சென்னைக் கடற்கரையில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசுகையில் ஒரு செய்தியைச் சொன்னார்கள்.
"இந்த நேரத்தில் நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் அதனை நான் சொல்லுவதற்கும் கூச்சப்படுகிறேன்.
மலேசியாவில் எனக்களிக்கப்பட்ட விருந்தொன்றில், என்னிடத்திலே சொன்னார்கள், "காமராசர் மலேசியாவுக்கு வந்து போனார். தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானார்.
இப்போது நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான்" என்று சொன்னார்கள்.
நான் இதனை நம்பவுமில்லை; ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனாலும், மலேசியாவில் உள்ள தமிழர்கள், எந்த அளவுக்கு என்மீது பாசத்தை வைத்திருக்கிறார்கள்; நமது கழகத்தின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தான் இதனை நான் இங்கு சொல்கிறேன்." இவ்வாறு அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
மலேசியத் தமிழர்கள் சொன்னதை அண்ணா அவர்கள் நம்பவில்லை என்ற போதிலும், மலேசியத் தமிழர்கள் சொன்னபடி தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக அண்ணா அவர்கள் வந்தார்கள்.