அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 10

தந்தை பெரியாருடன் அண்ணா வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரியாரின் தமிழ் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்பதே அண்ணாவின் வேலை. லக்னோ பல்கலைக் கழகத்தில் பெரியார் உரையாற்ற அண்ணா அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அங்கிருந்த மாணவர்கள் அண்ணாவைச் சற்று நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கேட்க, அண்ணா திரும்பி தந்தை பெரியாரிடம் தமிழில் அதை மொழிபெயர்த்து அனுமதி கேட்க, ஐயா அவர்கள் நான் என் தலைவரின் பேச்சை மொழிபெயர்க்க வந்திருக்கிறேன், பேச இயலாது என்று ஆங்கிலத்தில் அவர்களிடம் சொல் என்று சொல்ல, அண்ணாவும் அதை அப்படியே மாணவர்களிடம் மொழிபெயர்த்துக் சொன்னாராம்.

காங்சீபுரத்தில் அண்ணாவின் வீடு இருந்த தெருவுக்குப் பெயர் வரகுவாசல் தெரு. இதற்கு வடக்கே இருப்பது நிமந்தக்காரத் தெரு. இங்கு தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பாவுக்கு சொந்தமான ஒரு சிறு வீட்டில் 1942 மார்ச்சு 8-ம் தேதி திராவிடநாடு ஏடு தொடங்கப்பட்டது. தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பர் பெரிய செல்வந்தார். அண்ணாவின் பள்ளித்தோழரும், எல்லோரும் அறிந்தவருமான தோழர்.சி.வி.இராசகோபால் அவர்களுக்கு உறவினருமாவார்.

திருச்சி மாவட்டம் கரூரில் விபூதியணிந்த சாமியாராக இருந்தவர். ஈழத்து சிவானந்த அடிகள், கரூரில் சிவானந்த ஆசிரம் ஒன்று வைத்திருந்தார். இந்தி எதிர்த்து முதல் குரல் கொடுத்ததோடு சிறைக்கும் சென்றார். சிறையில் இருந்த அண்ணாவுடன் தொடர்பு எற்பட்டது. சிறைவாசம் முடிந்ததும் காஞ்சிக்கே வந்துவிட்டார். கரூரில் இருந்த தன் ஆசிரமத்தைக் கலைத்துவிட்டார். காவியாடையை உதறித்தள்ளிவிட்டு வெள்ளாடை அனிந்தார். சிவானந்தத்தைவிட்டு ஈழத்து அடிகளானார். ஈழத்து அடிகள் அண்ணா திராவிட நாடு இதற் தெடங்கியதும் அதில் மேலாளர் ஆனார்.

1942-ல் நான் சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சி - சுயமரியாதைச் சங்கம் ஆகிய இரண்டிற்கும் செலாளராக இருந்தேன். திருவொற்றியூர் சண்முகம் இரண்டுக்கும் தலைவராக இருந்தார். அப்போது கூட்டங்கள் நடத்துவதற்கும், வேறு விளம்பரச் செலவுகளுக்கும் இந்நாளில் கிடைப்பது போன்று ஏழை நடுத்தர மக்களிடமிருந்து நிதி கிடைக்காது. ஒரு சில பணக்காரர்கள்தான் அதற்காகும் தொகையை மான்யமாக வழங்கி வருவார்கள். அவர்கள் ஆதிக்கம் தான் கட்சியில் மேலோங்கி நிற்கும்.

திருவொற்றியூர் சண்முகம் மிகுந்தவசதி படைத்தவர். அவர்தான் கட்சிப் பிரச்சாரச் செலவுகள் அனைத்திற்கும் பணம் தருவார்.

1945-ல் இந்திய சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது - இப்போதைய பார்லிமெண்ட் தேர்தலைப் போன்றது அது. அத் தேர்தலுக்கு ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து யாரும் போட்டியிடக் கூடாதென பெரியார் அறிக்கை விடுத்திருந்தார். சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் சுயேச்சையாக நின்றார். எந்த சுயேச்சையையும் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதரித்து வேலைசெய்யக் கூடாதென கடுமையாக எச்சரித்தார் பெரியார்.

பெரியாரின் அறிக்கையை மீறி ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த - திருவொற்றியூர் சண்முகத்திற்கு மிக நெருங்கிய நண்பரான, பத்மனாபன் என்பவர் பாலசுப்பிரமணியத்தை ஆதரித்து வேலை செய்தார். தேர்தல் முடிவடைந்தது. பாலசுப்பிரமணியம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற அம்முசாமிநாதன் என்பார் வெற்றிபெற்றார்.

சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் குழு தேர்தல் முடிந்த அன்று மாலையே கூடியது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் வேலை செய்தவர்களை கட்சியைவிட்டு நீக்கவேண்டும் என விவாதித்தது! நான் அவர்கள் மன்னிப்புக் கடிதம் தந்தால் மன்னிக்கலாம் என்றேன். சண்முகத்தின் நண்பர் பத்மனாபன் மன்னிப்புக் கடிதம் தர மறுத்துவிட்டார். சண்முகம் அந்த நேரத்தில் ஊரில் இல்லை. நான் நிர்வாகக் குழுவின் தீர்ப்பின் படி மன்னிப்புக் கேட்க மறுத்த பத்மனாபனை கட்சியைவிட்டு நீக்கி வைத்து அறிக்கை விடுத்திருந்தேன்.

இதைக் கேள்விபட்ட அண்ணா அவர்கள் எனக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் ஜஸ்டிஸ் கட்சி எப்படி நடத்த வேண்டுமென்று விரும்பினேனோ, அது நடைபெற்றிருக்கிறது. செல்வந்தர்கள் ஆதிக்கம் கட்சியில் இருப்பதால் கட்டுபாடும் ஒழுக்கமும் இருக்குமா என ஐயப்பட்டென். ஆனால் அந்தக் கட்டுப்பாட்டை தாங்கள் நாட்டியிருக்கிறீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாராட்டியிருந்தார்கள். திராவிடநாடு இதழிலும் அது பற்று விரிவாக எழுதியிருந்தார்.

வெளியூரிலிருந்து திரும்பியிருந்த சண்முகம் என்னைச் சந்தித்து தன் நண்பர் பத்மனாபன் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டதற்காக மிகவும் வருந்தினார். அவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி வாதாடினார்.

கட்சியின் வேண்டுகோளை மதிக்காதவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள இயலாதென நான் கூறினேன்.

அவர் மீண்டும் அதிக கோபமாக பெரியாரும் அண்ணாத்துரையும் தான் கட்சியை நடத்துகிறார்களா? என்றார். நான் அப்படி சொல்லவில்லையே! என்றேன்.

நான் பணம் தரவில்லை என்றால் உன்னால் கட்சி நடத்த முடியுமா? அண்ணாத்துரை பேசுவதால் மட்டும் கட்சி வளர்ந்துவிடுமா? என் உதவியின்றி மாதம் ஒரு கூட்டம் நடத்த உங்களுக்கு யோக்யதை உண்டா? என்றார்.

அப்படியெல்லாம் பேசாதீர்கள், யாரும் அவர்கள் வீட்டுச் செலவுக்கு உங்களிடம் பணம் வாங்கவில்லை-கட்சிக்காகத் தருகிறீர்கள். அதனால் கட்சியை உங்களுக்கு அடகு வைக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. உதவியைத் தாங்கள் சுட்டிக்காட்டுகிற முறையும் சரியில்லை எனக் கூறினேன்.

மறுநாள் சண்முகம் அவர்கள், நான் ஒழுங்காக நடக்க எனக்கு புத்தி கூறுமாறு அண்ணாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் எழுதிய நீண்ட பதில் கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நான் பொதுவாகப் பணம் படைத்தவர்கள் என்பதற்காக யாரையுமே பெரிதாகக் கருதுபவன் அல்லன். சர். ஆர்.கே.சண்முகம் அவர்கள் உங்களைவிட பெரும் பணக்காரர். ஆனால் உங்களிடம் உள்ள மரியாதையும் பற்றும் எனக்கு அவரிடம் வருவதில்லை. உங்களுக்கு அடுத்தபடியாகத்தான் நான் அவரை மதிக்கிறேன். காரணம் உங்களிடம் உள்ள கொள்கை உறுதியினால்தான் - உங்களைத் தலைவர்களில் ஒருவராகவும் கருதுகிறேன்.

சென்னை மாவட்ட ஜஸ்டிஸ் கட்சியில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன் என்பதை திராவிட நாடு இதழைப் படித்தால் உங்களுக்குத் தெரியும். அவ்விதச் செயலை நிறைவேற்றிய அந்த நடராசனைப் பாராட்டுவதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறார் என்று குறை கூறி எழுதியிருப்பது என்னை ஏளனப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே உங்களைப் போன்றவர்கள் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி விடுவது உங்களுக்கும் நல்லது - கட்சிக்கும் நல்லது என்று நினைக்கிறேன். என்பதாக அண்ணா அவருக்கு 15 பக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மறுநாள் சண்முகம் டிரைவரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். நான் வேலையிருப்பதாகக் கூறி டிரைவரை அனுப்பிவிட்டேன். மறுநாள் அவரே என்னை அவரது இல்லத்திற்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அவரது குடும்பத்தில் நான் உரிமையோடு பழகுவேன். ஆகையால் மனைவியிடம் கூறி எனக்கு முதலில் சிற்றுண்டி வழங்கினார். பின்னர் அண்ணா எழுதிய கடிதத்தை என்னிடம் தந்து இதைப் படித்துப்பார் என்றார்.

என்னய்யா இந்த அண்ணாத்துரை பெரிய மனுஷன் - உனக்கு புத்தி சொல்லும்படி கூறி கடிதம் எழுதினால் - என்னையே கட்சியை விட்டுப் போகும்படி எழுதியிருக்கிறார். இது நியாயமா? என்றார். நீங்கள் வருந்தாதீர்கள் நான் அண்ணாவிடம் கேட்கிறேன் என்றேன். நீ என்னய்யா கேட்பது, அவர் வரட்டும் நானே கேட்கிறேன் என்றார்.

மறுநாள் அண்ணா அவர்கள் சென்னை தம்புச் செட்டித் தெருவிலுள்ள கார்னர் எஸ்டெட்டில் வந்து தங்கியிருந்தார். அங்கே போய் நான் அவர்களைச் சந்தித்து - சண்முகம் பற்றிக்கூறி அவரைக் கட்சியை விட்டே போகும்படி தாங்கள் எழுதியிருப்பது எனக்குக் கூட வருத்தமாக இருக்கிறது என்றேன்.

அவர் எப்படி ஐயா உன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எனக்கு எழுதலாம்? நீ எடுத்த ஒழுங்கு நடவடிக்கையைப் பாராட்டி நான் காஞ்சிபுரம் முழுதும் பேசிக்கொண்டிருக்கிறேன். இவர் கட்சிக்குப் பணம் தந்து உதவுகிறார் என்பதற்காக கட்டுப்பாட்டை உடைத்தெறிய முடியுமா? என்று கூறிவிட்டு இனி அவரிடம் கூட்டம் நடத்துவதற்குப் பணம் கேட்காதே - அவரிடம் உதவி பெற்று முன்பு மாதம் ஒரு கூட்டம் நடத்தினால் - இனி அவர் உதவியில்லாமல் மாதம் ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்றார்.

அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க நான் பி அண்டு சி மில் வாசலில் போய் தினசரி நண்பர்களுடன் மாலை உண்டியல் ஏந்தியபடி நின்று வேலை முடித்துவரும் தொழிலாளர்களிடம் கூட்டத்திற்கும் போஸ்டர் செலவுகளுக்கும் பணம் வசூலிப்பேன். அண்ணா கூறிவண்ணம் சண்முதத்திடம் பணம் வாங்காமல் மாதத்தில் நான்கு கூட்டங்கள் நடத்தினோம்.

இதைப் பார்த்துச் சினமடைந்த சண்முகம் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பெரியார் சண்முகத்தை நேரடியாகச் சந்தித்து சமாதான் செய்திருக்கிறார்.

நான்தான் கூட்டம் நடத்துவதற்கு மாதாமாதம் பணம் கொடுப்பேன். இந்த முறை அதற்குக் கூட என்னிடம் பணம் கேட்காதீர்கள். இது என்னை அவமானப் படுத்தியது போல் இருக்கிறது என வருத்தியிருக்கிறார்.

வருந்தாதீர்கள் என்று சண்முகத்திற்கு ஆறுதல் கூறிய பெரியார் உங்களிடம் பணம் வாங்காமல் எத்தனைக் கூட்டம் போட்டுவிட்டார்கள்? என்று கேட்க - சண்முகம் நான்கு கூட்டம் என்று பதிலளித்திருக்கிறார்.

நீங்கள் செல்வந்தர், உங்கள் மனம் புண்படக் கூடாது. ஆகையால் அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி பெரியார் அவர்கள் நான்கு கூட்டத்திற்கான செலவுத் தொகையைப்பெற்று கட்சி நிதியில் சேர்த்துவிட்டார்கள்.

முதலில் நான் கூறியது அண்ணா அவர்கள் அந்தக் காலத்திலேயே கட்சியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் விரும்பினார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இனிக் கூறப்போவது அவர் தொண்டுக்கு இலக்கணம் வகுப்பதாகும்.

1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. சுவாமி அருணகிரி நாதர் தலைவராகவும் நான் செயலாளராகவும் அண்ணா அவர்கள் மாநிலக் குழுவின் செயலாளராகவும் தேர்த்தெடுக்கப்பட்டோம்.

போராட்டம் நடத்துவதற்கும் அதற்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் - இந்தி எதிர்ப்பு முழக்கங்கள் நிறைந்த போஸ்டர் போடுவதற்கும் அப்போது கையில் காலணா இல்லை. அன்று நூறு போஸ்டர் அடிக்க ஆகும் செலவு ரூபாய் 1.50 தான். (இப்போது 30 ரூபாய்க்கு மேல் ஆகிறது) நூறு போஸ்டர் ஒட்டக் கூலி 75 காசு. இதற்குக் கூட எங்களிடம் அப்போது வசதியில்லை. இன்னும் மவுண்ட் ரோடிலுள்ள ஒர்க்மென் பிரசில் கடன் சொல்லி அடிப்போம்.

நானும், நம்நாடு சிவஞானமும டி.வி.முருகேசனும், தேவநேசன் சங்கரய்யாவும் அண்ணா ஆகியோரும், போஸ்டர் ஒட்டுவதற்குக் கொடுக்கும் 75 காசை மீதிப்படுத்தி வேறு காரியங்களுக்குச் செலவு செய்வதற்காக - நான் போஸ்டரை எடுத்துக் கொள்ளுவேன். சிவஞானம் பசை வாளியைத் தூக்குவார், தேவநேசன் ஏணி எடுத்துக்கொள்ளுவார், அண்ணா போஸ்டர் ஒட்டுவார். கொத்தவார் சாவடியில் உள்ள லோன்ஸ் கொயர் டீ ஹோட்டலில் டீ சாப்பிடுவோம். யார் ஜோபியில் பணம் இருக்கிறதோ அவர்கள் கொடுப்போம் - இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தின் முக்கியப் பேச்சாளர் அண்ணா - அவர்தான் போஸ்டரும் ஒட்டுவார். அந்த அளவு தொண்டில் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் அண்ணா.

அண்ணா ஏற்றத் தாழ்வு பார்க்காமல் உழைத்தது 38-ல் மட்டுமல்ல - அவர் வளர்ந்து மிகப்பெரும் தலைவராகக் காட்சியளித்த நேரத்திலும் அதேபோன்றுதான் உழைத்தார்.

1952-ம் ஆண்டு சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றபோது ஒரு மாத காலம் மாநாட்டுத் திடலிலேயே தங்கி, தலையில் தலைப்பாகை கட்டி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பந்தல் அமைப்பிலிருந்து மாநாட்டு வேலைகள் அனைத்தையும் ஒரு சாதாரணத் தொண்டனைப் போன்று செய்தார். அதேபோல திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் உழைத்தார்.

ராமாயணப் பிரச்சாரம் நாடு முழுதும் தொடரும் வகையில் - தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.என்.செங்கல்வராயன், சர்.பி.டி.ராசன், பண்டிதமணி கதிரேசன், கல்கி, எவரஸ்ட் ஓட்டல் உரிமையாளர் டி.எம்.சுந்தரம் நாராயணசாமிபிள்ளை போன்ற முக்கியஸ்தர்கள் கம்பர் மாநாடு என்று ஒன்றை கூட்டினார்கள். கம்பர் மாநாடு கூடுவதற்கு முன்னர் பெரியார் அவர்களையும் அவருடைய கொள்கைகளையும் கடுமையாகத் தாக்கி இவர்களில் பத்துப் பேர் பிரச்சாரம் செய்வதிலும் பத்திரிகைகளில் எழுதுவதிலும் ஈடுபட்டார்கள். மாநாடு சென்னை கோகலே ஹாலில் நடைபெறுவதாக இருந்தது.

இதைக் கண்ணுற்ற அண்ணா அவர்கள் என்னிடம் வந்து, இவர்கள் ராமாயணத்திற்காக மாநாடு கூட்டட்டும், கம்பர் புகழ் பாடட்டும், வேண்டாம் என்று கூறவில்லை. எதற்காகப் பெரியாரைத் தாக்கிப் பேசும் வண்ணம் ஊரெல்லாம் கூட்டம் போடுகிறார்கள்? பெரியாரைத் தாக்கிப் பேசுவதைக் கேட்டு நாம் எப்படி வாளா இருப்பது? நாமும் இதற்குப் பதில் கூட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.

கம்பர் மாநாடு நடைபெற இரண்டு நாட்களே இருந்தன. இந்த இடைவெளிக்குள் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து கூட்டம் நடத்த வசதியில்லாததால் - நான் வேறு ஒரு முடிவு செய்தேன் - கம்பர் மாநாட்டில் கேள்வி கேட்பது என்று.

நானும் புலவர் செல்வராஜ், சிவஞானம் மூன்று பேரும் கேள்விகள் தயாரித்து அதை அச்சிட்டோம். அதற்குக் கூட எங்களிடம் அப்போது பணம் இல்லை - வில்லிவாக்கத்தில் உள்ள டி.எம்.பார்த்தசாரதிக்குச் சொந்தமான அச்சகத்திற்குச் சென்றோம். அங்கு அவர் இல்லை. எனக்கு அச்சுக்கோக்கத் தெரியுமாதலால் நான் அதைச் செய்தேன். சிவஞானம் அதை அச்சடித்தார். அதை எடுத்துக்கொண்டு நாங்கள் மாநாட்டிற்குச் சென்றோம்.

மாநாடு தொடங்கிய சிறிது நேரத்தில் கேள்வித்தாளை ஒருவர் மூலம் மேடைக்கு அனுப்பினேன். மேடைக்குச் சென்ற அவரை செங்கல்வராயன் வரவிடாமல் கீழே தள்ளிவிட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. கேள்வித்தாளை எடுத்துக் கொண்டு நானே மேடைக்குச் சென்றேன். என்னையும் மேடைக்கு வரவிடாமல் தடுத்து என் சட்டையைக் கிழித்தனர். நான் அதையும் மீறி மேடைக்குப் போனேன். இந்த நேரத்தில் பார்வையாளர் பகுதியிலிருந்த நமது தோழர்கள் ஆவேசத்துடன் நடராசனைத் தடுக்காதே! அவர் கேள்விக்குப் பதில் சொல்! என்று குரல் ஏழுப்பினர். இதை ஒட்டி அங்கு சிறு கலவரம் ஏற்பட்டது.

ராமாயணப் பிரச்சாரத்தை, பதிவு செய்து ரேடியோவில் ஒலிபரப்ப அதற்கான கருவிகளை மேயில் வைத்திருந்தார்கள். நடந்த கலவரத்தில் அது நொறுங்கிவிட்டது. மெடையிலிருந்த அனைவரும் ஓடத்தொடங்கினர் பி.டி.ராசன் மட்டும் இருந்தார். நான் மைக்கைப் பிடித்துக்கொண்டு கேள்வியைப் படிக்க முயற்சித்தேன். பி.டி.ராசன் கையைப் பிடித்துத் தடுத்து அதைப் படிக்காதே என்றார். கீழே நின்ற மக்கள் கூட்டம் நடராசனை பேசவிடு! என்று குரல் கொடுத்தது. பி.டி.ராசன் யார் உன்னை இந்தக் கேள்விகளைக் கேட்கச் சொன்னது? என்றார். நீங்கள்தான் - பெரியாரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி நீங்கள் செய்த பிரச்சாரம்தான். என்று பதில் கூறினேன்.

இதே நேரத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கம்பர் மாநாட்டின் செய்லமுறைகளை கண்டித்து அண்ணா பேசியிருக்கிறார்.

கம்பர் மாநாடாம் - வம்பர்கள் கூடுகிறார்களாம். நான் வம்பர்கள் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஆணவத்தால் அல்ல - ராமாயணத்தை - வைதீகத்தோடும் பக்தியோடும் தொடர்பு படுத்திப் பேசுபவர்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் தங்களின் அறியாமையை உணராமல் சுயமரியாதை இயக்கத்தையும், தலைவர் பெரியார் அவர்களையும் நையாண்டி செய்து பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்நேரம் வம்புபேசிக்கொண்டிப்பர். நம் தோழர்கள் அங்கு கேள்வி கேட்பார்களோ, தன்மானத்தைக் காக்க அறிவின் துணை கொண்டு வாதம் செய்வார்களோ, மாநாடு எப்படி முடியுமோ என்று அவர்கள் ஈரோட்டு மாநாட்டில் கலந்துகொண்டபோது இங்கு என்ன நடைபெற்றதோ அதை தீர்க்கதரிசனமாகப் பேசியிருந்தார்கள்.

கம்பர் மாநாட்டில் வானொலிக் கருவிகள் சேதமடைந்ததை வைத்து என்மீது வழக்குத் தொடர கம்பர் மாநாட்டுக் குழு முயற்சி செய்தது. இதை அறிந்த அண்ணா அவர்கள் பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. வழக்கை எதிர்த்து நடத்தும்படிக் கூறுங்கள் என்று டபிள்யூபி சொளந்தரபாண்டியன் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பி உற்சாகமூட்டினார்கள். ஆனால் அதே சமயம் கம்பர் மாநாட்டுக்குழுவில் பங்கு பெற்றிருந்த ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த பணக்காரர்கள் பெரியார் அவர்களைச் சந்தித்து மாநாட்டில் நான் குழப்பம் விளைவித்ததாகக் கூறியிருக்கிறார்கள். பெரியார் நடந்த நிகழ்ச்சிக்காகப் பெரிதும் வருந்தி என்னிடம் விவரம் கேட்பதாகவும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலை யில் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி அவர்களை அனுதாபத்துடன் அனுப்பிவிட்டார்கள்.

இதனை அறிந்த அண்ணா அவர்கள் திராவிட நாடு ஏட்டில் கம்பர் மாநாட்டுக்காரர்கள் நடந்துகொண்ட முறையைக் கண்டித்தும் என் செயல்களக்கு நியாயமான ஆதரவு காட்டியும் பத்துப் பக்கங்கள் எழுதியிருந்தார்கள். பெரியார் அதைப் படித்ததும் - அவர்களே மனம் மாறி கம்பர் மாநாட்டில் என்.வி.என்.நடந்து கொண்டது சரிதான். இவர்கள் என்ன பெரிய மனுஷன்கள் என்னைக் கண்டிக்க என்று தலையங்கம் எழுதினார்கள்.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai