மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
தாயகம் மீண்ட அண்ணாவுக்குத் தலைநகர் தந்த வரவேற்பு

 

அறிஞர் அண்ணா அவர்கள், 21.8.65 அன்று சென்னை வந்து சேர்ந்தார்கள். வென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில், மகத்தான வரவற்பு அளிக்கப்பட்டது.

புகைவண்டி நிலையத்தில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர்; இரயில் வண்டிகள் மீதும், கட்டிடங்கள் மதிற்சுவர்கள் மீதும் ஏறி நின்றிருந்தனர். இரயில் நிலையத்தையொட்டியுள்ள சாலைகளிலெல்லாம் மக்கள் நிரம்பியிருந்தனர்.

அண்ணா வருகையை எதிர்பார்த்து காலை 9 மணி முதலே புகைவண்டி நிலையத்தில் ஏராளமான கழகத் தோழர்கள் குழுமியவண்ணமிருந்தனர்.

அண்ணா அவர்கள் வந்த 'சதர்ன் எக்ஸ்பிரஸ்' வண்டி 1 மணி 20 நிமிடம் தாமதாக வந்து கொண்டிருக்கும் செய்தி புகைவண்டி நிலைய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. எத்தனை மணி தாமதித்து வந்தாலும் இருந்து வரவேற்றுவிட்டே திரும்புவது என்ற முடிவில் அனைவரும் நிலையத்திலே காத்திருந்தனர்.

சதர்ன் எக்ஸ்பிரஸ் சரியாக 12:45 மணிக்கு வந்தது. வழிமேல் விழி வைத்து ஒரு கரத்தில் மாலையும், மறு கரத்தில் கழகக் கொடியும் ஏந்திக் காத்திருந்த தோழர்கள், அண்ணா வரும் வண்டியின் புகை தொலைவில் தெரிந்த உடனேயே வரவற்பு முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.
'அண்ணா வாழ்க!' என்ற முழக்கங்கள் புகை வண்டி நிலையக் கட்டிடத்தையே அதிரச் செய்தன. வண்டி வந்து நின்றதும் அண்ணா அவர்களும் இரா.செழியன் அவர்களும் புன்முறுவலுடன் வாயிற்படியிலிருந்து வணக்கம் தெரிவித்தவாறே கீழே இறங்கினர்.

தலைமைக் கழகச் சார்பில் நாவலர் இரா.நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, என்.வி.நடராசன், கே.ஏ.மிதியழகன், திருமதி சத்தியவாணிமுத்து, ஏ.கோவிந்தசாமி ஆகியோர் மாலையணிவித்து வரவேற்றனர்.

பின்னர், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் நீல நாராயணன், மாலையணிவித்தார். மாநகராட்சி மன்றச் சார்பில் மேயர் மாலையணிவித்தார். மற்றும் நகரக் கிளைக் கழகங்கள் சார்பிலும், வெளி மாவட்டக்ஙள் சார்பிலும், தொழிற்சங்கங்கள் சார்பிலும், தனிப்பட்டவர்கள் சார்பிலும் ஏராளமான மாலைகள் அணிவிக்கப்பட்டன.

உள்ளூர் - வெளியூர்களிலிருந்து கழக முக்கியத் தோழர்கள், செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, நகராட்சிமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் பலரும் வந்திருந்து வரவேற்றனர்.

அண்ணா அவர்களைக் காண மக்கள் கூட்டம் நெருக்கியதால் இரயில் நிலையத்தை விட்டு அண்ணா அவர்களால் ஒர் அங்குலம் கூட நகர முடியவில்லை. மிகச் சிரமப்பட்டு வெளியே அழைத்துவர வேண்டியதாயிற்று.

அங்கு ஒரு மேடை மீது அண்ணா அவர்கள் ஏறி நின்று அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பிறகுதான் கூட்டம் கலைய ஆரம்பித்தது. பின்னர் அண்ணா அவர்கள் காரில் தமது இல்லத்துக்குப் புறப்பட்டார்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai