மறைமலையடிகள்
(சென்னையில் 24.08.1958-ல் நடைபெற்ற
மறைமலையடிகள் நூல் நிலையம் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய
உரை - செந்தமிழ்ச் செல்வி திங்கள் இதழ் - செப்டம்பர், 1958)
மறைமலையடிகளாரின் மாண்பினை - எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும்
வியக்கத் தக்க அவரது மாண்பினை - அவரோடு நெருங்கிப் பழகிய பலரும்
எடுத்துரைத்து இருக்கிறார்கள்.
நான் அவரோடு நெருங்கிப் பழகியவன் அல்லன்! அவரோடு
எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு எல்லாம், இந்த நாட்டில் முதலில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான்.
மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
எங்களக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி தமிழகத்திற்குத்
தேவைதானா? அது தமிழகத்திற்குப் பொது மொழி ஆகத்தான் வேண்டுமா? அப்படிப்
பொதுமொழி ஆனால் தமிழுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பனவற்றையெல்லாம்
மறைமலையடிகளார் ஏடுத்துக்காட்டி வந்தார்கள். இதைபோல, அவர் மேற்கொண்டிருந்த
பல்வேறு முயற்சிகள் இன்று காலத்தால் கனிந்து வருகின்றன.
தனித்தமிழ் இயக்கத் தந்தை
மறைமலையடிகளாரது திருப்பெயர் - பெற்றோர் இட்ட இயற்பெயர் - வேதாசலம்
என்பதாகும். அதனை அவர் மறைமலையடிகள்என்று மாற்றிக் கொண்டபோது,
பலருக்கு ஐயப்பாடு! சிலர், இது என்ன புதியதோர் ஆபத்து? என்று கேட்டனர்.
ஆனால் மறைமலையடிகளாரோ - தமிழனுக்கு எனத் தனிப்பண்பு உண்டு; மொழி
உண்டு என்பதை நிலை நாட்டுவதில் மிக்க அக்கறை காட்டினார்.
இந்தப் பண்பும் இந்தத் தமிழ் மொழியும் காப்பாற்றப்படாவிடின், நாளாவட்டத்தில்
தமிழர்கள் இந்த மொழியையும் பண்பையும் மறந்து, தங்களுக்கு என உள்ள
சீரிய தன்மையை இழந்து விடுவர். உலகில் இன்றுள்ள வாழ்விழந்த இனத்தாரோடு
தமிழரும் சேர்க்கப்பட்டு விடுவர். எனவே, தமிழர்கள் தங்கள் மொழியையும்,
பண்பையும் மறந்துவிடக் கூடாது என்பதாக மறைமலையடிகளார், தனித் தமிழ்
இயக்கம் என்னும் பெயரால் சீரியதோர் முயற்சியை மேற்கொண்டார்கள்.
இந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்தபோது, இது வெற்றி பெறுமா? என்று
சிலரும் - இது தேவைதானா? என்று வேறு சிலரும் - இதனால் தமிழகத்திற்கும்,
தமிழர்களுக்கும் என்ன இலாபம்? என்று மற்றும் சிலரும் வினவத் தொடங்கினார்கள்.
ஆனாலும், இன்று யார் நடத்துகின்ற ஏடானாலும் - தனித் தமிழ் இயக்கத்தை
எதிர்த்தவர்கள் ஏடானாலும் - அதில் தனித் தமிழ் நடை கையாளப்படுவதை
நாம் கண்கிறோம்.
மறைமலையடிகள், தமது புலமையும் திறமையும் சாதாரணமாக வெளிப்பட்டால்
மட்டும் போதாது; அந்தப் புலமையும் திறனும் தமிழர்களுக்கு வாழ்வு
அளிக்கும் நோக்கம் உடையனவாக இருக்க வேண்டும் என்று கருதினார்.
அத்தகைய பெருந்தகை - பெரும் புலவர் - தம் வாழ்நாளில் தொட்டுத்
தொட்டுப் பார்த்து, எடுத்து எடுத்து படித்த ஏடுகளைக் கொண்ட நூலகத்தை,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இன்று திறந்து வைத்துள்ளனர்.
தமிழரகளுக்கு நல்ல ஆராய்ச்சித் திறனைத் தரவல்லது ஆகும் மறைமலையடிகளாரின்
இந் நூலகம்.
ஆயிரம் ஷேக்ஸ்பியர்கள் வந்தாலும் . .
. ?
இன்று நாட்டில் படிப்பது தேவைதானா? என்ற ஒரு வேடிக்கையான கேள்வியும்
எழுப்பப்படுவதைக் கேட்கிறோம்.
கல்லின் ஓசையிலிருந்தும் கருத்துப் பெறலாம்.
ஓடும் ஆற்றிலிருந்தும் கருத்துப் பெறலாம்
என்று ஷேக்ஸ்பியர் கூறினார். பெரியவர்கள் சொல்வதைக் கட்பதாலும்,
காட்டும தெளிவைக் காண்பதாலும், அறிவு பெற முடியாதா? என்று சிலர்
கேட்கிறார்கள். இத்தகையோருக்கு, ஆயிரம் ஷேக்ஸ்பியர்களின் அறிவுக்
கதிர்களும் பயன்படமாட்டா!
இந்தக் கேள்வியையும் தாண்டி, படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மெல்ல
அரும்பியயிருப்பதைக் காண்கிறோம்.
ஆனால் இதே நேரத்தில் - தமிழர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு
உள.
ஒன்று - படித்த சிலவற்றை மறக்க வேண்டும்; படிக்க மறந்துவிட்ட பலவற்றைப்
படிக்கவேண்டும்.
இவைதாம் தமிழர்கள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்.
எதையோ ஒன்றைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கம் உடைய நூல்கள் இருக்கின்றன.
எதையோ சிந்தித்துப் பார்க்கத் தூண்டும் நீல்கள் இருக்கின்றன.
இதை உணர்ந்த மறைமலையடிகள் - தமிழர்களுக்கு, அவர்களது தனி நாகரிகம்
ஏது? அவர்கள் வணங்கத் தக்கன எவை? அவர்கள் மொழியின் மாண்புகள் என்னென்ன?
என்பனவற்றையெல்லாம் அராய்ந்து, மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்
சொன்னார்கள். அவர்தம் கருத்துக்களை அறிகிறவர்கள், படிக்கத் தக்க
நூல்கள் எவை என்பனவற்றை அறிந்து கொள்ள முடியும்; சிந்திக்கத் தூண்டும்
நூல்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இப்படிச் சொல்லும்போது, அண்ணாதுரை! மறைமலையடிகள் சமயத் துறையில்
- சைவத்தில் - நம்பிக்கை வைத்திருந்தாரே, உங்களுக்கு அது சம்மதமா?
என்று சிலர் கேட்கக்கூடும்.
அன்பும் அருளுமே சைவம் என்று மறைமலையடிகள் கூறியதுதான் சைவம் என்றார்
- நான் மிகச் சிறந்த சைவன்; ஆண்டவன் ஒருவனே! என்பதுதான் சைவம்
என்றால் நான் மிகச் சிறந்த சைவன்.
தேங்காய் - மாங்காய் தின்பதைப்போல் .
. . ?
இன்று உலகில் மார்க்கத்தை (அறவழியை) மட்டுமல் - எல்லாவற்றையுமே,
இது எனக்கு என்ன பயன் தரும் என்ற நோக்கில்தான் உலகம் காண முற்பட்டிருக்கிறது.
இதை ஆங்கிலத்தில் (ஞாடைடிளடியீல டிக றுயீசவா) - பயன் நாடும் தத்துவம்
என்று கூறுவார்கள்.
மனிதனுக்கு இருக்கிற காலம் மிகக் குறைவானது; இந்தக் குறைந்த காலத்திற்குள்
இதைத்தான் செய்யவேண்டும் - அதை இப்படிச் செய்யவேண்டும் என்பதை
எளியவர்களுக்கும் விளங்கக்கூடிய வகையிலும், பயன்படக்கூடிய வகையிலும்
எடுத்துரைக்கவேண்டும்.
தத்துவ நூல்களிலிருந்து கறக்கவேண்டிய முறைப்படி கருத்துக்களைக்
கறந்து, கழனிகளில் பணி புரியும் உழவர்களுக்கும், அலைகளில் அவதியுறும்
தொழிலாளருக்கும், ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும்
நடுத்தர மக்களுக்கும் பயன்படத் தக்க - புரியத்தக்க வகையில் - தரவேண்டியுள்ளது.
பசுவினிடத்தில் பால் இருக்கிறது என்றால் - பசுவின் உடல் முழுதும்
நாம் பாலைத் தேடிச் செல்வது இல்லை. கறக்கவேண்டிய இடத்தில் முறைப்படி
கறந்தால்தான் பால் கிடைக்கு.ம அதனால் பயன் கிடைக்கும்.
அதைப் போல, தமிழ் இலக்கியங்கள், தத்துவ நூல்களில் இருந்தெல்லாம்
கருத்துக்களை முறைப்படி கறந்து தரவேண்டியது, தமிழ்ப் புவர்களின்
வேலையாகும்.
இப்படிப் பயன்படத் தக்க வகையில் எல்லாவற்றையுமே நோக்கிப் பயன்படைத்தவர்கள்
மேலை நாட்டவர்.
பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலேயே அவர்கள் பயன்படுத்தும்
நோக்கத்தோடு செயலாற்றத் தொடங்கிவிட்டனர். நாம் இன்னும் அந்தப்
பயன்படுத்தும் நோக்கத்தைப் பெறவில்லை.
தேங்காயை நாம் பய்னபடுத்துவதற்கும் மாங்காயைப் பயன்படுத்துவதற்கும்
வேறுபாடு இல்லையா?
தேங்காயில் மேலே உள்ள நாரையும், ஒட்டையும் நீக்கிவிட்டு, உள்ளே
உள்ள பண்டத்தைத் தின்கிறோம். மாங்காயில் மேலே பழம் - உங்ளே கொட்டை;
பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை வீசி எறிந்துவிடுகிறோம்.
அதைப்போல, தமிழ் இலக்கியங்களிலும், எதை எதை, எந்த எந்தக் காரியங்களக்குப்
பயன்படுத்துவது - எப்படிப் பயன் படுத்துவது - என்ற முறைமைப்படுத்தி,
வரிசைப்படுத்தி, வகைப்படுததித் தரவேண்டாமா?
அப்படித் தந்தால் அன்றி, மக்களிடையே பொது அறிவு வளருவது எப்படி?
எவை எளிதாக நல்ல பயன் தரத்தக்கன என்று மக்கள் கருதுகிறார்களோ,
அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழனின் தனிப்பண்பு
பயன் தரத்தக்க நோக்கு வேண்டும் என்பதால்தான் நாங்கள் சில இலக்கியங்களை
- கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச, புராணங்களைத் தாக்க வேண்டியவர்கள்
ஆனோம்; சிலர் அவற்றைத் தாங்கித் தீர வேண்டும் என்று கருதினார்கள்.
இப்படி எங்கள் தாக்குதலுக்கும் - சிலர் தாங்கித் தீரவேண்டிய நிலைக்கும்
- இடைப்பட்ட நூல்கள் இருக்கின்றனவே, அவைதான் தமிழருக்குப் பயன்தரும்
நூல்கள் எனக் கூறலாம்.
எக்காலத்திலும் பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன.
அவற்றில் எல்லாம் நல்ல புலமை பெற்றிருந்த மறைமலையடிகள், பல்வேறு
கருத்துககளை - தமிழன் தனியானநோர் மாண்புமிகு பண்புக்குச் சொந்தக்காரன்
என்பதை வலியுருத்தும் கருத்துக்களை - மிக்க துணிவோடு எடுத்துச்
சொன்னார்.
தமிழனின் பண்பு தனிச் சிறப்ஙப பெற்றது என்பதை மறைமலையடிகள், காரண
காரியங்களோடு விளக்கியிருக்கிறார் கருத்துக்களைப் பதப்படுத்தி,
பக்குவப்படுத்தி - ஏடுகள் வாயிலாகத் தந்திருக்கிறார்.
சைவ சித்தாந்தக் கழகத்தில் உள்ள என் நண்பர் திரு.சுப்பையா அவர்கள்,
மறைமலையடிகள் பெயரால் ஏற்வாடு செய்துள்ள இந்தப் படிப்பகம் மறைமலையடிகளின்
கருத்துக்களை அறிந்து, தமிழர்கள் நல்ல பயன் பெறுவதற்குப் பயன்படும்
என்பதில் ஐயப்பாடு இல்லை.
வண்ண ஏடுகள் வரவேண்டும்
ஒரு காலத்தில் தமிழில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? என்று
சிலர் கேட்டது உண்டு. ஆனால் இன்னைக்கு ஓர் ஐயாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு
சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்துக்குப் போனால், அத்தனைக்கும்
தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு திரும்ப முடியும். அந்த அளவு
தமிழில் இன்று புத்தகங்கள் வெளிவருகின்றன.
சீரிய கருத்துக்களைத் தரும் வண்ண ஏடுகள் ஆங்கிலத்தில் மட்டுமே
இருந்தன. ஆனால் இன்று தமிழிலும் இருக்கின்றன. அத்தகைய ஏடுகள் இன்னும்
பல வெளிவரவேண்டும்.
நம்முடைய இலக்கியக் கருத்துக்கள் எல்லாம் நல்ல வண்ணங்களோடு ஏராளமாக
வெளிவரவேண்டும். வண்ணம் பற்றி நான் வலியுறுத்திச் சொல்வதற்குக்
காரணம், இங்கே வண்ணத்தை விரும்பும் வாலிபர்கள் ஏராளமாக இருப்பதனால்தான்!
என்னதான் நல்ல கருத்துக கருவூலம் ஆனாலும், அதில் வண்ணம் கூட்டப்பட்டால்,
நம்மையும் அறியாமல் அதனை எடுத்துப் புரட்டிப் பார்க்கத் தூண்டும்.
புரட்டியதும் சுவை தட்டிவிட்டால் பின், அந்தக் கருத்துக் கருவூலம்
வெளிவந்த பயனை எய்திவிடும்.
தமிழ்ப் பெருங்குடி மக்கள், கிடைத்த கருத்துக்களை பெற்ற கருவூலங்களையெல்லம்
ஒரே பாண்டத்தில் போட்டு வைத்துவிட்டனர். இன்றைக்குள்ள தமிழ்ப்
புலவர்கள் அவற்றையெல்லாம் வெளியில் எடுத்து, நல்ல கருத்துக்களையும்,
ஆராய்ச்சிக்கு நிற்கக் கூடியவற்றையும், வெறும் கற்பனை மட்டுமே
கொண்டவற்றையும் ஒரே பாண்டத்த்தில் இருப்பதைப் பிரித்தெடுத்து,
முறைப்படுத்தி வரிசைப்படுத்தித் தரவேண்டும். இதைச் செய்வதற்கு
இதுதான் தக்க காலம் என்று நான் கருதுகிறேன்.
திருக்குறன் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இன்னதைச் செய்யவேண்டும்;
இன்னதைச் செய்தால் நல்லது; இன்னதை இன்னார் செய்தார்கள் என்று அந்த
நல்லற நூலில் கருத்துக்கள் பிரிக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறேன்.
இன்னதைச் செய்யுங்கள் என்னும் கட்டளையும், இன்னதைச் செய்தால் நலம்
என்னும் பரிந்துரையும் குறளில் இருக்கின்றன.
இதுபோல, தமிழ் இலக்கியங்களை எல்லாம் முறைப்படுத்தலாம்.
எனவே தமிழ் இலக்கியங்களை முறைப்படுத்தி - வகைப்படுத்தித் தரவேண்டிய
பொறுப்பு தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கிறது. அதற்கு இதுவே தக்க
காலம். ஏனென்றால், இப்போது அதற்கான விழிப்புணர்ச்சியும் ஆற்றலும்
நிரம்ப இருக்கின்றன.
அந்தக் காரியம் நடைபெற்றால் தான் தமிழின் தொன்மையும் தமிழின் இனிமையும்,
பெருமையும், தமிழர்களால் சரிவர உணரப்பட முடியும்; தமிழ் இனம்,
தமிழ்ப் பண்பு, தழைக்க முடியும்.
இந்த வகைக்கு இப்போது நிறுவப்பட்டுள்ள மறைமலையடிகள் நூலகம் பயன்படவேண்டும்
என விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.