அண்ணா
போற்றிய பெருமக்கள் வரிசையில் - 6
1942
உலக வீரன்
பேரறிஞர்
அண்ணா
அதோ
வருகிறது சிகப்புப் பட்டாளம்! இனி செந்நாய்க் கூட்டத்தின்
மண்டை சிதற சம்மட்டி அடி விழும்! நமது அடிமைச் சங்கிலிகள்
தூளாகும், மீண்டும் சுதந்திரம், மறுபடியும் சோவியத் சுகந்தம்
வீசும், வாழ்வு பரிமளிக்கும். பல வீரரை இழந்தோம், பண்ணை
பாழனாலென்ன? ஸ்டாலின் இருக்கிறார், அவருடைய போர்த்திறமை
நம்மை மீண்டும் விடுவிக்கும்.
ஜெர்மனியரிடம் பிடிபட்ட இடங்களிலே உள்ள ரஷிய மக்களின் நினைப்பு,
பேச்சு இதுவே. ஒவ்வோர் ஜெர்மன் வெற்றியின் போதும், ஒழிந்தது
சோவியத்சேனை, அதனை அழித்தாகிவிட்டது, என்று ஜெர்மன் பிரசாரகர்
கூறுகின்றனர். ஆனால், மீண்டும் மீண்டும், “தீவிர எதிர்ப்பு”
“பெரிய தாக்குதல்” “கோரமான போர்” நடந்தே வருகிறது. ஆத்திரமும்
சலிப்புங் கொண்ட ஒரு ஜெர்மன் ராணுவ நிபுணன், “சோவியத்
படை, பிரம்ம ராட்சசம்போல் இருக்கிறது. |
|
அதன் தலையை வெட்டிக் கீழே தள்ளத்தள்ள,
புதுத்தலைகள் முளைத்துக் கொண்டே வருகின்றனவே” என்று கதறுகிறான்.
நச்சு நினைப்புக் கொண்ட அச்சு நாட்டினனே! சோவியத் மண்ணிலே நெளியும்
புழுவும் போரிடும், பொதுமக்கள் வாழ, போக போகாதிகள் சிலருக்கும்
பீடையும் பிணியும் பாட்டாளிக்கும் என்றிருந்த கொடுமையை அழித்தொழித்த
அந்த வீரபுரியிலே, புல்லும் கல்லுங்கூடப் போர்க்குணமே காட்டும்.
அது வீரர்கள் உலகு! தொட்டால் துவளும் விஷியல்ல! இளித்தால் இணங்கும்
இத்தாலியல்ல. சாமரமுங்கையுமாக நிற்கும் பிராங்கோ வாழும் ஸ்பெயினல்ல!
லெனின் வாழ்ந்த நாடு, நெப்போலியனை விரட்டிய நாடு, அங்கு வீசும்
கடுங்குளிர் காற்றுப்போல் உமது உடலையும் உயிரையும், சோவியத்
மக்களின் போர்த்திறமை உறிஞ்சி எடுத்துச் சக்கைகளைச் சோவியத்
களத்துக்கு எருவாக்கும். பொது உடைமை நாட்டுக்கு நாஜி இரத்தம்
நீராகப் பாய்ச்சப்படுகிறது!
கடுங்குளிர்! விஷம் போன்ற காற்று! சோவியத் மக்களின் சோர்விலாத்
தாக்குதல்! என்று இத்தாலிய ரேடியோ, அழுகிறது, சோவியத் செய்திகளைக்
கூறுகையிலே.
ஸ்டாலின்கிராடுக்குள் ஜெர்மன் படைகள் நுழைந்துவிட்டன. இனி யாராலும்
அவைகளை விரட்ட முடியாது என்று கூறின வீரன் விம்மிக் கிடக்க வேண்டிய
நிகழ்ச்சிகள் இப்போது நடைபெறு
கின்றன.
பிடிக்க வந்த படை, பிடிபடாமல் தப்பினால் போதும், என்று திணறுகிறது.
ஸ்டாலின்கிராட் போர்முனையிலே 60 மைல் ஓட்டம் - பின்புறமாக!!
கடந்த பதினைந்து நாட்களுக்குள், சோவியத் படைகள், 2000 சதுரமைல்
விஸ்தீரணமுள்ள களத்தை எதிரியிடமிருந்து மீட்டு விட்டன.
கிழக்கே டான் நதி, வரனேஷ் ரஸ்டா ரயில்பாதை மேற்கே, வரனேஷ் ஸ்டாலின்கிராட்
ரயில்பாதை தெற்கே, அமைந்த முக்கோண வட்டாரம் இப்போது ரஷியரிடம்
பிடிபட்டுக் கொண்டது.
ஸ்டாலின் கிராட் பகுதியிலே இருக்கும் ஜெர்மன் படைகளைக் காப்பாற்ற
விரைந்தோடி வந்த 6 ஜெர்மன் பட்டாளங்கள், தம்மைக் காப்பாற்றிக்
கொண்டால் போதுமென்று ஓடுகின்றன புறமுதுகுகாட்டி! கொடோலினி
கோவோ ரஷியரிடம் பிடிபட்டது.
இத்தகைய வீரதீரச்செயல் புரிந்து வெற்றிகள் பெற்று வரும் சோவியத்
படைகளுக்கு, இப்போது, ஸ்டாலின், போர்த்திட்டம் வகுத்துக் கொடுத்து
நடத்தி வருகிறார். அவருடைய யூகமும், திறமையுங் கண்டு நேசநாட்டுத்
தலைவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர். சோவியத் வெற்றிக்கானவைகளைச்
செய்ய, உதவ, ஒவ்வொருவரும் முன்வருகின்றனர். எந்த ஸ்டாலின், மதகுருமார்களின்
ஆதிக்க ஒழிப்புக்கான புரட்சியிலே பங்கு கொண்டாரோ, எவர் மதவெறியைக்
கொண்டு மக்களை மாக்களாக்கும் மதோன்மத்தர்களை மட்டந்தட்டினாரோ,
எவர் பொதுஉடைமை நாட்டின் தலைவராக இருக்கிறாரோ எவர், போரில்
வெற்றிபெற, இராணுவ முகாமமைக்கு வேண்டும், பாசறை அடைய வேண்டும்,
புதுப்படைகள் திரட்ட வேண்டும் என்பதை உணர்ந்து செய்து, மாதாக்
கோயில் சென்று மணி அடித்துப் பரமண்டலத்திலுள்ள பிதாவுக்கு மனு
அனுப்புவதைவிட, மக்களிடம் சென்று, எங்கள் சொத்து, சுகம், சுதந்திரம்,
மானம் எனும் மதிப்பிடற்கரிய செல்வத்தை சுரண்டவரும் மாற்றானை ஒழித்து
விடுக!” என்று வீரமொழி புகல்வது சரி என்றறிந்து அதைச் செய்கிறாரோ
அந்த ஸ்டாலினுக்கு, நாத்திகனென்றும், நீசனென்றும், நிந்தனை செய்வோனென்றும்,
ஏசுவின் கருணையை இழந்தவரென்றும், மீளா நரகத்தில் விழவேண்டியவனென்றும்,
தூற்றும், சபிக்கும், குருமார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமக்
குரு, சில ஆயிரம் ரூபிள்களை அனுப்பி போர்ச் செலவுக்குப் பயன்படுத்திக்
கொள்க என்று கூறினார்! மதகுருமார் மட்டுமா, ஏசுநாதருங்கூட, அந்த
இணையில்லா வீரனின் தீரச் செயலைக் கண்டால், ஆயிரங்களா, கோடிக்கணக்கில்
ரூபிள்களை அவர் காலடியிலே கொட்டி “எடுத்துப் பயன்படுத்து போர்ச்
செலவுக்கு” என்றே கூறுவார்! 80 டிவிஷன் ஜெர்மன் படைகள் அழியப்போகின்றன!
ரஸ்டாவ் விழப்போகிறது! ஹிட்லர் மருளுமளவு நஷ்டம் ஏற்படப்போகிறது.
கிருஸ்தவ உலகிலே இன்று ஏசுநாதர் காண்பது என்ன? ஒரு கன்னத்தில்
அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட போதித்தவரின் கோட்பாட்டைத் தழுவிய
மக்கள், ஒரு குண்டுக்கு ஒன்பது, என்று இரத்தத்திற்கு இரத்தம்,
கொலைக்குக் கொலை என்றுங் கூறிக்காரியத்தை நடத்தக் காண்கிறோம்.
ஸ்டாலின் நாட்டிலே, அதுவல்ல தத்துவம். பாடுபடு! பலன்பெறு! அந்த
உரிமையை பறிக்க யார் வரினும், அவன் கையிலே ஜெபமாலை இருப்பினும்
மெஷின், பீரங்கி இருப்பினும் அவன் யோகி என்றுரைப்பினும் மன்னாதி
மன்னன் என்று கூறினாலும், அவனை ஒழி - என்பதே சோவியத் மக்களுக்கு
லெனின் தந்த கட்டளை. அந்த லெனின் வழி வந்த வீரன், சோவியத் நாட்டை
மீட்பதன் மூலம், உலகுக்குச் செய்யும் தொண்டு மகத்தானது. ஆகவேதான்
டைம் என்ற அமெரிக்க பத்திரிகை “இந்த ஆண்டின் உலக வீரன்” என்று
ஸ்டாலினை குறித்து எழுதிற்று. 1941ல் ரூஸ்வெல்ட்டுக்கும், 1940ல்
சர்ச்சிலுக்கும் இப்பட்டம் தரப்பட்டது. வாழ்க ஸ்டாலின்! வெல்க
சோவியத் படைகள்!
3.1.1943
|