திருவள்ளுவர்
அறிஞர் அண்ணா
பொதுமறை - புதுமறை
திருவள்ளுவர் - நமக்கு அளித்துள்ள திருக்குறள்
இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம்
பெற்றிருக்கிறது.
எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல்,
வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார்.
அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத்
தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.
தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும்,
இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள்.
இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு
எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை
நகரத்திலே நடைபெறவிருக்கிறது.
தமிழ் ஆய்ந்த - தமிழ் அறிந்த - நல்லறிஞர்கள்,
பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்.
அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே
தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ
மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க
விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.
திருக்குறளின் - தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை,
ஓவியங்களாக - வரி வடிவங்களாக - பாடல்களாக - கூத்தாக உருவாக்கி
வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை - சென்னை கடற்கரை ஓரத்தில்
சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக்
கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் - உருவாக்கிக் காட்டவேண்டும்
என்பது!
(சென்னை - கோட்டை தலைமைச் செயலகத்தில் சூன் 9, 1967 நிகழ்ந்த திருவள்ளுவர்
படத் திறப்பு விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(நம் நாடு நாளிதழ் - 10.06.1967))
உலக மொழிகளில் எல்லாம் திருக்குறள்
உலக மொழிகள் எல்லாவற்றிலும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.
நாம் எல்லாரும் எதிர்பார்ப்பதை விட மேலாக வெளிநாட்டினர்
திருக்குறளைப் பயன்படுத்த முனைந்துவிட்டனர்.
திருவள்ளுவருக்குக் கிடைக்கும் இந்தச் சிறப்பை
நீண்ட காலத்திற்கு முன்பே நாம் செய்திருக்கவேண்டும்; தவறிவிட்டோம்.
இப்போது சோவியத்து நாட்டிலே உள்ளவர்கள் திருக்குறளைப்
பயில்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் பயில்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபொழுது,
பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை
என்னிடம் தந்தார்கள். அதன் நல்லறிவுக் கருத்துகள் நாட்டு மக்கள்
அனைவராலும் போற்றப்படுகின்றன.
திருவள்ளுவர் விழா ஏன்?
திருவள்ளுவர் விழாதான் நம் வாழ்வு செம்மைப்பட அமையும் விழாவாக
அமைய வேண்டும்.
திருவள்ளுவரைப் போல, தமிழர்களிலே நிறையப் புலவர்கள்
இருந்திருக்கிறார்கள். இளங்கோவின் சிலப்பதிகாரம் நாடு அறியாதது
அல்ல; சிலப்பதிகாரத்தில் வரும் கனல் வரிக் கவிதை, உலகம் மறந்துவிடக்
கூடியதும் அல்ல, இருந்தாலும் -இரண்டு வரிகளுக்குள் வாழ்வுக்குத்
தேவையான கருத்துகளை எப்படி வாழ வேண்டும் என்ற முறையை வகுத்துக்
கொடுத்த பெரியார் வள்ளுவர்தான்!
தமிழ் நாட்டில் இருந்த பெண்பாற் புலவர்களைப் போல்
வெளிநாட்டில் எங்கும் நாம் கண்டதில்லை. இருந்தாலும் வள்ளுவரைப்
போல் அவர்கள் சுவடி ஒன்றும் தரவில்லை.
ஆதலால் வள்ளுவர் விழாவினை மற்ற விழக்களைப் போல்
எண்ணாது, தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரிய விழாவாகக் கருத
வேண்டும்.
இந்தக் குவலயத்திற்கே குறளைத் தந்த தமிழர் சமுதாயம்,
குறள் நெறியின்படி வாழ்கிறதா என்றால் - இல்லை. பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்று, உயர்வு பிறப்பிலே இல்லை; தான் செய்யும்
தொழிலின் சிறப்பிலேதான் இருக்கிறது என்பதைத் திருவள்ளுவர் சொல்லியும்
இந்தச் சமுதாயம் சாதிப் பிடிப்பிலிருந்து இன்னும் தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை.
அதுமட்டுமல்ல; சாதி இருந்தால் என்ன? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆகையால் விழா நடைபெறும் இந்த நேரத்தில் திருவள்ளுவர்
சொன்ன கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்
இரஷியாவோடு போட்டியிடும் தலையாய செல்வம்
இன்றைய தினம் செல்வத்திலே - சீரடைவதிலே - கல்வி முன்னேற்றத்திலே
- தொழில் துறையிலே - மிகவும் பின்தங்கியுள்ளோம்.
தமிழ்ச் செல்வம் யாரும் பெற முடியாத செல்வமாக
இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் யாருக்கும் எந்த நாட்டுக்கும்
கிட்டாத அளவிற்குக் கிடைத்திருக்கிறது.
இரஷ்யாவோடு நாம் போர்க் கருவிகளிலே போட்டியிட
முடியாது; விஞ்ஞான வளர்ச்சியிலே போட்டியிட முடியாது.
ஆனால் இலக்கியத்திலே போட்டியிட முடியும். அப்படிப்பட்ட
இலக்கியச் செல்வம் நம்மிடத்திலே இருக்கிறது. அதில் தலையாய செல்வம்
- திருக்குறள்.
அந்தக் குறள், வகுப்பறையில் மட்டும் அல்லாமல்
- உங்கள் இல்லங்களில் மட்டும் அல்லாமல் - உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
குறளைக் கற்றுக் கொள்வதால்,
நீங்கள் செம்மைப்பட்டு -
நீங்கள் செம்மைப்படுவதால்,
நாடு செம்மைப்பட்டு -
நாடு செம்மைப்படுவதால்,
உலகு செம்மைப்படச் செய்ய வேண்டும்.
(** சென்னை - இராணி மேரி கல்லூரியில் செப்டம்பர் 8, 1967 நிகழ்ந்த
திருவள்ளுவர் விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை
- ஆதாரம்: நம் நாடு நாளிதழ் 09.09.1967)
நிலத்தாய் சிரிக்கிறாள்
ஒரு நாட்டில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பது இல்லை.
நம் தவத்திரு நாட்டிலோ எல்லாவற்றையும் பூமி தன்
மடியில் அடக்கி வைத்திருக்கிறது.
தோண்டினால் உனக்கு வேண்டியதைத் தருகிறேன் என்று
பூமி மாதா கூறுகிறாள்!
கொஞ்சம் தோண்டினால் ஊற்று நீர்!
இன்னும் கொஞ்சம் தோண்டினால் சுண்ணாம்புக் கல்!
மேலும் சிறிது தோண்டினால் செம்பு - அதற்குப் பிறகு தங்கம்!
அதற்கும் அடியிலே தோண்டினால், தங்கத்துக்கெல்லாம் மேலான கருப்புத்
தங்கம் என்ற கொருளாதார வல்லுநர்கள் போற்றும் நிலக்கரி!
இத்தனையும் தருவதற்குத் தயாராக இருக்கிறது நம் நிலம்.
இதனைத்தான் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்; நிலத்தை மதிக்க வேண்டிய
இன்றியமையாமையையும் வலியுறுத்தியிருக்கிறார்.
இலம் என்ற அசை இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லான் தகும்
என்னும் குறள் மூலம்!
எதுவும் இல்லையே!
என்று தலைகுனிவதைப் பார்த்துத்தான் பூமி மாதா (நிலத் தாய்) சிரிப்பாள்!
ஒரு பெண் தங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தால்
- தமிழர்கள் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
இதை அறிந்துதான், பூமி மாதா சிரிப்பாள் என்று வள்ளுவர் எழுதியிருக்கிறார்.
நமது நிலத்திலே வளம் இருப்பது தெரிகிறது. ஆனால்
அதனைத் தோண்டி எடுக்கும் அதிகாரம் நம்மிடத்திலே இல்லை! சேலத்திலே
இரும்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வள்ளுவர் கூற்றுப்படி -
இரும்பைத் தன் மடியிலே அடக்கி வைத்திருக்கும் கஞ்சமலை, நம்மைப்
பார்த்துச் சிரிக்கிறது!
தொழிற்சாலை வேண்டும் என்று துடிக்கிறாயே - இங்கே
தோண்டி எடு இரும்பை
என்கிறது கஞ்சமலை!
(* சென்னை ஆகஸ்டு 15, 1967, விடுதலை நாள் விழாவில் முதல்வர் பேறிஞர்
அண்ணா ஆற்றிய உரை - நம் நாடு, ஆகஸ்ட் 23, 1967)
இணையில்லா இலக்கிய வளம்
செழுமையான இலக்கிய வளம் நிறைந்த மொழி நமது மொழி - தமிழ் மொழி.
இதில் சிறிதும் ஐயப்பாடு கொள்ள தேவையில்லை.
உலகோர் முன் - அவர் எம்மொழியினராயினும் சரியே
- எத்துணைக் கலையியல் வாய்ந்த எழுத்தாண்மைத் திறம் படைத்திட்ட
நாட்டவரானும் சரியே - நாம் தலைநிமிர்ந்து கூறிடலாம் அவரிடம்:
எம்மொழி தமிழ் மொழி. மிகச் செழுமையான மொழி. கலைப் பண்பார்ந்த ஏட்டுக்
கருவூல வளம் - காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியப் பகுதி ஏராளம் உண்டு
எம்மிடம் - எமது செந்தமிழில்! - என்று.
இது வெறும் புகழ்ச்சியல்ல - உண்மை! தற்பெருமைக்
குற்றத்தினைப் பொருட்படுத்திடவே கூடாத தன்மைத்தான் தற்பெருமிதமும்
கூட!
இலக்கிய உலகில் - எழுத்தாண்மைத் துறையில் தமிழர்
தம் சாதனை மிகவும் எடுப்பானது - ஈடும் இணையும் அற்றதும் கூட!
எடுத்துக்காட்டு வேண்டுமா?
இதோ ஒரு பாடல்:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
- இந்த ஒரு பாடலில் மட்டும் எட்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன.
எட்டுத் தொகை என்னும் ஒரு சிறப்புத் தொகுதியில் வருவன மட்டும்
இவை - மெத்தச் சிறப்புடைத்தான நூல்கள் இவை.
மற்றத் தொகுதிகள் - தொகுப்புகள் பற்றிப் பேசிடலும் வேண்டுமோ!
உலகப் பேராசிரியர்
எல்லாவற்றையும் விட, திருக்குறள் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்பட்டுடக்கொண்டாலும்
தகும். வலி ஏதும் இல்லை, நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில்.
மானிடப் பண்பியல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் - வாழ்க்கை
வழி, நெறி முறைகளுக்கான வழி காட்டியாய் - அமைந்துள்ளது திருக்குறள்.
காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியம் திருக்குறள் அன்றி
வேறு ஏது?
- என்றும் நாம் கேட்டிடலாம், எவரைப் பார்த்தும்.
உலகெங்கணும் பறைசாற்றிடலாம்; அஞ்சிடத் தேவையில்லை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
நமது நாடு.
எதனால் இப்படிக் கூறினார் சி.சுப்பிரமணிய பாரதியார்?
அந்த வள்ளுவர், திருக்குறள் என்ற பொய்யாமொழியினை
வாழ்க்கை நெறிக் கோட்பாட்டு மறைதனைத் தீட்டியதால்தான்!
ஷெல்லி, பைரன், கீட்ஸ், கால்ரிட்ஜ், எமர்சன்,
பேக்கன் முதலிய ஆங்கிலப் பாவாணர்களும் பேரிலக்கிய நூலாசிரியர்களும்
அளித்துள்ள நற்காவியங்களும், எழுத்தோவியங்களும் நமக்கு அந்நியம்
ஆகுமா? அயலானவை தாமா?
அந்நியம் என்கிற சொல்லின் நேரிடையான பொருளில்தான்
அவற்றையெல்லாம் கருதிடவேண்டுமா? ஒதுக்கிடவும் வேண்டுமா?
தமிழ் மறையாம் திருக்குறளைத் தீட்டிய திருவள்ளுவர்,
தமிழர் என்பதால் தமிழருக்கு மட்டுந்தான் வழிகாட்டியா? வள்ளுவன்
தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
- என்று பாடிப் பூரித்து மகிழ்கின்றோமே, என்ன பொருள் அதற்கு?
ஷெல்லி போன்றோர் ஆங்கிலத்திற்கோ, ஆங்கில நாட்டாருக்கு
மட்டுமோ உரியவர் ஆக மாட்டார்.
அவர்கள் அனைவரும் உலகினுக்கே சொந்தம்!
உலகப் பெருமக்கள் - குடி மக்கள் - அவர்கள்!
உலகப் பேராசிரியர்களும் ஆவார்கள் அவர்கள்!
(1967 - ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு
பேருரை. ஆதாரம்:திரு.மு.நமசிவாயம் தொகுத்துள்ள சாமானியனின் சகாப்தம்
நூல்)
பெருநெறி காட்டும் வழிகாட்டி நூல்
வள்ளுவர் தந்த திருக்குறள் தமிழர்க்கு மட்டும் அல்லாமல் பண்புடன்
வாழ விரும்பும் அனைவர்க்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
திருக்குறள் பூஜா மடத்துக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட
ஏடு அன்று; புனைந்துரைகள் நெளியும் புராணம் அன்று; வாழ்விலே, தூய்மையை
- அவரவரும், தத்தமது திறனைச் சரியாகப் பயன்படுத்தி, மற்றவர் வாழ்வின்
மேம்பாட்டினையும் மதித்து ஒழுகுவதன் மூலம் பெறக்கூடியது என்ற பெருநெறியைக்
காட்டும் நூலாகும்.
திருவிழாக்களையும், தீர்த்த மகிமைகளையும், திருப்பல்லாண்டுகளையும்,
திரு.அவதாரங்களையும் - இவற்றின் பிற பதிப்புகளான வெண்பொங்கல்,
இனிப்புச் சோறு எனும் இன்ன பிறவற்றினையும் மக்களுக்கு வழங்கும்
அழுக்குக் கருத்துரைகள் கொண்ட ஏடுகளையே தமிழ்நாடு கொண்டாடி வருகிறது.
காரணம் பலப்பல. விளைவோ - வாழ்வில் வேதனை; சமூகத்தில் சச்சரவு;
நாட்டிலே நலிவு!
நாம் இதுகாறும் அத்தகு ஏடுகளின் பிடியிலிருந்து
நாடு விடுபட வேண்டும் என்பதற்காகப் பணிபுரிந்து வந்தோம். அப்பணி
தொடர்ந்தும் நடந்து வருகிறது.
அப்பணியுடனும் இப்போது நாம் வள்ளுவர் தந்த திருக்குறளை
ஒவ்வோர் இல்லத்திலும் குடியேறச் செய்தாகவேண்டும்; ஒவ்வொருவர் மனத்திலும்
அவருடைய அற உரைகள் பதியச் செய்யவேண்டும் என்ற சீரிய பணியினை மேற்கொண்டு
உள்ளோம்.
குறள் ஏந்திச் செல்வோம்
நாம் - நாவலரும் பாவலரும் கூடிடும் நல் மணிமாடத்திலே அல்ல உலவுவது;
உரையாடுவது! நாதனைக் கண்டோம்; நம் நாவில் அவர் சூலம் பட இம்மெய்யறிவு
கொண்டோம் என்று இயம்புடும் அருள் விற்பனையாளர்களின் அணி மாடங்களை
நாம் அணுகுவது இல்லை.
மக்கள் இத்தகையவர்களிடம், மறைந்து கிடக்கும் இம்
மாணிக்கத்தை - திருக்குறளைக் காட்டும் மகத்தான பணியினை, நாம் மேற்கொண்டுள்ளோம்.
நமது பணி வெற்றி பெற்றால்தான், மக்களின் உடைமையாகும்
- இந்தத் தமிழ் அறிவுக் களஞ்சியம்.
நமது பெரும் பணி மூலமே, மக்களுக்க, வாழ்க்கையுலே
சந்தேகத்தை நீக்கவும், போக்கவும், நேர்மையை நிலைநாட்டவும் உதவும்
இப்பெருநூலின் உண்மைப் பொருள் தெரிய முடியும்.
குறள் ஏந்திச் செல்வோம் - நாடு, நகரமெங்கும்;
பட்டி, தொட்டிகளில் எல்லாம்! பண்பாடு - எது என்பதை மக்கள் அறியச்
செய்வோம்!
அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள்
உணர மட்டுமல்ல; நுகரவும் பணியாற்ற வேண்டும்.
புதிய பணி இது; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான்
- முற்றிலும் புதிதன்று!
அப்பணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு
- குறளின் அருமை, பெருமை பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துரைகளை
எண்ணிப் பார்ப்பது முக்கியமான முதல் வேலையாகும்.
உள்ளுவரோ மநுவாதி?
பேராசிரியர் சுந்தரனார் பெரும்புலவர். அவர், வள்ளுவரின் திருக்குறளைப்
பற்றிய அருமை பெருமையினை அறிவிக்கப் பல கூற வேண்டாம்; முக்கியமானதைச்
சுட்டிக்காட்டினால் போதும் என்று எண்ணி வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி?
என்று பாடியுள்ளார்.
இந்த ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் முறையினைக் காலம் கூடத்
தகர்க்காதபடி, அவ்வப்போது உரம் ஊட்டி வருவனவே - புராண, இதிகாசங்கள்.
அவற்றை நம்பியதாலேயே நாடு நலிவுற்றது.
நாட்டின் நலிவு நீங்கி, மக்கள் நல்வாழ்வு பெறுவதற்காக,
வள்ளுவர் குறளை, மறவற நன்கு உணர்ந்தார் ஆதல் வேண்டும் மக்கள்.
வள்ளுவர் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து
அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். கடவுள் கொள்கை, நாடு, அரசு,
இல்வாழ்க்கை எனும் பல பகுதிகளாக உள்ள குறளின் முழு நோக்கம் - மக்கள்
அற நெறியில் நிற்க வேண்டும் என்பதேயாகும். ஏனெனில், அவர் கூறியபடி
அறத்தால் வருவதே இன்பம்.
இந்த அறநெறியைப் பரப்பும் பணியினை மேற்கொள்ளும்
நமக்கு உறுதுணையாக, அறிஞரின் கருத்துரைகள் உதவுகின்றன.
வாழ்க வள்ளுவர்!
திருக்குறளின் ஆரமையினை எடுத்துரைத்த அறிஞர் பலர் பல மொழிகளிலே
குறள் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பெருமை கடல் கடந்தும் சென்று
பரவியுள்ளது.
எனினும் தமிழர் மனைகளிலே குறள் உண்டோ? பஞ்சாங்கம்
இருக்கும்; பாரதக் கதை இருக்கும்; அபிமன்யு வீரமும் இருக்கும்;
அறநெறி கூறும் அருமைத் திருக்குறள் இருக்குமா? இல்லையே! ஏன்?
பண்புடைத் தமிழரின் மனப் புண்ணும் - பயனில் நூல்களை
மட்டுமே அறிந்ததால் மக்கள் மனத்திலே மூண்டு கிடக்கும் மருளும்
- போக்கப்பட வேண்டும்.
வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி!
(** திராவிடநாடு கிழமை இதழ் - சனவரி 14, 1949)
பட்டை தீட்டிய வைரம்
திருககுறள் இன்று பல்வேறு மொழிகளில் ஆக்கப்பட்டு உலக அரங்கில்
உலா வருகிறது. இந்த அளவு வெற்றி, வேறு எந்தத் தமிழ் நூலுக்கும்
கிடைத்தது இல்லை.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தரணிக்கெல்லாம்
நன்னெறி கூறும் நூல். நாளாக, நாளாக - சூழ்நிலை மாற மாற திருக்குறள்,
புதிய விளக்கங்களை, விரிவான கருத்துகளை நமக்குத் தரும் ஆற்றல்
வாய்ந்தது! அதன் ஆழ்ந்த பொருளை அறிய ஆராய்ச்சி செய்வது இன்றியமையாதது.
வைரத்தைப் பட்டை தீட்டத் தீட்ட அதனுள் பல வண்ணங்கள்
தெரிவது போல், திருக்குறளை ஆராய ஆராய அதில் பல புத்தம் புதிய அருமையான
கருத்துக்கள் புலப்படும்.
இனித் திருக்குறளைப் பற்றி விரிவுரைகள் ஆற்ற வேண்டிய
அவசியம் இல்லை. வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது
என்ற ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதுதான் தேவை.
பல்கலைக் கழகத்தில் தனித்துறை
திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அந்தக்
காலத்தில் வேறு நாடுகளில் இயற்றப்பட்ட எந்த நூலிலும், குறளில்
உள்ளதைப் போல் கருத்துக்கள் காணப்படவில்லை.
பிற நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த
அந்தக் காலத்திலேயே தமிழர்கள் நல்ல பண்பாடு மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்
என்பதைத்தான் திருக்குறள் காட்டுகிறது.
திருக்குறளைப் பற்றிப் பெருமையாகப் பேசும் நம்மிடம்
மூடப் பழக்க வழக்கங்கள் இருப்பதைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள்
நம்மைப் பற்றி ஐயப்படுவார்கள். அதனால்தான் திருக்குறளுக்கு உலகில்
கிடைக்கவேண்டிய அளவு பெருமை கிடைக்கவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை மான்
- என்ற குறளையும் போற்றிக்கொண்டு, சாதி முறைகளையும் கைவிடாமல்
இருப்பது வாழ்க்கை நெறிக்குப் பொருத்தமாக இராது; குறளை நாம் உண்மையாகவே
போற்றுவது ஆகாது!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு
என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்.
(சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு
அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில்
முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை - நம் நாடு நாளிதழ்
அக்டோபர் 16, 1967)