அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 15

புகையிலை நறுக்கும் கத்திரிக்கோல்
1948-ஆம் ஆண்டில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் ஒன்று, சென்னை பெரம்பூர் புகை வண்டி நிலையத்திற்கு எதிரிலுள்ள மைதானத்தில் கூட்டப்பட்டது. அந்த விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அன்று பகற்கொழுதில் தோழர் க.அன்பழகன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஓய்வான நேரத்தில் சேப்டி ரேசர் மூலம் முகச் சவரம் செய்து கொண்டார்கள். மீசையைச் செம்ப் படுத்தவேண்டி தோழர் அன்பழகனிடம் கத்திரிக்கோல் ஒன்று கேட்டார்கள். தோழர் அன்பழகன் அவர்கள் பெரியதொரு கத்தரிக்கோலைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்தக் கத்திரிக்கோல் மீசையைச் செம்மைப்படுத்துவதற்குப் பதிலாகச் சீர்குலைத்துவிட்டது. இறுதியில் மீசை முழுவதுமே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எப்பொழுதும் மீசையோடு காட்சியளித்துவந்த அண்ணா அவர்கள் அன்று பொதுக் கூட்டத்தில் மீசையில்லாமல் காட்சியளிக்கவேண்டியிருந்தது.

அந்த நேரம் அறிஞர் அண்ணா அவர்கள் இயக்க நடவடிக்கைகயில் மிகவாகத் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கியிருந்த நேரமாகும். தாம் மீசையில்லாமலிருப்பதைத் தமது அரசியல் போக்கோடு சிலர் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடும் என்பதை உணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், பொதுக்கூட்டத்தில் பேசிக்பொண்டிருக்கும்போதே ஏற்ற ஒரு இடத்தில் அதனை வெளிப்படுத்திவிட்டார்கள். இன்று எனக்கு மீசையில்லாமலிருப்பதைக் கண்ட சிலர், இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று வியப்படைகிறார்கள்; வேறு சிலர் இதற்கு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கவேண்டுமென்று ஐயப்படுகிறார்கள். இதற்கு ஒரு காரணமும் இல்லை. தோழர் அன்பழகன் அவர்களைக் கத்தரிக்கோல் கேட்டேன். அவர் புகையிலை நறுக்கும் கத்திரிக்கோல் ஒன்றினைக் கொண்டுவந்து கொடுத்தார். அதன் விளைவால் என் மீசை முழுவதும் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வளவுதான்! என்னும் கருத்துப்பட கூறினார்கள். கூடியிருந்த மக்கள் கொல்லென்று சிரித்துச் சிரிப்பொலி கிளப்பினர்.
(மன்றம், நாள்: 01.01.1955)

நாடகத்தில் பாட பேதம்
சந்திரமோகன் நாடகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் காகபட்டர் வேடந்தாங்கி, அப்பகுதியைச் சிறப்புற ஆக்கினார். காகபட்டருக்குப் பிரதம சீடனாக சங்கு என்பவன் வருவான். அதில் திரௌபதியைப் பற்றிய உரையாடல் காகபட்டருக்கும் ரங்குவிற்கும் நடைபெறும். திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்கள். ஒரே சமயத்தில் தருமர் சொக்கட்டான் ஆடவும், சகாதேவன் தருமநூல் படிக்கவும், நகுலன் குதிரைச்சவாரி செய்யவும் கூப்பிட்டால் அவள் என்ன செய்வாள்? என்று காகபட்டர் ஒரு கேள்வி கேட்பார்.

என்ன செய்யமுடியும்? ரொம்பச் சங்கடந்தான் என்பான் ரங்கு.

நினைப்பதற்கே இவ்வளவு சங்கடம் என்கிறாயே, இதைப்போல எவ்வளவு சங்கடங்களை அந்தப் பதி விரதை தாங்கியிருப்பாள்! என்பார் காகபட்டர்.

என்ன செய்தாள், ஸ்வாமி? என்று கேட்பான் ரங்கு

திரௌபதி உடனே கிருஷ்ணபரமாத்மாவை நினைத்துக்கொண்டாள். இப்பொழுது கிருஷ்ணபரமாத்மா ருக்மணியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து சல்லாபித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணபரமாத்மா யாருடன் இருந்தார்? என்று சீடனைக் காகபட்டர் கேட்பார்.
ருக்மணியுடன் என்று ரங்கு சொல்லவேண்டும்

ஆனால் ஒரு நாள் சந்திமோகன் நாடகத்தில் இந்தக் கட்டம் வந்தபொழுது, கிருஷ்ணபரமாத்மா யாருடன் இருந்தார்? என்று காகபட்டர் கேட்டபொழுது, ருக்மணியுடன்! என்று சொல்வதற்குப் பதில் ரங்கு வேடம் போட்டவர் திரௌபதியுடன் என்று தவறிச் சொல்லிவிட்டார். மிகத்தவறான பதில்! நாடகமேடையில், பக்கத்தில் இருப்பவர்களுக்க ரங்கு சொன்ன பதில் தவறானது, பாடத்தில் இல்லாதது என்று தெரியும்! காகபட்டர் வேடத்தில் வேறு யாரும் இல்லாதிருந்தால் திகைத்துப் போயிருப்பார்கள். ஆனால் அறிஞர் அண்ணா சமாளித்துக்கொண்டு ஏண்டா, மண்டு! ராதா, ருக்மணி சத்தியபாமா, ஆயிரம் கோபிகைகள் இவ்வளவு பேரும் இருப்பது கிருஷ்ணபாமாத்மாவுக்குப் போதாதென்று, திரௌபதியையும் அவருடன் அனுப்பிவைத்துவிட்டாயா? என்று சொன்னார்.

கைதட்டலில் கொட்டகை அதிர்ந்தது, ரங்கு வேடத்தில் இருந்தவன் பெருமூச்சுவிட்டான். தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன், நான் மண்டு, ஸ்வாமி! என்று நிலைமையைச் சமாளிப்பதற்காக அண்ணா அவர்கள் சேர்த்துச்கொண்ட இந்த பதில் பின்பு பாடமாகவே நாடகத்தில் சேர்ந்துவிட்டது.

நாடகத்தில் பலருக்கு பாடங்கள் தவறிப்போய்விடுவதுண்டு. அண்ணா அவர்கள் அவற்றைத் தெரிந்து, ஏதாவது கேள்வி-பதில் தந்து சமாளித்துக்கொண்டுவிடுவது வழக்கம்.

சிறையில் பூனை வளர்ப்பு
அறிஞர் அண்ணா அவர்கள், மும்முனைப் போராட்டத்தின் விளைவாக மூன்று திங்கள் தண்டனை ஏற்றுச் சென்னைச் சிறையில் இருந்தபோது, பொழுதுபோக்குக்காகக் கொண்டிருந்தவைகளிலே பூனை வளர்ப்பு ஒன்றாகும்.

சிறைச்சாலைக்குச் சென்ற சிலநாட்களில், ஒரு தாய்ப்பூனை இரண்டு குட்டிகளை அழைத்துக்கொண்டு, நாள்தோறும், இரவில், அறிஞர் அண்ணா அவர்கள் இருந்த கட்டிடம் பக்கம் வருவதும், அறைகளில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடுவதும், பிறகு போய்விடுவதும் ஆன காட்சி அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அந்தப் பூனைகளுக்கு ஏதேனும் உணவு திரட்டி வைத்திருக்கவேண்டும் என்ற இரக்க உணர்வு அவருக்குப் பிறந்தது.

அன்று முதல் அண்ணா அவர்கள் நாள்தோறும் தமக்குக் கொடுக்கப்படும் பாலில் ஒரு பகுதியைப் பூனைகளுக்கென்று ஒதுக்கிவைக்கத் தொடங்கினார்கள். தாய்ப் பூனையும் இரண்டு குட்டிகளும் வரும்போது, அவர் அறையின் இரும்புக் கதவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு அலுமினியக் கிண்ணத்தை இரும்புக் கம்பிகளுக்கு இடையில்விட்டு, வெளியே வைத்து, அதனைக் கம்பிகளுக்கருகில் தள்ளிவைத்துக்கொண்டு, உள்ளே இருந்தபடியே நீண்ட குவளையிருக்கும் பாலை அந்தக் கிண்ணத்தில் ஊற்றுவார்கள்.

தாய்ப்பூனை முதலில் குட்டிகளைச் சாப்பிடவிட்டுவிட்டுத் தான் காத்துக் கொண்டிருக்கும். அந்தக் குட்டிகளில் ஒன்று பருத்து வலிவுள்ளதாகவும், மற்றொன்று மெலிந்து வலிவற்றதாகவும் இருந்தன. வலிவுள்ள குட்டி வலிவற்ற குட்டிளை அப்பால் தள்ளிவிட்டுத் தானே பாலையெல்லாம் குடிக்க முயலும். அப்பொழுது தாய்ப்பூனை வலிவுள்ள குட்டியை அப்பால் தள்ளிவிட்டு வலிவற்ற குட்டி சாப்பிடுவதற்கு இடம் ஏற்படுத்திக்கொடுக்கும். குட்டிகள் இரண்டும் சாப்பிட்டு முடிந்ததற்குப் பிறகுதான் தாய்ப் பூனை குடிக்க முயலும். பால் மிச்சம் இருந்தால் குடிக்கும்; இல்லையானால் குட்டிகளை அழைத்துக்கொண்டு போய்விடும். இந்தக் காட்சி அறிஞர் அண்ணாவுக்கு வியப்பையும் பொழுதுபோக்கையும் தரும்.

கடைசி சில நாட்களில் மெலிந்த பூனைக்குட்டி வராமல் தாய்பூனையும் பருத்த குட்டியும் மட்டுமே வந்தன. இரண்டு மூன்று நாட்கள் கழித்து கேட்டறிந்தபோது அந்தப் பூனைக்குட்டியை யாரோ அடித்து இறந்து போய்விட்டது என்று தெரியவந்தது. அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அறிஞர் அண்ணா அவர்கள் எதையோ பறிகொடுத்துவிட்டது போன்ற இரண்டு மூன்று நாட்களாகக் காணப்பட்டார்கள்.
(மன்றம், 01.03.1955)

பேச முடியாமற்போன ஒரே கூட்டம்
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடக் கழகம் ஆகிய அமைப்புகள் தோன்றுவதற்கு முன்னால், நீதிக்கட்சியில் சார்ந்திருந்து, பகுத்தறிவு இயக்கக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அவலூர்பேட்டைக்கு ஒருமுறை அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவலூர்ப்பேட்டை வைதீகப் பெரியவர்கள், பணக்காரார்கள் ஆகியோரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த காலம் அது. பகுத்தறிவியக்கக் கொள்கைகளிலே பற்றுக்கொண்ட ஒரு சில இளைஞர்கள் அறிஞர் அண்ணா அவர்களை வரவழைத்து அவ்வூரில் எப்படியேனும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திவிடவேண்டும் என்று முயன்று அரும்பாடுபட்டுக் கூட்டினார்கள். அறிஞர் அண்ணாவும் இசைந்தார்கள்.

அவலூர்ப்பேட்டையில் மணியக்காரராய் இருந்த பெரியவர் ஒருவர் தம்மைப் பொருட்படுத்தாமல் பொடியர்கள் பொதுக்கூட்டம் கூட்டுகிறார்களே என்பதைக் கண்டு சினங்கொண்டு, எப்படியேனும் கூட்டத்தை நடத்தவொட்டாமல் செய்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.

பொதுக்கூட்டம் ஆரம்பமாகி அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்திருக்கும்போது அந்த மணியக்காரர் கூட்டத்திடை வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு, அவர் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்தபடி பறையடிப்போரைப் பார்த்து, தப்பட்டையை அடியுங்கடா. . . என்று கட்டளை பிறப்பித்தார். அவ்வளவுதான் கூடியிருந்தோர் காது செவிடுபடும்படியாகப் பறையடிப்போர் பறையொலி கிளப்பினர். அறிஞர் அண்ணாவால் ஏதும் பேச முடியவில்லை. நான் சிறிது நேரத்தில் முடித்துக்கொள்கிறேன். அதைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்கள்! என்று அண்ணா அவர்கள் அந்த மணியக்காரரை கேட்டுக்கொண்டார்கள் அதெல்லாம் முடியாது!அடியுங்கடா . . . என்று மணியக்காரர் மேலும் கடுமையாகக் கட்டளையிட்டார். அதிக நேரம் பேசப்போவதில்லை, சிறிது நேரந்தான் என்றார் மீண்டும் அண்ணா அவர்கள்.
யாரைக் கேட்டுக்கொண்டு பேசவந்தாய்? என்னையா கேட்டுக்கொண்டு வந்தாய்? இல்லையே? என்றார் மணியக்காரர்.

பொதுமக்கள் கூடிவிட்டார்கள், இவர்களை எழுந்துபோகச் சொல்லுவது உங்கள் ஊருக்கு நல்லதல்ல. இப்பொழுதான் கேட்கிறேன், பேசவிடுங்கள் என்று அண்ணா அவர்கள் கேட்டார்கள்.

அப்படியானால் ஐந்து நிமிடம் பேசு என்று அவர் அனுமதி தந்தார். அவரது கட்டளையின் பேரில் தப்பட்டை ஒலி நின்றது. அண்ணா அவர்கள் பேச்சை தொடங்கி பேசிக்கொண்டேறிருந்தார்கள். ஐந்து நிமிடங்கள் ஆனவுடனேயே பறையொலி எழுப்பும்படி மணியக்காரர் கட்டளையிட்டுவிட்டார். பறைகள் பெரும் ஓசை கிளப்பின. அண்ணா அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மணியக்காரர் கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. மணியக்காரரை எதிர்த்துப் பேசும் ஆற்றல் அப்பொழுது யாருக்கும் ஏற்படாததால், எல்லோரும் வாளா இருந்துவிட்டனர். கூட்டம் கட்டிய இளைஞர்கள் அப்பொழுது அண்ணா அவர்கள் எதிரில் வர அஞ்சி மறைந்துவிட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் பேசமுடியாமல் இறங்கிய ஒரே மேடை அதுதான்.

மறுநாள் காலையில் சிற்றுண்டி அருந்த ஒரு உணவு விடுதிக்கு அருகில் அண்ணா அவர்கள் சென்றபோது, அங்கிருந்த மணியக்காரர் அண்ணாவை வரவேற்றுச் சிற்றுண்டி முதலியவைகளை வாங்கி வழங்கினாராம். முதல் நாள் இரவுக் கூட்டம் ஏன் தன்னால் நிறுத்தப்பட்டது என்பதற்காக காரணத்தை அவர் சொல்லும்போது, கூட்டத்தை நடத்தவிட்டால், இளைஞர்கள், எப்பொழுதும் தம்மை மதிக்காமல் போய்விடுவார்கள் என்றும், அவர்களுக்கு அத்து இருக்கவேண்டும் என்பதற்குத்தான் கூட்டத்தை தாம் நிறுத்தினதாகவும் கூறினாராம்.
(மன்றம், நாள்: 15.03.1955)

 


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai