அறிஞர் அண்ணா அவர்களும் திரு.இரா.செழியன் அவர்களும் மலேசியச் சுற்றுப் பயணம் தொடங்கிய நாளில் (16.07.65) தி.மு.க.தலைமை நிலைய ஏடான நம்நாடு நாளிதழில் அதன் பொருப்பாசிரியர் திரு.காஞ்சி கல்யாணசுந்தரம் எழுதிய தலையங்கம் வருமாறு:
முதன் முறையாக அண்ணா அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். அவர் மேற்கொள்ளும் இம் முதற் பயணம் வேறு பல வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னறிவிப்பாக அமையட்டும். தாம் மேற்கொண்டிருக்கும் இப்பயணத்தில் முதற்கண் மலேசிய மக்களைச் சந்திக்கப் போகிறார்.
மலேசியாவில் பல்லாண்டுக் காலத்துக்கு முன்னரே தமிழ்த்தாயகத்தை விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெருந்தொகையினர், இன்று அக்கூட்டாட்சியின் குடிமக்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி மலேசியக் குடிமக்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் பெரும் எண்ணிக்கையினர் அம்மண்ணிலேயே பிறந்து வளர்ந்து பெருமைப்பட வாழ்ந்து வருபவர்கள்.
மலேசியாக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் பகுதிகளுள் சிங்கப்பூர் நிலப்பரப்பும் ஒன்று. அங்குள்ள தமிழ் மக்கள் அண்ணா அவர்களின் வரவைப் பல்லாண்டுக் காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்ணா அவர்களைத் தங்கள் விருந்தினராக ஏற்றுக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ப்பெருங்குடி மக்களிடையே, "ஏன் இங்கு வருகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அவரை நாங்கள் அழைக்கவில்லையே" என்பன போன்ற கேள்விகளை எழுப்பித் தங்கள் நெஞ்சைப் புண்படுத்துக் கொள்கின்ற தமிழ்மக்கள் சிலர் இல்லாமலும் இல்லை.
"இங்குக் குழப்பத்தை விதைக்கவா வருகிறார்?" - இந்திய அரசாங்கமே இவருக்கு அனுமதி கொடுக்காதே.
மலேசிய அரசாங்கமே! அவரை இங்குக் கால் வைக்க விடாதே" என்றெல்லாம் அந்தச் சில தமிழர்கள், அண்ணா அவர்களின் வருகையைத் தடுக்க அரும்பாடு பட்டிருக்கின்றனர்.
இத்தகைய எரியுள்ளம் பெற்றிருக்கக் கூடிய அந்தச் சில தமிழர்களின் சார்பில் இரண்டொரு 'தீவிரவாதிகள்' தூதுவர்களாகத் தமிழ் நாட்டுக்கு வந்தனர்; இத்தரணியை ஆள்வோரைச் சந்தித்தனர்; அண்ணா அங்கு வரக் கூடாது என்பதற்கான விளக்க அறிக்கைகளை வெளியிட்டனர்; பின்னர் தாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட தாயத்திற்குத் திரும்பினர்.
மலேசியா சார்பிலும், அக்கூட்டாட்சியில் ஓர் உறுப்பாக இடம் பெற்றிருக்கின்ற சிங்கப்பூர் சார்பிலும் அண்ணா போன்றவர்களை வரவேற்கின்ற உரிமை - அந்த நாட்டின் நலனைப் பேணி ஓம்பி வரவேண்டிய பொறுப்பு அங்குள்ள மற்றவர்களுக்கு இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடிய தங்களுக்கு மட்டுமே உண்டு என்ற நினைப்பை, அந்த 'விந்தை மாந்தர்கள்' எப்படி பெற்றனரோ?
மலேசியாவைச் செவ்வனே ஆட்சி புரிந்து வரும் திறமை மிக்க அரசு இருக்கிறது; சிங்கப்பூரை ஆண்டு வருகின்ற தனி அரசு இருக்கிறது. 'இவரை இங்கு அனுமதிப்பதால் நாட்டின் நலனுக்குக் கேடு வராது. இன்னாரைக் கால் வைக்க விடுவது நாட்டுக்குத் தீது' என்பது பற்றியெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து, தக்கவர்களை ஏற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்கள் அவ்வரசுகளில் பொறுப்பேற்றுள்ளனர்.
அண்ணா அவர்களை 'வராதே' எனத் தடுப்பது அவ்வரசுரிமை பெற்றவர்களின் கடமையாகும். அவர்களுக்கு நாட்டின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாதது போலவும், அவர்களுக்குத் தெரியாத உண்மைகள் தங்களுக்கு மட்டுமே தெரிந்துவிட்டிருப்பது போலவும் கற்பனை செய்து கொண்டு, அவர்கள் கடமையில் இந்தச் சிலர் குறுக்கிடத் துணிந்தது வேதனை கலந்த வியப்புக்குரியதாகும்.
அண்ணா அவர்களை மலேசியா வராமல் தடுத்துவிட வேண்டும் எனறு அரும் முயற்சியில் ஈடுபட்டதன் வாயிலாக அந்தச் சிலர், தங்களையும் அறியாமலே அரசுரிமை பெற்றவர்களின் திறமையைக் குறைத்துக் காட்டியிருக்கின்றனர். ஆனால் அந்தச் சிலரின் முயற்சிக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்து, அவர்கள் கோரிக்கையைப் புறங்கணித்து, அண்ணா அவர்களை ஏற்றுக் கொள்ளும் தூய பணிவை மேற்கொண்டதன் வாயிலாகத் தங்களுக்கு இயல்பாக இருந்து வரக்கூடிய ஆளுந் தரத்தையும், நாட்டின் எதிர்கால நலனில் தங்களுக்கு இருந்து வரக்கூடிய வரை கடந்த பற்றையும், ஐயத்திற்கிடமின்றி நிலை காட்டிக் கொண்டிருக்கின்றனர், ஆட்சிப் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள்.
அண்ணா அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என அரும்பாடுபட்ட 'அந்தச் சிலர்' அண்ணா அவர்களின் அன்புள்ளத்தை அறியார்; தமிழக அரசியலில் அவர் கையாண்டு வரக்கூடிய அறநெறியை, அவர்கள் கண்டதில்லை; தமிழகத்தில் செம்மையான சனநாயக முறை மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்ற அண்ணா அவர்களின் நல்லுணர்வு அவர்களுக்குத் தெரியாது; அரசியல் கருத்து வேற்றுமைகளுக்காக மாறுபட்ட கருத்தினரை இழித்துப் பேசுவதையோ, பகை பாராட்டி வெறுத்து ஒதுக்குவதையோ, கனவிலும் கருதாதவர் அண்ணா அவர்கள் - என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்க முடியாது.
தங்கள் விருந்தினரை - தங்கள் நாட்டுக்கு வந்திருக்கும் அண்ணா அவர்களை அவர்கள் இன்று நேருக்கு நேராகச் சந்திக்கப் போகின்றனர். அங்கு அண்ணா அவர்கள் அளிக்க இருக்கின்ற கருத்து விருந்துகளை, அவர்களும், மற்றவர்களுடன் ஒருமிக்க இருந்து சுவைத்து மகிழத்தான் போகின்றனர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் உள்ளம் பெற்றிருக்கின்ற அண்ணா அவர்களுக்கா தடை விதிக்கக் கோரினோம்? - எனத் தமக்குத் தாமே நொந்து கொள்ளத்தான் போகின்றனர்.
அந்தச் சிலர் காட்டிய எதிர்ப்பை அண்ணா அவர்களுக்குத் தரப்பட்ட புதுமுறை வரவேற்பு, என்றே நாம் கொள்ளுகின்றோம். மற்றவர்கள் இதயங்களைத் தமதாக்கிக் கொள்ளுவது போலவே இந்த எதிர்ப்பாளர்களின் இதயங்களையும் அண்ணா அவர்கள் வென்று வரவேண்டும்; நிச்சயம் வென்று வருவார் அண்ணா.
மலேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு அண்ணா அவர்கள் கம்போடியா, ஹாங்காங், பிரிப்பைன்ஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்.
கம்போடியா, 'உலகப் போர் மூண்டுவிடக் கூடுமோ' என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கின்ற வியட்நாம் நாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நாடாகும். வியட்நாம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரின் அடிப்படை உண்மையைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளுகின்ற வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. அவர் திரும்பினதும் நாமும் அந்த உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.
ஹாங்காங் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இன்று இருந்து வரக்கூடிய சீனப்பகுதி. அங்கும் அண்ணா செல்கிறார்.
அடுத் அண்ணா அவர்கள் காணவிருக்கின்ற இடம் பிலிப்பைன்ஸ் - அமெரிக்காவின் அரசியல் பிடியிலிருந்து விடுபட்ட நாடு. அங்குப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அது பற்றியும் அண்ணா அவர்கள் தெரிந்து வந்து நமக்குக் கருத்து விருந்து வழங்குவார்.
அடுத்து, ஜப்பான் தொழில் வளர்ச்சியில் மேலை நாடுகளையும் நாணித் தலைகுனியச் செய்திருக்கின்ற நாடு. அந்த நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும், மீண்டும் அது மறு வாழ்வு பெற்ற வரலாறும் நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பாடமாகும். அந்த நாட்டுக்கும் செல்லுகின்ற அண்ணா அவர்கள் அவ்வரலாற்றை நமக்குக் கூறாமலா இருக்கப் போகிறார்?
அண்ணா அவர்களுடன் அருந்துணையாகத் தோழர் இரா.செழியன் அவர்கள் செல்கிறார்; சிறந்த துணை - கிடைத்தற்கரிய துணை.
அண்ணா அவர்களும் - செழியனும் பயணத்தை முடித்துக்கொண்டு, ஒரு திங்கள் கழித்தே தமிழகம் திரும்பக் கூடும். அவர்கள் மேற்கொண்டுள்ளப் பயணம் முழு வெற்றி பெறவேண்டும் - இதுவே நமது உள்ளக்கிடக்கை.
அவர்கள் இருவரும் செல்லுகின்ற நாடுகள் அனைத்திலும் உள்ள மக்களின் நல்லிதயங்களை வென்று வரவேண்டும் - இதுவே நமது விருப்பம்.