சிறப்புக் கட்டுரைகள்

தமிழக மறுமலர்ச்சியில்
அறிஞர் அண்ணா

முனைவர் வெ.அ. நாகரத்தினம்
ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி
திருப்பூர்.

20–ஆம் நூற்றாண்டின் இருண்டிருந்த தமிழகத்தின் விடிவெள்ளி அறிஞர் அண்ணா. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க் குடியின் தொன்மையையும் அதன் பெருமையையும் உணர்ந்த அவர், சங்க காலத்திற்குப் பின்பு, மாற்றாரின் வருகையால் தமிழகம் தனக்கேயுரிய நிலையிலிருந்து தாழ்ந்து இருந்ததை அறிந்தார். அதற்கான சரியான காரணங்களை அறிந்து அவற்றை மக்களுக்குப் புகட்ட வேண்டுமென்பதில் உறுதிபூண்டார். தமிழர்கள் அறியாமை இருட்டிலிருந்து நீங்கி விழிப்புணர்வினைப் பெற வேண்டும். மூடப் பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பது அவருடைய கொள்கை. மேடு பள்ளமற்ற ஒரு சமுதாயமாகத் தமிழகம் இருக்கவேண்டும் என்பதே அவருடைய லட்சியப் பாதையாக இருந்தது.

எங்கு தவறு நேரினும் அதனைத் தட்டிக்கேட்க மக்கள் முன்வரவேண்டும். நியாயத் தராசின் முன் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஏழைகளையும் அப்பாவிகளையும் உழைத்து வாழ்கின்ற மக்களையும் மதிக்க வேண்டும். அவர்களை ஏமாற்றக் கூடாது. மக்கள் தங்கள் உழைப்பால், அறிவால் முன்வரவேண்டும். என்று குரல் கொடுத்தார். பெண் விடுதலை வேண்டும என்பதை விரும்பினார். இப்படி நன்மைகள் மட்டுமே இருந்து தீமைகள் களையப்பட வேண்டும் என்பதில் தெளிவுடன் இருந்தார். தமிழ்ச் சமுதாயம் மறுமலர்ச்சியடைந்து புத்தொளிபெற வேண்டும். இவற்றினை மனதில் கொண்டு அவர் ஆற்றிய உரைகளும், எழுதிய இலக்கியங்களும் விளங்குகின்றன. அடுக்குமொழி பேசி மக்களின் மனம் கவர்ந்த அறிஞர் அண்ணா, எழுதாத இலக்கியங்களே இல்லை எனலாம். உரைநடைகள், நாடகங்கள், நவீனங்கள், சிறுகதைகள், குட்டிக்கதைகள், கவிதைகள் என்று ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

மூவேந்தர்களின் ஆட்சிக்குப் பின்பு, தமிழகம் சிதைந்து ஆங்காங்கே சமீன்தார்கள், மிராசுதாரர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களின் அதிகாரம் 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஓங்கியிருந்தது. அவர்களும் மக்களைப் பல்வேறு நிலைகளில் கொடுமைப் படுத்தினர் என்பதுதான் வரலாறு. உழைக்கும் மக்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார். அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து அவர்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டனர். விதவைப் பெண்களையும் தாசிகளையும் ஆசைநாயகிகளாக்கி அவர்களுக்காக எத்தனையோ சொத்துக்களை வாரி இறைத்தனர்.

மக்கள் அறியாமையில் இருப்பதற்கும், முன்னேறாததற்கும் மிட்டாமிராசுதாரர்களின் அடக்குமுறை, அச்சுறுத்தல், செல்வாக்கு, ஆணவம் ஆகியன காரணங்களாக இருப்பதை உணர்ந்து அவற்றிலிருந்து விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தமது நூல்களில் வெளிப்படுத்தினார். யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற எழுச்சிக்குரல் அண்ணாவின் குரலாக இலக்கியங்கள் எங்கும் எதிரொலிக்கிறது. ஏழைகளின் கண்களில் நீர் வருவதற்கும் அவர்கள் வறுமையில் வாடுவதற்கும் செல்வந்தர்களின் சுயநலமே காரணம். உழைக்கும் மக்களின் வாழ்வை மலரச் செய்யவேண்டும். தமிழன் தமிழனாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் பொன்மொழிகளை ஏற்று நடக்க வேண்டும். பிற நாட்டவரின் கருத்துக்களுக்குத் தங்களை அடிமை
யாக்காமல் சுயமாக எண்ணுகின்ற அறிவினைப் பெறவேண்டும். தமிழகம் மறுமலர்ச்சியடைய வேண்டுமென்றால் விழிப்புணர்ச்சியையும் பகுத்தறிவினையும் பெற வேண்டும். இதனை பிடி சாம்பல், அப்போதே சொன்னேன், புன்னகை, நீதிபதி வக்கீலான கதை, அரசாண்ட ஆண்டி, ஓர் இரவு, பார்வதி பி.ஏ., வேலைக்காரி, நீதி தேவன் மயக்கம், பொங்கலோ பொங்கல் (கட்டுரைகள்), குட்டிக் கதைகள், சட்டமன்ற சொற்பொழிவுகள் முதலியன.

இன்னும் பல்வேறு நூல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மேற்சொன்ன கருத்துக்களையே, தமது நூல்கள் எங்கும் அடிக் கருத்துக்களாகச் சொல்லியுள்ளார். பாரதி எவ்வாறு ஆத்ம விடுதலையை, நாட்டு விடுதலையை அடிப்படையாகக் கொண்டு தன் கவிதை எங்கும் எழுதியுள்ளாரோ, அது போன்று இவர் பகுத்தறிவையும், மூடப்பழக்கவழக்கத்தையுங் குறித்து எழுதியுள்ளார். அதற்கு ஓர் இரவு நாடகம் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. ஓர் இரவிற்குள் நடந்து முடிந்த பல்வேறு காட்சிகளைச் சுவையுடன் நாடகமாக்கியுள்ள தன்மை வியக்கத் தக்கது. இந்நாடகம் 49 காட்சிகளைக் கொண்டு அதற்கேற்ற நாடக மாந்தர்களால் நடிக்கப் பெற்றுள்ளது.

நாடகத்தின் சுருக்கம் : கருணாகரத்தேவர் தன் மகள் சுசீலாவிடம், ஜெகவீரனைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் நாளை நிச்சயதார்த்ததம் என்றும் கூறுகின்றார். சுசீலா டாக்டர் சேகரைக் காதலிப்பதால், ஜெகவீரனை மறுத்துவிடுகிறாள். ஜெகவீரன் தேவரைப் பயப்படுத்துகிறான். தேவர் சுசீலாவிடம் கெஞ்சுகிறார். சுசீலா இறந்து விட நினைத்து அவள் அறையில் சென்று அழுகிறாள். அப்போது அங்கு திருடன் உள்ளே நுழைகிறான். திருட வந்த அவனிடம் அன்பு, காதலைப் பற்றிப்பேசி அவள் மனதை மாற்றுகிறாள். அவனிடம் தன் காதலை எடுத்துக் கூறுகிறாள். எப்படியாவது ஜெகவீரனை ஓடச் செய்ய நினைத்து, சுசீலா திருடனைக் காதலனாக நடிக்கும்படிக் கூற அப்போது சேகர் அங்கே வருகிறான். சேகர் தவறாக சுசீலாவைப் புரிந்துகொண்டு செல்ல, ரத்னம் (திருடன்) அவனிடம் சென்று உண்மையைக் கூற, சேகர் சுசீலாவிடம் மன்னிப்புக் கேட்க வர, தேவர் தன் வாழ்வில் நடந்த உண்மைகளைக் கூற, சேகரும், ரத்னமும் ஜெகவீரன் இருக்குமிடத்திற்குச் சென்று அவனை அடித்து அவள் வைத்துள்ள போட்டோவைப் பிடுங்கிக் கொள்ள, ரத்னம் அவனிடமுள்ள பணத்தை எடுத்துக்கொண்டு வெளிவர இறுதியில் தேவரின் பயத்தைப் போக்கி, சுசீலாவுடன் மகிழ்கிறான்.

இந்நாடகத்தை மாலை நேரத்திலிருந்து தொடங்குகிறார். எடுத்தவுடன் ஒரு வீட்டில் சிறுமி தன் தாயிடம், மேல் மாடிக்குச் சென்று நிலாவினைக் கண்டு களிக்கலாம் என்று கூற, தாய் தன் கணவன் குதிரை ரேசுக்காக அலைவதை நினைத்துக் கவலை கொண்டு சிறுமியுடன் செல்ல மறுக்கிறாள். இன்னொரு வீட்டில் இளம் விதவைப் பெண்ணைத் தனியே வீட்டில் இருக்கச் செய்துவிட்டு ஒரு தந்தை தன் இளம் மனைவியுடன் சினிமாவிற்குச் செல்கிறார். இன்னொரு இடத்தில் ஊர் வம்பலர்கள் சைவம் பெரிதா? வைணவம் பெரிதா என்று பேசி வம்பளந்து கொண்டிருந்தனர். இவ்வாறிருக்க ஒரு சோலையில் சுசீலா தன் காதலனுடன் பேசி மகிழ்கிறாள். அப்போது வேலைக்காரி சுசீலாவைத் தேவர் அழைத்து வருவதாகக் கூறி அழைத்துச் செல்கிறாள். இவ்வாறு நாடகத்தின் தொடக்கம் அமைகிறது.

மேற்சொன்ன இவையாவும் இரவில் நடந்த காட்சிகளாக (நிகழ்ச்சிகளாக) விளங்குகின்றன. அவற்றில் சமீன்தாரர்கள் – மிட்டா மிராசுதாரர்களின் அக்கிரமங்கள் விதவைப் பெண்களின் நிலைஏழை மக்களின் நிலை ஆகியன முக்கியமாக இடம் பெறுகின்றன. இந்நாடகத்தில் கருணாகரத்தேவர், ஜெகவீரன், சீமான் செட்டியார் (மிட்டா மிராசுதாரர்) ஆகியோர் சமீன்தாரர்களாக, செல்வந்தர்களாக விளங்குகின்றனர்.

விதவை நிலை: கணவனையிழந்த இளம் விதவைகள் ஆசைநாயகிகளாக (மிராசுதாரர்களுக்கு) ஆக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு, விதவை சொர்ணம் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். அண்ணாவின் இலக்கியங்களில் இத்தகையப் பெண்களைப் படைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தேவர் சொர்ணத்தின் மீது ஆசை காட்டி ஏமாற்றிவிடுகிறார். அவள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் மருதூர் மிட்டாதாரரின் வைப்பாட்டி ஆனாள். தான் ஏமாறியது உண்மை என்றாலும் அது தேவரால்தான் என்ற உண்மையைத் தைரியமாக வெளிப்படுத்தும் பெண்ணாகவும், பணக்காரர்களின் கேவலமான போக்கினையும் வெளிப்படுத்துகிறாள். மிட்டாதாரருக்கு ஆசை நாயகியாக இருந்த சொர்ணம் அவ்விடம் வந்த தேவரைப் பார்த்தவுடன் மீண்டும் காதல் பிறந்து விடுகிறது. அவர்கள் இருவரும் பேசும் பேச்சுக்கள் கேலி நிறைந்ததாகவும், அபலைகள் செல்வந்தர்களிடம் மாட்டிக்கொண்டு சீரழிவதையும் அவர்களைக் கேவலமாக நினைப்பதையும் குறிப்பிடுகிறார்.

சொர்ணம் தேவரிடம், காதலிக்கத் தெரிந்த உமக்குக் கடமையின் இலட்சணமும் தெரிந்தால் நான் இந்த கதிக்கு ஆளாகியிருக்க மாட்டேன். உன் நெஞ்சியிலே வஞ்சகம் இருந்தது. கொஞ்சுனீர்! பிறகு-, விதவை நமது அந்தஸ்தை, குலப்பெருமையைக் கொல்லும் நஞ்சு என்று எண்ணிக் கைவிட்டீர் (ப:52) என்று சொர்ணம் சொல்ல, தேவர், சமூகத்தின் மீது குற்றம் சுமத்த அதற்கு அவள் உமது மனம் ஒன்றுமே சொல்லவில்லையே? மாளிகை வாசம் இருந்தால் என்ன, மனம் அங்கே மட்டும் இரும்பா? என்று கேட்கிறாள். இப்படிப் பேசியதுடன் நில்லாமல், மிட்டாதாரரால் துரத்தி விரட்டப் பட்ட பின் எப்படியாயினும் என்னை ஏற்றுக்கொள், கைவிடாதே என்று கெஞ்சுகிறாள். அண்ணா படைக்கும் பெண் பாத்திரங்கள் பேசும் பாத்திரங்களாக, உரிமைகளைக் கேட்கும் பாத்திரங்களாக விளங்குகின்றன.

ஏழைகளின் நிலை: ஏழைகளின் இதயதெய்வம் அறிஞர் அண்ணா என்பதற்கேற்ப ஏழைகளுக்குத்தான் இதயம் உள்ளது என்று குறிப்பிடுகிறார். செல்வந்தர்களின் அக்கிரமங்கள் இருக்கும் வரை, ஏழைகள் ஏழைகளாகத்தான் இருப்பர். சொர்ணத்தின் மகன் ரத்னம். கருணாகரத் தேவருக்குப் பிறந்தவன். ஆனால் அவன் ரெபர் மர்டரி ஸ்கூலில் படித்தான். திருடனான அவனை சுசீலா திருத்தினாள். சுசீலாவைச் சேகரிடம் சேர்த்து வைப்பதற்காக, ஜெகவீரன் முன், வருவதற்குப் பதிலாக, ரத்னம் அவனிடம் சென்று உண்மையை எடுத்துரைத்து சுசீலா சேகர் மீது கொண்ட காதல் உண்மையானது என்பதைப் புரிய வைத்தான். அது மட்டுமன்றி, அவன் மூலம் ஏழைகளின் உலகினை வெளிப்படுத்துகிறார். ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளிவந்த போது ஊரிலுள்ள கண்றாவிக் காட்சிகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு வியந்தாராம். அதுபோல ஒரு இரவிலே எங்க உலகிலே நடக்கிற கோரத்தைக் கண்டா, உங்களாட்டம் இருக்கறவங்களெல்லாம் புத்தர் மனசு மாதிரி ஆகிவிடுவீங்க என்று சொல்கிறான் (ப:113) இப்படி செல்வந்தர்களின் வாழ்க்கை நிலையைத் தவிர வேறு உலகங்கள் எத்தனையோ இருக்கின்றன என்று கூறுகிறான்.

மேற்கண்டவாறு, ஓர் இரவில் பல்வேறு காட்சிகளைப் புகுத்தி பல்வேறு சிக்கல்களை வெளிப் படுத்தியுள்ளார். அண்ணா. தனவான்களும், செல்வந்தர்களும் ஏற்படுத்தும் சிக்கல்களும், பிரச்சினைகளும், சமூகத்தின் பண்பாட்டினைச் சிதைத்து விடுகின்றன. ஏழைகள், அப்பாவிகள், பலியாடுகளாக ஆகின்றனர். இந்நிலை மாறித்தான் தீர வேண்டும்! தமிழனும், தமிழகமும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பகுத்தறிவும், விழிப்புணர்வும் நாட்டில் மேலோங்க வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கிறார் இலக்கியங்களில். இவ்வாறு அவர் செய்த தொண்டுகளால்! இன்று தமிழகம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்பது வெளிப்படை.

வாழ்க அண்ணாவின் புகழ்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.