சிகாமெட்டில் உள்ள இலங்கைச் சங்கத் திடலில் 24.7.65 பிற்பகல் 3 மணிக்கு அறிஞர் அண்ணாவுக்கு வட்டார மக்களின் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு இவ்வூர் ஜூபிளி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் கலந்துகொண்ட பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.பி.குமரன் பி.ஐ.எல். தலைமை வகித்தார்.
இரண்டாயிரத்துக் மேற்பட்ட தமிழ் மக்கள் அண்ணாவைக் காண ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.
அண்ணா பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் கனத்த மழை பெய்யத் தொடங்கியதன் காரணமாகப் பேச்சுத் தடைப்பட்டது. மழையில் நனைந்து கொண்டே தமது சொற்பெருக்கைக் கேட்கத் தயாராக இருந்த மக்களின் ஆர்வத்தைப் பார்த்ததும் அறிஞர் அண்ணா தமது பேச்சை மேலும் தொடர்ந்தார்.
முன்னேற்றத்திற்கு மூலப்பொருள் தமிழ்!
"இங்கே வாழ்கின்ற தமிழில் பல பரபரப்பான செய்திகளைப் படிப்பதோடு மட்டும் நிற்காமல், அவற்றில் வெளிவரும் இலக்கியங்களையும், தமிழர் வரலாற்றுக் குறிப்புகளையும் படித்துத் தங்கள் மூதாதையரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.
மரத்திலிருந்து எடுப்பது ரப்பர் பால்! நமது மனத்திலிருந்து எடுப்பது தமிழ்ப்பால்!
ரப்பர் பாலை எடுக்க மரங்களைச் சீவிச் சிரமப்பட வேண்டும்; ஆனால் தமிழ்ப் பாலை எடுக்க மனத்தை மட்டும் தடவினால் போதும்!
பாலிலிருந்துதான் தயிர் கிடைக்கிறது; தயிரிலிருந்துதான் வெண்ணெய் எடுக்க வேண்டும். பொறுமையில்லாதவர்கள் வெண்ணெய்யை உடனே பெற வேண்டும் என்று அவசரப்பட்டால் பாலே கெட்டுவிடும். வெண்ணெய்க்கு மூலப் பொருள் பால்; அதுபோல் உங்கள் முன்னேற்றத்துக்கு மூலப் பொருள் தமிழ்! அதை என்றும் மறந்துவிடக் கூடாது.
கெட்டியில்லாத, ஆழமில்லாத அடித்தளத்தின் மீது கட்டப்படுகின்ற அடுக்கு மாடிகள் ஒன்று - இரண்டு என்று உயருகின்ற பொழுது, ஏதாவது ஓர் அடுக்கில் கடமையில் ஈடுபட்டிருக்கும் கொத்தனாரோடு கட்டிடம் சரிந்துவிடும்.
தமிழ் பேசும் மக்களின் இந்தத் தலைமுறையினர் அடித்தளத்துக்கு ஒப்பானவர்கள்! அவர்கள், கெட்டியான அடித்தளமாகத் திகழ்வதற்குக் கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும்! பணிந்துதான் - குனிந்துதான் கெட்டிப்படுத்த வேண்டும்! சீக்கிரமாகக் கட்டிடம் எழும்பவில்லையே என்று வருந்தாமல் நிதானமாக - அக்கறையோடு அடித்தளத்தை அமைத்தால், அடுத்தடுத்த அடுக்குகள் இலகுவாகக் கட்டுப்படுவதைப்போன்று, எதிர்காலத் தலைமுறையினர் துன்பங்களும், துயரங்களும், தொல்லைகளும், அல்லல்களும் இன்றி இன்பகரமாக வாழ்வார்கள்!
கிடைப்பவை அனைத்தையும் கெட்டிப்படுவதற்காக அடித்தளத்தில் கொட்ட வேண்டும்; ஆனால், இங்கு நீங்கள் உங்களுக்குக் கிடைப்பதை வெவ்வேறு இடங்களிலே கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றார் அண்ணா.
வழியில் வரவேற்பு
சிகாமெட்டிலிருந்து குளுவாங் வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அறிஞர் அண்ணா சென்றபோது, வழியில் 'ச்சாஆ' வட்டாரத் தமிழ் மக்கள், காரை நிறுத்தி, வரவேற்றுச் சிறப்பித்தார்கள்.
ஐந்நூறு வெள்ளி பெறுமான பரிசுகளைத் தங்கள் சார்பாக வழங்கி மாலைகள் சூட்டி மகிழ்ந்தனர்.