மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
தமிழ் முஸ்லிம்கள் விருந்து

 

சிங்கப்பூர் வாழும் தமிழ் முஸ்லிம்களின் சார்பில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு ஒரு விருந்து எற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் முஸ்லிம் யூனியன் வழங்கிய அந்த விருந்தில் அண்ணா அவர்கள் உரையாற்றுகையில், கூறியதாவது:

"செந்தமிழ் நாட்டில் சங்க காலத்தில் நிலவிய சமூக அமைப்பில் சன்மார்க்க நெறியான இஸ்லாத்தின் கோட்பாடும் ஒத்திருப்பதைக் காணலாம்.

"இஸ்லாம் ஏக தெய்வ வணக்கத்தையும், சாதி பேதமற்ற சமுதாய அமைப்பையும் கொண்டிருப்பதைப் போலவே, இன்பத்தமிழர் வாழ்வும் இத்தகைய நிலையைக் கொண்டிருந்தது.
அருமையான விருந்தைத் தந்துவிட்டு, அதிலும் 'அதிகமாகச் சாப்பிடுங்கள் அண்ணா' என்று எனக்கு அதிகம் அதிகமாக உணவை அள்ளி வைத்துவிட்டு என்னைப் பேசச் சொல்லியிருக்கிறீர்கள்.

என் உடல்நிலையைப் பொறுத்தவரையில், இந்த நல்ல விருந்து என்னைத் தூங்க வைக்க உதவுமே தவிர, அதிகம் பேச வைக்க உதவாது.

நீண்ட நெடுங்காலத் தொடர்பு
மலேசியத் திருநாட்டுக்கு வந்திருப்பதால்தான் முஸ்லிம்கள் விருந்து கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ண வேண்டாம். முஸ்லிம்களோடு விருந்து சாப்பிடுவது எனக்கு 40 ஆண்டுக்கால பழக்கம்!

அரசியல் கட்சியாகத் தலைதூக்குவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே எங்களுக்கும் - முஸ்லிம்களுக்குமிடையே நெடுங்கால ஒப்பந்தம் இருந்து வந்திருக்கிறது.

திராவிடர் இயக்கத்திற்கும் - முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு, கடந்த முப்பது ஆண்டுக்காலத்திற்கு மேலாக நிலவி வருகிறது.

முஸ்லிம்களைக் காங்கிரசுக்காரர்கள் பார்க்கும்போது, "போயும் போயும் அண்ணாதுரையுடன் உறவு கொண்டாடுகிறீர்களே!" என்று அங்கு (இந்தியாவில்) குறைபட்டுக் கொள்வதுண்டு. அந்த அளவிற்குத் திராவிடர் இயக்கத்திற்கும் முஸ்லிம் மக்கட்கும் இடையிலோன தோழமை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்று இங்குள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் பற்றி வினா விடுத்தார். அவருக்கு நான் சொன்னேன் - 'ஒரு வேளை, இங்குள்ள முஸ்லிம்கள் வேண்டுமானால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்காலாம். ஆனால் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழ் நாட்டவரே ஆவர். ஒரு வேளை கேரளத்திலுள்ள முஸ்லிம்களில் வேண்டுமானால் அராபிய வழியினர் இருக்கக் கூடும். செந்தமிழ் நாட்டில் சின்னசாமிதான் சிக்கந்தராக மாறியிருக்கிறார். அங்குள்ள முஸ்லிம்கள் இறக்குமதி ஆனவர்கள் அல்லர்.

'வாளின் உதவியால்தான இஸ்லாம் இந்தியாவில் பரவயிது' என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் வரலாற்றைப் பார்ப்போமேயானால் இது உண்மையல்ல. மொகலாயப் பேரரசின்போது, இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட அதற்குப் பிற்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

வாளினால் இஸ்லாம் பரப்பப்பட்டது. உண்மையானால் மொகலாய சாம்ராஜ்யத்தின் போது, முஸ்லிம்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்திருக்க வேண்டும். மொகலாய ராம்ராஜ்யம் வீழ்ந்த பின்னரே - இன்னுசொல்லப்போனால் பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னரே - இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சாதி பேதமற்ற சமுதாய அமைப்பும் ஏக தெய்வ வணக்கமும் ஆகும். இவை தமிழர்களின் தொன்மையான வாழ்வு முறைகளாகும்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai