சிங்கைத் தலைமையமைச்சரின் சிறப்புரை
திரு. அண்ணாதுரைக்கு இந்தி தெரியாது; அதனால் அவர் தமிழிலேயே பேசுகிறார். இதற்காக இந்தியாவுக்கு அவர் விசுவாசமற்றவர் என்று சொல்லிவிட முடியாது.
அதுபோலவே, தேசீய மொழி பேசாதவர்களை 'விசுவாசமற்றவர்கள்' எனக் கூறிவிட முடியாது - என்று சிங்கப்பபூரில் நடந்த வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் சிங்கைத் தலைமையமைச்சர் திரு.லீகுவான் இயூ தமது தலைமையுரையில் கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
ஒரே மொழியால் பிரச்சினை தீராது
ஒரே மொழி வழங்குவதால் மட்டுமே எல்லாவற்றையும் தீர்த்துவிட முடியாது. ஒரே மொழி வழங்கும் தென் வியட்நாமுக்கும் வட வியட்நாமுக்கும் இடையே, செஞ் சீனாவுக்கும் பார்மோசாவுக்கும் இடையே, வடகொரியாவுக்கம் தென் கொரியாவுக்கும் இடையே, ஏன், இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையே கூட தகராறு நிலவுகிறது. ஆகவே, மொழியே எல்லாவற்றிற்கும் தீர்வு அல்ல.
தமிழகத்திலிருந்து தலைசிறந்த பேச்சாளர்களை இப்போது எதிர்நோக்கும் இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் அண்மைய எதிர்காலத்தில் இங்கேயே பேச்சாளர்களை வழங்கக் கூடியவர்களாக இருப்பர்.
இங்குள்ள தமிழ் பேசும் மக்களில், இப்போது பாதிக்க மேற்பட்டோர் இங்கே பிறந்தவர்களாக இருக்கலாம்; மறு பாதிப் பேர் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இன்னும் 15 ஆண்டுக் காலத்தில் அநேகமாக எல்லோரும் இங்கேயே பிறந்தவர்களாக இருப்பர்.
வாழ்நாளில் காணாதது!
இத்தகையதொரு கூட்டத்தை நான் இதுவரை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை.
நான் உங்களை (இந்தியரை) ஆதரிக்கிறேன்; நீங்கள் என்னை ஆதரிக்கிறீர்கள்; நாமெல்லோரும் சேர்ந்து மலேசியாவை ஆதரிப்போம்.நான் உங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கிறேன்; ஏனெனில் நீங்கள் இந்த நாட்டில் வாழ்பவர்கள்.
உங்களுடைய கடுமையான உழைப்புதான் சதுப்பு நிலங்களையும், புதர்களையும் செழிப்புடையவையாக மாற்றின!
தமிழ் நாட்டைத் தவிர வெளிநாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே தமிழ் ஆட்சி மொழியாகச் சிறப்புப் பெற்றிருக்கிறது (கைதட்டல்).
உங்கள் பக்கமே வரலாறு இருக்கிறது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மலேசியாவின் நன்மைக்கு நீங்கள் எல்லாரும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திரு. அண்ணாதுரை உங்களுக்குச் சொல்லுவார் என்று நம்புகிறேன்.