சிறப்புக் கட்டுரை


அந்தத் தராசு
அறிஞர் அண்ணா

ஆரிய மார்க்கத்தையும், ஆரிய அரசியல் பொறியையும் மகத்தானதென்று மனதிற்கொண்டு, நேரம் நினைப்பு பொருளை அதற்கழுது பாழாகும் தமிழா! உனது பொறுமைக்கு ஓர் எல்லை வேண்டாமா! தோல் தடித்தாலும், நெஞ்சமாவது துடிக்கலாகாதா? எங்கே இருக்கிறது உணர்ச்சி?

தராசு என்றால், பண்டங்களை எடைபோடும் கருவி. பாகல்காயோ பசும்பொனோ, உருளையோ, இரும்பு உருளையோ, எதையும் எடைபோட்டு, விலை மதிப்புக் கூறவே தராசு பயன்படுகிறது. தங்க வியாபாரியிடமும் தராசு உண்டு. கருவாட்டுக் கடையிலுந்தான் அது இருக்கிறது. வியாபாரத்தை வாழ்க்கைக்கு வருவாய் தரும் ஓர் தொழில் என்று கோள்வோரிடமும் அது இருக்கிறது. மக்களைக் கசக்கிப்பிழிய, கொள்ளை இலாபம் அடிக்க, தராசுக்கோலை, கொடுங்கோலாகக் கொள்வோரிடமும் அது இருக்கிறது. நிறை தெரிய அது தேவை. ஆனால் நிறை அந்தக் கோலைப் பிடிக்கும் தோழரின் குணத்தைப் பற்றியே, குறையுடைத்தாகவோ, சீருடைத்தாகவோ இருக்க முடியும். ஆனால், எடை போடுவது என்பது, இன்றியமையாததொன்று. எனவே, எடைபோடுவோரின் இயல்வு உலகினோருக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே மக்களின் வாழ்வு துலங்கும்.

பண்டங்களை எடைபோடும் தராசுபோல், பிரமுகர்களை - எடை போடும் தராசு, எழுது கோலரிடம் உண்டு. அவர்களின் நேர்மையைப் பொறுத்தே, மக்கள், பிரமுகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுந் தன்மையுமிருக்க முடியும்.

சுதேசமித்திரன் ஆசிரியர், தோழர் சீனுவாசன், அக்கிரகாரவாசி, தேசீய நேசன், பத்திரிகையுலகின் பட்டத்தரசன். அவர் தென்னாட்டுப் பிரமுகர்களை எடை போட்டு இருக்கிறார், தாம் எழுதிய தராசு என்ற புத்தகத்திலே.

பெரியார்கள், தென்னாட்டிலே யார் என்பதை மக்கட்கு அறிவிக்கும் நோக்கம் அப்புத்தகத்தது. அதிலும் பிலபல ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார் என்றால், மக்கள் அவர் காட்டும் பெரியார்களிடம் மதிப்புக் காட்டுவது சகஜந்தானே! இத்தகைய செல்வாக்குடைய சுதேசமித்திரன் ஆசிரியரின் தராசு எப்படி இருக்கிறது என்ற, தமிழ்த் தோழர்கள், குறிப்பாக காங்கிரசிலே உள்ள தமிழ்த் தோழர்கள் - அவர்களிலே சிலருக்குத் தலைவர் என்ற பட்டமும் உண்டு - சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெட்கித் தலைகுனிவர். தமது உழைப்பு வீணாவது காண்பர், மானம் மங்கி மடிந்திராவிட்டால். இனியேனும் வீறு கொள்வர்.

சு.மி. தாரசு தென்னாட்டுப் பெரியார்கள் என்ற பார்ப்பனப் பண்டங்களை மட்டுமே - அம்மாமி அப்பளத்தை மட்டுமே - எடை போட்டுக் காட்டுகிறது. யார் அப்பெரியார்கள்? படியுங்கள் பட்டியை! ஏ.ரங்கசாமி ஐயங்கார், எஸ்.ரங்கசாமி, கஸ்தூரிரங்க ஐயங்கார். எஸ்.சீனுவாச ஐயங்கார், வி.வி.சீனுவாச ஐயங்கார், சர்.பி.எஸ்.சிவசாமி ஐயர், ராவ் பகதூர், நடேச ஐயர், சர்.சி.பி.ராமசாமி ஐயர், சி.ராஜகோபாலாச்சாரியார், தேசீயத் தமிழா! இந்நாட்டிலே, தேசீயக் கனலையே மூச்சாகக் கொண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றொருவர் இருந்ததை நீ அறிவாயா? அவர் இல்லை, மித்திரனின் தராசிலே! காவித்தைக் காங்கிரசுக்கு அரணாக்கித் தமது புலமையைப் பூசுரருக்கு நல்கி, தமது நாவன்மையை நாட்டுப் பற்றுள்ளங்கொண்ட மக்கள் பெருக வேண்டும் என்ற நன்னோக்கத்தோடு உதவிய திரு.வி.கல்யாண சுந்தரனார், அந்த தராசுக்கு ஏற்றவராகக் கருதப்படவில்லை. தென்னாட்டுத் திலகர், தொழிலாளர் தலைவர், இன்று இந்து மகாசபைத் தலைவர், வைத்தியர் வரதராஜுலு, தராசு எடுத்தபோது ஆசிரியரின் கவனத்துக்கு வரவேயில்லை. பெரியார் இராமசாமிதான், ஆசிரியர் தொடக் கூடாத பேர்வழி! தொட்டுத் தராசில் எடுத்துப போட்டாலும், எடை காட்டுவதற்குள் தராசு அறுபடும. எனவே, அவரைச் சுதேசமித்திரன் ஆசிரியர் தமது தராசுக்கு எடுக்காதது குறித்து நாம் கவலை கொள்ளவில்லை. நாம் கேட்கிறோம், தராசிலிட வேண்டிய தகுதி படைத்த தேசீத் தலைவர்கள், சி.ஆர்.ஆச்சாரியார், எஸ்.எஸ்.மூர்த்தியார், சீமான் எஸ்.எஸ்.ஐயங்கார் ஆக மூவர்தானா? இந்தத் தமிழகத்திலே, நூலில்லாத ஒருவர் கூடவா, அதற்குத் தகுதியுடையவல்ல!

டாக்டர் சுப்பராயன், நண்பர் நாடிமுத்து, தீரர் இரத்தினவேலுத் தேவர், நாச்சியப்பர், முத்துரங்கர், பக்தவச்சலம் என்ற தேர்தல் முழக்கிகள் பட்டி வருகிறதே, கவனமுண்டோ! அவர்களிலே ஒருவர் கூடவா தராசுக்கு ஏற்றவரல்ல! காங்கிரஸ் கூடாரத்திலே உள்ள தமிழ்த் தோழர்கள் இதற்குப் பதில் கூற வேண்டாமா?
தேசீயத்துக்கு மூவர் - பிரம்மம்! திருப்தி அடையவில்லை தராசு ஆரியர்!

பத்திரிகை ஆசிரியார்களிலே மூவர், மூன்றுவித அரங்கசாமிகள்!! டாக்டர் நாயர் என்றொருவர்கூட பத்திரிகையிலே எழுதுவார் என்பதும், அவருடைய தலையங்கங்களைக் கண்டு ஆங்கிலர் திகைப்பர். ஆரியர் இரகசியமாகப் படிப்பர் என்பதும தராசு ஆசிரியருக்குத் தெரியும். சர்.இராமசாமி முதலியாரின் ரசமான தலையங்கங்கள், தராசு ஆசிரியருக்கத் தெரியும். ஆனால் அவர்களைப்பற்றியெல்லாம் எழுதவா, அவர் எழுதுகோல் பயன்படுவது!! மற்றும் எத்தனை எத்தனையோ தமிழரகள் உண்டு. பற்பல துறையிலே விற்பன்னர்கள். ஆனால், தமிழர் எனற பண்டம், பார்ப்பனத் தராசு ஏறுமா?

அவர்கள் கூசாமல், குமுறாமல், தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவர்களிடம் சிக்கியுள்ள தமிழர்கள், முகங்கோணாமல், முறிச்சீட்டில் கையொப்பமிட்டுவிட்டு அவர்கள் என் என்பதற்குள் எண்ணெயாக நிற்கின்றனர். இந்நிலையிலே, ஆரியத் தராச, ஆரியப் பண்டமன்றி வேறு எதை எதற்கும்? ஐயோ! காங்கிரஸ் தமிழா! கருத்தை இழந்தாயே! இது என்ன வாழ்வு!!

நாடு முழுவதும் கலங்குகிறது. பிரேத அடக்கத்தின்போது மந்திரிகள் கண்ணீர் சொரிகின்றனர். சர்ச்சிலும், அமெரியும், சாம்ராஜ்ய மணி ஒன்று போய்விட்டதே என்று சோகிக்கின்றனர். பஞ்சாப் கவர்னர் கல்லறை வரை வந்திருந்து மரியாதை செலுத்துகிறார்; சர்.சிக்கந்தரின் திடீர் மரணம் கேட்டு, சகலரும் திடுக்கிட்டுப் போயினர். பிணத்தையுங் கூடத் தராசு ஆசிரியர், தமது பத்திரிகையிலே எடைபோட்டுப் பார்த்துத்தான் தமது கருத்தைக் கூறியிருக்கிறார். படியுங்கள். சுதேசமித்திரன் சிக்கந்தர் மறைவு பற்றி எழுதியுள்ள தலையங்கத்தை.

சர்.சிக்கந்தர், தைரியமற்றவர்; ஏனெனில் சுயநலக்காரர்; தேச நன்மையை வளர்க்கவில்லை; பதவி மோகம் கொண்டவர்; வெறும் அரசியல்வாதி, அவர் மறைவு நாட்டுக்கு நஷ்டமல்ல.

இதுதான் தோழரகளே மித்திரனின் எடை! இவ்வளவு பச்சையாகவா சொன்னான் மித்திரன் என்று கேட்பீர்கள். டிசம்ப 28-ந் தேதி தலையங்கத்திலே வரும் பீழ்க்கண்ட வாசகங்களின் கருத்து என்ன என்பதை நீங்களே கூறுங்கள். நேர்மையில் நாட்டங்கொண்டவர்கள், மனிதத்தன்மையிலே அக்கரை கொண்டவர்கள், கற்றறையில் கேலி செய்யலாமா என்பதையும் கவனியுங்கள்.

எது சரியென்று தமக்குத் தோன்றியதோ அதைத் தைரியமாகச் சொல்லத் தயங்கினார் - இது மித்திரன் வாசகம். ஏதோ அதை தைரியமாகச் சொல்லப் பகிரங்கமாக வர்பறுத்துவது. தமது சொந்த நலத்திற்கு உகந்ததல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். இது மித்திரன் வாசகம். கருத்து என்ன? சர்.சிக்கந்தர் சுயநலக்காரர்.

தேசநலத்தை வளர்த்திருக்கக் கூடிய பல ஆரிய சந்தர்ப்பங்களை இழந்தார் - இதுவும் மித்திரன் மொழி. கருத்து யாது, நேசநன்மைக்காக காரியத்தை சிக்கந்தர் செய்யவில்லை.

பதவி விஷயத்தில் அவருக்குள்ள பிரேமை பற்றியும் சந்தேகத்திற்க இடமில்லை - இதுவும் மித்திரன் வாசகம். என்ன இதன் கருத்து? சர்.சிக்கந்தர் பதவி மோகம் கொண்டவர். இவை எல்லாம் வெறும் அரசியல்வாதிக்கு இருக்கக்கூடிய குணங்களையே காட்டுகிறது. இதுவும் மித்திரன். இதன் கருத்து என்ன? சிக்கந்தர் வெறம் அரசியல்வாதி.

தேசத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தையோ அவர் எத்தகையவராயிருந்திருக்கக்கூடும் என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். இது மித்திரன் மொழி. மருந்து என்ன? அவர் மரணம், நாட்டுக் கு ஒரு நஷ்டமல்ல. அவர் ஒரு அல்லாபக்ஷாகவோ, அபுல் கலாம் ஆஜாதாகவோ, நடந்து கொண்டிருந்தால், அப்போது நாட்டுக்கு நஷ்டம் அவர் மறைவால் என்று சொல்லுவோம் என்கிறார் மித்திரன். சர்.கே.வி.ரெட்டியாரின் மறைவின்போதும், இதைப் போலவே கேவி செய்தனர். சர்.சிக்கந்தர் விஷயமாகவும் அதுவே நடந்தது. ஆனால், மித்திரனை தமிழரும் முஸ்லிமும் ஆதரித்தும் வருகின்றனர். தமது இனத் தலைவர்களை, அவர்கள் மறைந்த பிறகு இழித்துப் பழித்துப் பேசும் ஈனச் சுபாவம் வெளிப்படையாகத் தெரிந்தும், தமிழரும் முஸ்லிமும், ஆரிய ஏடுகளை ஆதரித்துவந்தால் பிறகு ஏன், ஆரியம் தலைவிரித்தாடாது என்று கேட்கிறேன். என்றுதான், இந்த ஒரு இனமும் ஆரிய ஆதிக்கத்தை அறுத்தெறிவார்களோ!
(திராவிடநாடு - 03.01.1943)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai