அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 12

அண்ணாவும் பத்திரிகை தொடர்பும்

கல்லூரியில் படிக்கும்போதே அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பத்திரிகைகளில் கதைகள் எழுதவேண்டும் என்பதில் ஊக்கமும், ஆவலும் மிகுதியும் உண்டு. அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில், ஆனந்த விகடன், ஆனந்தபோதினி ஆகிய பத்திரிகைகளில் சில கதைகள் எழுதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

1935-ல் அறிஞர் அண்ணா காலஞ்சென்ற தோழர் பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து, அவருக்குத் துணையாக நின்று, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது பாலபாரதி என்ற வாரப் பத்திரிகைக்கு அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்து, தொழிலாளர் நலம் பேணிக் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தப் பத்திரிகை சில திங்கள்கள் நடைபெற்றுப் பிறகு நின்றுவிட்டது.

பிறகு 1936-ல் அப்பொழுது செங்குந்தமித்திரன் ஆச்சக்த்தின் நிர்வாகியாக இருந்த காஞ்சி மணிமொழியார் அவர்களோடு கூட்டாகச் சேர்ந்து நவயுகம் என்ற சிறந்த அறிவு விளக்க வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்திவந்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாகச் சில திங்கள்களுக்குப் பிறகு அது வெளிவரவில்லை. பின்னர் இந்தி எதிர்ப்புக் காலத்தில் 1938-ம் ஆண்டு வாக்கில் விடுதலை நிலையத்தில் ஆசிரியர் பொறுப்பேற்று அதில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் அரும்பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துவன்மையைத் தமிழகத்திலுள்ள அனைவரும் அறிந்துகொள்ள அப்பொழுதுதான் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டது.

விடுதலையை விட்டு நீங்கிய பிறகு 1942-ம் ஆண்டில், பாஞ்சிபுரத்திலிருந்து, சொந்தப் பொறுப்பில் திராவிட நாடு வார இதழைக் கொண்டு வந்தார். திராவிட நாடு மாணவர்களையும், தமிழறிந்தவர்களையும் தமிழார்வங்கொண்டோரையும் பெரும் வகையில் இயக்கத்தில் கொண்டு வந்து சேர்த்ததோடு, நீதிக் கட்சியின் சீமான்கள், புராணப் பண்டிதர்கள், கதா காலட்சேபக்காரார்கள், பணக்காரர்கள், அரசியல் சூதாடிகள் ஆகியோரை விரட்டியடிக்கவும் ஆரம்பித்தன. அது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியுற்றுச் சிறப்புற்றோங்கி நடந்தேறி வருவதாயிற்று.

1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியபோது அதற்குப் பக்கத்துணையாக இருக்க வேண்டி தோழர் டி.எம்.பார்த்தசாரதி. அவர்கள் முயற்சியில் அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாலைமணி நாள் கருத்திதழ் வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஊட்டம் பெறுவதற்கு அது பேருதவியாக நின்று நிலவியது. பொருளாதாரத் தட்டுப்பாட்டால் ஓராண்டு காலத்திற்குள் அது நிற்கும்படி ஏற்பட்டுவிட்டது.

கழகத்தின் முழுப் பொறுப்பிலே நாளிதழ் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று விடாமுயற்சியின் விளைவாக 1953 ஜுன் 15-ம் நாளிலிருந்து நம் நாடு அறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. நம் நாடு சிறந்த முழுத்திறம் படைத்த நாளிதழாக வெளிவரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு அதற்கான நடவடிக்கைகளில் முயற்சி செலுத்தி வருகிறார். ஓர் ஆங்கில வார இதழைத் துவக்குவதற்காக முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளார். அறிஞர் அண்ணாவின் எழுத்து, பத்திரிகையுலகிலே இற்றை நாளில் நல்லதொரு புரட்சியை உண்டாக்கிவிட்டது; மாணவர் உலகை அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையாகாது.
(மன்றம், நாள்: 01-03-1954)

ராயுடன் சில நாட்கள்

அரசியல் பேரறிஞர் எம்.என்.ராய் அவர்களுடன் நெருங்கிப் பழகும் பேற்றையும், அவருடன் சில நாட்கள் உடன் உறையும் வாய்ப்பினையும் அறிஞர் அண்ணா அவர்கள் பெற்றிருந்திருக்கிறார்கள்.

அறிஞர் ராயின் அழைப்பின் பேரில், பெரியார் ராமசாமியோடு அறிஞர் அண்ணா அவர்கள், வடநாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் ஈடுபட்டுச் சில முக்கியமான நகரங்களில் சொற்பொழிவாற்றினார்கள். அப்பொழுது டேராடூனில் அறிஞர் ராயின் விருந்தினராக இருக்கம் வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கு ஏற்பட்டது. எம்.என்.ராயும் அவரது துணைவியார் எலென் ராயும் மகிழ்ச்சியோடு வரவேற்றார், அறிஞர் அண்ணாவோடும் பெரியாரோடும் பேசி மகிழ்ந்தார்களாம். அண்ணாவுக்கு அடிக்கடி டீ சாப்பிடுவதில் மிக்க விருப்பம் என்பதைத் தெரிந்துகொண்டார் எலென். எம்.என்.ராய் சொல்லுவதைக் குறிப்பதும், மடல்களுக்கு விடயிறுப்பதும், டைப் அடிப்பதும் ஆன செய்லகளை ராய்க்கு உதவியாக எலென்ராய் அவர்கள் செய்வார்களாம். சமையல் செய்யும்போது இருவரும் சேர்ந்தே செய்வார்களாம். ராய் அவர்களின் எளிய வாழ்வும், சலிப்படையாமல் பேசும் பண்பும், ஆழ்ந்த அறிவு.ம், அன்புச் சொல்லும் அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளைகொண்டுவிட்டனாவாம். எம்.என்.ராய் அவர்கள் கோவைக் கூட்டத்தில் பேசும் போது, கூட்டத்தில் எதிர்ப்புக் கூச்சலும், கலகமும் ஏற்பட, அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து பேசிக் கூச்சலையும், கலகத்தையும் அடக்கியதோடு, ராய் அவர்கள் தொடர்ந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்களாம்.

தம்முடைய கருத்துப் பரவுதலுக்கேற்ற பக்குவம் தென்னாட்டில் இருப்பதால், தம்முடைய பிற்காலத்தைத் தென்னாடடிலேயே கழிக்க விரும்புவதாகக்கூட ஒரு முறை அண்ணாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ராய் அவர்கள் குறிப்பிட்டாராம்.
(மன்றம், நாள் 15-03-1954)

வெற்றிலைப் பாக்கும் மாணவப் பருவமும்

அறிஞர் அண்ணா அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், இடைநிலை வகுப்பில் பயின்றுகொண்டு இருக்கும்போது, இப்பொழுது பச்சையப்பன் கல்லூரித் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அண்ணா அவர்களின் வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் பாடத்தைக் கிருஷ்ணமூர்த்தி அய்யர்தான் கற்பித்து வந்தாராம். இடைநிலை வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே, வெற்றிலைப் பாக்கு ஓயாமல் போடுவது அண்ணாவின் பழக்கம். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி அய்யர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அண்ணா அவர்கள் வெற்றிலைப்பாக்குப் போட்டு மென்றுகொண்டிருந்தாராம். அண்ணா அவர்கள் ஏதோ மென்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட பேராசிரியர், வாயில் என்ன மென்று கொண்டிருக்கிறார்? என்று ஆங்கிலத்தில் கேட்டாராம்.

அதற்கு அண்ணா அவர்கள் வெற்றிலைப்பாக்கு என்ற தமிழில் பதில் கூறினாராம்.

வெளியில் போய் அதைத் துப்பிவிட்டு வா என்றாராம் ஆசிரியர்.

துப்பமாட்டேன் என்றாராம் அண்ணா.

ஏன் துப்பமாட்டாய்?

இனிமேல் வேண்டுமானால் போடவில்லை, இப்பொழுது துப்பமாட்டேன். ஏனென்றால், இது காசு கொடுத்து வாங்கியது

நீ இப்பொழுது போய்த் துப்பிவிட்டு வராவிட்டால் உன்னை மூன்று நாட்களுக்கு என் வகுப்பில் நுழையக் கூடாத தடை விதிப்பேன் என்றாராம் பேராசிரியர்.

வெளியே வேண்டுமானாலும் போய்விடுகிறேன். ஆனால் வாயில் போட்டிருப்பதை மட்டும் துப்பமாட்டேன் என்று வறினாராம் அண்ணா.

அப்படியானால் வெளியே போய்விடு. மூன்று நாளைக்கு வகுபில் நுழையக்கூடாது என்று கட்டளையிட்டாராம் பேராசிரியர்.

அண்ணா அவர்கள் எழுந்து விறுவிறு என்று வெளியே வந்துவிட்டாராம்.

அதற்குப்பிறகு அண்ணா அவர்கள், வகுப்பில் வெற்றிலைப் பாக்க போடுவதில்லையாம். அந்த அளவுக்கு அடங்கி நடக்க இசைந்தவர், அன்று துப்ப மறுத்ததற்குக் காரணம், போட்டுவிட்டதைத் துப்புவதில் யாருக்கும் பயனில்லை என்பதினாலேயேயாகும் என்று கூறினாராம்.

பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்க அண்ணா அவர்கள் ஒவ்வொன்றுக்கும் தமிழிலேயே பதிலிறுத்தாராம், வேண்டுமென்று!
(மன்றம் - 01.04.1954)

அண்ணாவும் தொழிற்சங்கமும்

அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளில்தான் முதலில் ஈடுபட்டார். தொழிலாளர்களின் நிலை உயரவேண்டும். அவர்களிடையே ஒற்றுமை நிலவவேண்டும், தொழிற்சங்கம் வலுப்பெறவேண்டும் என்பதிலே தணியா ஆர்வங்கொண்டு 1934, 1935, 1936 ஆண்டுகளில் பாடுபட்டார்.

அறிஞர் அண்ணாவைத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முக்கிய காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற தோழர் பாசுதேவ் ஆவார்கள். அண்ணா அவர்களின் வீட்டார், அண்ணாவை ஏதேனும் ஒரு அரசாங்க வேலையில் அமர்த்தவேண்டும் என்பதிலே ஆர்வங்காட்ட, அண்ணாவோ அரசியல் நடவடிக்கைகளிலேயே ஆர்வங்காட்டிவந்தார். தோழர்கள் பாசுதேவ், ஆர்பர்ட் ஜேசுதாசன் ஆகியர்களோடு சேர்ந்து தொழிற்சங்க பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக அந்த நாட்களில், காங்கிரசிலே இருந்த தோழர் என்.வி.நடராசனுக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு உண்டு; ஆனால் அரசியலில் இருவரும் எதிர் எதிர் கட்சியினர்.

தோழர் ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில், லஷ்மணபுரியில் நடைபெற்ற இற்திய தொழிற்சங்க காங்கிரஸ் மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் தோழர் ஆர்பர்ட் ஜேசுதாசன் போன்றவர்களோடு, பிரதிநிதியாகச் சென்றிருந்தாராம். சென்னைத் தலைவர்கள், மாநாட்டில் அண்ணாவுக்கு உரிய இடம் அணிக்காமல், தங்கள் பின்னால் ஒடிவரக்கூடிய ஆட்டுக்குட்டி போல நடத்தினார்களாம். மாநாட்டுத் தலைவர்களிடம் அண்ணாவை அறிமுகம் செய்து வைப்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லையாம். மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மானத்தின்மீது சிறிது நேரம் பேசவேண்டிய வாய்ப்பு கிடைத்ததாம். மாநாட்டினர் அண்ணா அவர்களின் பேச்சில் ஒன்றித் திளைத்து, மகிழ்ந்து, தணியாப் பற்றுக்கொண்டுவிட்டனராம். பிறகு மாநாடு முடியும் வரையில் தலைவர்கள் அண்ணாவைக் கண்டு பேசவிரும்புவதும், தொண்டர்கள் அண்ணாவின் பின் ஓடுவதும் ஆன காட்சிகள், மற்ற சென்னைத் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் மறக்கடித்து விட்டனவாம். மாநாட்டின் விஷயாலோசனைக் குழுக்கூட்டத்தில் அண்ணா அவர்களின் கூற்றுக்கு நல்ல மதிப்பும், செல்வாக்கும் இருந்தனவாம். அந்த மாநாட்டில்தான் அண்ணா அவர்கள் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிற்சங்க காங்கிரசில் ஈடுபட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களை நேரடி அரசியல் கட்சியில் ஈடுபடும்படி செய்தவர், தோழர் சண்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் ஆவர்கள்.
(மன்றம் 01-05-1954)

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai