அறிஞர் அண்ணா அவர்கள் செமினியில் திரைப்பட அரங்கில் 22.7.25 இரவு 7:30 மணிக்கு 5000 மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
"இந்தியாவிற்கும் - மலேசியாவிற்கும் நெருக்கமான பிணைப்பும், சிறந்த பண்பாட்டுத் தொடர்பும் உண்டு. நம்மை எவரும் பிரித்திடவோ, அழித்திடவோ இயலாது. சனநாயகத்தைக் கொண்டும், மக்களின் சக்தியைக் கொண்டும் எதிரியை முறியடிப்போம்; முன்னேறுவோம்.
உரிமைகளைக் கேட்பதைவிடக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். குறைகள் இருப்பின் தலைவர்களிடம் எடுத்துக் கூறி வழி காண வேண்டும்.
இரயியில் முந்திய நேரத்தில் ஏறிக் கொண்ட குடும்பஸ்தன், இடத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு, பிந்திவரும் பிரயாணிக்கு இடமில்லையென்று விரட்டும் வழக்கம் எங்கள் நாட்டில் உண்டு. ஆனால் வந்தாரை வரவேற்று, வாழ வழிவகுத்துச் சீரிய நெறியிலே இட்டுச் செல்லும் உங்கள் நாட்டின் தலைமையமைச்சர் ஒப்பற்ற தலைவர் துங்குவின் பெருந்தன்மையை எண்ணிப் பாருங்கள்; அவரது கரத்தை வலுப்படுத்துங்கள்; நாட்டின் விசுவாச நிதிக்குத் தாராளமாக வழங்குங்கள்.
குன்றா வளமும் நல்லாட்சியும்
எங்கள் நாட்டில் நாளும் பெருகும் குழந்தை வெள்ளத்தைத் தடுப்பதே எங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. குறைந்த அளவான மக்கள் பெருக்கத்தைக் கொண்ட உங்களுக்குக் குன்றாத வளங்களும் நல்லாட்சியும் அமைந்திருக்கின்றன. நீங்கள் பாக்கியசாலிகள்!
புயல் போல் கருத்தினை வழங்குவார் அண்ணா என்று தலைவர் திரு. நா.இராசாமி கேட்டுக்கொண்டார்.
காலையிலிருந்து அடித்த புயல் மாலை வரை அடிக்குமா? அடித்தால் என்ன ஆகும்? - அடங்கி விட்டது!
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களில் பேசும் பழக்கமுள்ள நான் சிரமம் பாராது உங்கள் முகம் காண ஓடிவந்திருக்கிறேன்" என்றார் அண்ணா.
அண்ணா அவர்களுக்கு ஏராளமான கைத்தறியாடைகள் அணிவித்து அன்பளிப்புகளும் வழங்கினர்.