அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 11

அந்தக் காலக்கட்டத்தில் நீதிக் கட்சியின் தொண்டராக சிறந்த பேச்சாளராக விளங்கிய அண்ணா அவர்கள்:

நீதிக் கட்சியாகிய திராவிட இயக்கத்தின் விடிவெள்ளிபோலத் தோன்றி - வலுவிழந்த திராவிட இயக்கத்திற்கு தனது ஆற்றல் மிக்க அடுக்கு மொழிப் பேச்சாலும், அழகு சிந்தும் கருத்து மிக்க எழத்தாலும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சென்னை மாநில காங்கிரஸ் ஆட்சியில் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்த - மூதறிஞர் ராஜாஜி அவர்களால் கட்டாய இந்தி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்மான இயக்கத் தந்தை பெரியார் அவர்கள் - எதிர்த்து போராடினார். ஆயிரக் கணக்கானவர் சிறை சென்றனர். தாய்மார்கள் கைக் குழந்தைகளுடன் சிறை சென்றனர்.
தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று அந்தப் போராட்டத்திலே சிறை சென்று மீண்ட அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தில் புதிய வரலாற்றை உருவாக்கினார்.

தந்தை பெரியாரின் குடியரசுப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்த விடுதலை நாளிதழில் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அண்ணா அவர்கள எழுதிய தலையங்கங்கள மாற்றுக் கட்சியாளர்களை மருள வைத்தது. அண்ணாவின் மேடைப் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காங்கிரஸ் இயக்கத்தவர் கதி கலங்கினர்.

அதுவரை எவரும் எடுத்துச் சொல்லாத வகையில் உலக வரலாறுகளை எல்லாம் எடுத்துக்காட்டி, அனைத்துலகிலும் என் தலைவர் பெரியாருக்கு நிகர் யார், எனக் கேட்டு அடுக்கு மொழிப் போச்சால் மக்களைக் காந்தம் போல் இழுத்த அண்ணாவின் பேச்சுக்களை இன்று நினைத்துப் பார்த்தால் கூட உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.

சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், நீதிக் கட்சியை, திராவிடர் கழகமாக மாற்றியமைக்கவும், வெள்ளையர் காலத்தில் பெற்ற - சர்.ராவ்பகதூர் - திவான்பகதூர் பட்டங்களைத் துறக்க வேண்டுமென்றும் அண்ணா கொண்டு வந்த புரட்சிகரமான தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்ணாவின் புகழ் ஓங்கியது.

பல்கலைக் கழகங்கள், கலைக் கல்லூரிகள் - அண்ணாவின் பேச்சுக்களுக்கு செவி சாய்த்தன. மாணவ மணிகள் அணி திரண்டனர் - குறிப்பாக - சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், குடந்தை அரசினர் கலைக் கல்லூரி போன்ற இடங்களில், மாணவர் பட்டாளம் திரண்டு வந்தது.

குடந்தையில் முதலாவது திராவிட மாணவர் மாநாடு 1944 பிப்ரவரி 19-ல் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் நான் - மாணர்வகள் மத்தியில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த நடிகமணி என்று அண்ணாவின் திருவாயால் அறிமுகப்படுத்தப்பட்டேன். அண்ணாவின் பேச்சால் எழுத்தால் செயல் ஆற்றலால் - மாணவ மணிகள் ஈர்க்கப்பட்டதைப் போல், கலை உலகில் இருந்தவர்களும் ஈர்க்கப்பட்டார்கள்.

அக்கலை உலகினின்று ஓர் தொண்டனாக அண்ணாவை நாடி வந்தவன் நான். 1940-ம் வருடத் துவக்கத்தில், புகழ் பெற்ற அவ்வை திரு.டி.கே.சண்முகம் சகோதரர்களின் - நாடக சபை ஈரோட்டில் நல்ல நாடகங்களை நடத்தி வந்தது. அதிலே பால நடிகனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு தந்தை பெரியாரிடத்திலும், பேரறிஞர் அண்ணாவிடத்திலும் பழகிடும் வாய்ப்புக் கிடைத்தது. திராவிட இயக்கப் பகுத்தறிபுக் கொள்கைப் பற்றுக் கொண்ட என்னை பெரியவர் சங்கரையா அண்ணாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அந்த நாள் முதல் எனது கொள்கைப் பற்றோடு, அண்ணா பற்றும் சேர்ந்து கொண்டது. அண்ணாவோடு நேசம் கொண்டேன்.

அண்ணாவின் பேச்சுக்களில், எழுத்துக்ளில் மலர்ந்த கலை மணமானது நாடக உலகிலிருந்த எம் போன்றோரை அண்ணாவோடு தோழமை கொள்ளச் செய்தது. புராண நாடகங்கள் சமுதாய நாடகங்கள் எனப் பாகுபாடின்றி, டி.கே.எஸ். நாடக சபையின் நாடகங்களை - தந்தை பெரியாருடன் அண்ணா அவர்கள் நாள்கோறும் கண்டு களித்தார். டி.கே.எஸ். நாடகக் குழுவில் நடைபெற்ற சிறந்த சமுதாய சீர்திருத்த நாடகம் - குமாஸ்தாவின் பெண். அந்த நாடகம் அண்ணா அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. விடுதலைப் பத்திரிகையில், நாடகத்தையும் நடிகர்களையும் பாராட்டி, சிறந்த தித்திக்கும் விமர்சனமொன்றை எழதினார். இதனால் அண்ணாவின் பெருமையை நாடகக் குழுவில் இருந்த அனைவரும் தெரிந்துகொண்டனர்.

நாள்தோறும் அண்ணாவை சந்தித்து அறிவுரைகளைக் கேட்பது எனது கடமையாகவிருந்தது. அத்தோடு இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட நாடகங்கள் எழுத வேண்டும் அதன் மூலம் நம் கொள்கை மக்களிடம் பரவும் என, அன்பு வேண்டுகோளை அவர் முன் வைப்பேன். இதனை அண்ணாவின் பேருள்ளம் ஏற்றுக் கொண்டது. இயல்பாகவே அண்ணாவிடம் படிந்திருந்த கலை ஆற்றல் சந்திரோதயம் நாடகமாக வடிவம் பெற்றது. ஆம், சந்திரோதயம் எனும் சமுதாயப் புரட்சி நாடகத்த அண்ணா எழுதினார். காஞ்சி திராவிட நடிகர் கழகத்தைத் தோற்றுவித்தார். தானே முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்து வியப்பை ஏற்படுத்தினார், எனது கலை உலக ஆசான், அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் அண்ணாத்துரை நம்மை எல்லாம் மிஞ்சிவிட்டார், எங்களால் கூட இப்படி லாவகமாக நடிக்க முடியாது என்று புகழ்ந்தார்.
தந்தை பெரியார் என்னுடைய ஆயிரம் கூட்டமும் சரி அண்ணாத்துரையின் ஓரு நாடகமும் சரி என்ற வாழ்த்திப் பேசினார்கள். முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழுமதியைப் போல் அண்ணாவின் நாடகப் பணி ஒளிப் பெற்றது.

1944 பிப்ரவரி 25-ந் தேதி சென்னையில் வி.பி.மஹாலில், நகைச்சுவை மன்னர் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், சந்திரோதயம் நாடகம் நடைபெற்றது. டி.கே.எஸ். நாடகக் குழுவில் இருந்து, கொள்கை காரணமாக விலகி வந்த நான், அண்ணாவோடு, சீர்திருத்த வாலிபன் வேடத்தில் நடிக்கம் பேறு பெற்றேன். கலைவாணரின் பாராட்டும், பெரியாரின் வாழ்த்தும் கிடைத்தது.

கலைவாணரின் நட்பும் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆரின் வருகையும், புரட்சித் தலைவர் - எம்.ஜி.ஆர் அவர்களின் நேசமும், இலட்சிய நடிகர் - எஸ்.எஸ்.ஆரின் உத்வேகமும், என் போன்றவரின் தொண்டும் தளபதி அண்ணா அவர்களுக்கு படைக் கலன்களாக அமைந்தன.
சந்திரோதயம் நாடகத்தை அடுத்து, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, காதல் ஜோதி என மொத்தம் ஆறு நாடகங்கள் எழுதி தானே மூன்று நாடகங்களில் நடித்து மகத்தான சாதனையை படைத்திட்டார்.

அண்ணாவின் கலை உலகச் சாதனைகள் நாடகத்துறையில் மட்டுமின்றி திரை உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. கழகம் வளர்ந்தது கலை உலகத் தொடர்பால்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபை மூலம் ஓர் இரவு, அவலைக்காரி ஆகிய நாடகங்கள் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டு மாதக்கணக்கில் நடைபெற்றன - மக்கள் போற்றினர். அறிஞர்கள் வாழ்த்தினர்.

இயக்க மாநாடுகளில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. இளைஞர்கள் வெள்ளம் போல் திரண்டெழுந்து - அண்ணாவின் பாதைக்கு வந்தார்கள்.

கே.ஆர்.ஆர், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றங்கள் மூலம், கழகக் கொள்கைகள் பரப்பப்பட்டன - குறிப்பாகவும் சிறப்பாகவுன் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரை உலகத்தில் கதிரவனைப் போல் விளங்கி திராவிட இயக்கத்தின் அண்ணாவின் கொள்கைகளை பாடல்கள் மூலமாகவும் காட்சிகள் வடிவிலும், கலை நயத்தோடு கையாண்டு வெற்றி கண்டார்.

பட்டி தொட்டியெலாம் கொள்கைகள் பரவின, கலைவாணர் வழியில் - கே.ஆர்.ஆர்., எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அண்ணாவிற்குத் துணை நின்று - நாடக - திரைப்படத்துறைகளில் இலட்சியத் தொண்டாற்றினார்கள்.
(நடிகமணி. டி.வி.நாராயணசாமி)

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai