மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
முப்பதாயிரம் தமிழ் நெஞ்சங்களின் வரவேற்பு

 

'அண்ணா வாழ்க!' என்று ஆயிரமாயிரம் பேர் ஆர்வத்தோடு முழங்க - இடைவிடாத கையொலி தொர்ந்து ஒலிக்க, அறிஞர் அண்ணா அவர்களும் திரு.இரா.செழியன் அவர்களும் இரவு 7:30 மணிக்கு சிங்கை ஜலான் புசார் விளையாட்டரங்கில் அடியெடுத்து வைத்தனர்.

ஏறத்தாழ முப்பதாயிரம் மக்கள் குழுமியிருந்த அரங்கில், எங்கு நோக்கினும் மலர்ந்த முகங்கள் - மகிழ்ந்த நோக்குகள்!

சரியாக இரவு 8 மணிக்குப் பொது வரவேற்புச் சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

மலேசியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின்(ம.தி.மு.க.) தலைவர் சி.நடேசன், அறிஞர் அண்ணாவையும் திரு.இரா.செழியனையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

அடுத்துக் கூட்டத் தலைவர் அமைச்சர் இராசரத்தினம் அறிஞர் அண்ணா, திரு.இரா.செழியன் ஆகியோருக்குப் பொது நிறுவனங்கள் சார்பில் மாலைகளையும் கைத்தறித் துண்டுகளையும் அணிவித்தார்.

மாலைகள் மலைபோல் குவிந்தன! கைத்தறி ஆடைகளும் கட்டுக் கட்டாகக் குவிந்தன!
பின்னர் ம.தி.மு.க. துணைச் செயலாளர் திரு.அ.சுப்பிரமணியம், கழகத்தின் சார்பில் வாழ்த்திதழ் வாசித்தளித்தார்.

மொத்தம் 55 பொது அமைப்புகள் இந்த வரவேற்பில் கலந்துகொண்டன.

சிங்கப்பூர் வரவேற்பு:

'நம்நாடு' செய்தி

சிங்கப்பூரில் அண்ணா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து சென்னை 'நம்நாடு' இதழின் தனிச் செய்தியாளர் தந்திருந்த செய்தி வருமாறு:-

சென்னையிலிருந்து சூலை 16ஆம் நாள் பகல் 12:30 மணிக்கு 'ஏர் இந்தியா' விமான மூலம் - பல்லயிரக் கணக்கானோர் வாழ்த்தியனுப்ப மலேசியா புறப்பட்ட அறிஞர் அண்ணா அவர்களும், திரு.இரா.செழியன் எம்.பி அவர்களும் மலேசியா நேரப்படி மாலை 6:15 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

வழியனுப்பிவைத்த மக்கள் கூட்டத்தைப் போலவே சிங்கப்பூர் விமான நிலையத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் கூடிநின்று வாழ்த்தி வரவேற்றனர். அறிஞர் அண்ணா அவர்களும், திரு.செழியன் அவர்களும் விமானத்திலிருந்து இறங்குகையில் 'அண்ணா வாழ்க!' எனப் பேரொலி எழுப்பி, எதிரிலிருந்த மக்கள் கடல் மாலைகளையும் வாழ்த்துக்களையும் குவித்தது.

அறிஞர் அண்ணா அவர்களைச் சூழ்ந்து கொண்ட கட்டுக்கடங்காத மக்களின் அன்புப் பிடியின் நெருக்கத்தைத் தளர்த்தி, சிங்கப்பூர்ப் போலீசார் வழியமைத்துக் கொடுத்தனர்.

சென்னையிலிருந்தே 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால் சிங்கப்பூர் அடைவதற்குப் பெரும் தாமதம் ஏற்பட்டது.

எனவே, ஏற்கனவே சிறப்புற ஏற்பாடு செய்ப்பட்டிருந்த ஊர்வலமும், வரவேற்பு நிகழ்ச்சியொன்றும் ரத்து செய்யப்பட்டு, மூன்றாவது நிகழ்ச்சியாக இருந்த ஜலான் புசார் ஷ்டேடியம் கூடத்திற்கு முதலாவதாக அண்ணா அவர்களும், செழியன் அவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜலான் புசார் சிறப்புக் கூட்டம்
ஜலான் புசார் ஸ்டேடியத்தில் நடந்த மாபெரும் சிறப்புக் கூட்டத்திற்கு சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீகுவான் இயூ தலைமை வகித்தார்.

பண்பாட்டுத்துறை அமைச்சர் இராசரத்தினம், சிங்கைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு.லிம்டேபோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பல்கலைக் கழகத்துக்குப் பதின்மூன்றாயிரம் வெள்ளி
இச்சிறப்புக் கூட்டத்தில் வசூலான தொகையில் முதற்கட்டமாக பதின்மூன்றாயிரம் வெள்ளி (இந்திய நாணயப்படி இருபதாயிரம் ரூபாய்க்குமேல்) அறிஞர் அண்ணா அவர்களால் வேந்தரிடம் அளிக்கப்பட்டது.

நேருவுக்குப் பின் அண்ணா
"மிகப்பெரிய கூட்டம்; இதற்கு முன் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேரு 1956ல் பாண்டூங் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சிங்கப்பூரில் பேசிய கூட்டத்திற்குப் பிறகு, இது போன்று தமிழர்கள் பெருமளவில் திரண்ட கூட்டம் இதுவே முதலாவதாகும்." என்று சிங்கப்பூர் தலைமையமைச்சர் பேசுகையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தலைமையமைச்சர் லீ வருகிற வரையில், பண்பாட்டுத்துறையமைச்சர் திரு.இராசரத்தினம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அவருடைய தலைமையுரைக்குப் பின் தோழர் இரா.செழியன் எம்.பி. அவர்கள் பேசினார். இறுதியாக அறிஞர் அண்ணா அவர்கள் முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் பேசினார்கள்.

அமைச்சர் இராசரத்தினம்
அமைச்சர் இராசரத்தினம் அவர்கள் தமது உரையில், 'உலகில் ஜனநாயகம் தழைத்தோங்க இந்தியாவும், மலேசியாவும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

ஜலான் புசார் ஷ்டேடியத்தில் கூடியிருந்த கூட்டம் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலத்தில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இதுபோன்ற வரவேற்பு அளித்ததில்லை என்று வியக்கும் வண்ணம் சிங்கப்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்ததாக அண்ணா அவர்கள் சென்ற விமானத்திலேயே தமிழகம் வந்த தோழர்கள் அறிவிக்கின்றனர்.
-'நம்நாடு'

'இந்து' செய்தியாளரின் செய்தி
அண்ணா அவர்களுக்கு சிங்கப்பூர் நகரம் அளித்த வரவேற்புக் குறித்து 'இந்து' இதழின் தென்கிழக்காசிய நிருபர், தமது இதழுக்கு அனுப்பியுள்ள செய்தியில் சிறப்பாகத் தெரிவித்திருக்கிறார்.

சூலை 17 நாளிட்ட அவரது செய்தியில், அறிஞர் அண்ணா அவர்களுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் சிறப்பையும், அதற்குப் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் மாண்பையும் தெரிவித்துவிட்டுத் தொடர்ந்து அவர் எழுதுகிறார்:-

பாண்டூங் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சிங்கப்பூர் வழியாகச் சென்ற நேரு அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைத் தவிர, கடந்த பத்தாண்டுக் காலத்தில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இவ்வளவு தமிழர் குழுமி நின்றதையும், மக்கள் கடலெனத் திரண்ட கூட்டத்தையும் சிங்கப்பூர் நகர் கண்டதில்லை.

பொதுக் கூட்டத்தில் பேசிய திரு.அண்ணாதுரை முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் பேசினார். அவர் பேசுகையில், "தாம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் நாட்டு நலனுக்கு விரோதமாகச் செயல்படும் தமிழர்கள், தங்களது பண்பாடு, கலாசாரத்திற்கே துரோகம் இழைத்தவர்கள் ஆவார்கள்" என்று அறிவுறுத்தினார்.

இந்திய மண்ணைச் சீன வெறியர்கள் ஆக்கிரமித்தபோது, மலேசியா அரசாங்கம் இந்தியாவுக்கு அளித்த ஆதரவினைக் குறிப்பிட்டு, அதனைப் புகழ்ந்தார். மலேசியாவின் தற்போதைய பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பக்க துணையாக இந்தியா இருப்பதையும் அறிவித்துக் கொண்டார்.

அதே கூட்டத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் பேசிய சிங்கப்பூர்த் தலைமையமைச்சர் "மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தம்மை மலேசியக் குடிகளே என்று கருதி வாழவேண்டும்" என்றும், "மலேசிய மண்ணுக்கு முழு விசுவாசத்தையும் காட்டிச் செயல்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

"மலேசியாவில் வாழும் இந்தியர் அனைவரும் மிகச் செழிப்பாக வாழ்கின்றனர்" என்றும், "தெருக் கூட்டும் பணி செய்வோர் கூடப் போதுமான ஊதியம் பெறுகின்றனர்" என்றும் பெருமையோடு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நகரின் வரலாறு காணாத நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அறிஞர் அண்ணா அவர்களும், இரா.செழியன் அவர்களும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூருக்குப் பயணமாயினர்.
- 'இந்து'

கலாச்சாரப் படையெடுப்பு:

அமைச்சர் இராசரத்தினம் பெருமிதம்

"இந்தியாவிலிருந்து இப்பகுதியில் இராணுவ, பொருளியல் அரசியல் படையெடுப்பு நிகழாவிட்டாலும் கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்" என்று சிங்கப்பூரில் நடந்த சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த கலாசார அமைச்சர் திரு.இராசரத்தினம் அவர்கள் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-
இங்கு வருகை தந்திருக்கும் அறிஞர் அண்ணா அவர்களையும், திரு. இரா.செழியன் அவர்களையும், 'இந்தியாவைச் சேர்ந்த நண்பர்கள்' என்ற முறையில் வரவேற்கிறோம்.

ஒரு நாட்டிற்குள்தானே ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பிரக்கினை எழலாம்; ஆனால் வெளிநாட்டிற்கு அது தேசியக் கட்சியேயாகும்.

இவர்களுடைய மலேசியப் பயணம் இந்நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவும்.

இந்தியாவில் நிலைத்த ஜனநாயகம் திகழ்கிறது. மலேசியாவும் ஜனநாயக நாடுதான். ஆனால் பெரிய ஜனநாயக நாடு ஆகும் இந்தியா.

இந்தப் பகுதியில் ஜனநாயகம் நிலைபெற இந்தியா தனது பங்கை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும்.

இங்கே பல மதங்களும், பல இனங்களும், பல மொழிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து பொதுவான மலேசியாவைத் தோற்றுவிப்பதே எங்களின் நோக்கம்.

'மலேசியர் - மலேசியா' என்றால் பன்மையில் ஒருமை என்றுதான் பொருள்."
- 'தமிழ் மலர்' சிங்கப்பூர்

 

 


 

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai