தமிழன் கால்வாய்
அறிஞர் அண்ணா
தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய்
எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும்
அவசியமும் ஆகிவிட்டது. சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால்
எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
தனுஷ்கோடியைக் கடல் விழுங்கியதால் ஆயிரக்கணக்கான
மக்கள் வீடு வாசல் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு
கொடுக்க சேதுக் கால்வாய் திட்டத்தை அமுல் நடத்தவேண்டும் என்று
வற்புறுத்தப்படுகிறது.
வாழ்விழநத மக்களுக்கு வாழ்வு கொடுக்க இத்திட்டம்
உதவுவது ஒருபுறம் இருக்க இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவோ நன்மைகள்
கிடைக்கும்.
திட்டத்தின் கதை
சேதுக் கால்வாய் திட்டம் இன்று நேற்று அல்ல, வெள்ளைக்காரர்கள்
காலம் முதலே பரிசீலனையில் இருந்துவரும் திட்டம் ஆகும்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்தும் பம்பாய், கொச்சி,
போன்ற துறைமுகங்களில் இருந்தும் சென்னை கல்கத்தா, விசாகப்பட்டினம்,
ரங்கூன் முதலிய துறைமுகங்களுக்கும் போகவேண்டிய கப்பல்கள் இலங்கையைச்
சுற்றிக்கொண்டு (தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல்) வரவேண்டி
உள்ளதை வெள்ளைக்காரர்கள் உணர்ந்தார்கள்.
கால்வாய்
எனவே மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் கிழக்குக் கடற்கரை
நகரங்களுக்கு இலங்கையைச் சுற்றாமல் சுலபமாகக் கப்பல்கள் போய்வர
என்ன வழி என்று யோசித்தார்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல்
ஆழம் இல்லாமல் இருப்பதால்தான் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு
வரவேண்டியிருக்கிறதென்றும் எனவே ஆழப்படுத்தி கால்வாய் அமைத்தால்
இந்த குறை நீங்கும் என்றும் கண்டார்கள்.
திட்டம்
துறைமுக எஞ்சினீயரான பிரிஸ்டோ என்பவர் ஒரு கோடியே 70 லட்சம் செலவில்
ஒரு திட்டத்தை தயாரித்து அப்போதைய சென்னை அரசாங்கத்திடம் கொடுத்தார்.
ஆனால் அது ஏற்கப்படவில்லை.
பிறகு வேறு சிலர் திட்டங்கள் தயாரித்தார்கள்.
1902-ம் ஆண்டில் தென்னிந்திய ரெயில்வே வருடத்துக்கு ஏழரை லட்சம்
ரூபாய் வருமானம் கிடைக்குமென்று ரெயில்வே நிர்வாகம் திட்டம் தயாரித்தது.
ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மேல்
நடவடிக்கைகள் எடுத்துககொள்ளப்படவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மீண்டும் சேதுக்
கால்வாய்த் திட்டம் அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்கு வந்தது.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் 21 கோடி ரூபாய் செலவில்
திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் டெல்லி சர்க்காரிடம் தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த திட்டப்படி 45 அடி நீளம், 150 அடி அகலம்,
36 அடி ஆழமுள்ள கால்வய் வெட்டி அதில் கப்பல் போக்குவரத்து நடைபெறும்.
திட்டத்தின் நன்மைகள்
சேதுக் கால்வாய் திட்டத்தினால் பல நன்மைகள் ஏற்படும்.
கன்னியாகுமரியிலிருந்து ஒரு கப்பல் சென்னைக்கு
வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், தற்போது அந்தக் கப்பல் சென்னைக்கு
வருகிறதென்றால் அது இலங்கையைச் சுற்றிக்கொண்டு வரவேண்டும். கால்வாய்
அமைக்கப்பட்டுவிட்டால் 368 மைல் மிச்சமாகும்.
இதேபோல் விசாகப்பட்டினத்துக்கு 304 மைல்களும்,
கல்கத்தாவுக்கு 265 மைல்களும் மிச்சமாகும்.
தூத்துக்குடி
சேதுக் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டால் தூத்துக்குடிக்கும் சென்னைக்கும்
இடையில் உள்ள தூரம் 316 மைல்களாக இருக்கும். தற்போது தூத்துக்குடியில்
இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு வருவது என்றால் மொத்தம் 750 மைல்
சுற்றவேண்டிஉள்ளது.
அதாவது பழைய தூரத்தில் 58 சதவிகிதம் குறைந்துவிடும்.
இதேபோல் கொச்சியில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய
கப்பலின் தூரத்தில் 44 சதவிகிதமும், தூத்துக்குடியில் இருந்து
கல்கத்தா வரவேண்டிய தூரத்தில் 26 சதவிகிதமும், பம்பாயில் இருந்து
கல்கத்தா வவேண்டிய தூரத்தில் 16 சதவிகிதமும் மிச்சமாகும்.
நேரம் மிச்சம்
இது மட்டும் அல்ல இலங்கையை சுற்றுவதால் கப்பல்கள் கூடுதலாக ஒன்றரை
நாய் பிரயாணம் செய்யவேண்டி உள்ளது.
இந்த ஒன்றரை நாளுக்கும் கப்பல் செலவு ரூபா ஏழாயிரமாகும்.
சேதுக் கால்வாய் அமைத்தால் இந்தப் பணம் மிச்சப்படும்
விரைவாகவும் கப்பல் போய்வரும்.
துறைமுக வளர்ச்சி
மேலும் இந்தக் கால்வாய் திட்டத்தினால் தூத்துக்குடி துறைமும் வளர்ச்சியடையும்.
அங்கு ஏற்றுமதி இறக்குமதி அதிகமாகும்.
அத்துடன் நமது கப்பல்கள் வெளிநாட்டு நீர்பரப்பில்
ச்ல்லாமல் இந்திய நீர்பரப்பில் சென்றுவர வழி ஏற்படும்.
(அறிஞர் அண்ணா - காஞ்சி - 25.04.1968)