மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
பதினைந்தாயிரம் தமிழரிடை அண்ணா கனிவுரை

 

அறிஞர் அண்ணா அவர்களுக்கு சிதம்பானில் 22.7.65 இரவு 15,000 மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இரயில்வே மைதானத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலில் அண்ணா பேசினார். அண்ணா மிக உற்சாகமாகக் காணப்பட்டார்; தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் பேசினார்.

தாய்மார்கள் பங்கேற்பு
அண்ணா பங்கு கொண்ட மலேசியக் கூட்டங்களில் இதுவரை கண்டிராத அளவுக்குப் பொண்கள் இங்கு நிரம்பி வழிந்தனர்.

சிரம்பான் பிரமுகர் திரு.இலட்சுமணன் ஜே.பி. தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், "அறிஞர் அண்ணா போன்றவர்களின் பணியால் இன்று தென்னாட்டில் தமிழ் வீறுநடை போடுகின்றது. நம்நாட்டில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் மன்றக் கருத்தரங்கில் அண்ணா அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

'அறிஞர் அண்ணா ஒரு சிறந்த அரசியல் நேர்மையாளர்' என்று அவர் பாராட்டினார்!

சுமார் முக்கால் மணிநேரம் உற்சாகமும் நகைச்சுவையும் ததும்பப் பேசினார் அறிஞர் அண்ணா.

வெற்றிலையும், சுண்ணாம்பும்
"சேலைக்கு முந்தானையைப் போல, நெற்றிக்குப் பொட்டைப் போல - வயலுக்கு வரப்பைப் போல - வீட்டிற்கு வாசற்படியைப் போல, மலேசிய நாட்டிற்குப் பத்து இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.

"இந்த நாட்டிலே தமிழர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது இடம் வகித்தாலும் அவர்களின் உரிமையும், மதிப்பும் மாறிப் போய்விடாது.

"வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மட்டும் போடுவதால் வாய் சிவக்காது - மணக்காது. சிறிதளவு சுண்ணாம்பும் அதற்குத் தேவை. அந்த அளவிலே சுண்ணாம்பாக மலேசியத் தமிழர்கள் இருக்கிறார்கள்"

"எண்ணிக்கைக்குத் தகுந்த அளவில் தங்களுக்குத் தரப்படுகின்ற வாய்ப்பு வசதிகள் சலுகைகள் இருக்கின்றனவா என்பதை எண்ணிப் பார்ப்பதே தமிழர்களின் நலர்களுக்கு உகந்தது."

தொடர்ந்து பேசிய அவர், துங்குவின் அரசியல் பெருந்தன்மையையும், தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற மலேசியாவுக்குக் காட்ட வேண்டிய நாட்டுப் பற்றையும், உடன் வாழ்கின்ற மலாய், சீன மக்களோடு தோழமை பூண்டு வாழவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மொழியால் மட்டும் ஒன்றுபட முடியுமா?

"பேசுகின்ற மொழி ஒன்றாக இருப்பதாலேயே நமக்குள் பிளவு வந்துவிடாது என்று கருதி விடாதீர்கள். கம்யூனிஸ்டுச் சீனாவிலே பேசுகின்ற மொழியும் சீன மொழிதான். சியாங்கேஷேக் இருக்கின்ற பார்மோசாவிலே பேசுகின்ற மொழியும் சீனமொழிதான்; ஆனால் ஒரே மொழி பேசுகின்ற ஒரு சீனர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதையும் பார்க்கிறோம்.

வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் சண்டை நடைபெறுகிறது; ஆனால் அந்த இரு நாடுகளிலும் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழி கொரிய மொழிதான்.!

மதத்தால் ஒற்றுமை ஏற்படாது
"இரண்டாவது உலகப்போர் நடைபெற்றபொழுது நான் ஒரு கதை படித்தேன். அப்போது நடைபெற்ற போர் ஜெர்மன் நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே ஏற்பட்டதாகும். இரு நாடுகளிலும் உள்ளவர்கள் கிறித்தவர்களே! ஜெர்மன் நாட்டிலே உள்ள கிறித்தவர்கள் மாதா கோவிலுக்குச் சென்று 'யேசுவே எங்களுக்கு வெற்றி கொடுப்பீர்' என்று பிரார்த்தித்தார்கள். இங்கிலாந்திலுள்ள கிறித்தவர்கள் மாதா கோவிலுக்கு சென்று தங்கள் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலே இருந்த யேசுநாதர், பரமண்டலத்திலேயே உள்ள பரமபிதாவைப் பார்த்து பரம பிதாவே, இவர்களும் வேண்டுகிறார்கள்; அவர்களும் வேண்டுகிறார்; இரண்டுபேரும் கிறித்தவர்கள்; நான் என்ன செய்ய? என்று கேட்டாராம். அதற்குப் பரமபிதா சொன்னாராம் 'மகனே, நீ சும்மா இரு' என்று! கடைசியிலே 'நியாயம் வென்றது' எனக் கதை முடிகிறது.

இதை எதற்கு நான் சொல்கிறேன் என்றால், 'மொழியாலே மட்டும் ஒற்றுமையோ, பகையோ, இல்லை; மதத்தாலே மட்டும் ஒற்றுமையோ பகையோ இல்லை' என்பதற்காகத்தான்.

ஆனால், நாட்டில் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்; நாட்டுப் பற்றினாலேயே அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். அந்த நாட்டுப்பற்று உங்களுக்கு மிக மிகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இங்கே எங்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துப் பத்திரத்தில் இங்கொரு காலும் அங்கொரு காலுமாக இக்கரையிலேயும் அக்கரையுலேயும் தங்களுடைய மனத்தைப் பறிகொடுத்து வருகின்றார்கள் என்று மலேசியத் தமிழ் மக்கள் மீது குறை சொல்லப்பட்டது.

விதை கொடுத்தவர் கனி கேட்பதா?
இக்கரையும் அக்கரையும் நமக்குச் சொந்தம் என்றால் எதிலேயும் நமக்கு அக்கறை பிறக்காது. ஒரு மண்ணுக்கு ஒரு மரம் உரித்தானதாக வேண்டும் என்றால், அந்த மரம்விளைவதற்கு எங்கிருந்து பிதை கிடைத்திருந்தாலும் அது ஊன்றியிருப்பது மலேசிய மண்ணில் - அதற்கு எரு விட்டிருப்பது மலேசியா நாட்டில் - அதற்குப் பாய்ச்சிய நீர் மலேசியா நாட்டுத் தண்ணீர் - அதை வளரச் செய்தவர்கள் மலேசியா நாட்டில் உள்ளவர்கள். மரம் பெரிதாகிப் பழுத்தவுடன் தமிழ் நாட்டிலேயிருந்து கடிதமா எழுதுவது?

"எங்கள் நாட்டிலிருந்து போன விதை அது; அருமையாக மரமாகிக் கனிவிட்டு நிற்கிறது. ஆகவே கனிகைளை ஒன்று விடாமல் பறித்து அடுத்த கப்பலிலே அனுப்பி வையுங்கள்" என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இவனுடைய தமிழைப் பேசுவதே தவறு என்று எண்ணி அந்த மொழியைப் பேசுவதை விட்டுவிடுவீர்கள். தமிழ் நாட்டிலே உள்ள நாங்கள் அவ்வளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.

விதைக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் - பெருமைக்கும் பெருமைப் படுகிறோம். மரபுக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் மறந்துவிடவில்லை - பண்பாட்டுக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் - பெருமிதம் அடைகிறோம். அங்கிருந்துதான், தமிழ் கிளம்பிற்று. அதை எண்ணிப் பூரிப்படைகிறோம். ஆனால் கொடுத்த விதை பதமாக நடப்பட்டு, பக்குவமாக வளர்கக்கப்ட்டு, ஆயிரம் கிளைகள் விட்டு அற்புதமான கனிகள் குலுங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் நான் வந்து பார்த்து மகிழலாமே தவிர, இவை அனைத்தும் எங்களுக்குத்தான் என்று சொல்லுவது எங்களுடைய அரசியலுமல்ல - அது நேர்மையுமல்ல; தமிழ்ப் பண்பாடுமல்ல.

இரண்டு நாட்டுக்கும் பலனில்லை
அதைப் போலவே இங்கே இருக்கிற நீங்கள் மரம் நன்றாக வேரூன்றிய பிறகு இங்கிருந்து ஒரு வேரை மட்டும் எடுத்துத் தமிழ் நாட்டிலுள்ள மற்றொரு மரத்தினுடைய வேரையும் எடுத்து இந்தக் கடலுக்கு மேலே இரண்டையும் கட்டினீர்களானால் அலை அடித்து வேர் அறுந்து வேர் அறுவதாலே மரம் பெயர்ந்து விழுந்து இரண்டு நாடுகளுக்கும் இலாபம் இல்லாமற் போகும்.

ஆகையால் இங்கே நடப்பட்ட விதை இங்கே மரமாக வளர்ந்து இங்கேதான் பயன்தரும். அங்கே இருக்கின்ற மரம் அங்குள்ள மக்களுக்குப் பயன் தரும். ஆனால் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இங்கே வங்குஸ்தான் பழம் இருப்பதாகச் சொன்னார்கள். இப்பழம் எங்கள் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருக்கிறது. உடனே நான் ஒரு அவசர ஆராய்ச்சியாளனாக இருந்தால் வங்குஸ்தான் பழமும் இங்கே இருக்கிறது. எங்கள் கொடைக்கானலிலும் இருக்கிறது. ஆகையால் இது தமிழ்நாட்டுப் பழம்தான்; இதை மலேசியாவில் விட்டுவைக்க வேண்டுமானால் எங்களிடத்தில் உத்தரவு வாங்கவேண்டும் என்று சொன்னால் 'நேற்று வரை அண்ணாதுரை நன்றாகத்தானே இருந்தான்? இன்று இப்படி ஆகிவிட்டானே! என்று அனுதாபப்படுவீர்கள். ஆதலால் இங்கே வாழ்கின்ற உங்களைத் தமிழ்நாட்டுக்குப் பற்றுக் காட்டுங்கள் என்று கேட்கமாட்டேன். தமிழ் மொழிக்குப் பற்றுக் காட்டுங்கள் என்று கேட்பேன் - தமிழ்ப் பண்பாடுகளை - மரபுகளை மறவாமல் பேணுங்கள் என்று கோருவேன்."

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai