். அண்ணா அவர்கள் தேர்வு எழுதி வெற்றிபெறுவதற்காக
முழுமனவுறுதி தமக்கு இருந்தபோதிலும் நண்பரின் வேண்டுகோளுக்கம், வற்புறுத்தலுக்கும்
இணங்கி தேர்வு எழுதாமல் நின்றுகொண்டார். அண்ணா அவர்கள் எழுதின தாள்கள்
மட்டில் எண்கள் போடப்பட்டு வந்தபோது அவற்றில் ஒன்றில் மட்டும் மாநிலத்தில்
முதல்வராகக் காணப்பட்டார். மீண்டும் மறு ஆண்டில் எல்லாத் தாள்களையும்
எழுதி இருவரும வெற்றி பெற்றார்கள்.
நண்பரின் நலத்திற்காகவும்
விருப்பத்திற்காகவும், தன்னலத்தையும் துறந்து நடக்கும் தன்மை, அறிர்
அண்ணா அவர்களிடத்தில் எவ்வளவு சிறப்புற விளங்கிற்று - விளங்குகிறது
என்பதற்கு இந்த நிகழ்ச்சி சீரியதோரு எடுத்துக்காட்டாகும்.
(மன்றம்: 01.07.1956)
|