மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
இராசேந்திரச் சோழன் காலத்துக் கல்வெட்டுக் கண்டு மெய்ம்மறந்தார் அண்ணா!

 

ஈப்போ நகராட்சி அளித்த விருந்தில் அண்ணா ஆற்றிய உரை:

"கலை, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு இந்திய - மலேசியத் தொடர்பு விளங்குவதால்தான், அது பன்னெடுங்காலமாகப் பிரகாசித்து வருகிறது. தமிழகத்தின் தொடர்பு அரசியல் சார்புடையதாக மாத்திரம் இருப்பின் அது எப்பொழுதோ அழிந்திருக்கும்.

கடல் கடந்து வந்திருக்கும் எங்களைப் பெருஞ்சிறப்பு மிக்க வரவேற்புகள், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகின்றன.
"இந்திய மலேசிய உறவு, வரலாறு எழுதப்படாத காலத்திலிருந்து வளர்ந்தது ஆகும்.

"கடாரங் கொண்ட இராசேந்திரச் சோழனின் வரலாறு மலை நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் வளமான வணிகத் தொடர்பை விளக்குகிறது"

அலோர்ஸ்டார் அரும் பொருட்காட்சிச் சாலையில் இராசேந்திரச் சோழன் காலத்துக் கல்வேட்டு ஒன்றைக் கண்டேன், அதைப் பார்த்த நேரத்தில் நான் ஒரு கணம் மெய்ம்மறந்து நின்று விட்டேன்.

"மத, இன, மொழி பாகுபாடின்றி கிழக்காசிய நாடுகளில் மக்களாட்சி முறையில் மலேசியா ஓங்கி உயர்ந்து திகழ்கிறது"

உறுதியான கொள்கைகளைத் தங்களோடு பின்னிக் கொண்டு 'மக்கள் பணியே மகேசன் பணி' என்று பொதுச் சேவையாற்றி வருவதாக ம.மு.க. வைச் சேர்ந்த இரு சீனிவாசகங்களையும் பாராட்டுகின்றேன்.

விருந்துச் சிறப்பு
ஈப்போ டைகர் லேனில் நகராண்மைக் கழகத் தலைவர் திரு.எஸ்.பி.சீனிவாசகம் இல்லத்தில் விருந்து உபசரிப்புக் கூட்டம் நடைபெற்றது.

திரு.எஸ்.பி.சீனிவாசகம் விருந்திற்குத் தலைமை வகித்தார். அரசாங்க அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், அரசியல் வட்டாரப் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் முதலானோர் கலந்து கொண்டனர். விருந்தில் அதிகார பூர்வமான 500 பேர் கலந்து கொண்டனர்.

இரு தென்னகத் தலைவர்களும் திறந்த காரில் அழைத்து வரப்பட்டனர். இல்லத்தின் வாயிலில் அண்ணா அவர்களின் பாதம் பட்டதும் மேல் மாடியிலிருந்து மூன்று மாதர்கள் சோவெனப் பூமாரி பொழிந்தனர்.

நகராண்மைக் கழகத்தின் சார்பாக இருவருக்கும் இரு கேடயங்களை திரு.எஸ்.பி.சீனிவாசகம் வழங்கினார்.

ஈப்போ நகராண்மைக் கழகத் தொழிலாளர் சங்கத்தினர் தலைவக்ளுக்கு மாலைகள் அணிவதித்னர்.

சீனர், மலாய்க்காரர்கள், ஆங்கிலேயர் உள்பட எல்லாச் சமூகத்தினரும் அண்ணா ஆற்றிய நகைச்சுவை மிக்க ஆங்கில உரையில் மெய் மறந்து நின்றார்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai