மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
பெண்ணைக் கட்டிக் கொடுத்த தந்தை நிலையில் வந்திருக்கிறேன்

 

தெலுக்கான்சன் ஹோலி மெத்தடிஸ்ட் ஆங்கில உயர்நிலைப் பள்ளித் திடலில் 21.7.65 இரவு சுமார் 8000 தமிழர்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் அறிஞர் அண்ணா சிறப்புரையாற்றினார்.

கட்டுக்கடங்காத ஆர்வத்தைக் கூட்டத்தினர் காட்டிய காரணத்தால், அண்ணாவை மேடையில் ஏற்றுவது பெரும்பாடாகிவிட்டது.

"மக்கள் ஆர்வத்தை இவ்வளவு கரைபுரள விடுவது சரியல்ல; உங்களின் ஆர்வக் கொந்தளிப்பு என்னை மிகவும் துன்பப்படுத்துகிறது" என்று மிகவும் சோர்வுடன் கூறினார் அண்ணா.

அண்ணா அவர்கள் மேலும் பேசியதாவது:
"நான் இங்கு மேடைக்கு வந்ததும், 'களைப்பாக இருக்கிறீர்களா?' என்று பக்கத்தில் இருந்த ஒருவர் கேட்டார். பல ஊர்களில் - பல கூட்டங்களில் பல பேச்சுகள் பேசுவதால் களைத்துவிட மாட்டேன்.

கேள்வி கேட்ட நண்பருக்கு, 'நான் களைப்பாக இருக்கிறேன்' என்று சொல்லக்கூடத் திராணி யற்றிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நீங்கள்தாள்.

ஒரு கூட்டத்திற்குள், உள்ளே நுழைந்து வெளியே தப்பி வருவது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், இன்னும் இரண்டொரு நாளில் என்னால் மேடையில் ஏறிப் பேசக்கூட முடியாது. கூட்டக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால், உங்கள் ஆர்வக் கொந்தளிப்பு மிகுந்ததாக இருந்தாலும், தமிழகத்திலிருந்து இங்கு பேசவரும் தலைவர்கள் யோசிப்பார்கள். இங்கே வந்ததன் பயனாகக் கைகளை இழந்தோம் - கால்களை இழந்தோம் - என்ற செய்தியைத் தமிழகத்தில் கேட்டால் உங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?

பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதே ஒரு கலை; அதுவே ஒரு பண்பாடு; அதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்!

குழப்பம் செய்ய வரவில்லை
"தமிழக அரசியலில் நான் ஒரு குழப்பவாதியாகக் கருதப்படுகிறேன்; அதனால் இங்கும் அரசியல் குழப்பம் செய்ய வந்திருக்கிறேனோ என்று 'அவர்களுக்கு'ச் சந்தேகம்; ஆனால், நான் இங்கு வந்தது அரசியலைப் பற்றிப் பேச அல்ல. பெண்களைப் பெற்றெடுத்த தகப்பன், கொஞ்ச நாட்கள் கழித்து, 'கட்டிக் கொடுத்த பெண் கெட்டிக்காரியாக இருக்கிறாளா?' என்று பார்த்து மகிழ, அவள் வீட்டுக் வருவதுபோல், இங்கு வந்து குடித்தனம் நடத்தும் தமிழ் பேசும் மக்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.

"நான் 'அவர்கள்' 'அவர்கள்' என்று குறிப்பிடுவது மிகப் பலர் அல்லர் - வெகு சிலர்தான்.

"ஒரு சனநாயக நாட்டில் பல அரசியல் கட்சிகள் உண்டு. பல கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே இருக்கலாம். எந்தக் கட்சிக்காரன் கொள்கையில் - தன் கருத்தில் - பேச்சில் - நம்பிக்கை வைத்திருக்கிறானோ அவன் கட்சிக்குத்தான் ஆயுள் அதிகம். அடுத்தவன் வருவதால் - வந்து பேசுவதால் - அவன் கட்சிக்கு ஒன்றும் நேர்ந்து விடாது.

"என் மலேசிய வருகை குறித்து ஏற்பட்ட விபரீதக் கருத்துக்களைப் போக்கிய பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாயப் பெரியார்கள், என்பால் அன்பு செலுத்துகின்ற நண்பர்கள் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணைப் பெற்றெடுத்தவன் தன் பெண்ணை ஒரு பணக்காரனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையாவது அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வராதா? ஆவல் எழாதா? அதைப்போல உங்களைப் பார்க்க வந்தது தவறாகுமா?
தகப்பன் மகளைப் பார்க்க வருவது போல, இங்க நல்ல வாழ்வு வாழும் உங்களைக் கண்டு மகிழ வந்திருக்கிறேன். நான் பார்ப்பதால் உங்கள் மாளிகை குடிசையாகிவிடாது. என் குடிசையும் மாளிகையாகிவிடாது.

வானளாவிய கட்டிடங்கள் - வண்ண வண்ணச் சோலைகள் - கண்ணைப் பறிக்கும் இடங்கள் - சுகவாசஸ்தலங்கள் - ஓட்டல்கள் - ஆடல் பாடல்கள் - அழகு மிகு காட்சிகள் அகியவைகளைப் பார்த்து ரசிக்க வந்த அமெரிக்க நாட்டு உல்லாசப் பயணியல்ல நான்"

தமிழர்களுக்கு எது தாய்நாடு என்றால் 'தமிழன் எங்கு வாழ்கிறானோ அதுவே அவனுக்கத் தாய் நாடு' என்று அழுத்தமாக குறிப்பிட்டார் அண்ணா.

அண்ணாவுக்கு விருந்தளிப்பு
இரவு கூட்டம் முடிந்ததும் தெலுக்கான்சனிலுள்ள புவான் தோங் சீன மண்டபத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவேற்புக் குழுவினர் சிறப்பு விருந்தொன்று அளித்து மகிழ்ந்தனர்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai