சிறப்புக் கட்டுரைகள்

என் நினைவில் நின்ற அண்ணா
பு.ச.முருகு சுப்பிரமணியம்

1948 ஆம் ஆணடு மே திங்கள் முதல் நாள் சென்னையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. புனித மேரி மண்டபத்தில் திராவிடர் கழக தளபதி அறிஞர் அண்ணா சொற்பொழிவாற்றுகிறார். முதல் வரிசையில் நானும், எந் தமயன் தனபாலனும் அமர்ந்திருக்கிறோம். அப்போது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த எனக்கு அண்ணாவின் சொற்பொழிவு அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் முதன் முதலில் அறிஞர் அண்ணாவை நேரில் கண்டது அன்றுதான். அவருடைய பேச்சைக் கேட்க நான்கு அணா நுழைவுக் கட்டணம் அன்றே இருந்தது. ஒருவரின் பேச்சை கேட்க நுழைவு கட்டணமா? பணம் கொடுத்து சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளுகின்றனரே என்று வியந்தேன்.

அன்றிலிருந்தே 'திராவிட நாடு' இதழ் வாங்கத் தொடங்கினேன். அப்பொழுதெல்லாம் கண்டோன்மென்ட் தருமராசா கோவில் வீதியில் 'இரிசன் அறிவு மனை' என்ற ஒரு புத்தகக் கடை இருந்தது. கழகப் பத்திரிக்கைகள், நூல்கள் அந்த ஒரு இடத்தில்தான் விற்கப்படும். குறிப்பிட்ட ஒரு சிலரே அங்கு வந்து கழகப்பத்திரிகைகளை வாங்கிச் செல்வர். 'திராவிடநாடு' பத்திரிக்கையில் 'சௌமியன்' என்ற புனைபெயரில் அண்ணா எழுதுவதுண்டு. ஈழத்து அடிகள் 'பெரியபுராண ஆராய்ச்சி' என்று தொடர்ந்து எழுதுவார். காஞ்சி மணிமொழியார் அரங்கண்ணல், நாவலர் நெடுஞ்செழியன் அனைவரும் தொடர்ந்து திராவிடர் நாடு இதாகளில் எழுதுவர். விடுதலை இதழில் குத்தூசி குருசாமியின் தொடர் கட்டுரைகளை படிக்காத கழகத் தோழர்கள் அன்று இருந்ததில்லை.

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள், 'நாடும் ஏடும்', 'நல்ல தீர்ப்பு', 'திராவிடர் நிலை', 'ஏ தாழ்ந்த தமிழகமே', 'நிலையும் நினைப்பும்' சொற்பொழிவுகள். அவை அன்றைய சமுதாயத்தை தட்டி எழுப்பின. 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, தந்தை பெரியார் சுதந்திர தினத்தை திராவிடர்களின் துக்கநாள் என்று அறிவித்தார். ஆனால் அறிஞர் அண்ணா, நம் முதல் எதிரி வெள்ளையர்களிடம் இருந்து நம் இந்தியத் துணைக்கண்டம் விடுதலை பெறுவதைக் கொண்டாடுவோம். பின்னர் வடநாட்டாரிடம் இருந்தும் விடுதலை பெறுவோம் என்று தன் கருத்தை திராவிடநாடு இதழில் வெளியிட்டார். பின்னர் 1949ஆம் ஆண்டு தந்தை பெரியார் – மணியம்மை திருமணத்தில் திராவிடர் கழகம் பிரிய நேரிட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம், கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தோன்றியது.

15.09.1909-ல் பிறந்த அறிஞர் அண்ணா, 1943-ல் இருந்து 1969 வரை தொடர்ந்து எழுதிய நெடுங்கதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், தம்பிக்கு எழுதிய கடிதங்கள் யாவையுமே சமூக சீர்த்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டவை. சிந்தனையைத் தூண்டும் சக்தி வாய்ந்தவை. சகுனம், சாதகம், மூடப்பழக்கங்களைச் சாடுவன. 'பலாபலன்', 'சுடுமூஞ்சி' ஆகிய கதைகள், பொலிச் சமயவாதிகள் முகத்திரையைக் கிழிப்பன. 'அன்னதானம்', 'தேடியது வக்கீலை', 'பேய் ஆடிப்போச்சி' ஆகிய கதைகள், சமுதாய ஏற்றத்தாழ்வினை சாடுவது. சூதாடி ஒரு குடியானவரின் மென்மையான உள்ளத்தைக் காட்டுவது 'செவ்வாழை' உணர்ச்சிப் பெருக்கும் உண்மையை உணர்த்தும் துடிப்பும் கதைகளில் மிளிர்வதால் சிறுகதைக்குரிய சிறந்த வடிவம் அவை பெறவில்லை.

அண்ணா எழுதிய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை 'குமரிக்கோட்டம்', 'பார்வதி பி.ஏ.', 'சங்கோன் ராதா', 'கபோதிபுரக்காதல்', 'குமாஸ்தாவின் பெண்', 'கலிங்கராணி' ஆகியவை.

அரசியல் தலைவரும், அடுக்குச் சொல்லில் அருந்தமிழ்ப் பேச்சாளருமாகிய அறிஞர் அண்ணா, 1943-ல் 'சந்திரோதயம்' என்னும் பிரச்சார நாடகத்தின் மூலம் நாடக உலகில் நல்லடி எடுத்து வைத்தார். பின்னர் 'ஓர் இரவு', 'வேலைக்காரி' ஆகிய இரண்டு சீர்த்திருத்த நாடகங்களும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி கிருஷ்ண நாடக சபாவி்ல் நடிக்க நல்ல புகழை நல்கின. பின்னர் இவை இரண்டுமே திரைப்படங்ளாக வெளிவந்தன. 'சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்', சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு அறிமும் செய்தது. நீதி 'தேவன் மயக்கம்', 'காதல் ஜோதி', 'சொர்க்கவாசல்', 'இன்ப ஒளி', 'கண்ணாயித்தின் உலகம்' ஆகியவை கழகக் கொள்கையினை உலகறியச் செய்தன. 'நல்லதம்பி'நகைச்சுவையுடன் சமூகத்திருத்தம் செப்புவதை என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடித்து புகழ் பெற்றனர். 'ஓர் இரவு' ஒரே இரவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டுவது. இந்த நாடகத்தை ஒரே இரவில் அண்ணா எழுதியதாகக் கூறுவர்.

1952ஆம் ஆண்டு, கல்லூரிகள் நாடகப் போட்டி நடந்த புட்டண்ணா செட்டி டவுன் ஹாலில் 'இரக்கம் எங்கே' என்ற அண்ணா எழுதிய நாடகத்தை நடத்திப் பரிசு பெற்றோம். அறிஞர் அண்ணா, தூங்கிக் கிடந்த தமிழகத்தைத் தமிழின உணர்வைத் தூண்டி விட்டுப் பேச்சால் பெரும் புட்சி செய்த கோமகன். அடுக்குச் சொல்லால் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்த கள்வன். பின்னர் யாவருக்கும் அண்ணல் ஆனார். அண்ணா ஓர் இலக்கியமேதை. மேடைத் தமிழைத் தோற்றுவித்து மெருகேற்றிய சொல் வேந்தன்.

முதல் முதலில் அண்ணா, பெங்ளூரில் 1950-ல் அரசினர் மத்தியக் கல்லூரியில் திரு.உருத்திரபதியார் தலைமையில் பேசியதும் அதே கூட்டத்தில் நாவலர் இரா.நெடுஞ்செழியனும் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளையும் பேசியதும் இன்றும் என் நினைவில் வின்று நிழலாடுகின்றன.

அறிஞர் அண்ணாவின் வானொலிச் சொற்பொழிவுகள் அன்றையை இளைஞரக்ளின் உள்ளத்தை உசுப்பி விட்டன. 'வாலிபர் தேவை', 'விதிக்கு அடிமைத்தனம்', 'என்னைக் கவர்ந்த புத்தகங்கள்', 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை', 'தீண்டாமை', 'சமதர்மம்', 'ஓய்வு நேரம்', 'சொல்லும் பயனும்', 'மகாத்மா காந்தி' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
1967-ல் நடந்த விருகம்பாக்கம் தி.மு.க. மாநில மாநாடு தமிழக சரித்திரத்தையே மாற்றியமைத்தது. தன்னை அசைக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த பேராயக் கட்சியை(காங்கிரஸ்) முதன் முறையாகத் தி.மு.க. மற்ற கட்சிகளுடன் இணைந்து வீழ்த்தியது. அறிஞர் அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள், அவர் பாராளுமன்னத்தில் பேசிய ஆங்கில உரைகள், இவை யாவும் இன்று படித்தாலும் சுவை குன்றாது இருப்பது மட்டுமல்ல, நம் சிந்தனையையும் தூண்டிவிடும். தி.மு.க.வின் முதல் மேயர், அ.பொ.அரச அவர்களின் திருமகள் பூங்கோதையை என்னுடைய தம்பி டி.டி.அரசு மணந்தபோது அறிஞர் அண்ணாவே தலைமை தாங்கி திருமணத்தை நடத்திவைத்தார். கலைஞர், என்.வி.நடராசன், ம.பொ.சி. போன்ற தலைவர்கள் யாவரம் வருகை தந்து வாழ்த்திய அந்த நன்நாளை நினைத்துப் பார்க்கின்றேன். 1969ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாள் அண்ணா என் உள்ளம் சுக்கு நூறானது. ஆம் என் சிறு வயதில் இருந்தே என் ஆசானாக, தமிழில் ஆற்றல் பெற வழிகாட்டிய செந்தமிழ்ப் புலவனான, மேடைப் பேச்சை பயிற்றுவித்த வித்தகனாக, பகுத்தறிவுப் பாடம் புகட்டிய பகலவனாக யாரை எண்ணி இருந்தேனோ அவரை, அந்த உத்தமரை இழந்துவிட்டேன் என்று புலம்பினேன். ராஜாஜி மண்டபத்தில், அண்ணாவின் பூத உடலின் பக்கத்தில் நானும் என் துணைவியும் நின்றபோது நான் கதறிக் கதறி அழுது கண்ணீர் வடித்தேன். அவருடைய இறுதி ஊர்வலத்தைக் காண ஓடோடி வந்த கண்மணிகள் சுமார் அறுபத்து மூவர் இரயில் விபத்தில் இறந்தனர். பலர் மாரடைப்பால் இறந்தனர். சிலர் தம் உடலுக்கு தீயிட்டு எரிந்து சாம்பலாயினர். இதுவரை சரித்திரம் காணாத அளவு இலட்சோப இலட்சம் மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவை யாவும் என் நெஞ்சைவிட்டு அகலாத நிகழ்வுகளாகும்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai