அகில மலேசியா திராவிடர் கழகத்தின் சார்பில் 17.7.65 அன்று நடைபெற்ற விருந்தில் அண்ணா அவர்கள் பேசியதாவது:-
"இது உண்மையான சிறப்புக் கூட்டம் என்பேன்; இங்கே விருந்து நடக்கிறது. மேஜைகளின் மேலே பண்டங்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றைப் புசிக்காமல் அப்படியே வைத்துவிட்டு, என்னையே பார்த்துக் கொண்டு நடைபெறுகிற ஒரு விருந்துக் கூட்டத்தை வாழ்க்கையில் நான் இன்றே காண்கிறேன்.
நான் பார்த்த இடங்களில், உண்ணும்போது பேச மாட்டார்கள்; பேசும்போது உண்ண மாட்டார்கள். இங்கு தட்டுத் தட்டாகப் பண்டங்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்கள்.
மலேசிய நாட்டிற்கு நான் வந்ததிலிருந்து எதைப் பார்ப்பது - சுவைப்பது - எதை உண்ணுவது என்று திகைக்கும் அளவுக்கு மலேசியாவில் வாழும் மக்கள் உள்ளன்போடு - என்னை உபசரிக்கிறீர்கள்.
நான் வைத்துக்கொண்டிருப்பதெல்லாம் ஒரே ஒரு வயிறுதான் - அதனையும் கெடாமல் ஊருக்குத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.
நான் எதிர்பார்ப்பது இந்த விருந்தையல்ல; உங்களைப் பார்ப்பதே எனக்கொரு விருந்து; உங்களைப் பற்றி நினைப்பதே எனக்கொரு விருந்து;உங்களோடு பேசுவதே எனக்கொரு விருந்து!
இப்படிப்பட்ட நல் விருந்தளித்த உங்களை என்னால் மறக்க முடியாது.