அறிஞர் அண்ணா அவர்கள் தம்மைக் கௌரவிக்க பினாங்கு மேயர் திரு. சி.ஒய்.சோய் அவர்களால் அளிக்கப்ட்ட விருந்துக் கூட்டத்தில் பேசியதாவது:
"இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் பொது ஒருமைப்பாடுகள் பல இருக்கின்றன. இதில் முக்கிய அம்சமாக இருப்பது இவ்விரு நாடுகளும் சனநாயகப் பாராளுமன்ற முறையைப் பின்பற்றுவதாகும்.
"மலேசியாவில் சனநாயகம் அழகாய்த் தழைத்து வருவதை நான் பார்க்கிறேன்.
"கடுகடுத்த முகத்தைவிடப் புன்னகை தவழும் முகமே அதிகம் சாதிக்க வல்லது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
"கெட்ட கனவைப்போல், எதிர்ப்பியக்கம் மறைந்ததும் தென்கிழக்காசியாவில் மிகச் சக்தி வாய்ந்த ஒரு நாடாக மலேசிய திகழும்"
"வேறுபாடுகளிடையே ஒற்றுமை காண இந்நாடு இப்பொழுது முயன்று வருகிறது.
"புதிய மலேசியாவுக்கு ஒவ்வோர் இனமும் தனது பங்கைச் செலுத்த வேண்டும்; என்றாலும், ஓர் இனக் கொள்கையை உருவாக்க எல்லா இனமக்களையும் சமன்படுத்த வேண்டும் என்பதில்லை.
"நான் இங்கு வந்துள்ள சில நாட்களிலேயே, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறம் காரியங்களைக் கண்டு வருகிறேன்.
"நான் ஒரு கலாசாரத் தூதுவனாயும், ஒரு மாணவனாயும் இங்கு வந்துள்ளேன். பழமையான நாடுகளில்தான் அதிகம் கற்கலாம் என்று மக்கள் நம்புகின்னர்; என்றாலும் வளர்ந்து வரும் இளம் நாடுகளிலிருந்தும் ஏராளமாகக் கற்றுக் கொள்ளலாம் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்.
"இந்நாட்டின் உற்சாகம் எனக்கு ஊக்கம் தருகிறது".
- 'தமிழ்முரசி'
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
"நான் இந்தப் பதினைந்து நாட்களிலும் மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே உள்ள மக்களைக் கண்டு அவர்களின் அன்பு முகங்களைப் பார்த்து, அவர்களுடைய அன்பு உள்ளங்களை அறிய முயல்கிறேன்.
"இன்றைய தினம் இங்கு நடக்கின்ற மாபெரும் சிறப்புக் கூட்டம் எனது வாழ்நாளிலேயே மறக்க முடியாத அம்சமாக இருக்கிறது.
"உங்களின் மலர்ந்த முகங்களும் ஒளி நிறைந்த கண்களும் பாசத்தோடு நீங்கள் பார்க்கின்ற பார்வையும், எங்களிடத்திலே காட்டுகின்ற அன்பைக் குறிக்கின்றன.
"பல தோழர்கள் இங்கே என்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும் - கட்டிப் பிடிக்க வேண்டும் - என்றெல்லாம் காட்டுகின்ற பெரிய ஆர்வத்தைப் பார்க்கின்றபோது எனக்குக் கூட உங்கள் ஒவ்வொருவருடைய கையையும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் அந்தக் காரியத்தில் நான் ஈடுபட்டால் தமிழ்நாட்டிற்கு நான் கையோடு போய்ச் சேர முடியாது."
இவ்வாறு கோலக் கிள்ளானில் நடைபெற்ற வரவேற்பு விழாப் பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா நகைச்சுவையோடு கூறினார்கள்.
கூடியிருந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களும் 'கொல்லென்று' சிரித்தார்கள்.
அண்ணா அவர்களுக்கு காப்பார் தமிழர்கள் சார்பில் திரு.மு.ரத்தினம் மாலையணிவித்து தங்க மோதிரம் ஒன்றை அணிவித்தார்.