மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
திருமண வீட்டு வரவேற்புப் போல...!

 

சுங்கை சிப்புட்டில் 20.7.65 மலை 6:15 மணிக்கு நகர மண்டபத்தில நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அண்ணாவைப் பார்க்க, அவர் தம் உரையைக் கேட்க மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.

மண்டபம் நிரம்பி வழிந்தது. இருக்க இடமில்லாமல், நிற்க இடமில்லாமல், பலர் கட்டிடக் கூரை மற்றும் சன்னல் வழியாக அண்ணா அவர்களைப் பார்த்தனர்.

மலர் தூவி பன்னீர் தெளித்து நாதசுர இசை முழங்க தலைவர்கள் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். உள்ளூர்ப் பிரமுகர்களும் தொண்டர்களும் தலைவர்களை மேடைக்கு அழைத்துச் சென்றனர். திருமண வீட்டில் நுழைவதுபோல் அண்ணா நுழைந்தார்.

'அண்ணா வாழ்க!' என்று பல தடவைகள் முழங்கப்பட்டன.

"தமிழுக்குத் தனி நடை தந்த மேதை - ஆசியஜோதி, நேருவின் பாராட்டைப் பெற்ற பகுத்தறிவுவாதி - அறிவுலக மேதை - தமிழர் பண்பாடு காக்கும் தனிப்பெருந் தலைவர்" என்று கூட்டத்திற்குத் தலைமை வகித்த காரை திரு. ஆ.சுந்தரம் அண்ணா அவர்களை பாராட்டிப் பேசினார்.

அண்ணா அவர்கள் பேசுகையில் இங்கே பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன, அவர்களுக்குள் பல பிணக்குகள் இருக்கலாம். என் வருகைக்கும் அவற்றிற்கும் சம்பந்தப்படுத்திப் பார்க்க அவர்கள் முயலக் கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

"நான் இங்கு அரசியல் பேச வந்திருக்கிறேன் என்று தவறான அபிப்பிராயங்களும் கருத்துகளும் தலை தூக்கியதாக அறிந்தேன். எனக்கு என் நாட்டிலுள்ள முழுமையான பணி அரசியல்தான். 1800 மைல் தூரம் வந்து அரசியலைத் தேடும் அளவுக்கு அண்ணாதுரைக்கு அரசியல் பஞ்சம் ஏற்பட்டு விடவில்லை. நான் அரசியலை என்னோடு எடுத்து வரவில்லை. நான் அணிந்து கொள்ள நிறையச் சட்டை வேட்டிகள் கூட எடுத்து வரவில்லை" என்றார்.


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai