மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
பத்து காஜா வரவேற்பில் அண்ணா

 

பத்து காஜா வால்டாக்ப் தியேட்டரில் 21.7.65 மாலை 4 மணிக்கு பத்து காஜா மாவட்டத் தமிழ் மக்கள் சார்பில் நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார்.

மண்டபத்தின் உள்ளும் புறமும் மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு அண்ணாவுக்கு வரவேற்பளித்தனர்.

அண்ணாவுக்குக் கொடுத்த வரவேற்பில் தமிழ்த் தாய் வாழ்த்து நாதசுரத்தில் வாசிக்கப்பட்டது.
அண்ணா அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசியதாவது:-

'வாழு வாழ விடு' என்பதுதான் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை. 'வாழ வேண்டும்' என்ற மனப்பான்மைதான் தமிழர் பண்பாடு; அத்தகைய பண்பாட்டை நாம் ஒரு காலும் மறந்து விடக்கூடாது.

"பண்பாட்டின் மூல வேர்களை நாம் அழித்துவிட்டால் ஒரு நாடு தன்னைத் தானாகவே உலகுக்குக் காட்டிக் கொள்ள முடியாது.

"மானைக் கொன்ற தின்றால்தான் புலி வாழ முடியும், என்ற போக்கில் சில நாடுகள் அண்டை அயல் நாடுகளில் ஆக்கிரமிப்பு நிகழ்த்துகின்றன"

உங்கள் அருமை நாடான மலேசியா இங்கு வாழ விரும்பும் தமிழர்களை வாழ விடுகின்றது. ஆகவே மலேசியாவின் வாழ்வும் தாழ்வும் தமிழரின் வாழ்வும் தாழ்வும் ஆகும்.

மலேசியாவுக்கு ஆபத்து வரும்பொழுது மலேசியாவைக் காப்பதற்கு முன் நிற்க வேண்டியது மலாய்க்கார்களுக்கும் சீனர்களுக்கும் உரிய கடமை மட்டும் அல்ல; இங்கு வாழும் தமிழர்களுடைய கடமையும் ஆகும்.

சனநாயக நாடாகிய மலேசியாவைக் கண்டு அண்டை நாடான இந்தோனேசியா உறுமிக் கொண்டிருக்கிறது; தொல்லையும் தருகிறது. இந்தோனேசியாவை முறியடிக்கச் சிறிய நாடான மலேசியாவிடம் படைபலம் மட்டுமா இருக்கிறது? நட்பு நாடுகளின் துணையும் இருக்கிறது. இவ்விரண்டைக் காட்டிலும் மிக முக்கியமான அம்சமான மக்களின் மனபலம் இருக்கிறது. ஆகவே, வெற்றி மலேசியாவுக்குத்தான்.

தமிழ் மீது நீங்காத பற்றுள்ள நீங்கள் மலேசிய நாட்டின் மீதும் மங்காத பற்றுடையவர்களாகத் திகழ வேண்டும். மலேசியாவின் நம்மக்களாக, பற்றுள்ள பெருங்குடிகளாக, நன்றியுள்ள நல்லவர்களாக நடந்து கொள்ளுங்கள்.

"மலேசியாவில் வளர்ச்சி இருக்கிறது! முயற்சி இருக்கிறது! ரப்பர் இருக்கிறது! ஈயம் இருக்கிறது! இந்த மலேசியாவின் வாழ்வுக்கு எந்தத் தடையும் குறுக்கிட முடியாது"

பொன்னேட்டில் வரவேற்பு
பத்துகாஜா மாவட்ட அறிஞர் அண்ணா வரவேற்புக் குழு சார்பில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு 16 பவுன் பொன்னேட்டில் வரவேற்பிதழ் வழங்கப்பட்டது.

இதயத்திலிருந்து பிறந்த வாழ்த்து!
"எனக்குக் கொடுத்த வாழ்த்துப் பத்திரத்தைத் தங்கத் தகட்டிலே பொறித்துக் கொடுத்தார்கள். அந்தத் தகட்டைத் தமிழகத்திற்குச் சென்ற பிறகு என்றென்றும் மறவாமல் வைத்திருப்பேன்.

தங்கத் தகட்டில் வாழ்த்துப் பத்திரம் கொடுக்கவிருப்பதாக யாராவது என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் அதை இதய வடிவிலே தரும்படிச் சொல்லியிருப்பேன். காரணம், இதயத்திலிருந்துதான் அந்த வாழ்த்துப் பிறக்கிறது. ஆகவே, அதை இதயவடிவில் கொடுப்பதுதான் பொருத்தமாகும்"

தங்கப்பதக்கம்
கம்பார் நகரில் அறிஞர் அண்ணா அவர்கட்கு திராவிட கழகச் சார்பில் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த குழுத்தலைவர் திரு. நா.காளிமுத்து அவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

'பேரா' தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

செயலாளர் திரு.தே.சி.பால்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். திர.மணி குழுவினரின் தமிழ்த்தாய் வணக்க நாதசுர இசையை, அண்ணா வெகுவாகப் பாராட்டினார்.

அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! மலேசியா வாழ்க! என்ற முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் இனிது முடிவுற்றன.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai