செம்பவாங்கில் 26.7.65 அன்று நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் சிந்தனையைத் தூண்டும் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துரைத்து விளக்கினார். "பழைக கால நம்பிக்கைகள் தேய்ந்து போன நாணயங்களுக்கு ஒப்பாகும்! மனிதன் எப்போது எதையும் நம்ப மறுக்கிறானோ அப்போதே அறிவு ஆரம்பமாகிறது"
"மனிதனுக்கு இப்போது எதற்கெடுத்தாலும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்தச் சந்தேகம் புதிய அறிவுக்குத் திறவுகோலாகும்.
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கத் தொடங்குகின்றபோது புதிய உண்மைகள் பெறப்படுகின்றன. இந்த 'ஏன்?' என்ற கேள்விதான் தமிழகத்தில் இப்போது ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகனுக்கு ஏற்பட்ட சந்தேகம்
என் கடைசி மகன்கூட, 'தமிழ் வாத்தியார் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே என்றான். 'என்ன அது?' என்று கேட்டேன். இராவணனுக்குப் பத்துத் தலை என்பதை நம்ப முடியவில்லை என்றான்.
மறுமலர்ச்சியடையாத இருண்ட காலமாயிருந்தால் 'ஐயோ, மகன் இப்படிக் கெட்டுவிட்டானே' என்று தகப்பன் தலையிலடித்துக் கொள்வான். நான் புதிய காலத்தில் வாழ்வதால் பொறுமையாகக் கேட்டேன்.
மகன் கேட்டான்:- 'பத்துத் தலை என்கிறார்களே, அத்தனைத் தலைகளும் எப்படி அமைந்திருக்கும் அப்பா?' என்றான்; 'அது எனக்குத் தெரியாது' என்று சொல்லிவிட்டுக் 'கூத்தாடும்போது பார்த்திருக்கிறேன், - இயற்கையான தலை ஒன்றே ஒன்று இருக்கம்; பக்கத்தில் மற்ற ஒட்டுத் தலைகள் இருக்கும்' என்று சொன்னேன்; 'அப்படியானால் இராவணன் பிறந்ததிலிருந்து மல்லாந்துதான் படுத்திருக்க முடியும்; திரும்பித் திரும்பி அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் புரண்டு படுத்திருக்க முடியாது அல்லவா? என்று மகன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
இப்படிக் கேட்டதால் 'அவன் போக்கிரி' என்று கருதிவிடாதீர்கள்! அவன் மிகவும் சாதுவானவன்! அதனால்தான் அவனை உங்களுக்கு உதாரணம் காட்டினேன்!
போன தலைமுறையில் சந்தேகம் இல்லாமல் எற்றுக் கொண்டவைகளை இந்தத் தலைமுறையில் நாம் சந்தேகத்தோடு பார்க்கிறோம். இந்த நம்பிக்கையற்ற மனோநிலைதான் புதிய தெளிவைக் கொடுக்கின்றது.
தேய்ந்த நாணயம் - பழைய நம்பிக்கை
உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லுவேன்; வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; எழுத்து பளிச்செனத் தெரிந்தால் யோசிக்காமல் அதை நாம் வாங்கிக் கொள்கிறோம். நாணயம் தேய்ந்து, எழுத்து மறைந்து கண்ணுக்குத் தெரியாமல் இருந்தால் 'அதன் மதிப்பு சரியாக இருக்குமா?' என்று கேட்போம். அரையா, முக்காலா? என்று தெரியாமல் விழிப்போம்; சந்தேகம் வலுக்கும்.
அதுபோல பழைய கால நம்பிக்கைகள் என்பது தேய்ந்து போன நாணயங்களுக்குச் சமானமாகும். நாணயத்தைத் தட்டிப் பார்த்து வாங்குவது போல், நம்பிக்கைகளைத் தட்டிப் பார்க்கத் தலைப்படுகிறோம்.
இந்த விதமான சந்தேகத்தால் இலாபமா? நஷ்டமா? என்று கேட்டால் இலாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு என்பேன். சந்தேகத்தால் கேள்வி பிறக்க, கேள்வியால் புதுப்புது அறிவு ஆராய்ச்சி ஏற்படுகிறது இலாபம்! எதையும் நம்பாமல் 'எல்லாம் போகட்டும்' என்று கிடப்பது நஷ்டமாகும்!
நாம் கண்டுபிடித்தது என்ன?
கடிகாரம் கண்டுபிடித்தவன் இன்னொரு நாட்டுக்காரன்! - ரேடியோ கண்டுபிடித்தவன் இன்னொரு நாட்டுக்காரன்! விமானம் கண்டுபிடித்தவன் இன்னொரு நாட்டுக்காரன்! டெலிவிஷன் கண்டுபிடித்தவன் இன்னொரு நாட்டுக்காரன்! இப்படி எல்லாம் 'இன்னொரு நாட்டுக்காரன்' என்றால், நாம் கண்டுபிடித்தது தான் என்ன?
'இன்னது கண்டு பிடித்தோம்' என்று நம்மால் சொல்ல முடியாது. இப்படி சொல்ல முடியாத நிலையில், தமிழகம் மட்டுமல்ல; பல நாடுகள் இருக்கின்றன.
மற்றவர்கள் கொடுத்ததையெல்லாம் பெற்று வாழ்கின்ற நாம், கிட்டத்தட்ட கடன்காரர்கள் ஆவோம்! கொடுத்தது என்ன என்று கேட்டால் ஒரு வேளை இப்படிச் சொல்லலாம். தப்பித் தவறி யாராவது மாட்டிக்கொண்டால் விபூதி கொடுப்போம்! உத்திராட்சம் கொடுப்போம்! தேவாரம், திருவாசகம் தெரியுமா என்று கேட்போம்!
இந்த வகையில், உலகுக்குக் கடன் பட்டிருக்கும் நாம், என்ன கொடுத்தோம்?' என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் முன்னேற முடியும்.
பழம் - அங்கும் இங்கும்!
இங்கிலாந்தில் ஒரு முற்போக்குச் சிந்தனையாளன் ஒரு மரத்தடியில் இளைப்பாறினான். மேலேயிருந்து பழம் ஒன்று விழுந்தது. உடனே அவன், "மேலேயிருந்த பழம் கீழே விழுவானேன்? அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் போகாமல் நேரே பூமியை நோக்கி விழுவானேன்?" என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
அந்தப் பழம் அவனது ஆராய்ய்சியைக் கிளறிவிட்டது. இறுதியாகப் புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தான். எந்தச் சக்தியையும் பூமி இழுத்துக் கொள்ளும் என்ற உண்மையைக் கண்டு புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை அவன் உண்டு பண்ணினான்.
அதே பழம் தமிழகத்தில் என்ன செய்தது தெரியுமா? காரைக்கால் அம்மையார் பக்தி நிறைந்த ஒரு செட்டி நாட்டுப் பெண்ணாவார்; அவர் தம் கணவர் ஆசையோடு ஒரு மாம்பழம் வாங்கி வந்து அவருக்குக் கொடுத்தார்; அம்மையாரின் பக்தியைச் சோதிக்கப் பரமசிவனுக்க ஆசை வந்துவிட்டது. பண்டாரக் கோலத்தில் அம்மையாரிடம் சென்று சாப்பாடு கேட்டார்;அம்மையார் பரிமாறினார் உடனே பரமசிவன் 'மாம்பழம் இல்லாத சாப்பாடு ஒரு சாப்பாடா?' என்று கேட்டார். அம்மையார் வேறு வழியின்றிப் பழத்ததையும் எடுத்துப் பரிமாறிவிட்டார். பின்னர்தான் அம்மையார் உணர்ந்தார்.
- கணவன் கொடுத்ததைக் கடவுளே கேட்டாலும் கொடுக்கக் கூடாது என்று; பண்டாரம் சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா?
கணவர் வீடு திரும்பினார்; இலை போட்டு வட்டில் வைத்து, அம்மையார் பரிமாற ஆரம்பித்த போதே, 'மாம்பழம்'எங்கே?' என்று கேட்டார் கணவர். அம்மையார் திணறினார் - திகிலடைந்தார்; மாம்பழம் வைத்திருந்த பானையைப் பார்த்தார்; பழம் அப்படியே இருந்தது. 'பரம்பொருள் அருளால் பழம் இருந்தது' என்று கதை முடிக்கப்படுகிற! இது எமக்குக் கிடைத்த பழங்கதை!
இப்போதும் காரைக்காலில் ஆண்டுக்கு ஒரு முறை மாம்பழத் திருவிழா நடைபெறுகிறது.
சிந்தித்துப் பார்க்கும் அறிவுதான் உலகுக்குப் பல புதுமைக் கருவிகளை வழங்குகிறது! உலகம் நமக்குப் பல பொருட்களைக் கொடுத்துக் கடனாளியாக்கிவிட்டது
பழந்தமிழ் இலக்கியத்தில் விஞ்ஞானக் கருத்துக்கள்
பழந்தமிழ் இலக்கியத்தில் விஞ்ஞானம் பரவலாக இருக்கிறது. அந்த இலக்கியங்களைப் படித்துத் தமிழ் மக்கள் ஆக்கத்துறைகளில் ஈடுபட்டு முன்னேற வேண்டும்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - அலாவுதீனும் அற்புத விளக்கும், பெரிய எழுத்து விக்கிரமாதித்தனும் பவளக் கொடியும், அல்லி அரசாணி மாலையும் இவை போன்ற கதைகளும் அல்ல நான் குறிப்பிடுவது; தமிழனால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுகிறேன்.
நீங்கள் தமிழறிவு பெற்றவர்களை வரவழைத்த மாலை வகுப்புகள் மூலம் தமிழ் இலக்கிங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கெல்லாம் தமிழார்வம் மட்டும் ஏற்பட வேண்டும் என்பதல்ல; வாழ்க்கைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; தமிழார்வம் இப்போதே இங்கு தேவையான அளவு இருக்கிறது. தமிழன் தாழ்ந்த நிலையையும், வாழ்ந்து கெட்ட தன்மையையும், இப்போது நாடெங்கும் தோன்றியுள்ள புதிய எழுச்சியையும் உணர்ந்து தமிழ மக்கள் பங்காற்ற வேண்டும் - பணிபுரிய வேண்டும்.