அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
14
கல்லூரியில்
அண்ணா
அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது பாடங்களையோ, நோட்சுகளையோ
அப்படியே உருப்போட்டு, பரிட்சையில் பதில் எழுதும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை.
அவர் பாடங்களையும், அத்துடன் மேற்கோள் காட்டும் மற்ற நூல்களையும்
விரிவாகப் படித்து, அவற்றின் கருத்துக்களை நன்கு மனதில் கொண்டுவிடுவார்.
பின் அவற்றை வைத்துப் பரிட்சையில் நமது தமதுநடையிலேயே எழுதிவிடுவது
வழக்கம்.
அண்ணா அவர்கள் கல்லூரி
இரண்டாவது வகுப்பில் படிக்கும்பொழுது, ஆங்கில வகுப்பை எடுத்த பேராசிரியர்
ஒருவர், பாடஞ் சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் என்ற கருதப்பட்டவர்.
அவர் வகுப்பில் கொடுக்கும் கேள்வி பதில்களையும், குறிப்புகளையும்,
மாணவர்கள் உருப்போட்டு வைத்துவிட்டால் போதும், பரிட்சையில் பாஸ்
செய்துவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது. அண்ணா மட்டும், வகுப்பில்
நோட்சுகளை எடுத்துக் கொள்வதில்லை. மற்ற மாணர்வகளெல்லாம் தான் சொல்வதை
ஒன்று விடாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும்பொழுது, அண்ணா மாத்திரம்
பேசாமல் உட்கார்ந்திருப்பதை பேராசிரியர் பார்த்துவிட்டார்.
அண்ணாதுரை! நீ ஏன்
சும்மா உட்கார்ந்திருக்கிறாய் என்று ஆசிரியர் கேட்டார்.
நான் குறிப்பு எடுக்கவில்லை!
என்று அண்ணா பதிலளித்தார்.
ஏன்? அவற்றை உருப்போட்டு
அப்படியே ஒப்பிக்கவேண்டாமென்று நான் நினைத்தேன்
கர்வம் பிடித்தவன்!
உட்கார்! என்று ஆசிரியர் சொல்லி உட்காரவைத்தார். அண்ணாவும் நோட்சுகளை
எழுதவில்லை.
கடைசியில் கல்கலைக்
கழக இண்டர் தேர்வு நடந்தது, பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும், அறிஞர்
அண்ணா அவர்கள் ஆங்கிலப் பாடத்தில் முதலாவதாகத் தேறியிருந்தார். அதற்காக
அவருக்கு ஒரு பரிசும் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் விழாவில், பரிசுப்
புத்தகங்களை வாங்கிக்கொண்டு அறிஞர் அண்ணா அவர்கள் வந்ததும் அவருடைய
ஆங்கில ஆசிரியர் எதிர்ப்பட்டு வாழ்த்தினார்.
நன்றியைத் தெரிவித்துவிட்டு,
சார்! உங்களுடைய நோட்சை நான் உருப்போட்டு ஒப்பித்திருந்தால், பாஸ்
செய்திருப்பது நிச்சம்; ஆனால் இந்தப் பரிசைப் பெற்றிருக்க முடியாது
என்று வேடிக்கையாக, அண்ணா சொன்னார்.
ஆசிரியர் சிரித்தபடி,
நீ கெட்டிடக்காரன் என்று எனக்குத் தெரியுமே! என்று சமாளித்துக் கொண்டார்.
(மன்றம், நாள்: 15.09.1954)
முதல் நாடக
முயற்சி
அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு பொது வாழ்க்கையில்
இறங்கிய பிறகும், நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், அவரது
உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
கற்றறிவில்லாமல் கையில்
சிக்கிப் பிற்போக்குத் தன்மையில் போய்க் கொண்டிருந்த நாடக உவகைக்
கற்றறிவாளர் கைக்கு மாற்றி, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அதனால்
பலன் ஏற்படும்படி செய்யவேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் ஆவல். அதற்காக
வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஏற்படாமலேயிருந்தன.
காஞ்சீபுரத்தில் தம்
சொந்த முயற்சியில் திராவிட நாடு வார இதழ் தொடங்கி நடத்திக்கொண்டு
வரும்போது அறிஞர் அண்ணாவின் உள்ளத்தில் வேரூன்றி இருந்த கருத்து,
செழித்து வளர்ந்து, பூத்துக், காய்த்துக், கனியத் தொடங்கிற்று. அதன்
விளைவாக சந்திரோதயம் என்னும் நாடகம் உயிர்பெற்று எழுந்தது. அதில்
அறிஞர் அண்ணாவும், இயக்கத் தோழர்களும், திராவிட நாடு அலுவலகத்தில்
பணியாற்றி வந்தோரும் பங்கு ஏற்று நடிப்பது என்னும் முயற்சி உருப்பெற்றது.
நாடகம் சரியாக இருக்குமா இருக்காதா என்ற ஐயப்பாடும், அதனை முதலில்
எங்கு நடத்திக் காட்டுவது என்று அச்சமும் அண்ணாவுக்கு ஏற்பட்டன.
ஐயப்பாட்டையும், அச்சத்தையும் போக்கிக் கொள்ள, வடஆற்காடு மாவட்டத்தைச்
சேர்ந்த திருவத்திபுரத்தில், அந்த நாடகத்தை நடத்திப் பார்ப்பது என்னும்
முடிவில், 1943-ம் ஆண்டில் முதல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நாடகம்
யாவரும் போற்றிப் புகழும் வண்ணம் அமைந்ததோடு, அறிஞர் அண்ணா நடிப்பிலும்
மிகச் சிறந்து விளங்குபவர் என்னும் உண்மையும் வெளிப்பட்டது. அண்ணா
அவர்கள், ஆண்டி, அப்துல்லா, துரைராஜ், தொழிலாளி, மடாதிபதி, ஜமீன்தார்
ஆகிய வேடங்களைத் தாங்கி, மிகத் திறம்பட நடித்து மக்களின் உள்ளத்தைக்
கொள்ளைகொண்டார். பிறகு அந்த நாடகம் தமிழ் நாடெங்கும் நடித்துக் காட்டப்பட்டது.
சந்திரோதம் நாடக உலகில்
ஒரு புரட்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கிற்று எனலாம். சந்திரோதயம்
நாடகத்தைக் கண்ட பிறகு புதுப்புது சீர்திருத்த நாடகங்கள் தோன்றின;
சீர்திருத்த நாடகாசிரியர்களும் சீர்திருத்த நடிகர்களும் கிளம்பினர்.
பெரும்பாலான நாடகக் கம்பெனிகள் புராண நாடகங்களைக் கைவிட்டுச் சீர்திருத்த
நாடகங்களையே நடித்துக்காட்ட ஆரம்பித்தன. இதற்கெல்லாம் காரணம் சந்திரோதயம்
என்றால் அது மிகையாகாது.
(மன்றம், நாள்: 01.10.1954)
அண்ணாவும்
மாணவர் இயக்கமும்
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் அரசியல் உலகில் தோற்றங்கொள்வதற்கு
முன்பு, தமிழத்தில், மாணவர் இயக்கம், காங்கிரஸ் கட்சி சார்பினதாகவும்,
கம்யூனிஸ்ட்டுக் கட்சி சார்பினதாகவுமே இருந்து வந்தது. நீதிக்கட்சியின்
கொள்கைகளும், பகுத்தறிவியக்கத்தின் கருத்துக்களும் மாணவரிடையே பரவுவதற்கான
வழியையும், வகையையும் வகுத்தவர் அறிஞர் அண்ணா அவர்களேயாவார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள்
பேச்சும் எழுத்தும் எடுத்துக் கூறும் பொருளும், விளக்கிக்காட்டும்
தன்மையும் மாணவர் உலகைத் தம்பால் ஈர்க்கும் தன்மையனவாக இருந்தன.
இப்பொழுது அண்ணாவைப் பின்பற்றி பள்ளிதோறும், கல்லூரிகள் தோறும் மாணவர்
படைகள் திரண்ட வண்ணமிருக்கின்றன. திராவிட மாணவ இயக்கத்துக்குத் தூண்டுகோலாகவும்
அடிப்படையாகவும், எடுத்துக் காட்டாகவும், எழுச்சி தருவனவாகவும் துவக்கதில்
அமைந்தவை இரண்டு கல்லூரிகள், அவை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் குடந்தை
கல்லூரியுமாகும்.
1943-ம் ஆண்டில் அறிஞர்
அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற வந்திருந்த
காலை, அங்குள்ள விருந்தினர் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள்.
அப்பொழுது பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஆர்வமிக்க மாணவர்கள்
அண்ணா அவர்களைச் சூழ்ந்துகொண்டு, இரவு பகல் ஓயாமல் அடுக்கடுக்காக்
கேள்விமேல் கேள்வியாகப் பொழிந்து கொண்டேயிருந்தார்கள். அண்ணா அவர்கள்
அவற்றிற்கெல்லாம் பொறுமையுடன் விளக்கந் தந்தார்கள். நீதிக் கட்சி
பணக்காரர் - பட்டம் பதவியாளர் - கொள்கையற்றோர் - குணக்கேடர் - உலுத்தர்
- உல்லாசக்காரர் ஆகியோர் கையில் சிக்குண்டு இருப்பதைச் சுட்டி, அது
மக்கள் கைக்கு மாற்றப்பட்டால் மாணவர்களின் ஒத்துழைப்பு இயக்கத்திற்கு
நிரம்ப கிடைக்கும் என்ற கருத்தை மாணவர்கள் வலியுருத்திக் கூறினர்.
மாணவர்கள் தங்கள் படிப்புமுடிந்ததும் இயக்கப் பணியில், இறங்கித்
தமக்கு ஒத்துழைப்புத் தந்தால், நீதிக்கட்சியிலுள்ள வீணர்களை விலக்கிவிட்டு,
அதனை மக்கள் கட்சியாக ஆக்கிக் காட்ட தம்மால் இயலும் என்று அண்ணா
அவர்கள் கூறினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அளித்த ஊக்கத்தை அடிப்படையாகக்
கொண்டு மாணவர்கள் மிக்க ஆர்வங்கொண்டு பாடுபடத் தொடங்கினார்கள். அதன்
விளைவாக முதல் திராவிட மாணவர் மாநாடு 1944-ல் குடந்தையில் நடைபெற்றது.
1944 மே திங்களில்
அண்ணா அவர்கள் தலைமையில் ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சிக்கான
முதல் மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்தவுடன் மாணவர்கள் தமிழகத்தின்
பல பகுதிகளிலும் சென்று சொற்பொழிவாற்றிக் கொள்கை விளக்கம் செயயத்
தலைப்பட்டனர்.
பின்னர் 1944 ஆகஸ்டு திங்களில் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்,
அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றியதோடு,
நீதிக்கட்சியிலிருந்து வீணர்களையும் விரட்டியடித்துக் கட்சியை மககள்
கட்சியாக்கினார்கள். மாணவர்களுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை அண்ணா
அவர்கள் திறம்பட நிறைவேற்றிக் காட்டினார்கள்.
அறிஞர் அண்ணாவின்
சுட்டுவிரல் காட்டிய வழியில் செல்ல திராவிட மாணவர் குழாம் நாளுக்குநாள்
திரண்டு வரும் காட்சி கண்கூடாகும்!
(மன்றம், நாள்: 15.07.1954)
அண்ணாமலை
பல்கலைக்கழக மாணவர்களின் முதல் முயற்சியும் தோல்வியும்
1942, 1943-ம் ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திராவிட
இயக்கக் கருத்துடைய மாணவர்கள் மிகவாகப் புகாதிருந்த நிலை, அப்பொழுது
காங்கிரஸ் கருத்துடைய மாணவர்களும், கம்யூனிஸ்டுக் கருத்துடைய மாணவர்களும்
பல்வேறு துறை மாணவர் சங்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தோழர்கள் சு.இராமையா(அன்பழகன்)
இரெ.தண்டபாணி(இளம்வழுதி) இரா.நாராயணசாமி(நெடுஞ் செழியன்) மற்றம்
முப்பது மாணவர்கள் தாம் நீதிக்கட்சி (திராவிட இயக்க)க் கருத்துக்களில்
பற்றுக்கொண்டு திராவிட நாடு குடி அரசு இதழ்களை வாங்கிப் படித்துக்
கொள்கைகளைப் பரப்பி வந்தனர்.
1942-ல் அறிஞர் அண்ணா
அவர்களை வரவழைத்துப் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்று
இயக்க மாணவர்கள் ஆர்வங் கொண்டார்கள். அப்பொழுது பல்கலைக்கழகத் துணை
வேந்தராக இருந்தவர் நீதிக்கட்சிப் பற்றுடையவரான சர்.கே.பி.ரெட்டி
நாயுடு காரு ஆவார். தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் தோழர் கா.சுப்பிரமணியப்பிள்ளை
எம்.ஏ.எம்.எல்., இருவருடைய அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையின்பேரில்,
அறிஞர் அண்ணா அவர்களை வரவழைப்பதற்கான கடிதப் போக்குவரத்து நடத்தப்பட்டது.
அறிஞர் அண்ணா அவர்களும் வருகை தர இசைந்தார்கள். பின்னர் சர்.கே.வி.ரெட்டியிடம்
மாணவர்கள் அனுமதி கேட்கப் போயினர். அறிஞர் அண்ணா அவர்களுக்கு இடம்
அளித்தால், பார்ப்பனப் பேராசிரியர்களும் பிறரும், தம்மைக் குற்றஞ்சாட்டி
விடுவார்களோ என்று அஞ்சிய சர்.கே.வி.ரெட்டி நாயுடுகாரு அனுமதி தர
மறுத்துவிட்டார். தமிழ்ப் பேராசிரியர் சிபார்சின் பேரிலாவது அனுமதி
கிடைக்குமா என்று மாணவர்கள் முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.
ஏனெனில் அந்தக் காலத்தில்தான் தம்பு ராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சி
நாடெங்கும் ஓங்கிநிற்கிறது. பழம்பண்டிதர்களின் கண்டனக் கணைகள் அறிஞர்
அண்ணாவின் மீது போகுமிடத்திலெல்லாம் வீசப்படும் நேரம், அப்பொழுது
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும்,
பிற பழம்பண்டிதர்களும் அறிஞர் அண்ணாவுக்கு எவ்வகையிலும் அனுமதி அளிக்கக்கூடாது
என்று, பேராசிரியர் கா.சுப்பிரமணியப்பிள்ளை அவர்களிடம் வற்புறுத்திக்
கூறிவிட்டனர். பேராசிரியர் கா.சு.பிள்ளை அண்ணாவை வரவழைப்பதில் வெறுப்புக்
கொள்ளவில்லை என்றாலும், சுற்றுச் சூழ்நிலையின் காரணமாக, அனுமதியளிக்கவோ,
உதவியளிக்கவோ மறுத்துவிட்டார்.
குறிப்பிட்ட நாளில்
அண்ணா அவர்கள் சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தில்
பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அறிஞர் அண்ணா அவர்களைச் கொண்டு
எப்படியேனும் கூட்டம் நடத்திவிடவேண்டும் என்ற ஆர்வத்தால் கிளர்ந்தெழுந்த
மாணவர்கள் புலவர் நா.மு.மாணிக்கம் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில்,
கிதம்பரம் இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில், பொதுக்கூட்டம்
ஒன்றினை ஏற்பாடு செய்தனர். தோழர் க.அன்பழகன் மிக ஊக்கத்தோடு பணியாற்றினார்.
அண்ணா அவர்களும் ஆக்கூட்டத்தில் கலந்து கொள்ள இசைந்தார்.
கூட்டத்திற்குப் புலவர்
நா.மு.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா அவர்கள்
இளம் உள்ளம் என்னும் பொருள் பற்றி அழகியதோர் கருத்துமிக்க சீரிய
சொற்பொழிவாற்றினார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக
மாணவர்களின் முதல் முயற்சி தோல்வியுற்றது என்றாலும், மீண்டும் வருகிறேன்
என்று அண்ணா அவர்கள் அளித்த ஆறுதல் பொழியின் காரணமாக, மாணவர்களின்
உள்ளத்தே மூண்டெழுந்த கனல் அடங்காமல் சுடர்விட்டு எரிந்துகொண்டேயிருந்தது.
(மன்றம், நாள்: 15.10.1954)
சந்திரோதயம்
நாடத்தில் அண்ணா
அறிஞர் அண்ணா அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்ட பொழுதில், முதலில் சிறந்த
பேச்சாளராக, எழுத்தாளராகப் பெயர் பெற்றார். பின்புதான், அவர் ஒரு
சிறந்த நாடகாசிரியர் என்பதும், அத்துடன் நாடகங்களில் நடித்தபொழுது
அவருடைய நடிப்புத் திறமையும் வெளிப்பட்டது. முன்பு புறம்பானதாகக்
கருதப்பட்ட நாடகக்கலையில் அரசியல்காரர்களும், படித்தவர்களும் ஈடுபட்டு,
அரசியலுக்கு நாடகத் துறையை சிறந்ததொரு பக்கத்துணையாக ஆக்கிய பெருமை
அண்ணாவைச் சாரும்.
அறிஞர் அண்ணா முதலில்
எழுதி, நடித்த நாடகம் சந்திரோதயம் ஆகும். அதில் முக்கிய பாகமான துரைராஜ்
வேடத்தை அண்ணா அவர்கள் ஏற்று நடித்தார்கள். மற்றும் அதில் நடித்தோரில்
பலர், அண்ணாவுக்குத் தெரிந்த நண்பர்கள், திராவிட நாடு அலுவலகத்தில்
பணியாற்றியவர்கள். அதற்கு முன் நடித்துப் பழக்கமில்லாதவர்கள் ஆவார்கள்.
அவர்கள் எல்லோரையும் வைத்து, அண்ணாவின் சந்திரோதயம் வெற்றிகரமாக
நடந்தேறியதுடன், கட்சிக்கொள்கைகளை நாடக அளவில் பரப்புவதற்கு வழிகாட்டியாக
இருந்தது. சந்திரோதயத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தது,
அண்ணாவின் எழுத்தும் நடிப்பும்தான்.
1943 இறுதியில் சிதம்பரம்ததில்
அண்ணாவின் சந்திரோதயம் நடைபெற்றது. அண்ணா துரைராஜாக நடித்தார்.
நாடகத்தில் வரும்
துரைராஜ், கடைசியில் விஷத்தைக் குடித்து இறக்கும் கட்டம் வந்தது.
துரைராஜ் விஷக்கோப்பையைக் கையிலெடுத்து அருந்தப் போனான்.
திடீரென்று நிறுத்துங்கள்
என்று கூச்சல் வந்தது. எங்கிருந்து என்று பார்த்தால், நாடக மேடையிலிருந்தல்ல.
கீழிருந்து, நாடகத்திற்கு தலைமை வகித்தவர் எழுந்து நின்று அவ்வாறு
சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நாடகம் அப்படியே தடைபட்டது.
துரைராஜ் விஷக் கோப்பையைக் கையில் பிடித்தபடி இருந்தார். தலைமை வகிப்பவர்
மேடைமீது ஏறினார். இது கூடாது. அண்ணா அவர்கள் விஷங் குடிப்பது கூடாது,
அவர் ஏன் செத்துப்போக வேண்டும்? அவர் இஷ்டப்பட்டால், இது போல ஜமீன்தாராக
இருக்க முடியாமல், போய்விடாது. அண்ணா விஷங் குடிப்பதை நான் பார்த்துக்
கொண்டிருக்க முடியாது! என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். மற்றவர்கள்
அவரைச் சமாதானப் படுத்தி உட்கார வைத்தார்கள். அந்த அளவு அண்ணாவின்
சோகப் பேச்சும் நடிப்பும் அதில் இருந்தது.
(மன்றம், நாள்: 15.11.1954)
மறுமலர்ச்சி
- ஆனால் வெற்றி!
1942-ல் சர்.கே.வி.ரெட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக
இருந்த காலத்தில், அறிஞர் அண்ணா அவர்களை வரவழைக்க முயற்சி எடுத்து,
அந்த முயற்சி தோல்வியுறவே, திராவிட இயக்க மாணவர்கள் வேறொரு வாய்ப்பை
எதிர்பார்த்திருந்தனர்.
சர்.கே.வி.ரெட்டி
இயற்கை எய்திய பிறகு தோழர் எம்.இரெத்தினசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
துணைவேந்தராக வந்தார். அப்பொழுது தமிழ்த் துறைப் பேராசிரியராகத்
தோழர் கா.சு.பிள்ளை அவர்கள் இருந்தார்கள். தோழர் க.அன்பழகன் தமிழ்
இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்தார். திராவிட இயக்க மாணவர்களின்
ஒத்துழைப்பின் பேரில் தோழர் க.அன்பழகன் அவர்கள் விடா முயற்சிசெய்து
அறிஞர் அண்ணா அவர்களை வரவழைப்பதற்கான அனுமதியைத் துணைவேந்தரிடம்
பெற்றார். அறிஞர் அண்ணா அவர்களின் வருகை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
மட்டுமல்லாமல், மாணவ உலகிடையே புதியதொரு வரலாற்றை ஏற்படுத்துவதாகவும்,
மாணவ இயக்க வளர்ச்சிக்கு ஊட்டம் ஊட்டுவதாகவும் இருந்தது.
தமிழ்ப் பேரவை, தமிழ்
இலக்கியக் கழகம் ஆகிய இரண்டின் சார்பாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்குப் பேராசிரியர் கா.சு.பிள்ளை
அவர்கள் தலைமை தாங்கி அறிஞர் அண்ணாவைப் பற்றி அரிய பாராட்டுரை ஒன்று
வழங்கினார். மாணவ உண்ணங்களெல்லாம் அடைய முடியாதவொன்றை அடைந்துவிட்டதைப்
போல் பெருமித உணர்ச்சியோடு களிகொள்ள, அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றோரம்
என்னும் பொருள் பற்றி அழகுபட, ஆர்வம் மிக, நகைமிளிர, நயம் சிறக்க,
பொல் இனிக்க, பொருள் பொதிய அருவியின் வீழ்ச்சியென அரிய சொற்பொழிவு
ஆற்றினார்கள்.
அறிஞர் அண்ணா அவர்களின்
தமிழ்ப் பேச்சின் அருமையைக் கேட்டறிந்த செவிகள், அதைவிட மேலாக விளங்கிய
அவரது ஆங்கிலப் பேச்சின் அருமையையும் கேட்டறியும் வாய்ப்பினையும்
பெற்றன. துணைவேந்தர் தோழர் எம்.இரெத்தினசாமி அவர்கள் தலைமையின் பழைய
உலகமும் புதிய உலகமும்(கூந றடிசட டீடன யனே சூநற) என்னும் பொருள்
பற்றி அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள். இந்த இரண்டுபேச்சும், அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த செயல் மாணவர்கள்
சிலர்க்கு, அறிஞர் அண்ணாவைச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் வழிகட்டியாகவும்
கொள்ளும்படி ஊக்கமளித்தன என்றால் மிகையாகாது.
அந்தத் தடவை அண்ணா
அவர்கள் விருந்தினர் விடுதியில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து
தங்கினார்கள். அப்பொழுதான் தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல் அறிஞர்
அண்ணாவைச் சுற்றிக்கொண்டு மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதும்,
அண்ணா அவர்கள் விடையிருத்ததும், மாணவர்களை மாணவநிலைக்குப் பிறகு
பொதுப்பணிக்கு அழைத்ததும், மாணவர்கள் இசைந்ததும் ஆகும்.
(மன்றம், நாள்: 01.12.1954)
அரண்மனையில்
வாழ்ந்த கட்சி ஆலமரத்தடிக்கு வந்தது
1944-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்ததைச் சேர்ந்த திருவாரூரில் நடைபெற்ற
நீதிக்கட்சி(தென்னிந்திய நலவுரிமைச் சங்க) மாநாட்டில் பெரியார் ஈ.வெ.இராமசாமி
அவர்கள் கட்சியின் தலைவராகவும், அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின்
பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரியார் அவர்கள்
தலைமையின் கீழ் நீதிக்கட்சி வந்த காலத்திலிருந்தே, அதாவது 1938-லிருந்தே,
பெரியார் இராமசாமியும், அறிஞர் அண்ணாவும் அரசியல் கருத்துக்களோடு
பொருளாதார-சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் நாட்டில் பரப்பலாயினர்.
சுருங்கக் கூறின் மாளிகையிலே மட்டும் உலாவிவந்த கட்சியை மரத்தடிக்கு
கொண்டுவர விரும்பினர்.
பொருளாதார-சமூகச்
சீர்திருத்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பிற்போக்கு
வாதிகளாய் விளங்கிய நீதிக்கட்சியைச் சார்ந்த சில பழைய பிரபுக்களும்,
பணக்காரர்களும், பட்டதாரிகளும் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியைப்
பெரியாரிடத்திலிருந்து பிடுக்கிவிடவேண்டும் என்று எண்ணினர் அதற்கான
முயற்சிகளையும் செய்தனர்.
1944-ம் ஆண்டில் சேலத்தில்
நீதிக்கட்சி மாநாடு கூட்ட ஏற்பாடு ஆயிற்று. அந்த மாநாட்டில் பெரியார்
அவர்களின் தலைமையை மாற்றி, அந்தப் பதவிக்குக் காலஞ்சென்ற சர்.ஆர்.கே.சண்மும்
அவர்களையாவது அல்லது வேறு எந்தப் பரிவுவையாவது கொண்டுவர சில பிரபுக்களும்,
பிரபுக்களை அண்டினோரும் ஆதரவு தேடும் படலத்தைத் துவக்கினர். பிரபுக்களின்
போக்கு பெரியாருக்குக் கலக்கத்தையும், வேதனையையும் தந்தது. நீதிக்கட்சியை
விட்டு விட்டு சுயமரியாதை இயக்கத்திலேயே தம் கவனத்தை செலுத்தலாமா
என்றுகூட பெரியார் அவர்கள் எண்ணினார்கள். அந்த நேரத்தில் அறிஞர்
அணணா அவர்கள் நீதிக்கட்சியிலிருந்து பதவி வேட்டைக்காரர்களை நாம்
விரட்டவேண்டுமேயொழிய நாம் நீதிக்கட்சியைவிட்டு விலகக் கூடாது என்ற
கருத்தை வலியுறுத்தினார்கள். அரண்மனையிலிருந்த கட்சியை ஆலமரத்தடிக்குக்
கொண்டு வரவே அறிஞர் அண்ணா அவர்கள் அரும்பாடுபட்டார்கள். அதற்கான
முறையில் முயன்றார்கள்.
தென்னிந்திய நலவுரிமைச்
சங்கம் என்ற கட்சியின் பெயரை திராவிடக் கழகம் என்று மாற்றியமைக்கும்
தீர்மானத்தையும், அரசாங்கம் தந்துள்ள கவுரவப் பட்டங்களையும், பதவிகளையும்,
கழக உறுப்பினர்கள் துறந்துவிடவேண்டும் என்றும், அப்படித் துறக்க
வில்லையானால் அத்தகையோர் கழக உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள் என்றம்
கருத்தமைந்த தீர்மானத்தையும் 1944-ம் ஆண்டில் சேலத்தில் நடந்த நீதிக்கட்சியின்
மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
பட்டம்-பதவி வேட்டைக்காரர்கள் கட்சியை விட்டு ஓடினர்; கட்சி பாட்டாளி
மக்களின் கைக்கு வந்துசேர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் குறிக்கோள்
வெற்றிகரமாக ஈடேறியது.
(மன்றம், நாள்: 15.12.1954)
|