மூவாரில் 23.7.65 இரவு 7:30 மணிக்குச் சித்தாந்தச் செல்வர் முரு.பழ.இரத்தினம் (செட்டியார்) தலைமையில் கத்தே தியேட்டரில் அண்ணா அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்ட்டது.
சுமார் இரண்டாயிரம் பேர் திரண்டிருந்தனர். திரு.முரு.பழ.இரத்தினம் (செட்டியார்) பேசுகையில் கூறியதாவது:
"கே.பி.சுந்தராம்பாள் கச்சேரி கேட்பதற்கு ஒரு வேளை அலுப்புத் தட்டினாலும் தட்டலாம்; காருக்குறிச்சி அருணாசலம் பிள்ளையின் நாதசுரம் நமக்கு அலுப்பைத் தந்தாலும் தரலாம். சௌடய்யாவின் பிடில் சில நேரங்களில் நமக்கு வெறுப்பைக் கொடுத்தாலும் கொடுக்கலாம், மகாலிங்கத்தின் புல்லாங்குழல் சில சமயங்களில் நம் மனத்தைக் கவராமல் போகலாம் ஆனால் அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு, என்றென்றும் அலுப்புத் தட்டுவதே கிடையாது! அதில் ஏற்றம் குறைவதில்லை, மதிப்பு மறைவதில்லை.
அத்தகைய அறிஞர் அண்ணா அவர்கள் மூவாத மூவார் மணமக்களைக் காண வந்திருக்கிறார்கள். அவருக்கும் மூவார் மக்களுக்கும் இன்று முதலிரவு! திருமணத்தை முடித்து வைக்கிறேன் - கடமையை முடித்துக் கொள்கிறேன்."
அண்ணா அறிவுரை
அண்ணா பேசுகையில் கூறியதாவது:
தாய்மார்களுக்கு தெரியும், குழந்தை பெறுவது எவ்வளவு கடினம் என்பது! அந்த நேரத்தில் அவர்கள் வடிக்கின்ற கண்ணீர் - எழுப்புகின்ற பெருமூச்சு - கூவுகின்ற கூச்சல் - அழுகை இவற்றின் மூலம் குழந்தைப் பேற்றின் தொல்லையை மற்றவர்கள் அறிய முடிகிறது. குழந்தை பெறுவது கடினம் என்றாலும் அதனை வளர்த்தலே மிகக் கடினம்.
அதைப்போல, ஒரு நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஏற்கக் கூடிய அல்லல்களைக் காட்டிலும், விடுதலை பெற்ற பின்பு அதைக் கட்டிக் காப்பதே பெரும் பிரச்சினை. அந்த முறையில் சுதந்திர மலேசியாவைக் காத்திட சகோதர இன மக்களோடு மலேசியாவாழ் தமிழ் மக்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு என்றென்றும் முன் நிற்கவேண்டும்.
"மலேசியா வாழ்ந்தால்தான் இங்கு வாழ்கின்ற பத்து இலட்சம் தமிழர்களுக்கும் வாழ்வு உண்டு; மலேசியா வீழ்ந்தால் இங்கு வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் வீழ்ச்சி கண்டவர்களாகிவிடுவர்."