அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இரா.செழியன் அவர்களுடன் 16.07.1965 மாலை 6 மணியளவில் விமான மூலம் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்தனர். விமான நிலையத்தில் வெள்ளம் போல் தமிழ் மக்கள் குழுமியிருந்து வாழ்த்து முழங்கி வரவேற்றனர்.
(இச்செய்தி 17.07.1965 நம்நாடு இதழில் வெளியாயிற்று)
அண்ணா அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றே சிங்கை ஜலான்புசார் விளையாட்டரங்கில் மாபெரும் வரவேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விமான நிலைய வரவேற்பு
அண்ணா அவர்களைத் தாங்கி வந்த ஏர் இந்தியா விமானம், (மலேசிய நேரப்படி) சரியாக மாலை ஆறேகால் மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது. விமானத்திலிருந்து அண்ணாவும் அவருடன் இரா.செழியனும் இறங்கினர். இருவருக்கும் பொது வரவேற்பில் கலந்து கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாலையிட்டும், மலர் தூவியும் வரவேற்றனர்.
பின்னர் அண்ணா அவர்களும் திரு.இரா.செழியன் அவர்களும் வரவேற்க வந்திருந்தோருடன் பேசி மகிழ்ந்து சுவை நீர் அருந்தினர்.
மாலைகள் கணக்கின்றிக் குவிந்து இருவருடைய கழுத்துகளையும் அலங்கரித்தன.
அதைத் தொடர்ந்து அண்ணா அவர்களும், இரா.செழியன் அவர்களும் விமானத்திடலிலும், சாலைகளின் இரு மருங்கிலும் காத்து நின்ற தமிழ்ப் பெருமக்களுக்குக் கைக் கூப்பியும் கையசைத்தும் புன்முறுவலோடு காரில் சிங்கை நகருக்கு வந்தனர்.
--- 'தமிழ் மலர்' சிங்கப்பூர்.