திரு.வி.கலியாணசுந்தரனார்
அறிஞர் அண்ணா
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, தமிழுக்கும்,
தமிழர்கள் நலனுக்கும் பாடுபட்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
தேய்ந்த உடலுடன், பல்வேறு மனப்பான்மையுள்ள மாகாண
சர்க்காரின் கோபத்துக்குப் பல முறை இலக்காகியும், ஆட்சியாளரின்
ஆத்திரம் தன்னை ஏதும் செய்யாது என்ற எஃகு உள்ளத்துடன் உரிமை முழக்கம்
எழுப்பி வந்தவர் திரு.வி.க..
காங்கிரசைத் தூய்மைப்படுத்திடலாம் என்ற நல்லெண்ணம்
அவருக்குப் பலகாலமாகத் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் அவர்
காங்கிரசுக்குள் இருந்து கொண்டே தமிழர் நலனுக்காகச் சொல்லாலும்
எழுத்தாலும் தொண்டாற்றி வந்தார்.
22.08.1948-ல் சென்னை ஜிம்கானா மைதானத்தில் ஒரு
இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். பல லாரிகளில்
துப்பாக்கி சகிதம் இராணுவமும் போலீசும் வட்டமிட்டன. அன்று பெரியார்
அவர்கள் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாகப் பேசுவதைக் கேட்கவே மக்கள்
கடல் போல் திரண்டிருநதனர். ஆனால், பெரியார் இராமசாமி அவர்கள் சிறைக்குள்
அடைக்கப்பட்டார் என்ற செய்தி அவர்களில் பெரும்பாலருக்கு அப்போது
தெரியாது. தாங்கள் வரும் வழியில் தான் பெரியார் சிறைப்படுத்தப்பட்டார்
என்ற செய்தியைக் கேள்விப்பட்டார்கள். என்றாலும் கூட்டத்தில் என்ன
நடைபெறுகிறது என்பதைக் காண எல்லாரும் ஜிம்கானா திடலுக்கு வந்தார்கள்.
உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்
பெரியார் பேருரை கேட்க வந்த மக்கள், அவர் சிறைப்படுத்தப்பட்டார்
என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திகைத்து நின்றார்கள். அந்த
சமயத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அங்கு தோன்றினார். ஆட்சியாளரின்
அடக்கு முறையையும் பொருட்படுத்தாது,
இதோ நான் இருக்கிறேன்; பயப்படாதீர்கள்! என்று
அவர் ஊக்க மூட்டியதைத் திராவிட மக்கள் என்றுமே மறக்க முடியாது.
நம்முடைய பெயரியார் இராமசாமி அவர்களும், மற்றத்
தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒருவரும்
உங்கள் ஆர்வத்தை இழக்க வேண்டாம். அவர்கள் இட்ட கட்டளையை நாம் செய்வோம்!
என்று உணர்ச்சி ததும்ப அவர் பேசினார்.
தலைவர்கள் சிறை சென்றதால் மனக்கொதிப்பு அடைந்திருந்த
மக்களுக்குத் தைரியத்தை ஊட்டி, கடமையைச் செய்யுங்கள்! என்று, அன்று
திரு.வி.க. அவர்கள் நினைவூட்டியதன் பலனை, மறுநாள் ஸ்டேடியத்தில்
நாம் பார்த்தோம்.
நமது போராட்டம் இனிமேல்தான் முழு வேகத்துடன் நடக்கவேண்டியிருக்கிறது.
அந்த வேகம், பெரியார் இராமசாமி அவர்களையும், அவர்தம் தோழரும் தமிழ்த்
தந்தையுமான திரு.வி.க. அவர்களையும் சிறைப்படுத்தி, அடுத்தடுத்த
அறைகளில் வைக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது!
(05.09.1948 - திராவிடநாடு)
நல்ல தமிழில் பேசியவர்
தமிழ் நாட்டிலே நல்ல தமிழிலே மேடையில் பேசமுடியும் என்பதை முதன்
முதல் பேசிக் காட்டியவர் திரு.வி.க. (திருவாரூர் வி.கலியாணசுந்தரனார்)
அழகிய தமிழிலே அரசியலைப் பற்றியும் எழுத முடியும்
என்பதை முதலாவதாக எழுதிக் காட்டியவர் திரு.வி.க.
நூல்களிலே நுண்ணிய உரையைத் தீட்டியவர் நம் திரு.வி.க.
எதிர்கால உலகத்துக்காகச் சிறந்த ஏடுகளைத் தயாரிப்பவர்,
நம் திரு.வி.க.
(சென்னையில் பொதிகை நூல் நிலையம் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழ்த்
தென்றல் திரு.வி.க. அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை
- நூல்: அண்ணாவின் சொல்லோவியம்)
தமிழின் இரு சுடர்கள்
முத்தமிழை மறந்திருந்த தமிழனின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பி,
தன் இன மொழியைப் போற்றும் நிலைக்கத் தமிழ் அறிவை தமிழின் தனிச்
சிறப்பை தமிழ் மொழிப்பற்றை தமிழனிடம் உண்டாக்கினர் சிலர்.
மறைந்த தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகளாரும், தள்ளாத வயதடைந்தும்
தளராது தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரும்,
தமிழ் மொழிப் பற்றை மறுமல்ச்சியை ஏற்படுத்தியவரிகளில் முக்கியமானவர்கள்;
முதல்வர்கள்; முன்னணி வீரர்கள்.
மறைமலை அடிகளின் தமிழ்ப் பற்றும், தனித் தமிழ்
உணர்ச்சியும் திரு.வி.க. அவர்களின் தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பண்பும்
இருவரது தமிழ்த் தொண்டும் தமிழ் வளர்ச்சியில் அவர்களது பேரூக்கமும்,
இடைவிடாத உணர்வும், உழைப்பும் தமிழர்கள் இதயங்களில் இரண்டறக் கலந்துவிட்டன!
தமிழர் வரலாற்றில் தமிழ் மொழியின் மறுமலர்ச்சி
ஏட்டில் மறைமலை அடிகளார், திரு.வி.க. ஆகியோரது காலம், அவர்களது
தமிழ் வாழ்வு என்றும் நிலைத்து நிற்பவை.
தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள் இரு திருவிளக்குகள்
மறைமலை அடிகளாரும், திரு.வி.க.வும் அவார்கள்.
அவர்கள் வழி நின்று, அவர்கள் போற்றிய தமிழை -
அவர்கள் பரப்பிய தமிழைக் கற்றுத் தெளிந்து, தமிழர்களாயத் தமிழ்
நாட்டை, தனித்திரு நாடாக ஆக்கிடும் பெருமக்களாய் இன்றைய மாணவர்கள்
வாழ வேண்டும்.
இதுவே இந்த இரு தமிழ்ப் பெயரியார்களுக்கு தமிழ்ச்
சுடர்களுக்கு நாம் காட்டும் கைம்மாறு! (சென்னை
தொண்டைமண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் 09.02.1952 நிகழ்ந்த முத்தமிழ்
விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.)