அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
16
புரிந்துகொள்ளாத
அறிமுகம்
தோழர் டி.சண்முகம் அவர்கள் செங்கற்பட்டு மாவட்டடாண்மைக் கழகத் தலைவராக
இருக்கும்போது, அறிஞர் அண்ணா அவர்கள், அவரோடு காரில் செங்கற்பட்டு
மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றூர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு
ஒன்று ஏற்பட்டது. இது நடைபெற்றது ஏறத்தாழ 1944-ம் ஆண்டாக இருக்கக்கூடும்
தோழர் டி.சண்முகம்
அவர்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது இடையில், ஒரு சிற்றூரில்,
மாவட்டாண்மைக் கழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஒன்றைக் கண்டாராம்.
அதனைப் பார்வையிடலாம் என்று கருதிக் காரை நிறுத்திவிட்டு, அறிஞர்
அண்ணாவையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் நுழைந்தாராம். அந்தப்
பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியர் அரசியல் அறிவும் பொது அறிவும் அற்ற
ஒருவராக இருந்ததால் அண்ணாவை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. தோழர்
டி.சண்முகம் தலைமையாசிரியரிடம் பள்ளிக்கூடத்து நிலைமைகளைப்பற்றிச்
சிறிதுநேரம் கேட்டறிந்துவிட்டு, அறிஞர் அண்ணாவைச் சுட்டிக்காட்டி
இவர் யார் தெரியுமா? என்று தலைமையாசிரியரைக் கேட்டாராம்.
யார் என்று தெரியவில்லையே!
என்று தயக்கத்தோடு தலைமையாசிரியர் கூறினாராம்.
இவரைத் தெரியாது?
என்னய்யா நீ தலைமையாசிரியர்! என்றாராம் தோழர் சண்முகம்.
எங்கேனும் பார்த்திருப்பேன்,
சரியாக நினைவு இல்லை! என்று கூறினாராம் தலைமையாசிரியர்.
இவர் தெரியாது!. .
. இவர்தானய்ய அண்ணாதுரை! அண்ணாதுரை என்று தோழர் டி.சண்முகம் சொல்ல,
அப்பொழுதும் அண்ணாவை யாரென்று அந்தத் தலைமையாசிரியரால் புரிந்துகொள்ள
முடியவில்லை.
இவர்தானய்ய அண்ணாதுரை!
சந்திரோதயம்! நாடகம்! தெரியாது? என்று தோழர் சண்முகம் மீண்டும் கேட்டாராம்.
ஓகோ! நாடகக் காண்ட்ராக்ட்காரரா
. . என்று இழுத்தாற்போல் கூறினாராம் தலைமையாசிரியர்.
இல்லையா! சந்திரோதயம்
துரைராஜ் வேஷம் . . . நடிக்கல்லே என்று கேட்டாராம்.
ஓகோ! நடிகரா? . .
. என்று புரிந்துகொண்டவர்போல தெளிவுபடுத்திக்கொண்டாராம் தலைமையாசிரியர்.
என்னையா இது! இவரைத்
தெரியாது? விடுதலைப் பத்திரிகை! எழுதுவாரு! . . . பேசுவாரு! அண்ணாதுரை!
தெரியாது? என்று மேலும் விடாமல் வினவினாராம்.
தலைமையாசிரியர் தாம்
புரிந்துகொள்ளாததை இனியும் காட்டிக்கொள்ளக்ககூடாது என்று கருதி,
ஓகோ! இப்பொழுது தெரியுது! தெரியுது! பார்த்திருக்கிறேன்! இப்பொழுதான்
நினைவுக்கு வருகிறது! என்று கூறினாராம். உள்ளபடியே அப்பொழுதும் அவர்
புரிந்துகொள்ளவில்லையாம்.
இந்த உரையாடல்களுக்கிடையே
அறிஞர் அண்ணா அவர்கள் நின்றுகொண்டு என்ன செய்வதென்று தோன்றாமல் தத்தளித்தாராம்.
அந்த இடத்தைவிட்டு அகன்றால் போதும் என்றாகிவிட்டதாம்.
(மன்றம், நாள்: 01.04.1955)
வெறுங்காவலில்
போடக் கடுங்காவலில் புகுந்தார்
1938-ஆம் ஆண்டில், ஆச்சாரியாரின் கட்டாய இந்தி நுழைப்பை எதிர்த்துப்
போராட்டம் நடத்தப்பட்டபோது, அறிஞர் அண்ணா அவர்கள் அதில் ஈடுபட்டு
சட்டவரம்புக்கு மீறிய சொற்பொழிவாற்றினார் என்று ஆச்சாரியார் ஆட்சியால்
குற்றஞ்சாட்டப்பட்டு, நான்கு திங்கள் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.
அவர் சென்னைப் பெருஞ்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அறிஞர் அண்ணா அவர்கள்
சிறைபுகுமுன்னரே இந்தி எதிர்ப்புத் தொண்டர்களும், தலைவர்களும் பலராகச்
சிறை புகுந்தனர். நண்பர்கள் பலர் இருந்தபோதிலும், உண்ணுவதும், உறங்குவதும்,
உரையாடுவதும் ஆன செயல்களிலேயே பொழுதொல்லாம் கழிவது அண்ணாவுக்கு ஊக்கத்தையும்
மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. எனவே இரண்டாம் வகுப்பு வெறுங்காவல்
தண்டனையைக் கடுங்காவல் தண்டனையாக மாற்றிக்கொள்வதன் மூலம் ஊக்கமும்,
மனக்கிளர்ச்சியும் பெறலாம் என்று கருதித் தமக்குக் கடுங்காலல் தண்டனை
கொடுக்கும்படி உரிய அதிகாரிகளை அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பிக்
கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் அவ்வாறே சில நாட்கள் கழித்து அளித்தனர்.
அறிஞர் அண்ணாவின்
போக்கு பலராலும் பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததோடு மட்டுமல்லாமல்,
சிறையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியால் மிக மேம்பாடுற்றதாகவும் கருதப்படவேண்டியதாக
மாறிற்று.
அறிஞர் அண்ணா அவர்கள்
என்று இரண்டாம் வகுப்பு கடுங்காவல் தண்டனையை விரும்பி ஏற்றுக்கொண்டார்களோ
அதே நாளில் திருவாசகமணியாக விளங்ககும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம்
அவர்கள் முதல்வகுப்பு வெறுங்காவல் தண்டனையைத் தாங்கிக்கொள்ளமுடியாமல்,
மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியேற விரும்பினார்.
அறிஞர் அண்ணா அவர்கள்
வெறுங்காவல் தண்டனையை வெறுத்துக் கடுங்காவல் தண்டனையை ஏற்றுக், கடுங்காவலுக்குரிய
உடுப்புகளை அணிந்துகொண்டு சிறையிலுள்ள ஒரு வாயிலிலே நுழையும்போது,
தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட
நிலையில் வீட்டுக்குப்போக வெளியேறினார். இருவரும் வாயிலில் ஒருவரையொருவர்
கண்டுகொண்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் அவரைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு
சிரிக்க, அவர் அசட்டைச் சிரிப்பு சிரித்தாராம். அண்ணா அவர்கள் அவரைப்
பார்த்து, அவரைப்போலவே மன்னிப்புக் கேட்டுக்கொண்டு முன்னரே வெளியேறிவிட்ட
ஒருவர் பெயரைச்சொல்லி, அவர்தான் வெளியே அவருக்காகக் காத்துக்கொண்டிருப்பார்,
வேறு யாரும் இருக்கமாட்டார்கள் வரவேற்க என்று சிரித்துக்கொண்டே கூறி
அனுப்பினார்களாம். அறிஞர் அண்ணா கூறியதுபோல மன்னிப்புக் கேட்டுக்கொண்டாரே,
முன்னரே மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஒருவர்தான் வரவேற்று நின்றாராம்!
(மன்றம், நாள்: 15.04.1955)
சாமியார்
ஆசாமியார் ஆனார்!
திராவிடநாடு அலுவலகப் பொறுப்பாளராக இருந்துவரும் தோழர ஈழத்து அடிகள்
ஒரு காலத்தில் ஸ்ரீலஸ்ரீ ஈழத்து சிவானந்த அடிகளாக விளங்கினார்.
கையிலே கமண்டலம்,
உடலிலே காவி உடை, கழுத்திலே உருத்திராக்கக் கொட்டை, நெற்றியிலே திருநீற்றுப்
பட்டை, காலிலே கட்டை, தலையோ மொட்டை. இந்தத் தவத்திருக் கோலத்தோடுதான்
அவர் 1938 ஆம் ஆண்டிற்கு முன்னால் காட்சியளித்தார். ஈழநாட்டிலே பிறந்து,
சிறுவயதிலேயே தவத்திருக்கோலம் பூண்டு ஸ்தலயாத்திரைகள் பலசென்று,
இறுதியாகக் கருவூரில் அறிவுதயக் கழகம் என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக்கொண்டு,
சிவபூசை சக்திபூசைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தமிழினிடத்தே
ஆழ்ந்த பற்றும் அதன் வளர்ச்சியிலே அக்கரையும் கொண்டு விளங்கினார்.
தோழர் இராசகோபாலாச்சாரியார் 1938-ல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன்
என்று அறிக்கைவிட்டபோது, அதனை எதிர்த்து அச்சாரியாருக்கு மதல் தந்தி
அடித்தவர் ஈழத்துச் சிவானந்த அடிகளேயாவார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தை
அவர்தான் துவக்கினார். பிறகுதான் நாவலர் பாரதியார், பெரியார் இராமசாமி
அறிஞர் அண்ணா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். ஈழத்துச் சிவானந்த
அடிகள் இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரியாகப் பணியாற்றிச் சிறை
புகுந்தார்.
ஈழத்து அடிகள் காவியுடைத்
தோற்றத்தோடு சிறை புகுந்திருந்த காலை, அறிஞர் அணணா அவர்களும் சென்னையில்
சிறைபுகுந்தார்கள். இருவரும் பி வகுப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் கானவும், ஒருவரோடொருவர் அளவளாவவும், ஒருவருக்கொருவர்
கருத்துக்களைப் பரிமாறிக்கோள்ளவும் மிக்கவாய்ப்பும், பொழுதும் ஏற்பட்டன.
அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் ஈழத்து அடிகளைக் கவர்ந்தன. பக்திச்
சாமியார் பகுத்தறிவுச் சாமியாராகச் சிறிது சிறிதாக மாறத் தொடங்கினார்.
அடிகளாரின் உள்ளத்தை நன்கு அறியும் வாய்ப்பினைப் பெற்ற அறிஞர் அண்ணா
அவர்கள், அடிகளாரின் உள்ளம் மண்ணாசை - பெண்ணாசை - பொன்னாசை எதையும்
எப்பொழுதும் விட்டதில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
அடிகளாரின் பொய்மை வாழ்க்கையைப் பற்றி அண்ணா அவர்கள் அடிக்கடி கேலியும்
கிண்டலும் செய்யும்போதெல்லாம் நான் மட்டும் இப்படியல்ல; இந்த உடையில்
இருக்கும் எல்லாச் சாமியார்களும் இப்படித்தான்; இதற்கு விதிவிலக்கு
அரிதிலும் அரிது என்று ஈழத்து அடிகள் செப்புவாராம். கோணல் வாழ்க்கையைவிட்டு,
நேரான வாழ்க்கைக்கு நேர்முகமாக உள்ளன்போடு வரச்சொல்லி அண்ணா அவர்கள்
அடிகளாரைச் சிறையில் வற்புறுத்துவார்களாம்.
ஈழத்துச் சிவானந்த
அடிகள் வெளியில் வந்த பிறகும் சிலநாட்கள் காவியுடையோடு காட்சி அளிக்க,
அறிஞர் அண்ணா அவர்கள் உள்ளத்திலே ஆசை அவ்வளவும் இருக்க, காவியுடையேன்?
திருநீற்றுப் பட்டையேன்? என்று கேலி செய்ய, ஸ்ரீலஸ்ரீ ஈழத்துச் சிவானந்த
அடிகள் பொய்மை வாழ்க்கையைவிட்டு, உண்மையான நேர்மையான வாழ்க்கையில்
புகுந்து, தூய வெள்ளையாடைக்கோலம் பூண்டு தோழர் ஈழத்து அடிகளாக மாறினார்.
அண்ணாவின் அறிவுரை சாமியாரை ஆசாமியாராக ஆக்கிற்று! சிறையில் ஏற்பட்ட
பலன்களில் இதுவும் ஒன்று!
(மன்றம், நாள்: 01.05.1955)
காவற்கூடத்தில்
கடமையுணர்ச்சி
1953-ம் ஆண்டு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டு அண்ணாவும் பல கழகத்
தோழர்களும் சிறை ஏகினர். சிறை புகுந்த தோழர்கள் சிறை கூடத்தின் கட்டு
திட்டங்களுக்கு உட்பட்டு கட்டுப்பாடு தவறாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று
வற்புறுத்தி அதனை காத்து வருவதிலே அண்ணா அவர்கள் கண்ணும் கருத்துமாக
இருந்தார்கள்.
ஒரு சமயத்தில் சிறையில்
ஒரு குழுவாக நுழைந்த முப்பது பேர் சாலையில் வரிசையாக அமரவும், அறைக்குள்
இருக்கம் சிறு நீர்ப் பானையை வெளிகோண்டு வரவும் சோற்றினைச சென்று
வாங்கிக்கொள்ளவும் மறுத்துவிட்டனர். சிறை வார்டன்களுக்கும், கழகத்
தோழர்களுகும் தகராறு வளர்ந்தது. இதைக் கேள்வியுற்ற அண்ணா, என்னை
அழைத்து அவர்களால் சிறு நீர் பானையை எடுத்து வெளியே வைக்க முடியவில்லையென்றால்
நானே வந்த அவர்களின் சிநீர்ப்பானைகளை வெளியே எடுத்து வைக்கிறேன்
- சோறும் வாங்கித்தருகிறேன், அவர்களிடம் சொல் என்றார். நான் போய்
கழகத் தோழர்களிடம் அண்ணா இப்படி உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றவுடன்
அவர்கள் கண் கலங்கி அண்ணா வரவேண்டாம் நாங்களே முறைப்படி நடந்துக்
கொள்கிறோம் எங்களை மன்னிக்கும்படி அண்ணாவிடம் கூறுங்கள் என்று தெரிவித்தனர்.
அண்ணாவோடு வாழ்ந்த அந்த சிறைவாசம், நாவலர்
நெடுஞ்செழியன்.
யாருக்கு
ஊசி?
அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பொழுதுபோக்குவதற்குரிய பற்றுக் கோடுகளில்
மிகச்சிறந்த பற்றுக்கோடு காஞ்சித் தோழர் சி.வி.இராசகோபால் ஆவார்.
அறிஞர் அண்ணா அவர்களும்
தோழர் சி.வி.இராசகோபால் அவர்களும் மிகச் சிறிய வயதிலிருந்தே இணைபிரியா
நண்பர்கள். பள்ளிப்பருவ காலத்திலும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து
பள்ளிக்குச் செல்வதும், ஒன்றாகவே திரும்பிவருவதுமான பழக்கம் பூண்டிருந்தவர்.
தோழர் சி.வி.இராசகோபால் அவர்களின் பேச்சு, போக்கு, நடவடிக்கைகள்
எல்லாம் அண்ணா அவர்களுக்கு எப்பொழுதும் நகைச்சுவை பயப்பனவாகும்.
அத்தகைய நகச்சுவையினால் ஏற்படும் மகிழ்வின்பத்தைப் பெறுவதிலே அண்ணா
அவர்களுக்கு எப்பொழுதுமே விருப்பம் மிகுதி. அண்ணா அவர்களின் கேலியும்
கிண்டலும் தோழர் இராசகோபால் அவர்களை நிலை தடுமாறவைத்து மேலும் மேலும்
நகையாடற்குரியவராக அவரை வைத்துவிடும்.
அறிஞர் அண்ணா அவர்கள்
தோழர் இராசகோபாலை பற்றிக் குறிப்பிடும்போது, அவர், தமக்கு ஒரு ஞாயிற்றுக்
கிழமை போன்றவர் என்று கூறுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை எப்படிப்
பொழுதுபோக்குவதற்குரியதொரு நாளாக விளங்குகிறதோ, அப்படித் தோழர் இராசகோபால்
பொழுதுபோக்குவதற்குரிய ஒருவராக விளங்குகிறார் என்று பொருள்.
தோழர் இராசகோபால்
அவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரமோகன்
நாடகத்தில் பகதூர் என்ற ஒரு நகைச்சுவை உறுப்பைப் படைத்தார்கள். நாடகத்தில்
அந்த உறுப்பை ஏற்று நடிக்கும் வாய்ப்பை அண்ணா அவர்கள் தோழர் இராசகோபால்
அவர்களுக்கே கொடுத்தார்கள். தோழர் இராசகோபால் அவர்கள் நடித்துக்காட்டிய
அந்த உறுப்பை ஏற்று வேறு யார் யாரோ நீண்டகாலமாகப் பழக்கமான நடிகர்கள்கூட
நடித்துப்பார்த்தார்கள். ஆனால் தோழர் இராசகோபாலைப்போல் அவ்வளவு திறமையாக
நடித்துக் காட்டியவர்கள் வேறு யாருமில்லை எனலாம். காரணம் தோழர் இராசகோபால்,
இவர்களால் மட்டும்தான் அந்த உறுப்புக்குறிய நகைச்சுவையை உண்டாக்க
முடியும் என்பதாகும். அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இராசகோபால் அவர்களை
ஓயாமல் கிண்டல் செய்துகொண்டேயிருப்பார். ஒருபொழுது தோழர் இராசகோபால்
அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்துவிட்டதாகக்
கூறினார்.
அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டே
எலியா? உன்னையா? என்று கேட்டார்கள்.
ஆமாங்க! என்னைத்தான்
எலி கடித்துவிட்டது! என்று தோழர் இராசகோபால் இரக்கந் தோன்றக் கூறினார்.
ஊசி போடனுமே! ஊசி
போட்டாச்சா? என்று அண்ணா அவர்கள் கேட்க, உடனே இராசகோபால் இன்னும்
போட்டுக்கலிங்க! என்று கூறினார்.
உடனே அண்ணா யாருக்கு
ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார்கள்.
எனக்குத்தான்! என்று
இராசகோபால் அவசரமாகக் கூறினார்.
அண்ணா அவர்கள் சிர்த்துக்கொண்டே
உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசிபோட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.
எலிக்கு ஏன் ஊசி?
என்று இராசகோபால் கேட்க அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப்பதைவிட,
உன்னுடைய விஷமல்லவா அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்! என்று
சிரித்துக்கொண்டே கூறினார்.
(மன்றம், 01.06.1955)
|