(கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு தொடக்கம்)
என்.எஸ்.கே.
அறிஞர் அண்ணா
எல்லாரும் ஒரு தடவை கை தட்டுங்கோ.
தட்டமாட்டிங்களா? பரவாயில்லை!
வெறும் நகைச்சுவைப் பேச்சல்ல, அல்லது திரைப்படத்துக்காக
மட்டுமே தீட்டப்பட்ட வாசகமல்ல. இது, நகைச்சுவை மன்னன், தோழர் என்.எஸ்.கிருஷ்ணனின்
உள்ளத்தின் படப்பிடிப்பு; அவர் வாழ்க்கையிலே, கொண்டுள்ள வழிகாட்டி
நண்பர்கள் புடை சூழ நகை குலுங்க, நாளெல்லாம் விழாவாகக் கொண்டாடி
வாழ்ந்தவர். இன்று? விவரிக்க நமக்கு வேதனையாக இருக்கும். அவரோ,
பரவாயில்லை என்ற பாணியிலேதான் இருப்பார். ஏனெனில், அது வெறும்
வாசகமல்ல, அவருடைய உள்ளம்.
நகைச்சுவை, என்ற துறையைப் பலர் பலவிதத்திலே பலகாரியத்துக்குப்
பயன்படுத்திப் பலவகையான பலனைப் பெற்றனர். இதுவரை ஒருவராவது நகைச்சுவையை,
நாட்டு மக்களுக்கு நற்கருத்துகளைப் புகுத்தும் கருவியாக்கியதில்லை,
அதன் பலனாக நடிகர் உலகில் நடுநாயக மணியாக மட்டுமல்ல, நாட்டுச்
சிந்தனைச் சிற்பிகளின் முன்வரிசையிலே முக்கியமான இடமும் பெற்றதில்லை;
அவரைப்போல, நம்மைச் சிரிக்க வைத்தவர்களுமில்லை; அவர் போல் வேறு
யாரும் நம்மை இதுவரை அழவைத்தவர்களுமில்லை. அன்று தமிழகம் விட்ட
கண்ணீர், ஊற்று நிலையை அடைந்துவிட்டது. தமிழகம், நடிகர்களைப் பாராட்டி
இருக்கிறது, பழக்கமான மொழியில் கூறுவதென்றால், சொர்ணாபிஷேகம் செய்திருக்கிறது;
ஆனால் நடிகருக்கு இடுக்கண் வந்தபோது கண்ணீர் சொரிந்தது இல்லை.
கிருஷ்ணன் - பாகவதர் சம்பவத்தின் போதுதான், ஒரு பெருங்கூட்டம்,
கட்சி முதலிய கட்டுகளையும் தாண்டி கண்ணீர் விட்டது.
என்.எஸ்.கே. வெறும் நடிகர் மட்டுமல்லர், அவர்
ஒரு சின்னமாக விளங்கினார். எங்ஙனம் பாரதிதாசன், கவிதை உலகிலே புரட்சி
புகுந்துவிட்டது என்பதை எடுததுக்காட்டும் சின்னமானாரோ, அது போலவே
நகைச்சுவைத் துறை என்பது நாட்டு மக்களைச் சிரிப்பு மூட்டும் வெறும்
வெட்டிவேலை என்ற நிலையைவிட்டுக் கடந்து, நற்கருத்துக்களை மிக இலாவகமாகப்
புகுத்தும் நிலை பிறந்துவிட்டது என்பதை விளக்கும் சின்னமாக என்.எஸ்.கே.
விளங்கினார். சீர்திருத்தக் கருத்து எனும் சூரணத்தைத் தேனில் குழைத்துத்
தந்தார் நாட்டு மக்களக்கு, அதனைத் தந்தது கூட, தாய் அன்புடன் தன்
குழந்தைகளுக்கு மருந்தூட்டுவது போன்ற பக்குவமான முறையிலே!
கோணல் சேட்டைகள் செய்து மக்களைக் குலுங்கக் குலுங்க
நகைக்கச் செய்தனர்; கண்ணுக்குமேலே சுண்ணம் பூசியும் வாய்சுற்றிச்
சிகப்புச் சாயம் பூசிக்கொண்டும், வளைந்து நடந்தும், மக்களைப் பல
நடிகர்கள், வயிறு வெடிக்கும்படிச் சிரிக்கச் செய்திருக்கின்றனர்.
வயிறு வெடிக்கும் படித்தான் அவர்களால் செய்ய முடிந்ததேயொழிய புதிய
கருத்தைப் புகுத்த முடியல்லை.
வயிறுவலி தாங்க முடியவில்லையப்பா!
ஏன்?
நேற்றிரவு நாடகத்திலே, பபூன் பக்கிரி, செய்த காமிக்,
இருக்கிறதே, அடடா, ரொம்ப ஜோர்
என்ன செய்தான் பபூன்?
அடேயப்பா! எத்தனை சேஷ்டைகள் தெரியுமோ! அனுமார்
வேஷக்காரன் வந்தான் ஸ்டேஜுக்கு; பபூன் பின்னோடு, அநுமன் வாலை தன்
மூக்கில் திணித்துக்கொண்டு தும்ம ஆரம்பித்தான் - தும்மினான் பத்து
நிமிஷம், கொட்டகையே அதிர்ந்து போய்விட்டது! ஜனங்கள் சிரித்துச்
சிரித்து வயற்றுவலி வந்துவிட்டது. ரொம்பத் தமாஷ் செய்தான். நாய்
போலக் குலைக்கிறான், அப்படியே அசல் நாய் போலேயே இருந்தது
இவ்வளவுதான், மக்கள் தாம் கண்ட காமிக்கைப்பற்றிப்
பேச முடிந்தது, என்.எஸ்.கே.யின், வருகைக்கு முன்பு. அவர் வந்ததும்,
அந்தத் துறையிலே, இருக்கும் அற்புதமான ஆற்றலை மக்கள் உணர முடிந்தது.
அவர்கள் சிரித்து விட்டு, மறந்துவிடக்கூடியதாக இல்லை, சிரித்துவிட்டு,
அத்துடன் சில புதிய கருத்துக்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்!
சின்ன வயதிலே கன்னித்தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்விகற்றுத் தேறா முன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக் கதைகளை விட்டுத் தள்ளடா
குட்டு வெளிப்படுமே!
என்று பூம்பாவையில் கிருஷ்ணன் பாடினார்; நாம்
கேட்டோம், சிரித்தோம்; சிரித்ததோடு நின்றுவிடவில்லை, சிந்தித்தோம்,
உண்மைதானே, கல்வி கற்றுத் தேறா முன்னம் கவி எழுதிட வருமா? என்று
நம்மை நாமே கேட்டுக் கொண்டோம், முடியாது! என்று நமக்கு அறிவு கூறுகிறது
உடனே, மறு நிமிடம், சரியான கேள்வி கேட்டானப்பா1! என்று வாய்விட்டுக்
கூறுகிறோம் நம்மையும் அறியாமல்; மறுபடியும் ஒரு முறை சிரிக்கிறோம்!
உண்ணும் போது சுவை தரும் பண்டம் பல உண்டான பிறகு, நெடுநேரம் வரையிலே,
உமிழ் நீர் உள்ளே செல்லும் போதெல்லாம், சுவைதரும் பண்டம் சில!
அத்தகைய நகைச்சுவையை நாட்டு மக்களுக்குத் தந்தார் கிருஷணன். நாட்டுமக்களின்
நிலைமை உயர் ஜாதிக்காரரின் உளப்போக்கு, தொழிலாளியின் துயரம், ஜாதி
பேதத்தால் உண்டாகும் மனப்போக்கு, இவைகளை விளக்கினார். புனிதமான
கொள்கைகள் என்று மக்கள் கருதும்பல எண்ணங்கள், வெறும் புரட்டு அல்லது
பொருளற்றவை என்பன போன்ற பலப்பல புத்துலக அமைப்புக்கான கருத்துக்களை
நகைச்சுவையுடன் கலந்தூட்டிய நற்காரியத்தை, வெறும் கோமாளிச் சேட்டைக்கு
மட்டுமே பயன்பட்டுவந்த, நசைச்சுவை நடிப்புத்துறை மூலம், நாட்டுக்குச்
செய்துவந்தார். நகைச்சுவைத் துறையை இத்தகைய சீர்திருத்த மேடையாக்கி
நடிகர்கள், இங்கு இதுவரை தோன்றினதில்லை, மேனாட்டுக்காமிக் நடிகர்களிலேகூட,
ஹெரால்ட் லாயிட், பஸ்டர் கீடன், லாரல் அண்டு ஹார்டி, ராபர்ட் உல்சி,
போன்ற புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் கூட, வெறும் பொழுதுபோக்குக்கான
விளையாட்டுகளைக் காட்டுபவராயினரே தவிற, போதனை செய்பவர்களாகவில்லை.
ஓரளவுக்கு, சார்லி சாப்ளின், சிற்சில படங்களில், சிறப்பாக சிடிலைட்
போன்ற படத்திலே கருத்துகளைத் தருவதற்குக் காமிக் துறையைப் பயன்படுத்தினார்
மற்றவர்கள், பெண்ணென்று எண்ணி ஆணை முத்தமிடுவது, வழுக்கி விழுவது,
சாமர்த்தியமாக எதிரியை ஏய்த்துவிடுவது போன்ற காமிக்குகளைச் செய்தவர்களே
தவிற, என்.எஸ்.கே. வைப் போல, ஆணும் பெண்ணும் ஒண்ணு அதை அறியாதவன்
மூளை அது களிமண்ணு என்று காரமருந்தை இனிப்புப் பூச்சுடன் கலந்து,
நாமாக வாங்கி அதனை ஒன்றுக்குப் பத்தாக உள்ளே போட்டுக் கொள்ளக்
கூடிய விதத்திலே நகைச்சுவை நடிப்பைச் செய்ததில்லை. தமிழகத்திலே
மட்டுமல்ல இந்தியாவிலேயே இந்த நகைச்சுவைத் துறையை இதமாகச் சீர்திருத்தம்
புகுத்தும் கருவியாக்கிய காமிக் நடிகர் வேறு கிடையாது என்பது விளங்கும்.
கணக்கெடுத்து அந்த அளவைக் கூற முடியாதே தவிர, அவருடைய காமிக் கண்டதன்
மூலம் புதிய, சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக் கொண்டவர்களின்
தொகை ஒரு மேடைப் பிரசங்கியின் பிரசாரத்தால் திருந்தியவர்களின்
தொகையைவிட அதிகம் என்று தைரியமாகக் கூறலாம். சீர்திருத்தக் கருத்துகளை
கண்டன ஒருவிலே காட்டாமல், வேடிக்கைப் பேச்சின் மூலம் புகுத்திய
முதல் நடிகர் என்பதால், நாட்டைப் பண்படுத்தப் பாடுபட்ட, கவிஞர்கள்,
பேச்சாளர், எழுத்தாளர், ஆகியோரின் வரிசையிலே, என்.எஸ்.கே. நடிகரும்
நிச்சயமாக இடம் பெறுகிறார். கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்கள்
ஆகியோரின் பணியினால் விளைந்த பலன்போலும் பெறும் பயன் விளைந்திருக்கிறது
என்பதை நாடு இன்று ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் உண்மையான எடைபோடும்
நாள் வரும்போது, நாடு, இந்தத் தொண்டின் மதிப்பைச் சரியாகக் குறித்தே
தீரும். இன்றுங்கூட எங்காவது நாம் குளத்தங்கரைப் பக்கம் போனால்,
அங்கு யாராவது வைதிகப் பிராமணர் சந்தியாவந்தனத்திலே ஈடுபட்ட வண்ணம்,
சுற்று முற்றம் பார்த்தால், உத்தமபுத்திரன் கவனத்துக்கு வராமற்
போகாது!
நன்னா இருக்கா! அழகா! இலக்ஷணமா, பிராமணப் பெண்
போலவே இருக்கா! என்று கிருஷ்ணன் கூறுவது நம் செவியிலே விழுவது
கூடக் கேட்கிறதல்லவா! அசல் அய்யங்கார் விட்டு அம்மா போல மதுரம்
நிற்பதும் பேந்தப் பேந்த விழிக்கும், ஆத்துக்காரரைப் பார்த்து
அரிஜன சேவை செய்கிறீரோ, அரிஜன சேவை என்று இடித்துக் கூறுவதுமான
காட்சி தெரிகிறதல்லவா! வெறும் நகைச் சுவையா அது! நாட்டு நிலையின்
படிப்பிடிப்பு அல்லவா! சிரித்துவிட்டு மறந்து விடமட்டுமா அவருடைய
நடிப்பு பயன் பட்டது? நமது நெஞ்சிலே இடம்பெற்று விட்டதே! ஜாதிச்
சிக்கலைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், எப்படி நாம் சாலிவாகனனை
மறக்கமுடியும்.
உப்பு கரிக்கிறது
மிளகா உரைக்கிறது
தண்ணீர் குடித்தால் நெஞ்சு அடைக்கவில்லை,
சந்தேகமிருந்தா சாப்பிட்டுப்
பாருங்கோ, சமையல் ரெடியாக இருக்கு
என்று அந்தப் படத்திலே, பாடத்தை எவ்வளவு பக்குவமாகப்
புகுத்துகிறார். எப்படி இதனை வெறும், நகைச்சுவை என்று கருதமுடியும்!
பட்டாளியின் துயரைப் படம்பிடித்துக் காட்டும், பண்பு, அவர் நடித்த
சகுந்தலையில் பார்க்கலாம்.
ஐயா! ஆத்திலே நாங்க
ஆத்தி தூண்டி போட்டு
அதிலே ரெண்டுமீன் கிடைச்சா
அரைவயத்துக் கஞ்சிக்காகும் கடவுளே
குடும்பம், ஆளாப்பறக்குதடா கடவுளே
என்ற பாடலை என்.எஸ்.கே. பாடிக்கெட்டிருக்கிறீர்கள்.
அப்பாடலில், எவ்வளவு உருக்கமாக, பரதவர்குல மக்களின் பரிதாபகரமான
வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறார்! பரிதாப நிலைமை பாடலுடன்
தோய்ந்து வருகிறது, நமது மனதைவிட்டு அதனைப் பெயர்த்தெடுக்க முடியாத
நிலைமையில், இடம் பெற்று விடுகிறது. எந்தப் படத்திலும், ஏதாவதொரு,
புதிய முற்போக்கான கருத்தைப் புகுத்திப் பணிபுரிய அவர் தவறியதில்லை.
மூலக்கதை புரணமாக இருப்பினும் சரியே முடிந்தமட்டும், நமது தொண்டு
அதிலே இடம் பெறச் செய்துவடுகிறார் திறமையாக; சுவை துளியும் கெடாத
விதத்திலே.
நகைச்சுவைத் துறையின் மூலம் நாட்டு மக்களுக்கு
நற்கருத்தைப் புகுத்திய வெற்றிகரமான பணி அவருடைய 'கிந்தனார்'.
அதிலே கிண்டல் அல்ல, பாடம் அருமையாக இருக்கக் காணலாம். கல்வித்
துறையிலே பழங்குடி மக்கள் முன்னேறினால், ஜாதிச்சனியனின் பிடியிலிருந்து
விடுபடலாம் என்ற கருத்தை கிருஷ்ண பாகவதராகி, கிந்தனாரில் கூறினார்.
கதைமட்டும் அல்ல நாடுகேட்டது; கருத்தையும் உட்கொண்டுவிட்டது. சிறைவாசம்
ஏற்பட்டிராவிட்டால், நாடு இன்று அவருடைய கீலகண்டர் மூலம், புத்துலக
ஆக்கத்துககான புரட்சிக்ருத்துக்களைக் கேட்டு இன்புற்றுப் பயனும்
பெற்றிருக்கக் கூடும்.
பண்டாரப்பரங்கன் வேஷம் பறந்து போச்சுதுபார், தெண்டாயுதபாணி,
பரங்கிரி செந்தூர், பழனி, திருப்பதி பண்டாரப்பரங்கள் வேஷம் பறந்து
போச்சுது பார் என்ற பாடலைக்கட்டு இரட்சித்து அந்த ரசனையுடனேயே
புரட்சிக்கருத்தையும் உட்கொண்டிருக்க முடியும் நாம் அனைவரும்.
இவ்விதமாக, யாரும் இதற்குமுன் கையாளாத முறையை,
நெடுங்காலமாக இருந்துவரும் நகைச்சுவைத் துறையில் புகுத்தி வெற்றி
கண்டதுடன், அந்த வெற்றியின் மூலமாகவே, நாட்டுக்கு நற்கருத்துக்களைப்
புகுத்தும் நற்றொண்டு புரிந்து, புரட்சிப் பரப்பிய பெருமக்கள்
வரிசையிலே அவர் இடம் பெற்றார் என்பது மட்டுமல்ல, அந்த முறையைப்
பின்பற்றித்தீர வேண்டிய நிலைமையை நடிகர் உலகிலே உண்டாக்கிவிட்ட
காரணத்தால் அந்த நற்காரியத்துக்கு பலர் முன்வரவும் செய்துவிட்டார்.
அதாவது ஓர் சூழ்நிலை உண்டாக்கிவிட்டார். நகைச்சுவைத் துறையிலே
அவர் ஆற்றிய அரும் பணிக்கு எதையாவது ஈடாகக் கூற வேண்டுமானால்,
புரட்சிக்கு முன்பு, பிரன்சிலும், ரஷியாவிலும், கவிஞர்கள், எழுத்தாளர்,
பிரசங்கிகள் நடிகர்கள் ஆகியோர், உண்டாக்கிவைத்த சூழ்நிலையைத் தான்
குறிப்பிட முடியும். இந்த அரும்பணியினை அவர் திறம்பட ஆற்ற உறுதுணையாக
இருந்து வந்தவர் கொங்கு நாட்டுக் கவிஞர் உடுமலை நாராயணக்கவி. அவரும்,
இந்த அரும்பணியில் சரிபங்கு கொண்டு பணியாற்றிய மதுரம் அம்மையாரும்
மட்டுமல்ல, நாமும் நாட்டிலே நற்கருத்து பரவ வேண்டுமென்ற ஆர்வத்தால்
தூண்டப்பட்ட இலட்சக்கணக்கான மக்களும், நகைச்சுவை மன்னர், மீண்டும்
நாட்டுக்கு நகைச்சுவைத் துறை மூலம் பணிபுரிய வேண்டுமென்பதற்காக,
அவரை என்று நம்மிடை பெறுவோம் என்று ஏக்கமுற்று இருக்கிறோம்.
(அறிஞர் அண்ணா - திராவிடநாடு - 17.11.1946)