அண்ணா உதிர்த்த முத்துக்கள்
(முனைவர் கோ. சங்கர வீரபத்திரன்,
ம.தி.தா. இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி.
)

முன்னுரை
நடராசனுக்கும், பங்காரு அம்மாளுக்கும் மகனாக 15.9.1909 இல் அண்ணா காஞ்சியில் பிறந்தார். பங்காரு அம்மாளின் தங்கை இராணி அம்மையாரே அண்ணாவின் வளர்ப்புத் தாயாவார். இவரைத் “தொத்தா” என்றே அண்ணா அழைப்பார்.

இளமைப்பருவம்: காஞ்சியிலுள்ள பச்சையப்பன் பள்ளியில் தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியைப் பயின்றார். பின் கல்லூரிப் படிப்பை, பச்சையப்பன் கல்லூரியில் தொடர்ந்தார். அண்ணா இளமையிலேயே உயர்ந்த மனிதருக்கு உரிய நற்பண்புகள் அனைத்தையும் பெற்றிருந்தார். அன்பு, அமைதி, இரக்கம், அஞ்சாமை இவற்றின் மொத்த உருவமாக அண்ணா திகழ்ந்தார்.

அண்ணா உதிர்த்த முத்துக்கள்
அண்ணா பல்வேறு நிகழ்வுகளில் உதிர்த்த முத்துக்களுள்
1. திருக்குறள்
2. திருமணம்
3. சட்டப்பேரவை
4. பகுத்தறிவு
5. மொழி ஆகியனவற்றைப் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்குகிறது.

திருக்குறள்
கடுகைத் துளைத்து, ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் மேல், அளவு கடந்த பற்று அண்ணாவுக்கு உண்டு. தமது உரையில் பெரும்பாலும் மேற்கோளாகக் குறளைக் கூறுவார்.

மயிலாடுதுறை நகராட்சி மன்ற உயர்நிலைப் பள்ளியில், கற்க, கசடற, கற்பவை என்ற மூன்று சொற்களை மட்டும் இரண்டு மணி நேரம் விளக்கியுள்ளார். குறளை எழுதிய வள்ளுவரை வியந்து, கவிஞர் கருணானந்தத்திடம்

“......... ஆனா இந்தத் திருக்குறளே தனி! திருவள்ளுவர் எவ்வளவு வருடம் கஷ்டப்பட்டிருப்பாரோ தெரியல்ல? ஒவ்வொண்ணையும் எழுத அல்லது ஒவ்வொரு சொல்லையும் அந்த இடத்திலே பொருத்த அவர் நாள் கணக்கிலே சிந்திச்சிருக்கணும்.....” என்று கூறியுள்ளார். (அண்ணா சில நினைவுகள் ப - 76)

திருக்குறள் வைரக்கல்லைப் போல மதிக்கப்படுகிறது என்பதை “ஒரு பெரிய பாராங்கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப்படுகிறதோ, அப்படித்தான் இரண்டடிகளால் ஆன குறளும் மதிக்கப் படுகிறது” (அண்ணா உதிர்த்த முத்துக்கள் ப.73) என்றும், குறளிலே உள்ள நல்ல பொருளைக் காண ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதை

“கோலார் தங்கச் சுரங்கத்திலே ஆழமாகத் தோண்டத் தோண்டத் தான் தங்கம் தென்படும். அதைப்போல் ஆழ்ந்து படிக்க படிக்க வள்ளுவர் குறளிலே நல்ல பொருளைக் காண முடியும். (மேலது ப - 77) என்றும்.. எளிய உவமைகள் மூலம் விளக்கியுள்ளார்.

திருமணம்
ஆணும், பெண்ணும் வாழ்க்கை நலத்தில் ஈடுபடுவதற்கான கூட்டு முயற்சியே திருமணமாகும். இத்திருமணம் சீர்திருத்தத் திருமணமாக அமைய வேண்டும் என்பது அண்ணாவின் பேரவா ஆகும். சாதி பேதத்தை ஒழிக்க, இச்சீர்திருத்தத் திருமணத்தாலே முடியும் என்று நம்பி சட்டப் பேரவையிலே சீர்திருத்தச் சட்ட வரைவு மசோதாவைக் கொண்டு வந்தார்.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான கருத்திருமன் தமது திருமணம் 22 ஆண்டுகளுக்கு முன்னரே ஐயரை 5 நிமிடங்களில் மந்திரங்களை வேகமாகக் கூறவைத்து நடத்தப்பட்ட சீர்திருத்தத் திருமணம் என்றார்.

உடனே அண்ணா “........ அது சீர்திருத்தத் திருமணமும் அல்ல. சரியான புரோகிதத் திருமணமும் அல்ல. அது அவசரத் திருமணம்” என்றார். (மேலது ப . 52)

கலப்புத் திருமணம் ஒரு தேசிய முயற்சியாக அமைய வேண்டும் என்று அண்ணா எண்ணினார். இதனை,
“கலப்புத் திருமணம் என்பது இலட்சியத்துக்காகச் செய்யப் படுவது மாத்திரமல்லாமல் நம் சமுதாயத்தையே மாற்றியமைக்க எடுத்துக் கொள்ளப்படுகிற ஒரு தேசிய முயற்சியாக இருக்க வேண்டும். தேசிய முயற்சி, முயற்சியளவிலே இல்லாமல் நிச்சயமாகச் செயல்பட வேண்டும். அப்போது தான் நிச்சயமாகச் சாதி பேதத்தை ஒழிக்க முடியும்” (அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் ப - 74) என்ற கூற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

சட்டப்பேரவை
காஞ்சிபுரம் சீனிவாசன் என்ற பழம்பெரும் காங்கிரசுக்காரரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று சட்டப் பேரவையிலே முதன் முதலாக அடியெடுத்து வைத்தார் அண்ணா. அன்று முதல் தான் சட்டப் பேரவையிலே என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.

அண்ணா, சட்டப் பேரவையிலே எழுப்பப்படும் வினாக்களுக்கு நகைச்சுவையாகவும், புத்திசாலித்தனத்துடனும் பதில் கூறுவார். ஏழை மக்களின் பசியைத் தீர்க்க ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி வழங்க அண்ணா முடிவு செய்தார். மேலும் குறைந்த விலையில் அரிசி வழங்கத் திட்டம் தீட்டினார். இதனைக் காங்கிரசார் கேலியும், கிண்டலும் செய்தனர். அதற்கு அண்ணா

“கழுநீர்ப் பானையைத் தலையில் சுமந்து செல்பவள் பன்னீர் செம்பினைக் கண்டு “பூ” இந்தச் செம்புதானா உனக்குக் கிடைத்தது. என் தலையில் பார் எத்தனை பெரிய பானை என்று கூறுவது போலிருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் நம்முடைய படி அரிசித் திட்டத்தைக் கேலி செய்வது என்று பதில் கூறினார். (அண்ணா உதிர்த்த முத்துக்கள் ப - 46)

மற்றொரு சமயம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வினாயகம் “நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே” என்று புகார் கூறினார். உடனே அண்ணா,
“சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூற அனைவருமே சிரித்தனர் (சரித்திரம் படைத்த சாமானியர் ப - 26)

பகுத்தறிவு
சுயமரியாதைத் திருமணம் பற்றிய மசோதா கொண்டு வந்து நிறைவேற்றும் நேரத்தில் அப்போதைய ஏதிர்க்கட்சித் தலைவர்,
“இராமாயணத்திலே ராமனும், சீதையும்.........” என்று ஆரம்பித்தார்.

அண்ணா குறுக்கிட்டு
“எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்ற நேரத்திலே வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு மீண்டும் சேர்ந்த ஜோடிகளைப் பற்றி நினைவுபடுத்தாதீர்கள்” என்றார்.
(அண்ணா உதிர்த்த முத்துக்கள் (ப - 50 - 51)

புராணங்கள் வெறும் கதைகள். அதனை நிஜமென்று எண்ணக் கூடாது என்ற கருத்துடைய அண்ணாவின் புராண மறுப்பை இங்கே காண முடிகிறது.

சென்னை மாநகரிலுள்ள ஒற்றை வாடைத் திரையரங்கில் தமிழ் எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது,

“புகைத் தொடர் வண்டியைக் கண்டு பிடித்தவர் யார்? என்றால் மிரளுவார். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார்? என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தைக் கண்டறிந்தவர் யார்? என்றால் பேசவே மாட்டார்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது? என்ற வினாவால் கவலை கொள்ளமாட்டார்கள்.

ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது? என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக் கேட்டால் நேரில் சென்று பார்த்து வந்தவர்களைப் போல மடமடவென்று பதில் சொல்வார்கள்.” (அண்ணா ஒரு பல்கலைக் கழகம் ப - 13) என்று மக்களின் அறிவு நிலை கண்டு வருந்திக் கூறியது சிந்திக்கத்தக்கது ஆகும்.

மொழி
1937 ஆம் ஆண்டிலே ராஜாஜி தலைமையில் அமைந்த ஆட்சி கட்டாய இந்தியைத் திணித்தபோது அதை எதிர்த்துத் தமிழறிஞர்களும் மாபெரும் கண்டன ஊர்வலத்தைச் சென்னையிலே நடத்தினர். (உண்மை நெகிழ்ந்த நிகழ்ச்சிகள் தொகுதி 3 ப - 137).

1938இல் அண்ணாவின் பெருமுயற்சியால் காஞ்சி மாநகரில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. 1940ல் கட்டாய இந்தியை அரசு கைவிட்டது.

“முசல் மான்கள் பேசிய அரபி மொழிக்கு எதிராக இந்துக்கள் தோற்றுவித்த மொழியே இந்திமொழி. சுயநலத்திற்காக எவ்வித இலக்கண முறையும் இல்லாமல் செயற்கையாகத் தோன்றிய மொழி தான் இந்தி,” (அறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கை ப - 22.) இத்தகு இந்தியால் தமிழர்களுக்குத் தீமைதான் நிகழும். இதனை அண்ணா

“இந்தியைப் படிப்பது வேறு. இந்தியில் பழகுவது வேறு. நாம் இந்தி படித்தால் அது நமக்குப் படித்த மொழியாகத் தான் இருக்க முடியுமே தவிர பழக்க மொழியாக இருக்க முடியாது. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களைப் போலநாம் தேர்ச்சி பெற்றவர்களாக ஆக முடியாது. நாம் இந்திக்காரனுடன் போட்டியிட முடியாது. அரசு அலுவலகங்கள் இந்தி பேசுவோரின் தனி உடமையாகிவிடும். (அண்ணா ஒரு சரித்திரம் ப - 40-41) என்றும், மேலும்

“தாய் மொழியில் கற்பதுவே சான்றாண்மை வித்து
தமிழ் மொழியில் கற்பதுவே சந்தனத்தின் சத்து”
(அறிஞர் அண்ணா பிள்ளைத் தமிழ் ப - 65)
என்ற கருத்தும் கருதத்தக்கது.

முடிவுரை
அறிஞர் அண்ணா தமிழ் மக்களை எழுச்சியுறச் செய்தவர். சமூக மரியாதைகளுக்காக மாற்றானிடம் மண்டியிடாதவர். ஏழை மக்களை வாட்டி வதைத்த சமூகக் கொடுமைகளை, ஏற்றத் தாழ்வுகளைப் போக்க முயற்சி எடுத்தவர். நாலுகோடி தமிழர்களைக் கிளர்ந்து எழச் செய்தவர். பழமை, பிற்போக்கு, விதி, வருணாசிரமம், ஆரியம் முதலியவற்றை எதிர்த்துப் போராடச் செய்தவர். தமிழ் மொழியின் பெருமையை மக்கள் உணரச் செய்தவர்.

இக் கருத்துக்களை அண்ணா உதிர்த்த முத்துக்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai