சிறப்புக் கட்டுரைகள்


தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?
வ.வேம்பையன்
(அமைப்பாளர் தலை அறிவியல் மன்றம், பகுத்தறிவாளர் கழகம், கல்பாக்கம்-603102.

(பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை பொங்கல் விழாவில் இனமான காலவலர் கி.வீரமணி அவர்கள் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள்தான் என்பதை பேரவை தங்கள் கொள்கைகள் ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். பேரவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது உறுப்பினர்களுக்கு பொங்கல் நாள் தமிழ்ப்புத்தாண்டு நாள் என்று வாழ்த்து அட்டை அனுப்பிக் கொண்டிருக்கிறது) (ஆர்.)

உலகில் மாந்தர் தோன்றிய முதல் இடம் குமரிக் கண்டம். அவர்கள் பேசிய முதல் மொழி தமிழ். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி.

தமிழ்க் குடியில் பிறந்த ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியர் தொன்மைச் சிறப்புக்குத் தொல்காப்பியத்தையும் வான்புகழ் வள்ளுவர் வாழ்வியல் சிறப்புக்கு வளளுவத்தையும் முத்தமிழ் முனிவர் இளங்கோ அடிகள் முத்தமிழ் சிறப்புக்குச் சிலப்பதிகாரத்தையும் இயற்றியத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் புகழும் பெருமையும் சேர்த்தார்கள்.

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

ஆடவர், மகளில் பிறந்த நாள், நாழிகை முதலியவற்றைக் குறித்து ஒவ்வொருவருக்கும் பிறப்பியம்(ஜாதகம்) எழுதி வைத்துப் பாதுகாக்கும் பழக்கம் தமிழர்களிடம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய தமிழர்கள் - தனி மனித வாழ்க்கையில் தனிக் கவனம் செலுத்திய தமிழர்கள் குடும்பம், குமுகாயம்(சமுதாயம்), நாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் வரலாறுகளையும் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஆண்டுக் கணக்கால் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது பெரிதும் வருந்துதற்குரியது.

இக்குறைக்குக் காரணம் எது? யார்? தனி மனிதச் சிறப்பையும் செல்வாக்கையும் பெயரையும் புகழையும் போற்றுகின்ற அளவுக்கு மொழியையும் இனத்தையும் நாட்டையும் பொதுவாகப் பேணும் நல்ல கொள்கை தமிழர்களிடையே வேரூன்றவில்லை போலும்.

தலை நகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.

தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:
ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார். எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
(அபிதான சிந்தாமணி - பக்கம் 1392)

ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள். அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும். இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?

இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இயேசு கிறித்துவை வைத்துக் கிறித்தவர்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. முகமது நபியை முதலாகக் கொண்டு முசுலீம்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. சாலிவாகனனை வைத்து வட மொழியாளர்களுக்குத் தொடர் ஆண்டு இருக்கிறது. புத்தர்களுக்குத் தொடர் ஆண்டு புத்தர் பெருமானை வைத்துப் போற்றப்படுகிறது. சமணர்கள் மகாவீரரை வைத்துத் தொடர் ஆண்டு பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் கொல்லம் தோடர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்கள். வங்காளிகளுக்கு, பார்சிகளுக்கு, யூதர்களுக்கு, சௌராட்டிரர்களுக்கு ஒவ்வொரு தொடர் ஆண்டு உண்டு.

ஆனால், ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழனுக்கு, உலக முதல் மொழியாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஒருவர் பெயரில் தொடர் ஆண்டு இல்லையே!

இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பேரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர். சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்

என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்தும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை நன்கு தெளிவு படுத்துகிறது.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அன்று பெரும் பொங்கல். பொங்கல் நாளன்று புத்தாண்டு தொடங்குவதால் பொங்கல் புத்தாண்டு என்று போற்றிப் பின்பற்றப்படுகிறது.

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும் மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21=2023.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் திராவிடர் கொண்டாட வேண்டிய நாள்கள் பற்றிய விவரத்தை 29.12.1945 நாளிட்ட குடியரசு இதழில் வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் புத்தாண்டு நாள் என்றே குறிப்பிட்டுள்ளார்.

உலகில் உள்ள நாடுகள் 269 உலக நாடுகள் மன்றத்தில் (யு.என்.ஓ) சேர்ந்துள்ள நாடுகள் 175 தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.

72 நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொங்கல் இடும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று பின்பற்றுகின்றனர்.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள் என்று 49 பெருமக்களைக் கொண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்ற முடிவு செய்து வழக்கில் கைக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மலையாளம் மறைமலை அடிகள் நிறுவிய தனித் தமிழ் இயக்கத்தினரும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துள்ள உலகத் தமிழ்க் கழகத்தினரும் தை முதல் நாள் என்றே பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.

தமிழ் நாள், கிழமை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள், நினைவு மலர்கள் தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை வெளியிட்டும் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று கைக் கொண்டும் பரப்பியும் வருகின்றன.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை மேலும் மேலும் வளர்ப்பதன் மூலம் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் இடம் பெற்று வரும் தமிழினக் காவலர் மானமிகு வீரமணி அவர்கள் 14.01.1990 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடந்த பொங்கல் புத்தாண்டு விழாவில்,
தமிழ்ப் புத்தாண்டு என்பது பொங்கல் முதல் நாள்தான் என்பதை இனிமேல் நாம் ஒரு பண்பாட்டு இயக்கமாகத் தொடங்க இருக்கிறோம். தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சம்பந்தப்பட்ட அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் மிகுந்த கனிவான ஒரு வேண்டுகோளாகத் திராவிடர் கழகம் வைக்க விழைகிறது.

ஒரு நாட்டில் ஒரு முறையைப் பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால் அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று உலகில் 72 நாடுகளில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்களின் இதயத்தை ஆள்கின்ற மாமன்னன் நம் அண்ணா கூறியுள்ளார்.



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai