மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
'தமிழ்மலர்' தீட்டிய தலையங்கம்

 

திரு. செல்வகணபதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ் நாளிதழான 'தமிழ் மலர்' ஏட்டில் சூலை 18-ஆம் நாள் 'வந்தார் - தந்தார்' என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் வருமாறு:

மலேசியத் தமிழர்களின் அழைப்பை ஏற்றுக் கலாசாரத் தூதுவராகவும், மலேசியாவின் பிரச்னைகளை - அதன் பெருவாழ்வை நேரில் தெரிந்துகெள்வதற்கு ஓர் அரசியல் மாணவராகவும் வருகை புரிந்துள்ள அறிஞர் அண்ணா அவர்கள், சிங்கப்பூர் கூட்டத்தில் மலேசியத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அறிவுரையை மலேசியத் தமிழ்ச் சமுதாயம் மறக்காது - மறக்கவும் கூடாது.

"இந்திய எல்லை ஆக்கிரமிக்கப்பட்டபோது இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய துங்குவையும், மலேசிய மக்களையும் இந்தியர்கள் மறக்கவே மாட்டார்கள்" என்று சொன்ன அண்ணா, குடியுரிமை கோரும் அத்தனை பேருக்கும் அரசியல் பெருந்தன்மையோடு குடியுரிமை வழங்கிய இந்த நாட்டு அரசங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதே சமயத்தில் 'மலேசியர்' என்ற உணர்வுடன் வாழ வேண்டுமென்றும், இந்தியாவுக்குத் திரும்பும் உணர்வை விட்டுவிடவேண்டும் என்றும், அவர் அறிவுறுத்தியதைத் தங்களது எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்துள்ள மலேசியத் தமிழர் அனைவரும் போற்றி ஏற்கத் தயங்கவே மாட்டார்கள்.

உலக நாடுகளின் வரலாற்றை - அரசியல் - இலக்கியங்களை - காலாசாரங்களை விரிவாகத் தெரிந்து வைத்திருப்பவர் அறிஞர் அண்ணா. இந்த அறிவுரையை நமக்கு அவர் வழங்கியபோது, சமீப ஆண்டுகளில் சில நாடுகளில் குடியுரிமைப் பிரச்னைகளையொட்டி, அந்தச் சில நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனத்தில் வைத்தே பேசியிருக்க வேண்டும்.

மலேசியா மீது இந்தியர்கள் மாளா விசுவாசம் கொண்டிருக்கின்றனர்; மலேசிய வளர்ச்சியில் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தியிருக்கின்றனர் - சிந்தி வருகின்றனர்.

மலேசியாவுக்க மிரட்டல் ஏற்பட்டிருக்கும்போது, மலேசியாவைக் காப்பதற்குப் பொருளையும், உழைப்பையும் வழங்கி வருகின்றனர். ஆனால் குடியுரிமை பெறத் தகுதி பெற்றிருந்தும் - இரண்டு மூன்று தலைமுறைகளாகக் குடும்பங்களுடன் மலேசியாவில் வாழ்ந்தும்கூட - இந்தியர்களில் சிலர் - தமிழர்களில் பலர், அரசு தரும் தாராளக் குடியுரிமைச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தவறிவிட்டனர் என்பதும் கசப்பான உண்மையாகும். அண்ணாவின் அறிவுரையை இவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வர் என்றே எதிர்பார்க்கிறோம். அறிஞர் அண்ணா எடுத்துக் காட்டியதுபோல 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறி வைத்தவன் தமிழன்.

"நீங்கள் மலேசியத் தமிழர்கள் - இருக்கின்ற நாட்டைக் கெடுத்துவிடாதீர்கள்; யாரையும் கெடுப்பது தமிழ்ப் பண்பாடல்ல; அப்படிக் கேடு நினைப்பவன் தமிழினத்தில் பிறந்தாலும் தமிழ் மரபை மறந்தவனாவான். அத்தகையவன் தப்பித் தவறித் தமிழ் பேசினாலும் அவன் தமிழன் அல்லன்" என்று தமிழ்ப் பண்பாட்டுக்கு இலக்கணம் கூறினார் அண்ணா.

"தமிழ் மொழியைப் பிற இனத்தாரும் - குறிப்பாக மலாய்க்காரரும், சீனர்களும் கற்றுக் கொண்டு தமிழ் நாட்டில் பிறக்காமல் போனோமே என்று கருதும் நிலைக்குத் தமிழர்கள் வாழ்ந்துகாட்ட வேண்டும்" என்ற அண்ணாவின் அறிவுரையைக் கேட்பவர்கள், தமிழ்ப் பண்பாட்டினை - தமிழ் இலக்கியங்களை நாமும் தெரிந்து கொண்டு அவற்றின்படி நடந்து, பிற இனத்தாரிடம் பரப்புவதற்கு என்ன சாதித்தோம் என்று பன்னூறு ஆண்டுக்காலமாக மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தங்களுக்குள்ளேயே நிச்சயமாகக் கேள்வியெழுப்பியிருப்பார்கள். தமிழர்கள் பிற இன மக்களும் பின்பற்றத்தக்க வாழ்க்கை வழிமுறைகளைத் தரும் திருக்குறள் போன்ற நூல்களை மலேசிய தேசிய மொழியில் ஆக்க வேண்டுமென்ற நீண்டகால ஆர்வம் இப்போதுதான் செயல்முறையில் தளிர்விட்டிருக்கிறது.

தமிழர் பண்பாட்டினை - வரலாற்றை விளக்கும் நூல்களைத் தேசிய மொழியிலும் வெளியிடுவதற்கு ஓர் அற அமைப்பை ஏற்படுத்துவதற்கு மலேசியத் தமிழ்ப் பெரியார்கள் - வள்ளல்கள் - தொண்டர்கள் முன்வந்தால் அண்ணாவின் இந்த யோசனை மலரும்; மணம் பரப்பும்; ஒளி வீசும்!

"தமிழ் மொழியில் சாதி என்ற சொல்லே இல்லை" என்று விளக்கிய அண்ணா அவர்களின் அறிவுரையை மலேசியாவில் சாதியின் அடிப்படையில் சங்கங்களை வைத்திருப்பவர்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்றே நம்புகிறோம்.

மலேசியாவின் பாராளுமன்ற சனநாயக முறையை அண்ணா பாராட்டிப் பேசினார். இந்தியாவில் இந்த சனநாயக முறையே தழைத்தோங்குகிறது.

இந்த இரண்டு நாடுகளிலும் எதேச்சாதிகார ஆட்சி இல்லை. இராணுவ ஆட்சி இல்லை. சர்வாதிகார ஆட்சியை உலகுக்கு மூடி மறைப்பதற்கான வழிகாட்டும் சனநாயக முறையும் இல்லை. ஆனால் குடியாட்சி முறையைக் கொண்ட மலேசியாவை எதேச்சாதிகாரியின் தலைமையில் உள்ள பெரிய நாடான இந்தோனேசியா மிரட்டி வருகிறது. சுகர்ணோவின் எதிர்ப்பில் மலேசியாவுக்கு இந்திய மக்களின் ஆதரவை மீண்டும் அண்ணா வலியுறுத்தினார்.

மலேசியாவுக்கு அண்ணா தெரிவிக்கும் இந்த ஆதரவு புதிதல்ல; அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'காஞ்சி'யில் ஏற்கனவே பலதடவைகள் மலேசியாவை ஆதரித்து அவர் எழுதியிருக்கிறார். அண்ணாவின் இந்தப் பணிக்கு உண்மையிலேயே மலேசிய மக்களும், அரசினரும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மலேசியாவில், உலக அறிஞர்களில் ஒருவரான அண்ணா அவர்கள், இரண்டு வாரம் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவர் தரும் கருத்துக்கள் ஆழமானவை; பயனுள்ளவை; நல்வாழ்வுக்குரியவை.

ஆகவே, 'அன்னாரை நேரில் பார்த்தோம்; சொல் நோக்கும் பொருள் நோக்கும் உள்ள அவரது உரையைக் கேட்டோம்' என்ற மகிழ்ச்சியோடு மட்டுமே இருந்துவிடாமல், அவர் ஆலோசனைகளைச் செயல்முறைக்குக் கொணர இந்தியர்கள் - குறிப்பாக மலேசியத் தமிழர்கள் பாடுபட வேண்டும்.

அறிஞர் அண்ணாவிற்கு நாம் அளிக்கும் காணிக்கை, மரியாதை இதுதான். இதையே அவரும் விரும்புகிறார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai