மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
புக்கிட் பஞ்சாங்கில் அண்ணா

 

ம.தி.மு.க. புக்கிட் பஞ்சாங் கிளை சார்பில் 26.7.65 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்டார்கள்.

அண்ணா அவர்கள் பேசியதாவது:

"இந்தியத் தி.மு.க.வுக்கும் மலேசியத் தி.மு.க.வுக்கும் பெயர் பொருத்தத்தைத் தவிர வேறு தொடர்பு இல்லை.

தமிழர்கள் எந்த நாட்டில் இருப்பினும் அவர்களது நல் வாழ்வில் இந்தியத் தி.மு.க. அக்கறை கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்கிறார்கள் என்பதால் எங்கள் நெஞ்சில் பரவசம் ஏற்படுகிறது.

'மலேசியத் தமிழர்களின் பெருவாழ்வைப் போய்ப் பாருங்கள்' என்று, எங்கள் நாட்டு அரசுக்கு நாங்கள் சொல்லமுடியும். அண்ணா தாசில்தாராக இருந்தால் 'என் அண்ணா தாசில்தார்' என்று உழவனான தம்பி பெருமைப்படவும் செய்வான்.

'சிங்கப்பூருக்கு வருக; பினாங்குக்கு வருக; என்று அழைத்து உங்களது பெருவாழ்வைக் காட்டும் அளவுக்கு நீங்கள் வாழவேண்டும்."

தொழில்துறையில் முன்னேறும்படி இங்குள்ள மலேசியத் தமிழர்களைக் கேட்டுக் கொண்ட அண்ணா தொழிற்துறையில் முன்னேறிய தமிழர்கள் இங்கு அரிதாக இருப்பதாகவும் சொன்னார்.

எடுத்துக் காட்டாகப் புகைப்படம் பிடிக்க வந்த புகைப்படக்கார்களில் பெரும்பாலோர் தமிழர்களல்லாதவர்கள் என்றும், தமிழ்ப் புகைப்படக்காரர்கள் படம் பிடப்பதற்குத் தம்மை அப்படியே நிற்கச் சொல்லி இங்கும் அங்கும் திரும்பச் சொல்லிப் படம் எடுத்தார்கள் என்றும், மற்றவர்களோ எந்த இடத்தில் நின்று படம் பிடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்துப் படம் பிடித்தார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர்களது சாமர்த்தியத்தைப் பாராட்டிய அண்ணா, தொழில் துறையில் பிற இனத்தாரின் சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்டு, தொழில்துறையில் ஈடுபடும்படி கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் வாழ்கிற பத்து இலட்சம் தமிழர்களின் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், செம்பனைத் தொழிலாளர்களாகவும் ஈயலம்பத் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய அண்ணா, எப்போதுமே தொழிலாளர்களாகவே இருக்க வேண்டுமென்பதில்லை' என்றும் வலியுறுத்தினார்.

"மலேசியாவில் தமிழர்கள் பத்து இலட்சம் பேர்தானே வாழ்கிறார்கள் என்பதில் பயம் கொள்ளாதீர்கள். நமது பண்பாட்டுடன் நல்ல விதமாக வாழுங்கள்; பிற இனத்தாருடன் நேசத்துடன் வாழுங்கள்" என அண்ணா கேட்டுக் கொண்டார்.

"திருக்குறள் வகுப்பு நடத்தித் தமிழ்ப் பண்பாட்டினை வளர்க்க வேண்டும்; சாதி வேறுபாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; மலேசியாவைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்; மலேசியாவைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்" என்று மலேசியத் தமிழர்களை அறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் நல்வாழ்வில் இந்தியத் தி.மு.க.வுக்கு உள்ள அக்கறையையும் அவர் எடுத்துக் காட்டினார்.


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai