மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
தாய்லாந்தில் அண்ணா

 

சிங்கப்பூரைவிட்டு 1.8.65 காலை 8 மணிக்குக் கிளம்பிய விமானம் மூலம் ஜப்பான் போகும் வழியில் தாய்லாந்து தலைநகரமான பாங்காக் நகருக்கு அறிஞர் அண்ணா அவர்கள், இரா.செழியனுடன் காலை 9:35 மணிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

விமான நிலையத்தில் இந்தியத் தூதுவரகப் பிரதிநிதியும், திரு.எம்.டி.எஸ். மரைக்கார் நிறுவனத்தைச் சேர்ந்த அன்பர்களும் 'ஈகாபே' (ECAFE) என்று அழைக்கப்படும் ஐ.நா.அமைப்பில் பணியாற்றும் தமிழர்களும், மற்றும் பல நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக நண்பர்களும் வந்திருந்து, மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர். சிறப்பான பகல் விருந்து அளிக்கப்பட்டது.

அன்று பிற்பகல் பாங்காக் நகரத் தோழர்களுடன் புகழ் பெற்று விளங்கும் நவரத்தின புத்தர் கோவில், அரிதுயில் புத்தர் கோயில் ஆகியவைகளைப் பார்வையிட்டார். இக்கோவில்களில் உள்ள புத்தர் சிலைகள் முழுதும் கட்டித் தங்கத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரவு பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதுவர், அண்ணா அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு விருந்து அளித்தார். அந்த விருந்தில் இந்தியாவிலிருந்து வந்திருந்த முக்கியமானவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2.8.65 காலை தாய்லாந்து நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்டார். அன்று பிற்பகல் எம்.டி.எஸ்.மரைக்கார் நிறுவனத்தார் அண்ணா அவர்களுக்கு விருந்து அளித்தார்கள்.

மாலை 5 மணிக்கு இந்திய வர்த்தகர்கள் சங்கத்தில் அண்ணா அவர்களுக்கு வரவேற்பும் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்தியத் தூதர் கே.வி.பத்மநாபன் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசினார்.

இரவு 'ஈகாபே' (ECAFE)யைச் சேர்ந்த திரு.கந்தசாமி அவர்கள் வீட்டில் விருந்தளிக்கப்பட்டது.

3.8.65 அன்று காலை 11:45 மணிக்கு, விமானம் மூலம் பாங்காக்கை விட்டுக் கிளம்பிக் கம்போடியாவின் தலைநகரான நாம்பென் அடைந்தார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai