தமது வெளிநாட்டுப் பயணம் குறித்து அண்ணா அவர்கள் விடுத்த அறிக்கை நம் நாடு (சென்னை 15.07.65) இதழில் வெளிவந்தது. அது வருமாறு:
மலேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், தமிழ்ப்பண்பாட்டில் அக்கறை கொண்ட அன்பர்களும், இதழாசிரியர்களும் பல ஆண்டுகளாக நான் அங்கு வந்திருந்து, அளவளாவி, அகமகிழ்ச்சி பெற்றிட வேண்டுமென்று விரும்பி அன்பழைப்புத் தந்து வந்தனர்.
இப்போதுதான் மலேசிய செல்வதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிட முடிந்திருக்கிறது - சென்று வருகிறேன்.
மலேசியாவில் தமிழர்கள் குடியுரிமை பெற்று மலேசியக்காரர்களாகியுள்ளனர். மேலும் பலர், அந்நிலை பெற்றிட விழைவு கொண்டுள்ளனர்; உழைத்துத் தம் வாழ்வினைச் செம்மைப் படுத்திக்கொண்டுள்ளனர், அதனை நேரிலே வந்து கண்டு களிப்பினைப் பெறுவீர் என்று கனிவுடன் அழைத்துள்ளார்கள்.
'என்பும் உரியர் பிறர்க்கு' எனும் மரபுதித்த இன்தமிழர் 'என்நாடு இந்நாடு; இந்நாடு பொன்னாடாக ஈந்திடுவேன்; என் உழைப்பை' என்று இதயம் கனிந்து கூறி மலேசியராகித் திகழ்கிறாரே, அவர்தம் அன்பு மொழி கேட்க இன்பமுகம் காணச் செல்கிறேன்.
16.07.65 காலை, என் தம்பி இரா.செழியன், எம்.பி. அவர்களுடன் மலேசியா சென்றுவரப் புறப்படுகிறேன்.
மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, பர்மா எனும் நாடுகளைக் காணத் திட்டம் மேற்கொண்டுள்ளேன்.
மூன்று கிழமைகளில் எல்லா இடங்களையும் கண்டு திரும்பிவிடும் விருப்பம் கொண்டுள்ளேன்; அவ்வப்போது செய்தி தருகிறேன்.
மலேசியா சென்று வருகிறேன். உமது நல்வாழ்த்துத் துணை நிற்கும் நிலையிலே!
மலேசியாவில் பல நகரங்களில் வரவேற்பு விழாக்களும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.
சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, சிரம்பான் போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.
சிங்கப்பூரில் ஏற்பாடாகியுள்ள சிறப்பு நிகழ்ச்சி மூலம் பெறப்படும் தொகையினை, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவுக்குத் தருவது என்று சீரிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மற்ற நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்பு விழாக்காளாகவும், பொதுக் கூட்டங்களாகவும் அமைந்துள்ளன என்று அறிந்து அகமகிழ்கின்றேன்.
மலேசியா வரவேண்டும் என்பதிலே துவக்க முதல் மெத்த ஆர்வம் காட்டி என்னை ஊக்குவித்து வரும் தமிழ் மலர் ஆசிரியர் செல்வகணபதி அவர்களும், அயலகத்தில் உள்ள மற்ற நண்பர்களும், அதுபோன்றே நீண்ட பல ஆண்டுகளாக மலேசியா வாழ் தமிழவேள் திரு.சாரங்கபாணி அவர்களும், அவர் நடத்தும் 'தமிழ்முரசு' நாளிதழ் அலுவலகத்தினரும் 'தமிழ்நேசன்' ஆசிரியர் அன்பர் முருகு சுப்பிரமணியமும், அவர்தம் தோழர்களும், தமிழர் பிரதிநிதித்துவ சபையில் ஈடுபாடு கொண்ட நண்பர்களும் என்னை உள்ளன்புடன் அழைத்துள்ளனர்; உடனிருந்து மகிழ்ச்சி வழங்கிடுவர்.
வள்ளல் இரங்கசாமி அவர்கள், இராமநாதபுரம் திருப்பத்தூர்காரர் - அவருடைய அன்பழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளேன்.
மற்றும் பலர், எனக்கு அறிமுகமாகாதவர்கள்; ஆயினும் இதயத்தில் எனக்கு இடமளித்துள்ளவர்கள்; கடிதம் மூலம் கனிவுடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்திடவும், உரையாடி உற்சாகம் பெற்றிடவும், உடனிருந்து அளவளாவிடவும், ஒரு திங்கள் முழுவதும் அங்கு இருந்தாலும் போதாது; எனினும், இங்குள்ள அலுவல்களைக் கணக்கிடும்போது பதினைந்து நாட்கள் மட்டுமே மலேசிய நிகழ்ச்சிகளுக்கெனக் குறித்திட முடிகிறது.
மலேசிய அமைச்சர் மதிப்புமிகு திரு.சம்பந்தம் அவர்கள் நான் அங்கு வருவது குறித்துச் சிற்சிலருக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டினை நீக்கி, நான் அங்கு வருவதனை வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்புள்ள கொண்டவருடன் அளவளாவி மகிழ்ந்திடும் நல்வாய்ப்பும் பெற்றிட விழைகின்றேன்.
தொடக்கத்தில் துளிர்விட்ட எதிர்ப்புக் கலைந்தது கேட்டுப் பெரிதும் மகிழ்கிறேன்.
நான் அங்கு சொல்வது அங்குள்ள நிலைமையினைக் கண்டிட; கெடுத்திட அல்ல!
என் பயணம், காண - கேட்க - களித்திட - கருத்துப் பெற! கசப்புணர்ச்சியூட்டிட அல்ல! அஃது என் இயல்பும் அல்ல!
மலேசியாவின் அரசியல் பிரச்சினைகளை - பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைக் கற்றறிந்திடும் மாணவன் போல் - அறிந்து கொள்ளச் செல்கிறேன்; பங்கேற்க அல்ல.
அதுபோன்றே, இங்கு நான் முழுக்க முழுக்க ஈடுபட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை அங்கு கடைவிரித்துக் கூறிடுவேனா, நான்? - பண்பு எனும் வரம்பறிவேன் - பணியாற்றும் முறையும் அறிவேன்; இங்குள்ள அரசியலை அங்கு எடுத்து இயம்பிடுதல் பொருத்தமற்றது என்ற பொறுப்பினை உணர்ந்துள்ளேன்.
அன்பன்,
அண்ணாதுரை.