சிறப்புக் கட்டுரைசெவிச்சுவை!
அறிஞர் அண்ணா

வேட்டையாடிக் களைத்துத் திரும்பும் வழியில், மன்னன் ஒருவன், ஏதோ சத்தம் கேட்டுப் பக்கத்திலிருந்த மந்திரியைப் பார்த்து, என்ன சத்தம் அது என்று கேட்கிறான்!

என்ன சத்தமா? இந்த நிர்மானுஷ்யமான காட்டிலே மிருகங்களின் கூச்சலன்றி வேறென்ன இருக்கும்? என்ற வினவுகிறான் மந்திரி!

யூகம் வேண்டாம்; உற்றக்கேள்; அதோ - பக்தர்கள், சிவனடியார்கள், அரகரா, அரகரா என்று பூஜிக்கிறார்களே - உம் செவியில் அது விழவில்லையா? என்று கேட்டு மன்னன் ஓடத் தொடங்கினான்.

ஓடாதீர் அரசே! சிவனடியார்கள் ஏன் இங்கு வரப் போகிறார்கள்? என்று கேட்கிறான் மந்திரி!

ஆனால் மன்னன் - குளத்தங்கரையை அடைந்து - சாஷ்டாங்கமாக வீழ்ந்து வளங்குகிறான்! மந்திரியோ ஆச்சரியத்துடன், அரசனின் செயலைப் பார்க்கிறான்! குளத்திலே ஏராளமான தவளைகள் கத்திக்கொண்டிருக்கின்றன.

நீர் வழியும் கண்களுடன் மன்னன், மந்திரியை நோக்கி, மத்திரி - கேட்டாயா, கீதத்தை? சிவநாம சங்கீர்த்தனத்தைக் கேள்; சிவ சிவா, சிவ, சிவா என்று இந்தப் பக்தர்கள் காடுவதை கேள் என்று கூறிட, மந்திரி அரசே! கர கர வென்று தவளைகள் கத்துகின்றனவே - அந்தச் சத்தம்தான் தங்கள் செவியிலே சிவ சிவா என்று கேட்கிறது போலும் என்று கூறுகிறான்!

அரசனோ - இரு கை கூப்பித் தொழுதவண்ணம் - சிவ நாமத்தை உச்சரிக்கும் இச்சீலர்களை இதுவரையில் கவனியாதிருந்தது மிகப் பாவமாகும்; மந்திரி - பொன்னைக் கொண்டுவந்து இக் குளத்திலே கொட்டு - சிவனடியார்கள் எடுத்துக் கொள்ளட்டும்! நீரிலே உள்ளனரே பக்தர்கள் - குளிர் தாக்குமே - பட்டுப் பீதாம்பரங்களைக் கொண்டுவந்து வீசு - சிவனடியார்கள் அணியட்டும்! என்று உத்தரவிட, மந்திரி ஐயோ! குளத்திலே வறட்டுக் கூச்சலிடும் தவளைகளை - இன்னன் இப்படித் தவறாகக் கருதுகிறானே - இவன் செவி இருந்தவாறென்ன - இவன் மதி சூன்யமாயிற்நே என்று எண்ணி ஏங்குகிறான்!

மன்னனோ - அந்தக் காட்டுக் குளத்திலே கத்திடும் தவளைகளின் சத்தத்தை, சிவ பஜனைச் சத்தம் என்றே எண்ணுகிறான்!

அவன், செவியிற் சுவை கண்டசீலன் என்று போற்றும் திருக்கூட்டம் ஒன்று இன்றும் இருக்கிறது - அர்த்தமற்ற சத்தம், அக்கூட்டத்துக்கு ஆனந்தமூட்டும்!

தவளை கத்தியது சிவநாமமாக ஒரு மன்னனின் செவிக்குச் சுவை தந்ததாமே - அதுபோல, எவ்வளவு ஆபாசமான கதையாக இருப்பினம், சீர்கண்டு சொக்கி - அணி கண்டு அகமகிழ்ந்து - உவமை கண்டு அவர்கள் உளம் பூரித்து, என்ன சுவை - எவ்வளவு இனிமை என்று கூறிக் கூத்தாடுவர்!

அம்மட்டோ! நாம் கேட்டு மகிழ்வதுபோலப் பிறரும் கேட்டு மகிழவில்லையே என்றும் யோசிப்பர்!

யோசிப்பதுடன் நிற்பரோ - இல்லை; இரு கைதூக்கி - இமயவனைத் தொழுது, செவியிற் சுவையுணரா மாக்களைப் பொறுக்குமோ என்று வேண்டுவர்!

என் செய்வது? யாராருக்கு எவ்வெக் கருத்து இனிக்கிறதோ - அவர்களுக்கு - அக்கருத்தினுக்கேற்ற ஒலி இனிமை பயக்கும்; மற்றவருக்கோ, அது, தலை வலியாகத்தானே இருக்கும்?

மன்னன், பிறை சூடியிடம் பித்தம கொண்டவன்; ஆகவே, காட்டிலே தவைளைக் கத்திய சத்தம், அவன் செவிக்குச் சுவையூட்டிற்று! ஆனால், அவன் செய்ல கதைக்குதவுமா - ஒரு கவிக்கு வேண்டுமானால் உதவும்! மக்களுக்கு, இத்தகைய மதி மயங்கிய மன்னன் செயலால் என்ன பலன் ஏற்படமுடியும்?

சிவனிடம் பக்தி பூண்டு சிவனடியாரிடம் அன்பு கொண்டவனாக இருப்பது - தவளைகனின் குரல் சிவநாம பஜனை என எண்ணுமாறு செய்ததென்றால், அதனை பித்தம் - போதை - மனமயக்கம் - அறிவுக்குறை என்று கூறுவது தவறா?

செவிச் சுவை இல்லாத மாக்கள் மீது செந்தமிழ்ப் புலவர் சீறுகின்றராராம் - கத்துவது தவளை என்று கண்டு கூறிய மந்திரிமீது, மன்னன் வெகுண்டது போல!

தஞ்சைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலே, சின்னாட்களுக்கு முன்னர் விரிவுரையாளர் சிலர் கூடினராம் - ஏடு பற்றிப் பேசினராம் - பழம் பாடலில் உள்ள சுவையினை எடுத்தோதினராம்!

பின்னர் பரிதாபம் கலந்த குரலுடன் கூறினாராம் - பண்டை நூற்களிலுள்ள சுவையினை உணராச் செவிபடைத்த மாக்கள் சிலர், கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிலிட எண்ணுகின்றனரே என்று!

மலர்ந்தது இது; ஆனால், மனத்திலே, மகேசுவரனைத் துதித்திருக்கக்கூடும் - செவியிற் சுவையுணரா மாக்களைச் சுட்டெரியும் என்று!

கைலைக்கு அவர்கள் குரல் எட்டிற்றோ, இல்லையோ - நானறியேன்! எட்டினாலும், அவர்தம் குரல் கேட்டு, விஷயத்தை உணரும் நிலையிலே சிவனார் இருக்கிறாரோ இல்லையோ - தெரியாது!

நந்தி மிருதங்கம் கொட்ட - நாரதர் தம்புரா மீட்ட - பார்வதி பாட - அவர், ஆனந்தத் தாண்டவமாடிக்கொண்டிருந்தால், இந்த அருந்தமிழ்ப் புலவர்களின் புலம்பல், அவர் செவி புகுவதற்க முடியாதல்லவா?

நர்த்தன வேளையாக இராமல் - நாயகியுடன் லீலை புரியும் நேரமாக இருந்தாலும், புலவரின் பொன்மொழி அவர் செவி புகாது; அதிலும் அவர், ஆயிரம் (தேவ) ஆண்டு அன்ன ஆகாரமின்றி) பார்வதியுடன் கலவிச் சுகத்திலே ஈடுபட்ட பக்கப் போர்வழி! (ஈரோட்டுப் பாவிகள் கட்டிய புனைசுருட்டல்ல இக்கதை - புராணப் புலவர்களின் ஆபரணம்!

கைலை விஷயம் கிடக்கட்டும; கரந்தைப் புலவர்கள், செவியுணரா மாக்கள் என்று செந்தமிழ் நயத்துடன் - சொந்த உள்ளத்திலிருந்து எடுத்து வீசிய இச் சொல்லம்பு, சுயமரியாதைக்காரர் மீது ஏவப்பட்டது என்பதை நான் சொல்ல வேண்டுமோ?

அவர்கள்தானே, ஆரிய ஏடுகளைத் தீயிலிட வேண்டுமென்று கூறுகின்றனர்?

அவர்களுக்கு, மேற்படி நூற்களிலுள்ள சுவையை உணரமுடியவில்லை! அவர்கள் மக்களல்லவர் - மாக்கள் என்பது அத் தக்கோரின் தீர்ப்பு!

நமது மறுப்பு அவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும் - என்ன செய்வது? இப்படியும் சில பிறப்பு என்று ஒருவரையொருவர் எண்ணிக்கொள்வதோடு, ஒரு வரம்பு இருக்கட்டும் என்பது என் விருப்பு! பிறகு, அவர்களின் அறிவுன் விரிப்பு விடும் இடமெங்கும் அவர்கள் உலவட்டும் - நான் தடுக்க முடியாது!

சுவையுணரா மாக்களாகிய சுயமரியாதைக்காரர்கள், சுயுணர்ந்த செவிச் செல்வர்களை - கவிதை கற்றோரைக் கேட்பது இதுதான் - ஐயன்மீர்! சுவை சுவை என்று சுருதி பாடுகின்றீரே - சொற்சுவையா பொருட்சுவையா? நீவிர் குறிப்பது எதனை - கவிதை அழுகையா, அணி அழகையா? ஆண்டவனைப் பற்றி ஏடுகளிளலே காணப்படும கொள்கை அழகையா? எதனை, சுவை என்று கூறி, இதனை இம் மாக்கள் உணரவில்லையே என்று மாரடித்துக் கொள்கிறீர்?

கெஞ்சுகின்றேன் அஞ்சுகமே
பஞ்சபாணம் மிஞ்சுவதால்.
தஞ்சமென வந்தேன்
பஞ்சணையில் கொஞ்சிடவே
வஞ்சியே வந்திடுவாய்

என்று அவர் பாடினார் - நான் அதிலே இலயித்துப் போனேன்; அவர் தொட்டார் - நான் துவண்டேன்; அவர் இழுத்தார் - நான் சுருண்டேன் - என்று காமச் சேட்டையாடிய ஒருவனுடைய கவிச் சுவையால் தன் கற்பை இழந்ததாகக் கூறினால், அந்த மங்கை நல்லாளின் தமிழ்ப் பற்றை என்னென்பது? - செவிச் சுவைச் செல்வி வாழ்க் என்று போற்றுவீரா?

செவிச் சுவை பற்றிக் கவலையற்று, ஏடா, மூடா ஏதேதோ உளறுகிறாய் - போடா? என்று காமக் கூத்தனைக் கடிந்துரைத்து ஒருவன் துரத்தினால், சீச்சி! செவிச் சுவையுணரா மாக்கள் கூட்டத்தினனாகவன்றோ அவன் இருக்கிறான் என்று ஏசுவீரோ - கூறீர்!

அறிவை ஆரியத்துக்கு இரையாக்கும் காரியத்துக்குப் பயன்படும கவி - காவியம், கலைச் சுவையுடைத்து என்று எமது செவியும் - சிந்தனையும் ஏற்க மறுக்கின்றன!

விவேகம் எனும் மாதை, வேதியர் கூட்டத்துக்கு விபசாரக் கருவியாக்கிடும் வெண்பா, எமது செவிக்கு வேம்பாகத்தான் இருக்கிறது!

பார்ப்பனீயத்தின் பாதந்தாங்கிகளாகப் பலரையும் செய்விக்கும் பதிகம், எமது செவிக்கு நாராசமாகத்தான் இருக்கிறது!

புலவரீர்! உமக்கு அவை சுவை தரலாம்; ஆனால் அவற்றிலே சுவை காணா நாங்கள், மாக்களல்லர்!

நர்த்தனமாடும் நாகத்தை, நளின மாது என்று எண்ணி அருகே சென்றால், என்ன நேரிடும்?

அதுபோலவே ஆரிய நச்சரவு, கவிதை ரூபத்திலே ஆடுகிறது!

அந்த நச்சரவின் விஷப் பல் தீண்டியதால், உமக்குக் கண் மங்காவிட்டாலும் கருத்து மங்கிவிட்டதால், நாங்கள் மாக்களாகத் தென்படுகிறோம் போலும்!

புலியின் தோல் ஆசனத்துக்கு உதவும்; அதற்காகப் புலியை வீட்டிலே வளர்த்து - பூஜை நேரத்திலே அதன் மீது சவாரி செய்துகொண்டு - சர்வேசுவரனைத் தியானம் செய்ய யாரும் இசையமாட்டார்கள்; இசைந்தால், அவர்கள், இறைவனுடன் உடனே இரண்டறக் கலப்பர்!

அதுபோல ஆரிய மத போதனைக்காகப் புனையப்பட்ட ஏடுகளிலுள்ள கவிதை அழகு, தமிழ் வளர்ச்சிக்கு - இலக்கியச் சுவை ஆக்கத்துக்குப் பயன்படும்; அதற்காக அந்த ஏடுகளைப் போற்றிக் கண்களில் ஒற்றிகொண்டு களிப்பது - தோல் வேண்டிப் புலி வளர்ப்போன் கதைபோல முடியும்!

புலியைக் கொன்று தோலை ஆசனமாக்குவதுபோல் - சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் - ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்!

எமது செயலின் விளைவாக, அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின் - புலி செத்தவின் தோலை உபயோகிப்பதுபோல், நாங்கள் - ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு - ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக்கொண்டு பூரித்து வாழுங்கள் - தடுப்பர் இல்லை!

இதைக் கூறும் நாங்கள் மாக்களா? என்ன துணிவய்யா, உங்கட்கு? எங்களிடம் அகராதி கிடையாதென்று எண்ணியா - எம்மை, மாக்கள் என்று கூறுகின்றீர்!

நால்வரின் பாடல் நர்த்தனமாட வேண்டிய நாவினர்க்கே, கோபத்தையும், மாக்கள் என்ற கடுமொழியையும் தந்தது என்றால், நாங்கள் எமது நாவுக்கு அன்பு காரணமாகப் போட்டு வைத்துள்ள தடையுத்தரவை ரத்து செய்துவிட்டால் நிச்சயமாகக் கூறுகிறேன் செவிச் சுவையுணரும் செம்மல்களே! நீவிர் தேள் கொட்டிய மந்தியாவீர்!

ஆனால், மாக்கள் இன்னமும உம்மைத் தோழராகவே கருதுவதால், சுடுசொல்லுரைக்கவில்லை! சொல்லாதிருப்பது, முடியாததால் அல்ல - மனம் இல்லாததால்!

சுவை, சுவை என்று பேசுகிறார்கள் புலவர்கள்; கம்பரசம் எவ்வளவு இனிமை தெரியுமா என்று வாதாடுகிறார்கள். சரி உயர்தரமான கவியிலே இருக்கவேண்டியது வெறும் காமச்சுவைதானே? என்று கேட்கிறேன்.

கம்பன் கவிதைகளிலே வரும் வர்ணனைகளைவிட, காமச் சரக்கு வேறு எங்காவது கிடைக்கும? கம்பன் - கதாபாத்திரங்களை வர்ணித்திருப்பது, தங்க பஸ்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கம் தடிதாங்கியின் படுக்கையறை அலங்காரத்துக்க, உபபோகமாகும் பாரிஸ் நிர்வாணப் போட்டோவுடன் போட்டியிடுவதாக இருப்பதைப் புலவர்கள் மறுக்க முடியுமா?

ஒரு தேவ கதை - நீதி நெறி பாடப் போந்த கம்பர், கதாபாத்திரங்களை வர்ணிக்கையில் அளவுக்கு மீறியதான - இடக்கரடக்கல் எனும் நியதியை மறந்ததுமான - காமச் சுவை மிகுந்த வார்த்தைகளை உபயோகிப்பது அழகா? அதைப் படிக்கம் உள்ளம் பாழாகாதா? அவை பக்தியை ஊட்டுமா - இச்சையை மூட்டுமா என்பதை நடுநிலை நின்ற கூறுமாறு வேண்டுகிறோம்.

சர்வாங்க இலட்சண வர்ணனையிலே, கம்பர் சளைக்கவே இல்லை! அந்தச் சுவை, சுயமரியாதைக்காரருக்குக் கவித்திறமை என்றும் தோன்றவில்லை - கடவுட் கொண்கையை ஊட்டும் காவிய இலட்சணமாகவும் அது தெரியவில்லை!

மற்ற மதக்காரர்கள் ஆட்ணவனுக்கு உருவம் அமைத்து குடும்பம் ஏற்படுத்தி வைத்துக கும்பிடவில்லை! ஆண்டவனை உருவமாக்கிய சில மதத்தினரும், தமது கிரந்தங்களிலே கம்பபனைப்போல் - தமது ஆண்டவன், ஆண்டவனின் மனைவி ஆகியோரை நிர்வாணக் கோலமாக்கிக் காட்டும வர்ணனைகளைத் தீட்டியதில்லை! காமச் சேட்டைக்குரிய கருத்துக்களைப் புகுத்தினாரில்லை!

கடவுட் கதையிலே மட்டுமல்ல - உயர்ந்தரமான இலக்கியத்திலே, உத்தம புருஷர்கள் - மாது சிரோன் மணிகள் என்று கவிகள் தீட்டிடும் கதாபாத்திரங்களை - கம்பனைப்போல் - நிர்வாணமாக்கிய கவிகள் கிடையாது!

உயர்தரமான ஆங்கில இலக்கியத்திலே - ரெயினால்ட்ஸ் நாவல்களிலேகூட, காமச்சுவை குழைந்து கிடக்கும் வர்ணனைகள் கிடையாது!

சங்க நூல்களிலும், கம்பனின் காம ரசத்துக்கு இணையான ரசத்தைக் காண முடியாது!

ஆனால் இங்குள்ள புலவர்கள், சங்க நூல்களை இழப்பினும் சகிப்போம் - கம்பனை இழக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்! தமிழகத்தின் தாழ்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பேன்!

கொலம்பஸ் - அமெரிக்காவைக் கண்டுபிடித்தான்; வாஸ்கோடகாமா - இந்தியாவைக் கண்டு பிடித்தான்; கலீலியோ - பூதத்துவத்தை விளக்கினான்; டார்வின் - மனித உற்பவ விளக்கம் கண்டுபிடித்தான்; நியூட்டன் காந்த சக்தியையும், அதன் விளைவுகளையும் கண்டறிந்தான்!

நீராவி இயந்திரம், தந்தி, டெலிபோன், கம்பில்லாத் தந்தி, நிழற் படம், பேசும் படம், வானஊர்தி, வானொலி, கப்பல் உடலுள் செல்லும் கப்பல், காற்றில் மிதக்கம் கூடு என்று எத்தனையோ அதியற்புதப் பொருள்களையும், கருத்துக்களையும் கண்டுபிடித்த செய்திகளைக் கேட்டுச் செவிச் சுவை உணரும் மக்கள், இந்தப் புண்ணிய பூமியில் மட்டுமல்ல - வெளிநாடுகளிலும் உள்ளனர்!

இங்கே, கடலைத் தாண்டிய அனுமன் கதை; மூலிகை தேட நேரமின்றி மலையையே பெயர்த்தெடுத்து வந்த மாருதி புராணம்; எதிரியைக் கொன்று - அவன் மார்பைத் தடவிப் பார்த்துவிட்டு - ஏழு கடல்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு அம்புறாத் தூணியிலே வந்து புகுந்துகொள்ளும் பாணம்; அலைகடலில் ஆலிலைமேல் அரி பள்ளிகொண்டிருக்கும் கதை; ஆயிரத் தலைகொண்ட ஆதிசேஷன், அண்ட சராசரங்களையும் தாங்கும் கதை; முக்கண்ணன் - ஆறு தலையோன் - நாலு முகத்தோன் - நந்தி முகத்தோன் - நாவிலே உறைபவன் - நாட்டியமாடுபவன் - மார்பிலே மங்கை கொண்டோன் - மதகரி உருவோன் - என்னும் இன்னோரன்ன பிற கடவுட்கொள்கைகளும்; ஆசிரமங்களிலே நடைபெற்ற விபசாரங்கள் - அவற்றை வெளிப்படுத்திக் கலகமூட்டும் நாரதத் திருவிளையாடல்கள் - அதற்கும் விமோசனம் - அந்த நேரத்தில் அசரீரி - என்ற கதைகளம் கேட்டுச் சுவை உணரும் மக்கள் உள்ளனர்!

அவர்களின் தீர்ப்புதான், பொய்யும் புனைசுருட்டும் - போகப் புழுவும் - பார்ப்பனீய நச்சரவும் நெளியும் புராண இதிகாசங்களை நம்ப மறுத்து, நெருப்பிலிடுக என்று கூறும் நம் தோழரகளை, செவிச் சுவை உணரா மாக்கள் என்று கூறுவது!

இது, பகுத்தறிவு மன்றத்திலே இடம் பெறக்கூடிய தீர்ப்பா என்று கேட்கிறேன்!

கெடுமதி புகட்டும ஏடுகளிலே சுவை காணும் நெடுஞ்செவியராக இருக்க நாங்கள் மறுக்கிறோம்!

எமது செவியிலே, ஆரியத்தால் தாக்குண்டு தவிக்கும் தமிழரின் அழுகுரல் - வைதீகத்தால் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்ட தமிழரின் வேதனைக் குரல் - பரம்பரைத் தொழிலாளராக இருந்து பாடுபடும் தமிழினத்தின் பரிதாபக் குரல் கேட்கிறது!

அது எமக்குச் சுவையை ஊட்டவில்லை - உள்ளம் பற்றி எரியச் செய்கிறது!

எமது கண்களிலே தீப்பொறி கிளம்புகிறது - அந்தத் தீப்பொறி, நிச்சயமாக ஆரிய ஆபாச ஏடுகளை எரித்தொழிக்கும்!

தீ பரவுகிறது என்று எச்சரிக்கிறேன்!

செவிச் சுவை உணரச் சுவடி புரட்டிடும் அன்பர்கள், இந்த எச்சரிக்கைக் குரலைச் செவிமடுக்காதிருப்பின், விளையக் கூடிய விபரீதத்திற்கு நான் ஜவாப்தாரியல்ல!
(திராவிடநாடு - 09.05.1943)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai