நான் பார்த்த அண்ணா!
(எஸ்.பி.முத்துராமன்)

ஒவ்வொரு இளைஞனும் தன் பருவ வயதில் ஒரு பெண்ணின் தாக்கமும், ஒரு தலைவனின் தாக்கமும் இல்லாமல் கரையேற முடியாது. என் காலக்கட்டத்தில் தமிழை நேசித்தவன் நிச்சயம் அண்ணாவை நேசித்திருப்பான் என்பது பொது விதி.

பெரியார் தமிழனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்றால், அண்ணா அந்தப் பாடத்தை புரிய வைத்தவர். அண்ணாவுக்கென்று தமிழ் உலகம் தன் இதயத்தில் ஒரு மகத்தான் இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறது.

தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழிக்கும் பயன்படாத எந்தச் செயலையும் அண்ணா செய்ததாக ஆவணக் கோப்புகளில் ஆதாரம் இல்லை.

ராமநாதவுரம் மாவட்டத்தில் நகரத்தார்கள் வாழும் காரைக்குடியைச் சேர்ந்தவன் நான். அண்ணாவிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. என் அப்பா இராம.சுப்பையா திராவிட கழகத்தின் மீது தீரா பற்றுக் கொண்டவர்.

காரைக்குடியில் திராவிட கழகத்தின் கூட்டத்தை மாதம் ஒரு முறையாவது நடத்திவிடுவது என் தந்தையின் வழக்கம். எந்த வேலை எப்படிக் கெட்டாலும் திராவிட தலைவர்களின் கருத்துகளை எங்கள் மக்களைக் கேட்க வைக்கவேண்டும் என்பது அவர் வாழ்வில் கலந்த ஒன்று.

நான் கால்சட்டை பையனாக இருந்த காலம். காரைக்குடியில் அண்ணாவின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். காரைக்குடியில் இருப்பதிலே பெரிய கல்யாண மண்டபத்தில் அண்ணா பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இரவு எட்டு மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், காலை முதலே சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து காரைக்குடியில் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கோ அண்ணாவின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதை விட தமிழ் இலக்கியமும், அரசியலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்கு இருந்தது.

பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டாகிவிட்டது. ஊரே திருவிழா கோலம். எங்கள் வீட்டின் நிலைமையை சொல்லவே வேண்டாம். ஒரே குதூகலம்தான். எங்கள் ஊரில் இதுவரை நடந்த திருவிழாக்களில் பெரிய திருவிழா அதுதான் என நினைக்கிறேன்.

இந்திய ரயில்களைப் போல் அண்ணா எப்போதும் கூட்டங்களுக்கு கால தாமதமாகத்தான் வருவார் என்று அப்போது கருத்து நிலவியது. இதனால் எல்லோருக்கும் முன்னாடியே அந்த மண்டபத்தின் உள்ளே சென்று, அண்ணாவை எப்படியாவது பார்த்துவிடுவது என்பதுதான் என் அவேசர காலத் திட்டம்.

என்னைப் போல் நினைத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருந்திருப்பார்கள் போலும். மண்டபம் உள்ள சாலை முழுவதும் மனிதத் தலைகளாக இருந்தன.
அண்ணா மண்டபத்திற்குள் நுழையும் முன்பே அவரைப் பார்த்துவிடுவது. அவரது பேச்சை வெளியில் நின்றே கேட்டுவிடுவது என திட்டத்தில் சிறிய மாற்றம் செய்துகொண்டேன்.

அண்ணா தாமதமாகத்தான் வருவார் என்ற கூற்றைப் பொய்ப்பிப்பது போல ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட்ர். அண்ணா வந்து விட்டார் என்ற அறிவிப்பு அறிவிக்கப்படுகிறது. அதுவரை நகரக் கூட இடம் இல்லமல் இருந்த மக்கள் வெள்ளம் அசைய ஆரம்பித்தது.

மழையும், காற்றும் சேர்ந்து கொண்ட காட்டாறைப் போல் நகர்ந்து மக்கள் வெள்ளம் என்னையும் சேர்த்துக் கொண்டது. நானும் அந்த வெள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறேன். மக்கள் வெள்ளம் கடைசியாக என்னையும் மண்ணபத்திற்குள் கொண்டு சேர்த்துவிட்டது.

அண்ணா தனக்கே உரிய வேட்டி, சட்டை, துண்டில் மேடைக்கு வருகிறார். எங்களூரின் முருகன் சவுண்ட் சர்வீஸின் மைக் முன்னால் நின்று தனது பேச்சைத் தொடங்கிவிட்டார். அடித்து வந்த வெள்ளத்தில் என் சட்டையெல்லாம் விளர்வையில் நனைந்து போய்விட்டது.

பார்க்கிறேன்... அந்த உப்பைப் போல் எளிமையானவனை. ஆனால் முத்தைபோல் உயர்ந்தவனை. தமிழ்ச் சமுதாயம் முப்பது ஆண்டுகளாக சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் முழு உருவத்தை, தமிழ் இளைஞர்களின் குருதியை தூரத்தில் இருந்தே காண்கிறேன்.

அதுவரை இருந்த மக்கள் வெள்ளத்தின் சப்தம். புயலுக்கு பின் அமைதியாக இருக்கும் வானிலை போல் அமைதியாகிறது. குண்டூசியைப் போட்டால் கூட சத்தம் கேட்கும் என்பதுபோல் இருந்தது.

பேசுகிறார்..... "கூட்டங்களுக்கு அண்ணா எப்போதும் தாமதாகத்தான் வருவார் என தமிழ்ச் சமுதாயம் நினைத்திருந்தது. அது உண்மையான ஒன்றுதான். இங்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தேன் என்றால் காரைக்குடி மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள். தாங்கள் வாங்கும் கத்தரிக்காய்க்குக் கூட கணக்குப் பார்ப்பவர்கள். அவர்களைக் காக்க வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இங்கு சீக்கிரம் வந்துவிட்டேன்" என ஆரம்பித்து திராவிட இயக்கத்தின் கொள்கையையும், தமிழ்ச் சமுதாயத்தின் வருங்காலத்தையும் பேசுகிறார்.

அவ்வப்போது கைத்தட்டல்கள் மட்டும் அங்கு கூட்டம் நடைபெறுகிறது என எனக்கு மெய்ப்பித்துக் கொண்டடிருக்கிறது. பார்க்கிறேன்.... கேட்கிறேன்.... அசையாமல்.... உற்றுப் பார்க்கிறேன்...

கூட்டம் முடிகிறது. மழைக்குப் பின் வடியும் வெள்ள நீரைப்போன்று மக்கள் வெள்ளம் நகருகிறது. கால்சட்டை சிறுவனான நானும் கூட்டத்தில் இருந்து வீடு திரும்புகிறேன். வீடு திரும்பிய போதுன் என் சட்டை பொத்தான்களில் நான்கை அந்தப் பெருமகனைக் காண கட்டணமாகக் கொடுத்திருக்கிறேன் எனத் தெரிய வந்தது.

அதன் பின்னர் சினைமா ஆர்வத்தில் சென்னை வந்த என்னை கவிஞர் கண்ணதாசனின் தென்றல் பத்திரிகை ஏந்திக் கொண்டது. அதன் பின்னர், என் ஆர்வத்தை அறிந்த என் தந்தை அண்ணாவின் உதவியோடு, என்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் எடிட்டிங் பிரிவில் சேர்த்துவிட்டார். என் வாழ்க்கையில் முதல் முதலாக பார்த்துப் பிரமித்த மனிதனும், இப்போதும் நான் காணத் துடிக்கிற மனிதனும் அண்ணாதான்....

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai